செவ்வாய், 1 அக்டோபர், 2024

பட்டொளி வீசிப் பறக்கும் கொடி - வாழ நினைத்தால் வாழலாம் - நடை நல்லது - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு ஐந்தாம் பகுதி! என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


பட்டொளி வீசிப் பறக்கும் கொடி - 30 ஆகஸ்ட் 2024:



ஒவ்வொரு நாளும் நடப்பதற்காக வீட்டை விட்டு இறங்கியதும் கண்ணில் படுவது எங்கள் வீட்டின் அருகே உள்ள சாலை சந்திப்பில் அமைத்திருக்கும் பிரம்மாண்டமான தூணின் உச்சியில் பறக்கும் பெரிய அளவிலான நம் பாரத தேசத்தின் கொடி….. காற்றின் போக்கில் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியைப் பார்க்கும்போதே நமது தேசத்தின் கொடிக்காக, நம் சுதந்திரத்திற்காக போராடிய பலரது தியாகங்கள் நினைவுக்கு வரும். 


வீட்டின் அருகிலேயே இரண்டு மூன்று இடங்களில் இது போன்ற பிரம்மாண்டமான கொடிகள் உண்டு. தலைநகர் தில்லியில் பல இடங்களில் இது போன்ற பிரம்மாண்டமான கொடிகளை நிறுவி இருக்கிறது நம் அரசு.  SAIL நிறுவனம் மூலம் நிறுவப்பட்ட இவற்றுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் என்பதே எனது எண்ணம். நம் தேசத்தின் மீதான பற்று என்பது மற்ற தேசத்தவர்கள் அவர்கள் தேசத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற பற்றைக்காட்டிலும் ஒரு மாற்று குறைவாகவே இருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து. தேசத்தின் மீதான பற்றை இது போன்று கொடிகளை பார்க்கும் போதாவது அதிகரிக்க முடிந்தால் மகிழ்ச்சி தானே. 


இந்தியாவின் பல மாநிலங்களிலும் இது போன்ற கொடிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் (சென்னை விமான நிலைய வாசலிலும் இப்படி ஒரு கொடி உண்டு) தலைநகர் தில்லியில் தான் அதிக அளவில் நிறுவி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சில நாட்களில் அப்படியான தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கும் இடங்களில் சில நிமிடங்கள் நின்று மௌனமாக நம் தேசத்திற்காக இரத்தம் சிந்திய உயர்ந்த மனிதர்களை நினைவு கூர்வது உண்டு.   தேசத்தின் மீதான பற்றை நம் அடுத்த சந்ததியருக்கும் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு என்பதையும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.


வாழ நினைத்தால் வாழலாம் - 31 ஆகஸ்ட் 2024:



இன்று விடுமுறை என்பதால் ஆறு மணிக்கு மேல் தான் வீட்டை விட்டு புறப்பட்டேன். தலைநகர் தில்லி கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கும் ஊர். மக்கள் நடப்பதற்கு காலையிலேயே எழுந்து புறப்பட்டு விட்டாலும் இங்கே உள்ள கடைகள் பெரும்பாலும் திறப்பது பத்து மணிக்கு மேல் தான். மிக மிக குறைவான எண்ணிக்கையில் தான் கடைகள் இருக்கும். நம் ஊர் போல காலை நேரத்தில் தேநீர் கடைகள் திறப்பதில்லை. இங்கே அப்படியான கடைகள் இல்லை - இருப்பவை சாய் கா Tடப்ரி என அழைக்கப்படும் நடைபாதை கடைகள் மட்டுமே. 


இப்படியான கடைகள் அமைக்க பெரிதாய் கட்டுமானம் தேவை இல்லை. நடைபாதையில் ஓரமாக அமர்ந்து கொண்டு ஒரு 5 கிலோ மினி சிலிண்டர், அடுப்பு, கொஞ்சம் பாத்திரங்கள், சில பாட்டில்கள் இருந்தால் ஆரம்பித்து விடலாம். கொஞ்சம் உழைப்பும் சேர்ந்துவிட்டால் வாழ்வாதாரம் கிடைத்துவிடும். 


பெரும்பாலான நடைபாதைகளில் இப்படியான கடைகள் உண்டு. காலை கடையை எடுத்து வைத்தால் இரவு வரை நல்ல வியாபாரம். இரவு கடை முட வேண்டும் போது எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்று விடலாம். ஒரு தேநீர் பத்துய் ரூபாய். கூடவே கொரிக்க மட்ரி, ஃபேன் போன்ற ஐந்து ரூபாய் தின்பண்டங்கள், குட்கா, சுர்தி போன்ற நச்சுப் பண்டங்கள் (பாக்கெட்டுகள்) வைத்துக் கொண்டால் அதிக அளவில் விற்பனை நடக்கிறது. 


இதுவும் கூட வாழ்க்கைக்கு ஒரு ஆதாரமாக இங்கே பலருக்கும் இருக்கிறது. வியாபாரம் கொஞ்சம் சூடு பிடித்து விட்டால் நல்ல லாபமும் பார்க்க முடியும். பிறரை ஏமாற்றாமல், திருடாமல், சம்பாதிக்கும் இவர்களுடைய வாழ்க்கையும் நன்றாகவே இருக்கட்டும். என் வீட்டின் அருகே இருக்கும் இப்படியான ஒரு கடை வைத்து இருப்பவர் தினமும் 30 லிட்டர் மதர் டைரி பால் வாங்குகிறார் என்பது கூடுதல் தகவல். அப்படியென்றால் ஒரு நாளைக்கு எத்தனை தேநீர் விற்பனை ஆகிறது என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். பால் ஒரு லிட்டரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து கொண்டால் சுமார் இருபது தேநீர் தயாரிக்கலாம்.


வாழ நினைத்தால் வாழலாம் என்பதற்கு இவர் போன்றவர்களும் உதாரணம். இது குறித்த உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்களேன்…..


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

1 அக்டோபர் 2024


6 கருத்துகள்:

  1. ​பறந்து படபடக்கும் ஒரு பெரிய கொடி எங்கள் வீடு செல்லும் வழியிலும் பார்த்திருக்கிறேன். மனதில் பெருமிதமும், பரவசமும் பரவும்.


    டீக்கடை சமாச்சாரங்கள் சுவாரஸ்யம். வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்...!

    பதிலளிநீக்கு
  2. வாசகம் 👍
    கோல்மார்க்கெட்டில் இருந்த போது தினமும் காலையில் ஒரு முறை தேசியக்கொடியை பார்ப்பது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் மிக அருமை.

    பட்டொளி வீசி பறக்கும் கொடியை வணங்கி கொண்டேன். இங்கும் ஆட்டோவின் முன்பக்கம் பெரிய கொடிகளை வைத்துக் கொண்டு செல்வார்கள்.

    வாழ நினைத்தால் வாழலாம் என்ற வரிகள் உண்மை. உழைப்பினால் உண்டாகும் இன்பம் வேறு எதில் வந்து விடப் போகிறது? அப்படி உழைத்து வாழும் தன்னம்பிக்கை மனிதர்களை வாழ்த்துவோம்.

    தங்கள் நடைப்பயணம் தொடரட்டும். நல்ல நல்ல விஷயங்களும் தங்கள் கண்ணில் பட்டு, நாங்களும் அறிந்து கொள்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நடை உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் எவ்வளவு புத்துணர்வு தருகிறது. மூவண்ணக்கொடியைக் காணுந்தோறும் உள்ளத்தில் பெருமிதமும் உணர்வுப் பெருக்கும் உண்டாவது உண்மை.
    உழைப்பும் உத்வேகமும் இருந்தால் சிறிய முதலீடும் பெரும் லாபம் தரும் என்பதற்கு உதாரணமாய்த் திகழ்கிறார்கள் இந்த நடைபாதைக் கடை மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை.
    பட்டொளி வீசி பறக்கும் கொடியை பார்த்தவுடன் தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாரதி பாடலை பள்ளியில் பாடியது நினைவுக்கு வந்து விடும்.

    //பிறரை ஏமாற்றாமல், திருடாமல், சம்பாதிக்கும் இவர்களுடைய வாழ்க்கையும் நன்றாகவே இருக்கட்டும்.//

    வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. வாசகம் நன்று.

    ஆமாம் கொடி பறப்பதைப் பார்க்கறப்ப ஒரு பரவசம் தோன்றும். உணர்வு பூர்வமான ஒரு பரவசம்.

    உழைப்பு அதுவும் யாரையும் ஏமாற்றாமல் வாழும் இந்த எளிய மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....