ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நிழற்பட உலா - CHHAAP - NIFT Mela - Dilli Haat, INA


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தலைநகர் தில்லியின் INA பகுதியில் இருக்கும் Dilli Haat என்கிற இடம் குறித்தும் அங்கே அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் இங்கே முன்னரும் சில பதிவுகளும் நிழற்பட உலாக்களும் பதிவு செய்திருக்கிறேன்.  சமீபத்தில் மீண்டும் அந்த இடத்தில் ஒரு சிறப்பு நிகழ்வு.  NIFT எனப்படும் National Institute of Fashion Technology இந்த இடத்தில் CHHAAP - NIFT@DILLI HAAT என்கிற நிகழ்வினை செப்டம்பர் 2-15 தேதிகளில் நடத்தினார்கள். NIFT கிளைகள் பல இடத்தில் இருக்கின்றன என்பதோடு இந்தத் துறையில் இருக்கும் premier institute-ம் கூட.  அவர்களது முயற்சியால் இந்த நிகழ்வில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் கைவினை கலைஞர்கள் வந்திருந்து அவர்களது திறமைகளை மக்களுக்கு எடுத்துக் காண்பித்தார்கள்.  மாலை நேரத்தில் சென்றிருந்தால் கலை நிகழ்வுகளும் பார்த்து இருக்கமுடியும் என்றாலும் கிடைத்த நேரத்தில் ஒரு நகர்வலம் சென்றபோது காலையில் அங்கே சென்றிருந்தேன்.  எத்தனை எத்தனை திறமைகள் நம் இந்திய மண்ணில் - இவர்கள் அனைவருமே அவரவர் திறமைகளை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்டிட அரசும் தனியார் நிறுவனங்களும் முன் வர வேண்டும் என்பதை அவர்களது திறமைகளை பார்க்கும் போது தோன்றிய எண்ணம்.  


சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தின் புலிகாட் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் பனை ஓலையை பயன்படுத்தி தங்களது திறமையால் விதம் விதமான கூடைகள், தட்டுகள் என தயாரிக்கிறார்கள் என்றால், இன்னொரு புறம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அதிக அளவில் இருக்கும் பைன் மரத்தின் ஊசி போன்ற இலைகளை வைத்து அழகழகான கூடைகள் போன்றவற்றை செய்து அசத்துகிறார்கள்.  அந்த இலைகள் மிக மிக மென்மையானவை ஆயிற்றே அவற்றை வைத்து எப்படி இவ்வளவு அழகாக பொருட்களை செய்கிறார்கள் என்று எனக்கு ஆச்சர்யம்.  குஜராத்தில் இருந்து வந்திருந்த ஒரு ஆண் கலைஞர் தனது கைகளாலேயே மரத்தில் செதுக்கி ஆடைகளிலும் கைகளிலும் பயன்படுத்தக்கூடிய Printing Blocks தயாரிக்கிறார் என்றால் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒரு சிறு உளி கொண்டு கற்களில் புத்தர், பிள்ளையார் என அழகாக வடித்துவிடுகிறார். அந்தக் கற்கள் மிகமிக மென்மையானவை என்பதால், அவற்றைப் பயன்படுத்தி சிலைகள் செய்ய மிகவும் அதிகமான அளவு concentration தேவை.  சிலைகள் செய்யும் கற்கள் வெள்ளையாக இருந்தாலும், சிலை செய்து முடித்தவுடன் அவற்றின் மீது எண்ணெய் விட அப்படியே பளபளவென கருப்பாக ஆகிவிடுகிறது.   


பொருட்கள் மிக மிக அழகாக இருந்தன என்றாலும் விலை எனக்கு கட்டுப்படியாத அளவுக்கே இருந்தது. அதனால் பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது. மகளின் படிப்புக்கு உதவுமே என குஜராத் நபர் செய்த Printing Blocks மட்டுமே வாங்கிக் கொண்டேன்.  மற்றவற்றை வாங்க நினைத்தாலும் அவற்றின் விலை எனக்கு ஒத்துவராத காரணத்தினால் பார்த்து ரசித்ததோடு அந்த கலைஞர்களை பாராட்டும் விதமாக சில நிமிடங்கள் பேசி படங்கள் மற்றும் ஒன்றிரண்டு காணொளிகள் எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டேன். நான் வாங்கவில்லை என்றாலும் இந்த இடத்தில் சராசரியாக விற்பனை ஆவதாக சில கலைஞர்களிடம் பேசியபோது தெரிந்தது.  


தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்கள் மட்டும் மொழி பிரச்சனையாக இருப்பதால் தங்களது பொருட்கள் குறித்த தகவல்களை வரும் மக்களுக்குச் சொல்ல முடிவதில்லை என்று குறைபட்டுக் கொண்டார்கள். நிகழ்வினை ஏற்பாடு செய்ப்பவர்கள் ஒவ்வொரு கடையிலும் மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதும் உண்மை. அவர்களுக்கான கட்டணத்தையும் கலைஞர்களிடமே வசூல் செய்ய வேண்டியிருக்கும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய நிதர்சனம். ஏதோ நல்லது நடந்தால் சரி. தமிழகத்திலிருந்து புலிகாட் தவிர சேலம் மாவட்டத்திலிருந்து மணிகண்டன் என்கிற பெயர் கொண்டவர் கடை வைத்திருந்தார். மாலைகள் தான் அவரது பிரதான விற்பனை பொருள்.  இந்த நிகழ்வில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு.




படம் - 1 மற்றும் 2: பைன் மரத்தின் இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள்


படம் - 3: தமிழகத்திலிருந்து கருங்காலி மாலைகள்


படம்-4: இதுவும் தமிழகத்திலிருந்து தான். படத்தில் வெள்ளையாக இருப்பது கைகளுக்கான Bracelet - படத்தை கொஞ்சம் பெரிது செய்து பாருங்கள்!


 படம்-5: வங்காளத்திலிருந்து மாலைகள்.


படம்-6: அழகிய Water Fountain - இறை உருவத்துடன்


படம்-7: அழகான, வேலைப்பாடு மிக்க ஆட்டோக்கள் - வலது பக்கம் இருக்கும் ஆட்டோவின் விலை - அதிகமில்லை 2000/- மட்டுமே! கேட்டவுடன் “பர்சுக்கு சேதாரம் இல்லாமல் நகர்ந்துடுடா கைப்புள்ள” என்று நகர்ந்து விட்டேன்.


படம்-8: வெளிப்புற அலங்காரம்.


படம்-9: தமிழகத்தின் புலிக்காட் பனை ஓலை கைவினைப் பொருட்கள்


படம்-10:  உட்புற அலங்காரம்.



படம்-11 & 12: தமிழகத்தின் புலிக்காட் பனை ஓலை கைவினைப் பொருட்கள்


படம்-13: Bangle Box - விலை 300 ரூபாய்.


படம்-14: குளிர்காலத்திற்கான உடை


படம்-15: படபடவென்று சத்தம் வரும்படி இயங்கும் இந்த வண்டியை சிறு வயதில் எத்தனை பேர் இழுத்துச் சென்று இருக்கிறீர்கள்? எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.


படம்-16: Printing Blocks - 50, 100, 150 என பல்வேறு விலைகளில் - அளவைப் பொறுத்து!


படம்-17:   உட்புற அலங்காரம்.



படம்-18 & 19: கல்லிலே கலைவண்ணம் - பீஹார் மாநிலத்திலிருந்து..



படம்-20: நுழைவாயில் அலங்காரம்

*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

13 அக்டோபர் 2024


6 கருத்துகள்:

  1. வாசகம் அருமையோ அருமை!

    நேற்று நீங்கள் பகிர்ந்திருந்த கதையும், பழைய நினைப்பும் இனிதான் வாசிக்க வேண்டும் ஜி. கொஞ்சம் நேரப் பளு

    கீதா

    பதிலளிநீக்கு
  2. படங்கள் மனதைக் கவர்கின்றன.

    நம்ம ரோஷ்னியின் துறை!!!!! நிறைய ideas கிடைக்கும் அவங்களுக்கு இதைப் பார்க்கறப்ப!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மாலைகள், fountain ஓலையில் செய்த பொருட்கள் எல்லாம் செம.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்கள் மட்டும் மொழி பிரச்சனையாக இருப்பதால் தங்களது பொருட்கள் குறித்த தகவல்களை வரும் மக்களுக்குச் சொல்ல முடிவதில்லை என்று குறைபட்டுக் கொண்டார்கள். நிகழ்வினை ஏற்பாடு செய்ப்பவர்கள் ஒவ்வொரு கடையிலும் மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதும் உண்மை. அவர்களுக்கான கட்டணத்தையும் கலைஞர்களிடமே வசூல் செய்ய வேண்டியிருக்கும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய நிதர்சனம்.//

    ஆமாம்.. சரிதான். கொஞ்சமேனும் மொழி கற்றுக் கொண்டால் நல்லது அடிப்படை புரிதல் அதாவது வணிக சம்பந்தமாகவேனும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வாசகம், மற்றும் படங்கள், செய்திகள் அருமை.
    இந்தி மொழி தெரிந்தவர்களை தமிழகத்திலிருந்து விற்பனைக்கு போகிறவர்கள் அழைத்து போகலாம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....