சனி, 12 அக்டோபர், 2024

காஃபி வித் கிட்டு - 205 - நவராத்ரி - கருப்பாயிடுவ - IAS Vs Doctor - கண்ணீர் திரையிட்ட மகாநதி - சுந்தரபாண்டியபுரம் - We are pregnant - மீன்களின் நடனம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : நவராத்ரி 


நவராத்ரியின் சிறப்பு - துர்கா லக்ஷ்மி சரஸ்வதி. இம்மூவர் குறித்த சில சிந்தனைகள் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் பார்வையில் - இந்த வாரத்தின் தகவலாக…


துர்கா லக்ஷ்மி சரஸ்வதி 


பெண்கள் வாழ்வின் மூன்று நிலைகளைக் குறிப்பதே துர்கா லக்ஷ்மி சரஸ்வதி எனும் அம்பிகையின் மூன்று தோற்றங்கள்.


அம்பிகையின் கழல் பற்றி,  அந்நிலைகள் பற்றி சொல்ல விழைகிறேன்.🙏🏻🙏🏻


விளையாட்டு, சிரிப்பு, உற்சாகம் குதூகலம்; அஞ்சாமை, வீரம், வேகம், வெற்றி இவை துர்கா அம்சங்கள். அவற்றைக் குறிப்பது அவள் அஷ்ட புஜங்களில் ஆயுதங்கள்! இவள்  வீர சக்தி ஒளி வீசும் முகத்தோடு புலி வாகனத்திலமர்ந்த துர்கா; பருவம் பாலை. வயது 12.


பருவமடைந்த பெண் முகத்தில் கனவுகள், நாணம் இவை செம்மை தீட்ட, திருமணம் கைகூட, இல்லறம் சிறக்க, குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யமும் பொங்கி நிறையும் பருவம் 40 வயது வரை; இவள் செந்தாமரை மேல் புன்னகை தவழும் முகத்துடன்,கரங்களில் பொற்குடத்துடன் இருக்கும் மஹாலக்ஷ்மி;


குடும்பப் பொறுப்பு, பற்றுகள் விலகிச் செல்ல; ஆன்மீகத்தில் மெல்ல மனம் கொண்டு சேர்க்க ;  சுத்த ஸ்படிக வடிவமாய் தூய்மை கொண்டு உள் ஒளிர; மோனத் தவத்தால் ஞானம் சித்திக்க; பரிபூரண சாந்த நிலை, இது  இறுதி வரை; இவள் சாந்த முகம், வெண்ணிற உடை, கரங்களில் வீணையுடன் வெண் தாமரை மேல் அமர்ந்த சரஸ்வதி; வீரம், சக்தி, வெற்றி தரும் துர்காவாக செல்வம், நல்ல குடும்ப வாழ்வு தரும் மஹாலக்ஷ்மியாக நல்லறிவு, ஞானம் அருளும் சரஸ்வதியாக அனைத்துமாகத் திகழும் பராசக்தியைப் போற்றுவோம் வணங்குவோம், அருள் பெறுவோம்🙏🏻🙏🏻🙏🏻 - விஜி வெங்கடேஷ்.


******

 

ராஜா காது கழுதை காது : கருப்பாயிடுவ



பலர் குசும்பு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் திருவரங்கம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பூக்கடை ஒன்றின் முதலாளி (பெண்மணி) அந்தப் பக்கமா வந்த ஒரு பெண்மணியிடம் “என்னம்மா இப்படி நல்ல வெய்யில்ல வந்துருக்க! ஒரு குடை கிடை எடுத்துட்டு வந்துருக்கலாம்ல! கருப்பாயிடுவ பார்த்துக்கோ” என்றார்.  அதைச் சொல்லும் போது சற்றே திரும்பி என்னையும் பார்த்து ஒரு கண்ணடிப்பு! நான் பார்க்காத மாதிரியே இருந்துட்டேன்! இத்தனைக்கும், சொன்ன பெண்மணி, கேட்ட பெண்மணி இருவருமே நல்ல கருப்பு! பிறகு மேலூர் பஸ்ஸுக்கு நிக்கறீங்களா? இரண்டு மணிக்கு தான் வரும் என்றார்.  அங்கே ஒரு வேலையாக நின்றிருந்தது ஒரு தப்பா? என்ன ஒரு குசும்பு என்று நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டேன். 


******


இந்த வாரத்தின் எண்ணங்கள்  : IAS Vs Doctor…



இப்போதெல்லாம் IAS ஆவது குறித்த எண்ணங்கள் அதிகரித்து இருக்கிறது என்று தான்  தோன்றுகிறது. முன்பெல்லாம் IAS ஆக இருப்பவர்களின் குழந்தைகள் மட்டுமே அதிக அளவில் இந்தத் தேர்வு குறித்த கனவுகளுடன் இருப்பார்கள். பலருக்கு IAS ஆவது கனவாக மட்டுமே இருந்தது.  ஆனால் இப்போது இந்தத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிக அளவில் இயங்குகின்றன என்பதோடு இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அதிகம் - தலைநகரின் சில பகுதிகளில் இப்படியான மாணவர்களை நிறைய பார்க்க முடியும். மிக மிக அதிக அளவு உழைப்பு தேவைப்படும் ஒரு தேர்வு இது.  தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல. சமீப இரயில் பயணத்தில் இப்படி ஒரு இளைஞரை பார்க்க நேர்ந்தது. அவருடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்ததில் தெரிந்தது - அவர் MBBS முடித்த ஒரு மருத்துவர் என்பது.  மருத்துவம் படித்த பின்னர் சில வருடங்கள் தமிழகத்தின் மாவட்ட அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த பிறகு அதனை விட்டு விட்டு IAS தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் படித்து தொடர்ந்து தேர்வு பெற முயற்சி செய்து வருகிறாராம்.  முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று இரண்டாம் நிலை தேர்வு எழுதி இருக்கிறார்.  அதிலும் தேர்வு பெற்றால் பிறகு நேர்காணல்.  எதனால் இந்த மாற்றம் என்று அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் - இந்திய தேசத்திற்கு மருத்துவர்களை விட Bureaucrat என்று சொல்லப்படும் அதிகாரிகள் தான் அதிகம் தேவை என்பதை காரணமாகச் சொன்னார்.  தீநுண்மி காலத்தில் பல தேவைகளை முடிவு செய்ய முடிய வேண்டிய அதிகாரிகள் இல்லை என்று காரணம் சொன்னார்.  இது சரியான நோக்கமா என்று இங்கே பேசப்போவதில்லை.  ஆனால் ஒரு விஷயம் மருத்துவர் இப்படி Bureaucrat ஆகும்போது மருத்துவத் துறையை கவனிக்கும் அமைச்சகத்தில் பணிபுரிந்தால் பல நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை எங்கள் துறையில் மருத்துவராகவும் அதே சமயம் அதிகாரியாகவும் (IAS) இருந்தவர்களுடன் பணிபுரிந்த சமயத்தில் கவனித்திருக்கிறேன்.  அந்த இளைஞருக்கு அவரது கனவு நனவாக வாழ்த்து சொன்னதில் எனக்கும் மகிழ்ச்சி. 


******


பழைய நினைப்புடா பேராண்டி : கண்ணீர் திரையிட்ட மகாநதி.....



2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கண்ணீர் திரையிட்ட மகாநதி - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியபோது என் இல்லத்தரசி தொலைக்காட்சியில் கமல்ஹாசன், சுகன்யா, கொச்சின் ஹனீபா மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் நடித்த மகாநதி திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சாதாரண கிராமத்து விவசாயி எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு தனது குடும்பம், சொத்து, நிம்மதி என்று எல்லாவற்றையும் இழக்கிறார் என்பதை படம்பிடித்துக் காட்டிய தேசிய விருது பெற்ற ஒரு நல்ல படம்.


நிறைய முறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்க்க ஏனோ வெறுப்பு ஏற்படவில்லை. கடைசி 15 நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த படத்தை முதன் முதலாக பார்த்த நினைவுகள் எனது மனதில் வந்து அலைமோதியது.


அந்த படம் வெளியானபோது நான் தில்லி வந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது. சில சமயங்களில் தில்லி தமிழ் சங்கம் அருகில் உள்ள "சங்கம்" திரை அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். அது தவிர TYCA [Tamil Youth Cultural Association] என்ற ஒரு அமைப்பு மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Pahar Ganj பகுதியில் உள்ள மகாராஷ்டிரா ரங்கராயன் அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். மற்ற எந்த திரை அரங்குகளிலும் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுவதில்லை. அந்த அமைப்பின் உறுப்பினர் என்றால் கட்டணம் 25 ரூபாய் இல்லையெனில் அதிகம் [சரியாக நினைவில்லை].


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் சுற்றுலா தகவல் : சுந்தரபாண்டியபுரம்



இணையத்தில்/முகநூலில் பனித்துளி விஜயகுமார் என்ற ஒரு நண்பர். சுற்றுலா குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் என்பதால் அவரது பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன் என்பதோடு அவரது முகநூல் கணக்கையும் தொடர்கிறேன்.  சமீபத்தில் தென்காசியை அடுத்த சுந்தரபாண்டியபுரம் என்கிற இடத்தினை பற்றிய தகவலுடன் ஒரு காணொளியும் வெளியிட்டு இருந்தார்.  அந்த ஊர் முழுக்க செப்டெம்பர் - அக்டோபர் மாதங்களில் சூரியகாந்திப் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்றும் அங்கே கேரளத்திலிருந்து பலரும் வந்து ரசிப்பதோடு திருமணம் முடிந்த தம்பதிகள் இங்கே திருமண காணொளிகள்/படங்கள் என எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் தகவல் தெரிவித்து இருந்தார்.  காணொளியில் பார்க்கவே பரவசமாக இருந்தது. சென்று பார்க்கலாம் என்று கூடத் தோன்றியது. சில பயணங்களை ஏற்பாடு செய்து அழைத்துச் செல்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.  அவரது இந்த காணொளிக்கான சுட்டி கீழே!


Sundarapandiyapuram (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த காணொளி:  We are pregnant…



இந்த வாரத்தின் ரசித்த காணொளியாக, Pregakem என்ற நிறுவனம் எடுத்த காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு.  நிச்சயம் உங்கள் மனதையும் தொடும் என்று நம்புகிறேன்.


மேலே உள்ள காணொளியை பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம். 


PREGAKEM We are Pregnant (youtube.com)


******


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது :  மீன்களின் நடனம்



மீன்களை தமது வீட்டில் கண்ணாடி தொட்டிகளில் வளர்ப்பது குறித்து உங்கள் எண்ணம் என்ன. எனது நண்பர்களின் வீடுகளில் இப்படி கண்ணாடித் தொட்டிகளில் மீன் வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். எனது அலுவலகத்திலும் இப்படியான மீன் தொட்டி எங்களது அமைச்சர் அலுவலக வளாகத்தில் உண்டு. அதனை பராமரிப்பது என்பது ஒரு பெரும் வேலை என்று தோன்றுகிறது.  தொட்டிகளில் வளரும் மீன்களை பார்த்துக் கொண்டிருப்பதும், அவற்றுடன் பேசுவதும் மனதை கொஞ்சம் அமைதியாகும் விஷயம் என்று தோன்றினாலும், மீன் வளர்ப்பு என்பது சாதாரண விஷயமில்லை. வளர்ப்பு மீன்களில் ஒன்று இறந்தாலும் அதனை மறப்பது மிகவும் கடினம் என்று தோன்றும்.  இப்படியான மீன்கள் இப்படியாக அங்கும் இங்கும் நீந்துவதை பார்த்தால் ஒரு வித நடனம் போலவே இருக்கும்.  இந்த மீன் தொட்டியில் நீந்தும் மீன்களைக் கருவாகக் கொண்டு ஒரு குறுங்கதை எஸுத்தியிருக்கிறார் எஸ்.ரா. எனப்படும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். கதையைப் படிக்கச் சுட்டி கீழே!


மீன்களின் நடனம் – எஸ். ராமகிருஷ்ணன் (sramakrishnan.com)


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

12 அக்டோபர் 2024


16 கருத்துகள்:

  1. வாசகம் மிக அருமை.
    காணொளியும் touching 👍
    மீன் தொட்டியை பற்றி படிக்கும் போது எங்கள் வீட்டு மீன்களின் நினைவு வர லேசாக மனம் கனத்தது.
    சூரியகாந்தி பூக்களை பார்க்கும் போது அங்கே சென்று வர ஆசை எழுகிறது.
    இந்த கருப்பாயிடுவ topic ல் வரும் படம் மட்டும் என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
    மொத்தத்தில் கதம்பம் 👌👍

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமையாக உள்ளது.

    சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய நவராத்திரியின் முப்பெரும் தேவியின் உவமான பகிர்வு அருமையாக உள்ளது.

    மீன் தொட்டி பதிவும், எண்ணங்களும் அருமை. இதுவரை இது போல் வீட்டில் வளர்த்தில்லை. பதிவை படிக்கும் போது வளர்க்கும் ஆசை வருகிறது. ஆனால், அதனால் ஏற்படும் மன உளைச்சல்களும் பயமுறுத்துகின்றன. மீன்களின் நடனம் சுட்டிக்குள் சென்று படித்து வந்தேன். கதை மனதை நெருடுகிறது.

    உண்மையில் மகாநதி திரைப்படம் மனதை வருத்தும் படந்தான். அதில் கமல் நன்றாக உணர்வு பூர்வமாக நடித்திருப்பார். நாங்கள் தொலைக் காட்சியில்தான் இந்தப்படம் பார்த்தோம். படம் பார்த்து பல நாட்கள் எனக்கும் அதன் தாக்கம் இருந்தது.

    சுந்தரபாண்டியபுரம் அழகான ஊர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அங்கிருக்கும் அக்கிராமத்தில் ஒரு உறவினர் வீட்டிற்கு சென்று வந்தோம். இப்போது பகிர்ந்துள்ள விஷயங்களும் படிக்க நன்றாக உள்ளது.

    காணொளி பிறகு பார்க்கிறேன். இன்றைய பகிர்வு அனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வெயிலில் நின்றால் கருத்துவிடும். உண்மைதான். ஆனால் வெயிலினால் நன்மைகளும் உண்டு. தலைமுடி குறைவான சிறிது வயதானவர்களுக்கு வெயிலினால் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.

    பதிலளிநீக்கு
  4. கமல் ருதடவை, மகாந்தி படம் வெற்றிபெறாது என்றே நினைத்ததாகச் சொல்லியிருந்தார். மகாந்தி படம் அருமையான படம், பல சோகங்களை உள்ளடக்கியது

    பதிலளிநீக்கு
  5. ரா கா க கா வில் இணைத்திருக்கும் படம் பிரமாதம். ரொம்ப ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு படிப்பின்மேல் இளைஞ இளைஞிகள் ஆர்வம் கொண்டு கூட்டம் கூட்டமாக சேர்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. பழைய பதிவு நான் அப்போது உங்கள் தளம் வந்ததில்லை போலும். இப்போதுதான் படித்தேன். ஹுஸைனம்மா கருத்துதான் எனக்கும்.

    பதிலளிநீக்கு
  8. பனித்துளி விஜயகுமார் என்றதும் பழைய பதிவர், கவிஞர் பனித்துளி சங்கர் நினைவு வருகிறது.

    பதிலளிநீக்கு
  9. காணொளி - கனவுக்கணவன்!  

    மீன் தொட்டி வைக்கும் / பாதுகாக்கும் பொறுமை இல்லை!!!! :))

    பதிலளிநீக்கு
  10. கதம்பத்தில் பதிவு செய்த அணைத்து விஷயங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  11. இன்றைய வாசகத்தைக் கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நவராத்திரி - விஜி அவர்களின் கருத்துகள் சூப்பர்.

    வெயிலில் கருப்பாவது என்பது tan ஆவதைத்தான் சொல்றாங்க....அதை விட அது குறிப்பிட்ட நேரத்தில் நின்றால் நல்லது ஆனால் மற்றபடி நம் தோலுக்கும் உடலுக்கும் அதீத வெப்பம் கஷ்டம்தான்.

    //ஆனால் ஒரு விஷயம் மருத்துவர் இப்படி Bureaucrat ஆகும்போது மருத்துவத் துறையை கவனிக்கும் அமைச்சகத்தில் பணிபுரிந்தால் பல நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை எங்கள் துறையில் மருத்துவராகவும் அதே சமயம் அதிகாரியாகவும் (IAS) இருந்தவர்களுடன் பணிபுரிந்த சமயத்தில் கவனித்திருக்கிறேன். //

    டிட்டோ. வாழ்த்துவோம் அவரை

    கீதா

    பதிலளிநீக்கு
  13. மகாநதி படம் ம. மனதை என்னவோ செய்துவிடும் அப்டத்தை முழுவதும் பார்த்ததில்லை. உங்கள் பதிவுக்குச் செல்கிறேன் ஜி.

    ஆமாம் சுந்தரபாண்டியபுரம் அழகான ஊர். சூரியகாந்தி சீசன் தொடங்கும் நேரம்...அத்தனை அழகா இருக்கும்

    ரோஜா படத்தில் இந்த ஊரைத்தான் காட்டுவாங்க. பெயரும் வருமே அதில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. காணொளி சூப்பர் தொடக்கக் காட்சிகளே சொல்லிவிடுகிறாது ஸ்பீட் ப்ரேக்கர்...பெல்ட் மாட்டிவிடுவது என்று....மனதைத் தொட்டது

    மீன் தொட்டி பார்த்தாலே ஜப்பான் நினைவுக்கு வந்துவிடும் அங்கு பெரும்பாலும் வளர்ப்பாஅங்க என்று வாசித்த்ரிஉக்கிறேன்....நிலநடுக்கம் வருவதை உணர்த்துமாம். ஆனால் பராமரிப்பு கடினம் தான். மீன்கள் பார்ப்பது பிடிக்கும் ஆமா நீந்துவது நடனம் போன்று இருக்கும் அதுவும் சில ரொம்ப அழகா செய்யும் சில வித்தைகள் பாலே டான்ஸ் போல..

    எஸ் ரா கதையை வாசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. சுந்தரபாண்டியபுரம்.. செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறது. ஆம், மனதைக் கனக்க வைக்கும் மகாநதி. மீன்கள் என்றில்லை எந்த வளர்ப்புப் பிராணியின் பிரிவும் துயரமே. மருத்துவரின் IAS கனவு நனவாகட்டும்!

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  16. வாசகம் அருமை. காணொளி மிக அருமை. அன்பு, கருணை அக்கரை காட்டும் கணவன் ஒரு வரம்.
    மகாநதி சோகம். பழைய பதிவை படித்தேன், என் பின்னூட்டம் இல்லை. எனக்கு இந்த படத்தை மீண்டும் பார்க்க மனம் துணியவில்லை.

    சுந்தரபாண்டியபுரம் பார்க்க ஆவலை ஏற்படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....