புதன், 16 அக்டோபர், 2024

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர் - நகர் வலம் நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சென்ற மூன்று வாரங்களாக நகர்வலம் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதியது நினைவில் இருக்கலாம்.  அந்த வரிசையில் இன்றைக்கு நான்காம் பதிவு! 


ஶ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர்:



படம்: இணையத்திலிருந்து...

சென்ற நகர்வலம் பகுதியில் 610 பேருந்தில் பயணம் செய்த போது கிடைத்த மாப்பிள்ளை அழைப்பு அனுபவம் குறித்து எழுதிய போது நான் செல்லவேண்டிய இடம் என்று எழுதி இருந்தேனே தவிர எங்கே சென்று வந்தேன் என்பதைச் சொல்லவில்லை…… அந்த இடம் குறித்து தான் இன்றைக்கு நகர்வலம் பகுதியில் பார்க்கப் போகிறோம்.


தலைநகர் தில்லியின் மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பிரபலமான குடியிருப்புகளில் ஒன்று R.K. Puram என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராமகிருஷ்ணபுரம் - ஹிந்தி மொழி பேசுபவர்களில் சிலர் அந்த இடத்தை ராமா கிருஷ்ணா புரம் என்று ஆக்கிவிட்டார்கள் - இப்படி தமிழ் பெயர்கள் அவர்களிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது தனிக்கதை - ஒரே ஒரு மாதிரி மட்டும் இங்கே - 


எனது அலுவலகத்தில் ஒரு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒரு தென்னிந்திய அதிகாரிக்கு Personal Assistant ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  தென்னிந்திய அதிகாரியை பார்க்க வேண்டி சுந்தரம் என்ற பெயர் கொண்ட மற்றொரு தென்னிந்திய நபர் வந்திருப்பதை ரிசப்ஷனிலிருந்து சீட்டு கொடுத்து அனுப்பினார்கள் - அந்த சீட்டில் எழுதியிருந்த பெயர் SUNDA RAM என்று! Personal Assistant அதிகாரிக்கு Buzzer கொடுத்து, ”சார் உங்களைப் பார்க்க சுண்டா ராம் என்ற ஒருவர் வந்திருக்கிறார், அவரை அனுமதிக்கலாமா?” என்று கேட்க, அதிகாரி, இந்தப் பெயரில் நான் யாரையும் அறியேன் என்று சொல்லி அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  ரிசப்ஷனில் சொல்ல, சுந்தரம் அவர்கள் அதிகாரி தான் வரச் சொன்னார் என்று மீண்டும் சொல்ல சீட்டை உள்ளே அனுப்ப, அப்போது தான் தெரிந்திருக்கிறது இந்தக் குழப்பம் - சுந்தரம், சுண்டா ராம் ஆன கதை! 


பெயர் குழப்பத்தை விட்டு விஷயத்துக்கு வருவோம்.  அந்த R.K. Puram பகுதியில் பல செக்டர்கள் உண்டு. அதில் செக்டர் மூன்றில் இருக்கும் ஒரு தென்னிந்திய ஆலயம் தான் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர் என்ற பாலாஜி மந்திர்.  Bபேர் சராய் என்கிற பகுதிக்கு அருகே இருக்கும் மிகவும் அழகான ஆலயம்.  திருப்பதியைப் போன்றே எல்லா நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் ஆகியவை நடக்கும் இடம்.  நிகழ்வுகள் சமயத்தில் அதிக அளவில் பக்தர்கள் வரவு இருந்தாலும் சாதாரண நாட்களில் அத்தனை பக்தர்கள் கூட்டம் இருக்காது என்பதால் நம்மால் வேங்கடவனிடம் One to One உரையாடல்களை நடத்த முடியும். தரிசனம் செய்து விட்டு அவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டு பிரார்த்தனை செய்ய முடியும்.  வேங்கடாசலபதி தவிர பத்மாவதி, ஆண்டாள், ஹனுமன், வராக மூர்த்தி, சக்கரத்தாழ்வார்/நரசிம்மர் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உண்டு.  


தில்லியின் மற்ற ஆலயங்களை விட இந்த ஆலயத்திற்கான இடம் சற்றே அதிகம் என்பதால் விஸ்தாரமாக இடம் உண்டு. ஆலயத்தின் பின்புறம் நந்தவனமும் இருக்கிறது.  ஆலயத்தின் ப்ராகாரத்தில் சுற்றி வர நல்ல வசதியும், ஒவ்வொரு சன்னதிக்கும் இடையே நிறைய இடமும் இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தான் இந்த ஆலயத்தில் பராமரிப்பு வேலைகள் நடத்தப்பட்ட சம்ப்ரோக்ஷணமும் நடந்தது என்பதால் ஆலய வளாகம், கோபுரங்கள் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்பதோடு சரியாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.  தலைநகருக்கு வந்த நாட்களிலிருந்தே அவ்வப்போது இங்கே சென்று வருவது வழக்கம் தான். இங்கே சென்று வந்தால் மனதில் ஒரு வித அமைதியும் கிடைக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.  ஆலய அர்ச்சகர்களும் சிறப்பான பூஜைகள் செய்து பக்தர்களுக்கு தரிசனம் செய்து வைப்பார்கள்.



படம்: இணையத்திலிருந்து...

விழாக்காலங்களில் அற்புதமான உணவும், மற்ற நாட்களில் பிரசாதங்களும் குறிப்பிட்ட நேரங்களில் கிடைக்கும் என்பதும் சிறப்பான தகவல்.  குறிப்பாக புளியோதரை போன்ற பிரசாதங்களுக்கு வடக்கர்களும் ரசிகர்கள் என்பதை இங்கே சொல்ல வேண்டும்.  ஒரு சில சமயங்களில் இங்கே பிரசாதம் எனக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தமுறை நான் சென்ற போது எனக்கு ஒரு பிரசாதமும் கிடைக்கவில்லை என்பது ஒரு சோகக் கதை 🙁  பல காலமாக சொல்லப்படும் “எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்” மற்றும் இப்போது சொல்லப்படும் “நமக்கு சோறு முக்கியம்!” போன்ற வாசகங்கள் மனதுக்குள் வந்து போனது! உங்களுக்கும் நினைவுக்கு வரலாம்! 🙂


ஆனால் அதை விட சோகமான ஒரு விஷயம் அன்றைக்கு நடந்தது - உணவு சம்பந்தப்பட்ட விஷயம் தான் அதுவும்! அது அடுத்த நகர்வலம் பகுதியில்…..


தொடர்ந்து வலம் வருவோம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

16 அக்டோபர் 2024


3 கருத்துகள்:

  1. அச்சச்சோ...   அமைதி கிடைத்தது சரி, புளியோதரை கிடைத்ததா என்றுதான் கேட்க இருந்தேன்.  நம்ம ராசி உங்களுக்கும் வந்துடுச்சு போலவே...  என்ன ஆச்சுன்னு எழுதுங்க தெரிஞ்சுக்கறோம்!!

    பதிலளிநீக்கு
  2. அழகான கோவில். முன்பெல்லாம் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பணிக்கர் ட்ராவல்ஸ் கரோல்பாக்கிலிருந்து மாலை 6 மணிக்கு இலவச பஸ் விடுவார்கள். இந்த கோவிலில் பெருமாளை தரிசித்து விட்டு அப்படியே அடுத்த செக்டரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சரணம் சொல்லி விட்டு, அப்படியே தெரிஞ்ச சேட்டன் சேச்சிகளைப் பார்த்து 'மனசிலாயோ' ன்னு குசலம் விசாரிச்சுட்டு திரும்ப கரோல்பாக் 8 மணிக்கு கொண்டு விட்டு விடுவார்கள்.

    (பெருமாள் கோவில் நந்தவனத்தில் ஒரு கறிவேப்பிலை மரம் செழிப்பாக நின்றது. நந்தவனத்து கறிவேப்பிலை கலந்த புளியோதரைன்னா சும்மாவா.)

    பதிலளிநீக்கு
  3. R K Puram ஒரே ஒரு முறை பல பல வருடங்களுக்கு முன்னர் போயிருக்கிறேன்.

    வெங்கட்ஜி, நான் கோவிலுக்குச் சென்றால் பிரசாதம் உண்டா என்று பார்ப்பது உண்டு அதுவும் வெங்கடேஸ்வர/பாலாஜி கோவிலுக்குச் சென்றால் அவர் பிரசாதம் கொடுக்காம அனுப்பமாட்டாரே!!

    உங்களுக்கு இம்முறை வடை போச்சே!!!!!

    என்ன சோகசம்பவம்? அடுத்த பதிவில் வருமே!! தெரியவந்திடும். அதுவும் சாப்பாடு விஷயம்னு எழுதியிருக்கீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....