செவ்வாய், 15 அக்டோபர், 2024

கதம்பம் - மல்லிகா - நினைந்து நினைந்து - கணபதியே சரணம் - விஸ்கி - நவராத்திரி விழா - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சுத்தமும் சுகாதாரமும் - Gகிலோய் எனும் கொடி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வழக்கமாக கதம்பம் என்ற தலைப்பில் ஆதி வெங்கட் முகநூலில் எழுதும் இற்றைகள் வெளியிடுவது தான் வழக்கம்.  இந்த வாரம் சற்றே மாறுதலாக ஒரு கதம்பம் பதிவு - விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதியவை உங்கள் பார்வைக்கு - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


மல்லிகா… - 02 செப்டம்பர் 2024:


பெயரைபோலவே உருவம்;

ஆனாலும் இருந்ததில்லை கர்வம்;

அனைவரிடமும் ஒருபோல பாசம்;

மனதெங்கும் அன்பின் வாசம்!

கோபம் என்பது அரிதுதானது; அது

உதவாதெனும் அறிவுதான் அது!

வளைந்து கொடுக்கும் குணம்;அதனால்

வாராது மனதில் ரணம்;

கைமணம் ஒரு திறமை;

இல்லாதது ஈவதில் சிறுமை;

நேர்த்தி எதிலும் சிறக்கும்;

கண்டால் மகிழ்ச்சி பிறக்கும்;

கடவுள் நம்பிக்கை அதிகம்;

அவனருள் அதனால் பெருகும்;

வாழிய வாழிய பல்லாண்டு💐💐💐


குறிப்பு: தனது அண்ணன் மனைவி குறித்த கவிதை எழுதி இருக்கிறார்.


******


நினைந்து நினைந்து… - நேர்மறை வார்த்தைகளுடன்:


நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே - TMS பாட்டு (ஷண்முகப்ரியா ராகம்) ரொம்பப் பிடிக்கும். full song high pitch.அனாயாசமாகப் பாடியிருப்பார். ஆனால் வார்த்தைகள் யாவும் எதிர்மறையாக வரும் (சோகத்தில் பாடியதால்). அதை மாற்றி நேர்மறை வார்த்தைகள் போட்டால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவு👇🏻


நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழுதே உன்னை (நினைந்து)

நினைத்திடாத இன்பம் நிறையுதே

எரியும் தீபமாய் ஒளிர்ந்து நின்றதே 

உயிர்கொண்ட சிலை ஆனதே மூர்த்தி

நான் அடைந்த செல்வம் பல்கிப் பெருகுதே

அமைதி எங்குமே நிறைந்து காணுதே

(நினைந்து)


அங்கிருந்தே நீ அருளுகின்றாயே 

அன்பு மழையை நீ பொழிகின்றாயே

வந்து உனைக் காண வேண்டுமே

உனைப் பணியும் நல்ல நாளுமே வந்து சேருமே

(நினைந்து)


மகாபெரியவாளை நினைந்து நினைந்து........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


******


கணபதியே சரணம் சரணம்:


தீநுண்மி காலத்தில் வந்த பிள்ளையார் சதுர்த்தி குறித்து எழுதிய கவிதை ஒன்று - உங்கள் பார்வைக்கு.


கணபதியே சரணம் சரணம்


வெடிச்சத்தம் விண்ணைப் பிளக்க 

வாத்திய முழக்கம் காதைக் கிழிக்க 

ஆட்டமும் பாட்டமுமாய் வருவாய் நீ 

ஆனந்த தாண்டவம் புரிவாய் நீ இப்போதோ 


உன் ஊர்தி போலவே சந்தடியின்றி 

சாந்தமாய் நீ வருகை தந்தாய் 

உனக்கென்ன எம்மேல் கோபம் 

உரக்கச் சொல் சற்றே கேட்போம்


கூடும் பக்தரைப் பிரித்து வைத்தாய் 

பாடும் வாய்தனை கட்டி வைத்தாய் 

குவியும் கரங்களை கழுவ வைத்தாய் 

கூனிக் குறுகி நிற்க வைத்தாய்


மஞ்சள் வெல்லம் சாணியிலும் 

நினைத்தபோது நீ உருவம் கொள்வாய் 

சானிடைஸர் நினைப்பிலேயே 

இப்போதெம்மை இருக்க வைத்தாய் 


பலவகைப் பண்டங்கள் உன் முன் வைத்தோம் 

சுக சௌகரியம் எம் பின் வைத்தோம்


பிரசாதம் எப்படி இருந்தாலும் 

பிரமாதம் என நீ புசித்தாயே 

பஜனையுன் செவியை பதம் பார்த்தும் 

புன்னகை தவழ ரசித்தாயே 


குறையிருப்பின் நீ கண்டிக்கலாம் தந்தையே… ஆயினும் 

குழந்தைகளையே நீ தண்டிப்பது மிக மிக விந்தையே


நிறைவாய் ஓர் வரம் தா விநாயகா 

விரைவாய் சடுதியில் எமை நீ கா 


கொரோனா என்னும் கொடுவினையை 

கோடரியால் களை எடுப்பாய் 

நீரில் நீயும் கரையும் முன்னே 

நினைவாய் எமை நீ கரை சேர்ப்பாய் 


அருள்வாய் இதை நீ கணநாதா 

கணநேரம் உனக்குப் போதாதா 


அடுத்த முறை நீ வரும்போது 

ஆர்ப்பாட்டமாய் வரவேற்போம் 


அதுவரை உன் சேய்களை நீ 

ஆரோக்கியமாய் இருக்க வைப்பாய் 


ஞான கணேசா சரணம் சரணம் 


******


இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி:


Ganapathy festival மும்பையில் கோலாகலம். தீபாவளி எல்லாம் அப்புறம்தான். அவரவர் வீட்டு வழக்கப்படி 1 1/2 நாள், 5 நாள், 7 நாள், 10 நாள் பிள்ளையார் வைப்பர். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு விதமாய் அலங்காரம். settings எல்லாம் பாத்தா பாஹுபலி டைரக்டரே அசந்துடுவார்! அப்படி இருக்கும். வீட்டு வாண்டுகள் 3,4 நாட்கள் உட்கார்ந்து செட்டிங் போடும். அனாயாசமாக லக்ஷக் கணக்கில் செலவழிப்பார்கள்! ஶ்ரீ ஶ்ரீ ன்னு (இங்க ஶ்ரீ ன்னா கணபதி) கொஞ்சி மாளாது. முழு குடும்பமும் (எல்லா சகோதரர்களும் ஒரே குடும்பமாக) கூடி பிரசாதம், உணவு எல்லாம் செய்வார்கள். 5/7/10 நாட்களும் ஒரே வீட்டில் சிரிப்பும் கும்மாளமும், நெய்வேத்தியமும் சமையலும், சாப்படும் திமிலோகப் படும். நாள் முழுக்க வீட்டிற்குச் மனிதர்கள் வந்து போய்கொண்டு இருப்பர். சாப்பாடும் உண்டு. மாலை என்றால் snacks, cool drinks தட புடலாக இருக்கும். 2 வேளையும் ஆரத்தி என்று ஒரு 20 நிமிடங்கள் கணபதி ஆரத்தி ஸ்தோத்திரம் சொல்லி கற்பூரம் ஆரத்தி காண்பிப்பார்கள். நிறைவு நாள் ஆண்டு சத்யநாராயணா பூஜை செய்துவிட்டு பின்னர் பிள்ளையாரை விசர்ஜனம் செய்வர். நிற்க.


2 நாட்கள் முன்பு என் மராத்தி தோழி வீட்டிற்கு போயிருந்தோம் கணபதிக்கு. பழம் கொண்டு போய் பிள்ளையார் முன் வைத்து நமஸ்கரித்துவிட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பிரசாதம், snacks, soft drinks எல்லாம் வந்தது. நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென என் தோழி வைஷாலி தன் ஓர்படியைப் பார்த்து பூஜை அன்னிக்கு காலை விஸ்கி இங்க வேண்டாம். மதியானத்துக்கு மேல இங்க கொண்டு வந்தாப் போதும், ஏன்னா கூட்டம் இருக்கும் பூஜைக்கு என்று சர்வ சாதாரணமா சொல்ல திக் என்றது. என்னது இத்தனை பக்தியோடு பூஜை நெய்வேத்தியம், எல்லாம் செய்துவிட்டு இது என்ன கண்றாவி என்று நினைத்து மெதுவாக அவளைக் கேட்டேன் 'என்ன வைஷாலி  இத்தனை ஸ்ரத்தையாய் பிள்ளையார் வைத்துவிட்டு இதெல்லாம் கேட்கவே என்னவோ மாதிரி இருக்கே என்றேன். அதுக்கு அவள் சொன்ன பதில்தான் சூப்பர். 


இல்ல இங்க வர குழந்தைகளுக்கும் விஸ்கினா ரொம்ப பிடிக்கும் என்றாள். அடடா பச்சைப் பிள்ளைகளையும் கெடுத்து வெச்சிருக்காங்ளே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே  உள்ளேர்ந்து ஆடி ஆடி விஸ்கி வந்துது! அதான் அவர்கள் வளர்க்கிற நாய்! அப்பாடி என்று இருந்தது. நன்கு வஞ்சனை இல்லாமல் வளர்ந்திருந்தாலும் வெடி சப்தம் (பட்டாசும் இந்த சீசனில் தூள் கிளப்பும்) கேட்டவுடன் வாலை ஒடுக்கிக் கொண்டு பெட்ரூம் போய் விட்டது! அதுக்கு வெடி அலர்ஜியாம்! ஆனாலும் இப்படியெல்லாம் பேர் வெச்சு நம்ம லப் டப்பை எகிற வைக்கிறது சுத்தமா நல்லா இல்லை. நல்லவேளை நான் வாயைத் திறந்து கேட்டேனோ விஷயம் தெரிஞ்சுது. இல்லன்னா அவங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுண்டு இருந்திருப்பேன்! இல்லையா?


*******


எங்கள் குடியிருப்பு நவராத்திரி விழா:


எங்கள் குடியிருப்பு நவராத்திரி விழா…



கோலம் என் கைவண்ணத்தில்.....





வார்த்தைகள் போதாது வர்ணிக்க;

சுவாரசியம் பல உண்டு  விவரிக்க;

கொலு அமைத்த விதம் அமர்க்களம்;

கோலம், பூஅலங்காரம், பூஜை, அற்புதம் ;

ஸ்லோகம், இசை,வீணை அட்டகாசம்;


ஜரிகைப் புடவையின் சர சரப்போடு நிறம் பார்த்து அணிந்த பாங்கு ஆஹா!

பாலாவாக குழந்தைகள் அலங்காரம், மழலைக் குரலில் பாடல் ஓஹோ;

போகாத பல கோவில்கள் பற்றி விவரங்கள்;

பார்க்காத அதி அற்புதங்கள் பற்றி விவரணைகள்; 


கூடமெங்கும் நறுமணம் தவழ,

மனமெங்கும் பக்தி ததும்ப,

செவி படைத்த பயனை நாம் பெற;

கண்கள் பொம்மைகளின் அழகைப் பருக;

அங்கு நிலவியது தெய்வீகம்; அது

சொல்லவொண்ணா அனுபவம்!


ஆடலிலும் அசத்துவோம் என பெண்கள் களமிறங்க; 

நிலவொளியில் தாண்டியா கண்டு கண்கள் கிரங்க;

வானத்து விண் மீன்கள் தரை இறங்க;

மாயக் கண்ணன்  மனதிற்குள் குழலிசைக்க;

அங்கு ராசலீலை மறுபடி அரங்கேறியதே;


நவராத்திரி பெண்கள் பண்டிகை என்பது பொய்;

ஆண்களும் புகுந்து கலக்கியது மெய்!

தொகுப்புரை, பேச்சு, பாடல், எதிலும் இவர்கள் சளைக்கவில்லை;

கேட்கவும்,கை தட்டி ரசிக்கவும் நமக்கு சலிக்கவில்லை;


செவிக்கு உணவு ஈந்தபின்னே வித விதமாய் வயிற்றுக்கும் ஈயப் பட்டது;

அதன் சுவையில் ஆழ்ந்து ருசித்ததால் எடையும் சிறிது கூடி விட்டது!

இதைப் போல் செய்நேர்த்தி எங்கும் பார்த்ததில்லை;

உற்சாகமாய் இதுபோல் பங்கெடுப்போரும் சேர்ந்ததில்லை;


இதுபோல் பல நிகழ்ச்சிகள் சிறக்க;

அதற்கு கடவுள் அருள்  சுரக்க;

வாழ்த்துக்கள்  பல்லாயிரம் பல்லாயிரம்!💐💐💐

வாழ்க அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு!


🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

15 அக்டோபர் 2024

11 கருத்துகள்:

  1. குடியிருப்பு நவராத்திரி விழாவின் சிறப்பைக் கூறுகின்ற அழகு...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. கதம்பம் சூப்பர்.

    விஸ்கி - சிரித்துவிட்டேன். ஆனாலும் இப்படி பெயர் வைக்கவேண்டாமாக இருந்தது ஊரில் பெயர்களா இல்லை? என்றாலும அது அவர்களின் செல்லம்!!!

    நேர்மறை வாத்தைகள் கோர்த்திருக்கும் பாடலும் நன்று.

    உங்கள் குடியிருப்பின் நவராத்திரி படங்கள் காணொளி செமையா இருக்கு இளசுகள் சூப்பர்!!! இளைய சமுதாயத்தை வாழ்த்துவோம் நட்புடன் உறாவாடுவோம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கருத்து வெளியிட்ட பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
    விஜி வெங்கடேஷ்

    பதிலளிநீக்கு
  4. கவிதைகளில் மிக மிக இயல்பாக இயைபுத் தொடை‌ கவிஞர்‌வாலியை நினைவுறுத்திப் போனது.. வாழ்த்துகள்..விஸ்கி விசயமும் சொன்ன விதம்அருமை..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    டி. எம். எஸ் ஸின் அந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. ஆனால், சோகமயமான அந்த திரைப்பட பாடலுக்கு மாற்று பாடலாய் அமைந்த தங்களது பாடல் இதமாக இருக்கிறது.

    கணபதி பற்றிய கவிதை அருமை. வரிகளை ரசித்துப் படித்தேன்.

    விஸ்கி பெயர் விசித்திரம். ரசித்தேன்.

    உங்கள் குடியிருப்பு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இளைய தலைமுறைகளின் பங்களிப்புகள் பிரமிக்க வைக்கிறது. மொத்தத்தில் இன்றைய தங்களின் கதம்பம் மணக்கிறது. வாழ்த்துகளுடன் நன்றியும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. ஷண்முகப்பிரியாவில் அமைந்த 'நினைந்து,நினைந்து நெஞ்சம் உருகுதே' பாடல் மிக நன்றாக இருக்கும், ஆனால் ஒரே அவலச் சொற்கள் என்பதால் பாட முடியாது, அதை மாற்றி நேர்மறையாக அமைத்திருந்த விடம் சிறப்பு. புகைப்படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  7. வாசகம் அருமை.
    அண்ணிக்கு கவிதை அருமை.

    'நினைந்து,நினைந்து நெஞ்சம் உருகுதே' பாடலை மாற்றி அமைத்த வரிகள் அருமை.

    //நினைத்திடாத இன்பம் நிறையுதே//

    நினைத்திடாத என்றவரியில் நினைத்திட இன்பம் நிறையுதே என்று வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    நவராத்திரி கோலம், கொலு தாண்டியா நடனம் அனைத்தும் அருமை.

    //நவராத்திரி பெண்கள் பண்டிகை என்பது பொய்;

    ஆண்களும் புகுந்து கலக்கியது மெய்!//

    குடும்பத்தில் அனியவரும் தங்கள் தங்கள் திறமைகளை காட்டும் பண்டிகை இது.
    உடல் உழைப்பு நிறைய இருந்தாலும் மன மகிழ்ச்சி அதிகம் தரும் பண்டிகை.
    பதிவில் உள்ள நைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....