திங்கள், 14 அக்டோபர், 2024

சுத்தமும் சுகாதாரமும் - Gகிலோய் எனும் கொடி - நடை நல்லது - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்பட உலா - CHHAAP - NIFT Mela - Dilli Haat, INA பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 


******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு எட்டாம் பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


சுத்தமும் சுகாதாரமும் - 5 செப்டம்பர் 2024:



என்னதான் சுத்தமாக இருக்க வேண்டும், சுகாதாரத்தை பேண வேண்டும் என்று காட்டுக்கத்தலாக கத்தினாலும் சுத்தம் குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் சுத்தமாக இல்லை! இப்போதும் குப்பைகளை நடுத்தெருவில் போகிற போக்கில் தூக்கி எறிந்து விட்டுச் செல்லும் பலரை காலை நேர நடைப்பயணத்தின் போது பார்க்க முடிகிறது! அதுவும் குப்பை போடுவதற்காகவே நான்கு சக்கர வாகனத்தில் பயணித்து, வீட்டின் அருகே இருக்கும் கூடா(dh)தானில் (குப்பைகளை போடும் இடம் - கூடா(dh)தான்) வரை சென்று அப்படியே காரிலிருந்தபடியே வீசிவிட்டு (அது உள்ளே விழாமல் வெளியே விழுந்து சாலையெங்கும் பரவும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை!) வீடு திரும்பும் சிலரை எங்கள் காலனியிலேயே பார்ப்பதுண்டு.  இத்தனைக்கும் அவர்கள் படித்தவர்கள், வேலையில் இருப்பவர்கள்! இருந்தாலும் சுத்தம் குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை என்பது வேதனையான உண்மை.  


நடைப்பயணத்தில் காலை நேரத்திலேயே நாம் நடந்து செல்லும்போது வீதிகளில் இப்படி விழும் குப்பைகளைப் பார்த்தால் நமக்கு மனது சங்கடத்துக்குள்ளாவதை தடுக்க முடிவதில்லை.  சரி இந்த சாலை வேண்டாம், வேறு சாலையில், பாதையில் போவோம் என்றால் அங்கேயும் இது போன்ற ஒருவர் இருக்கத்தான் செய்கிறார்.  சமீபத்தில் ஒரு காலை நேர நடைப்பயணத்தில் உள்பக்கமாக இருக்கும் ரிட்ஜ் வனப்பகுதியின் எல்லைச்சுவரை தாண்டி குதித்து உள்ளே செல்லும் ஒரு மனிதரைப் பார்க்க முடிந்தது. கைகளில் ஒரு பாட்டிலில் தண்ணீர்! அவர் போன்ற சிலர் இப்படித்தான், என்னதான் பல வசதிகள் இருந்தாலும் இயற்கையின் எழில் கொஞ்சும் இடங்களிலோ, வெட்ட வெளிகளிலோ தான் காலைக்கடன்களை முடிக்க விரும்புகிறார்கள். இத்தனைக்கும் புது தில்லி பகுதிகளில் பெரும்பாலான சாலைகளின் ஓரங்களில் இலவச கழிவறை வசதிகள் உண்டு - அதுவும் சுத்தமாக, ஆட்கள் போட்டு பராமரிக்கப்படும் கழிவறைகள்! ஆனாலும் அவற்றை பயன்படுத்துவதை இவர் போன்றவர்கள் விரும்புவதில்லை! 


எங்கள் இஷ்டப்படியே தான் இருப்போம் என்று இருப்பவர்களை ஒன்றும் செய்வதற்கில்லை! வேறென்ன சொல்ல!


Gகிலோய் எனும் கொடி - 6 செப்டம்பர் 2024:




தீநுண்மி நாட்கள் மறக்கக்கூடிய நாட்களா அவை? எத்தனை எத்தனை உயிரிழப்பு? எத்தனை மனிதர்கள் பட்ட அவஸ்தை? மறக்க முடியாத வடுக்களை பலருக்கும் ஏற்படுத்திச் சென்ற தீநுண்மி! இன்று வரைக்கும் பலருக்கும் இதற்கான காரணமும், விளக்கமும் கிடைக்கவில்லை என்பது ஒரு சோகம். அதையெல்லாம் மறக்கவே, அதிலும் குறிப்பாக இழந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்ற விஷயங்களை மறப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.  அது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைக்கு இந்த தீநுண்மி தந்த ஒரு நல்ல விஷயம் குறித்தும் பார்க்கலாம்.  


பொதுவாகவே நம் நாட்டில் பல தாவரங்கள், கொடிகள் என பல விஷயங்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை என்பதை நமக்கு முன்னோர்கள் சொல்லிச் சென்றிக்கிறார்கள்.  ஆனாலும் நாளடைவில், கொஞ்சம் கொஞ்சமாக பலவற்றை இழந்து கொண்டே இருக்கிறோம். இந்த தீநுண்மி நாட்களில் அப்படியான பல விஷயங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன என்று சொன்னால் அது மிகையல்ல.  தலைநகர் தில்லியின் பல இடங்களில் மதில் சுவர்கள் மீதும், வேலிகள் மீதும் ஒரு குறிப்பிட்ட கொடி வகையைச் சார்ந்த தாவரம் ஒன்றைக் காண முடியும்.  அது கேட்பாரற்றுக் கிடக்கும்.  அதை எடுப்பவர்கள் மிக மிகக் குறைவு.  அந்த தாவரத்தின் பெயர் ஹிந்தி மொழியில் Gகிலோய்!  தமிழில் அமிழ்தவள்ளி அல்லது சீந்தில் கொடி! 


இந்தக் கொடி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிக அளவில் தரும் என்று தெரியவர, பல வீடுகளில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கா(d)டா என்று சொல்லப்படும் கஷாயம் வைத்து அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். அந்த கஷாயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்தது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். எனது தில்லி நண்பர் ஒருவரது வீட்டில் வாரா வாரம் இந்த கஷாயம் செய்து குடிப்பதோடு, எனக்கும் அழைத்துக் கொடுப்பார்கள்.  வாரத்திற்கு ஒன்றிரண்டு முறை இப்படி அருந்தியிருக்கிறோம்.  தீநுண்மி காலத்தில் அதன் தாக்கத்திலிருந்து நான் தப்பியதற்கும் இந்த கஷாயம் ஒரு வகையில் உதவியிருக்கிறது என்று நம்புகிறேன். இத்தனைக்கும் Front line அலுவலகத்தில் பணிபுரிந்த காரணத்தினால், தீநுண்மி காலம் முழுவதும் நான் அலுவலகத்திற்குச் சென்று வந்திருக்கிறேன்.


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தீநுண்மியின் தாக்கம் குறைந்து விட, இந்த சீந்தில் கொடியையும், அதன் மூலம் தயாரிக்கும் கஷாயத்தையும் மக்கள் மறந்து விட்டனர்.  மீண்டும் மீண்டும் முளைத்து வேலிகளிலும் மதில் சுவர்கள் மீது படர்ந்து இருந்தாலும் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பது தான் வேதனையான விஷயம்! சமீப நடைப்பயணம் ஒன்றில் எடுத்த நிழற்படம் இணைத்திருக்கிறேன்.


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

14 அக்டோபர் 2024


8 கருத்துகள்:

  1. கஷாயம் என்றதும்கொரோனா கால நிலவேம்பு கஷாயம் நினைவுக்கு வந்துவிட்டது. முகத்தைச் சுளித்துக்கொண்டு எத்தனை முறை அருந்தியிருப்போம்.

    சுத்தம்... இதற்கும் படித்த பணக்காரத்தன்மைக்கும் சம்பந்தமில்லை. 2 1/2 கோடி ரூபாய் பெறுமான flatகளில் வசிப்பவர்களில் சிலரே அதைக் கடைபிடிப்பதில்லை. பான் குதப்பித் துப்புஙது, வீட்டுக் குப்பைகளை பாலகனியிலிருந்து எறிவது (இளநீர் குடித்துவிட்டு மட்டையை எறிகிறார்கள. இத்தனைக்கும் ஒவ்வொரு வீட்டுக் குப்பையைச் சுத்தம் செய்ய-முழு டவரிலும், ஐந்து பணியாளர்கள் உண்டு). பொதுவா வட இந்தியர்கள் அப்படித்தான் என்று கடந்துவிட வேண்டியிருக்கு

    பதிலளிநீக்கு
  2. இதுபோன்ற சிலரை நானும் காலையில் நடைபயிற்சியின் போது பார்த்திருக்கிறேன்.  கையில் குப்பைப் பையுடன் நடந்து வந்து காலியாக உள்ள பிளாட்களில் சேர்ந்திருக்கும் குப்பைகளோடு சங்கமம் செய்து விட்டு இயல்பாக திரும்பிப் பார்க்காமல் நடந்து போய்க் கொண்டே இருப்பார்கள்!  நானும் சிலவற்றை படம் எடுத்து வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தீநுண்மி காலத்தில் இழந்த சில அன்புக்குரியவர்களின் நினைவு வந்து மனம் வேதனையுறுகிறது.  இங்கும் கஷாயங்கள் செய்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  அஞ்சரைப் பெட்டியில் இருக்கும் அத்தனையும் ஏதோ ஒருவகையில் கலந்து கூடவே கற்பூரவள்ளி, துளசி, ஓமம் என்றெல்லாம் கலந்து...  அப்பா...டி...

    பதிலளிநீக்கு
  4. வாசகம் நன்றாக இருக்கு. ஆனால் அந்த அன்புக்குத்தான் இப்போது பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குப்பை சுத்தம் பத்தி சொல்லவே வேண்டாம் ஜி,

    இங்கும் அப்படித்தான் எல்லா இடங்களிலும் அப்படித்தான் என்றே தோன்றுகிறது.

    இங்கு குப்பை சேகரிப்பவர்கள் வருவதால், எங்கள் பகுதியில் குப்பைத் தொட்டிகளே வைக்கறதில்லை வெளியிடங்களில் சாலைகளில். அதனால் வெளியில் போகும் போது ஏதேனும் குப்பைகள் கையில் போட வேண்டி வந்தால் அதை பையில் ஒரு கவரில் வைத்துக் கொண்டுவிட்டு வீடு வந்துதான் போட வேண்டியிருக்கிறது. தெருக்களில் குப்பைத் தொட்டிகளைப் பார்ப்பதே அரிது. ஒவ்வொரு தெரு மூலை அல்லது வெற்றிடங்களில் குப்பைகளை எல்லோரும் வீசுகிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. தீநுண்மி காலம் வேதனையான காலம். அதனால் பலருக்கும் இல்லாத உடல் உபாதைகள் வந்தன உயிரழப்புகள் கஷாயம் என்று.

    என் ஆயுர்வேத மருத்துவர் பல வருடங்களுக்கு முன்பு சொன்னது இது நிலவேம்பு குடிநீர் (இது வேறு ஒன்றுமில்லை சிறியாநங்கை வேர்) இது சர்க்கரை வியாதிக்கு நல்லது என்பார் கூடவே எதிர்ப்புச் சக்திக்கு இந்த வேர் என்று இந்தக் கஷாயம் சாப்பிடச் சொல்லி நம் வீட்டில் அந்தப் பழக்கம் உண்டு, அது தீநுண்மி சமயத்தில் கை கொடுத்தது என்பதோடு இப்போது அவ்வப்போது தொடர்கிறது.

    இந்த அமிழ்தவள்ளி பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். சிறுநீரகப் பாதுகாப்பிற்கும் நல்லது இது என்று. அது போல திரிபலாவும் எனக்குச் சொல்லி சாப்பிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நடைபயிற்சியின் போது பார்த்த காட்சிகள் தந்த நினைவுகள் அருமை.
    அமிழ்தவள்ளி அல்லது சீந்தில் கொடியின் பயன்பாடு பற்றி தொலைக்காட்சியில் மருத்துவர்கள் சொன்னார்கள் . ஆனால் பயன்படுத்தியது இல்லை.
    தீநுண்மி நாட்களை நினைத்துப்பார்க்க முடியவில்லை.
    நம் மக்களுக்கு தன் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு சுற்றும்புறத்தையும் சுத்தமாக வைக்கும் நினைப்பு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நடைப் பயிற்சி பதிவு அருமை.
    தாங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மைதான். நம் மக்களுக்கு குப்பைகளை சரியான முறையில் எங்கு போட வேண்டுமோ அங்கு போடத் தெரியவில்லை. நடை பாத ரோடுகளின் ஓரத்தில் நிறைய குப்பைகளின் தேக்கங்கள். மழை பெய்தால் அங்கு நடக்கவே இயலவில்லை. பிளாட்பாரத்தில் கால் வைக்க முடியாத அளவு ஏராளமான கடைகள். நடக்கவே இயலாதபடிக்கு இடைஞ்சல்கள்தாம். இதற்காக (நடைக்காக) பூங்காவை, பெரிய மால்களைத்தான் தேடி போக வேண்டியுள்ளது.

    நிலவேம்பு கஷாயம் நாங்கள் பிறந்த வீட்டில் நிறைய குடித்துள்ளோம். கணை சூடுள்ள உடம்பிற்கு வாரம் ஒரு முறை குடித்தால் நல்லது. எனக்கு ஆயுர்வேத மருந்துகள்தான் ஒரு உபாதைக்கு ஒத்து வரும். அலோபதி முடிந்த வரையில் தவிர்க்க பார்ப்பேன். இப்போது குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என அனைவரும் இதை குடிக்க மறுக்கிறார்கள். மேலும் நீங்கள் குறிப்பிட்ட செடி பற்றிய தகவல் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நடை தொடரட்டும். அதன் மூலம் நல்லதொரு செய்திகளும் தொடர்ந்து வரட்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....