திங்கள், 21 அக்டோபர், 2024

யூரோ இருந்தாலும் தாங்க - கால் வைக்க இடம் இல்லாமல் கூட்டம் - நடை நல்லது - பகுதி பத்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பன்னிரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு பத்தாம் பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


யூரோ இருந்தாலும் தாங்க - 8 செப்டம்பர் 2024:



இன்று நீண்ட நெடியதொரு நடை - இன்றைய மொத்த நடை ஒன்பது கிலோ மீட்டர்! கனாட் பிளேஸ் பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். அங்கே இருக்கும் கடைத்தெருவில் நிறைய வெளிநாட்டவர்கள் வருவது வழக்கம். அவர்களிடம் எதையாவது விற்பனை செய்வதற்கு நிறைய வியாபாரிகள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். Bபஞ்சாரா என்று அழைக்கப்படும் நாடோடிகள் இங்கே வடக்கில் நிறைய உண்டு. அவர்கள் குழந்தை குட்டிகளுடன் இவர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். 


இன்றைக்கு அப்படி சிலரை பார்த்தேன். என்ன சாமர்த்தியமாக வெளிநாட்டவர்களை கவர்கிறார்கள். அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் போதே prospective customer ஆக இருக்கக் கூடும் என்று identify செய்துவிட்டார். அதை அவரது மகள் - ஏழு வயது இருக்கலாம் - இடம் சொல்லி, அந்த வெளிநாட்டவர் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் கவர்ந்து விட்டார். அந்தப் பெண்மணி தன்னிடம் சில்லறை இல்லை என்று சொன்னாலும் விடவில்லை. கூடவே சென்றதொடு, Euro அல்லது டாலர் ஆக இருந்தாலும் கொடுங்கள் என்று கேட்கிறார்கள் மகளும் அம்மாவுமாக! (Give me Euro or dollar, no problem) 


ஒரு நூறு ரூபாய் நோட்டை கொடுக்க, அந்த வெளிநாட்டுப் பெண்மணியின் கழுத்தில் சில மாலைகளை போட்டு விட்டார். அவர்களாகவே தயாரிக்கும் மாலை - மிகமிக சாதாரணமான மாலை தான் - 20 ரூபாய் கூட மதிப்பு இருக்காது. அதன் பின்னரும் விடாமல் தனது நான்கு வயது மகனை அழைத்து அவர் மூலமும் ஒரு மாலையை அணிவிக்க வைத்து அந்தச் சிறுவனுக்கு தனியாக 100 ரூபாய் வாங்கிவிட்டார். அவர்கள் செல்லும்போது அந்தச் சிறுவன் adiyos amigo என்று ஸ்பேனிஷ் மொழியில் குட் பை சொல்லி அசத்துகிறார். 


இத்தனைக்கும் பள்ளி செல்வதில்லை, படிப்பில்லை, மொத்த வாழ்க்கையும் சாலை ஓரங்களில் தான்… இருந்தும் இப்படி வரும் பயணிகளிடம் பேசி, அவர்கள் பேசுவதிலிருந்து இந்த மக்கள் பல நாட்டு மொழிகளில் சில வார்த்தைகளை கற்றுக் கொண்டுவிடுகிரார்கள். அதனை தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவும் செய்கிறார்கள். ஒரு விதத்தில் சிறு வயதிலேயே மற்றவர்களை ஏமாற்ற கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் என்று தோன்றினாலும் அதுவும் ஒரு வித திறமைதான் என்றும் தோன்றியது…..  வெளிநாட்டு கரன்சி ஆக இருந்தாலும் கேட்கிறார்களே எப்படி மாற்றுவார்கள் என்றும் கேள்வி தோன்றியது…… இருந்தாலும் அதை மாற்றுவது எப்படி என்று தெரிந்ததால் தானே இப்படி தைரியமாக அவர்களிடம் கேட்கிறார்கள் என்றும் எனக்கு நானே பதில் சொல்லிக் கொண்டேன். 


எப்படியெல்லாம் இருக்கிறார்கள் நம் சக மனிதர்கள் என்ற எண்ணத்துடன் என் நடை தொடர்ந்தது…… 


*******


கால் வைக்க இடம் இல்லாமல் கூட்டம் - 9 செப்டம்பர் 2024:



நேற்றைய தினம் கரோல் Bபாக்g பகுதியில் கொஞ்சம் வேலை இருந்தது. அதனால் அங்கே சென்று வந்தேன்.  கிடைத்த பேருந்து DB Gupta Road பகுதியில் இறக்கி விட அங்கேயிருந்து அஜ்மல் கான் ரோடு வழியே நடந்து பூசா ரோடு பகுதியில் இருக்கும் மெட்ரோ இரயில் நிலையம் வரை நடை!  பெரிய தூரம் ஒன்றும் இல்லை என்றாலும் இந்தச் சாலையில் நடப்பது என்பது மிகமிக பொறுமை வேண்டும் செயல்.  காரணம், இந்தச் சாலை தான் தில்லியின் புகழ்பெற்ற மண்டே மார்க்கெட் என்று அழைக்கப்படும் கடைத்தெரு இருக்கும் இடம்.  திங்கள் கிழமைகளில் சாலை முழுக்க நடைபாதைக் கடைகள் திறந்திருக்க, பிரதான ஷோரூம்கள் மூடி இருக்கும்.  எல்லா திங்கள் கிழமைகளிலும் இந்தப் பகுதியில் நடப்பது என்பது கடலில் தொடர்ந்து வரும் அலைகளில் எதிர் நீச்சல் அடிப்பது போல!  ஒரு காலத்தில் திங்கள் அன்று மட்டுமே இப்படியான சூழல் இருக்கும் என்றாலும் இப்போதெல்லாம் எல்லா நாட்களிலுமே எதிர் நீச்சல் அளவு தான் கூட்டம் இருக்கும்! 


பொதுவாக நடை என்றால் காலாற, கால்களை நன்று வீசி நடக்கவே விருப்பம்.  அதனால் தான் பூங்காக்கள், இல்லை எனில் தலைநகரின் அழகான, நீண்ட நெடும்  மற்றும் அகன்ற வீதிகளில் நடப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனாலும் நேற்று சற்றே மாறுதலுடன் இந்த கடைத்தெரு பகுதியில் நடந்து வந்தேன்.  கொஞ்சம் ஏமாந்தால், எங்கேயும் பராக்கு பார்த்தபடி நடந்தால் உங்களை எங்கேயேனும் தள்ளிக்கொண்டு போய்விட்டு விடும் மக்கள் கூட்டம்! அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடக்க வேண்டும்.  அப்படியும் அரை மணி நேரம் நடந்து செல்ல வேண்டிய இடத்தினை அடைந்ததோடு நண்பர் ஒருவரையும் சந்தித்து ஒரு சாலையோர உணவகத்தில் அமர்ந்து ஆலு டிக்கி (உருளைக்கிழங்கு வைத்து செய்யும் ஒரு மாலை நேர உணவு) - ஐ உள்ளே தள்ளினோம்.  என்ன தான் சொல்லுங்கள் - உருளைக்கிழங்கை வைத்து இவர்கள் செய்யும் உணவு/Snacks வகைகளுக்கு ஈடில்லை!  வாயு அது இது என்று நம் ஊரில் சப்பைக்கட்டு கட்டினாலும், இங்கே பயமே இல்லாமல் எல்லா வகை உணவுகளிலும் ஆலு எனும் உருளையைச் சேர்த்து விடுகிறார்கள். 


நடை நல்லது என்ற பெயரில் நடந்து விட்டு இப்படி ஆலு டிக்கி உள்ளே தள்ளினால் என்ன அர்த்தம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இன்னும் கொஞ்சம் அதிகம் நடந்தேன் நேற்றைய தினம்! தில்லியின் உணவு வகைகள் குறித்தும் அவ்வப்போது எழுதியது உண்டு. முடிந்தால் நகர்வலம் தொடரில் உணவு வகைகள் குறித்தும் அவ்வப்போது எழுதுகிறேன். 


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

21 அக்டோபர் 2024


2 கருத்துகள்:

  1. அவர்கள் 'எனக்கு ஸ்பானிஷ் தெரியாது போடா' என்று சொல்வதில்லை பாருங்கள்!  கூடுதலாக ஒரு மொழி...

    மண்டே மார்க்கெட் கூட்டம் -  முன்னர் சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவை இப்படி சொல்வார்கள்.  இப்போது அதற்கு இணையான அல்லது ஜாஸ்தியான இடங்கள் நிறைய வந்து விட்டன!

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இந்த வகை பக்குவமும் வந்து விட்டால் நல்லதுதானே..!

    உண்மை.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்தானே..! அதுவும் வெளிநாட்டுகாரர்களை கண்டால், இவர்கள் எப்படியோ தான் கற்ற பல மொழியை வைத்து ஒன்றிரண்டை பேசி பிழைத்துக் கொண்டு விடுகிறார்கள். ஆச்சரியந்தான்.! எல்லாமே வியாபார தந்திரங்கள்.

    /கொஞ்சம் ஏமாந்தால், எங்கேயும் பராக்கு பார்த்தபடி நடந்தால் உங்களை எங்கேயேனும் தள்ளிக்கொண்டு போய்விட்டு விடும் மக்கள் கூட்டம்! /

    ஹா ஹா ஹா. முன்பு அதற்காகத்தான் சென்னையில் தி. நகர் ரங்கநாதன் தெருவுக்கு நாங்கள் செல்லவே மாட்டோம். தேர் கூட்டம் போல், தள்ளிக் கொண்டு போகும் மக்கள் கூட்டத்தின் நடுவே நாம் குறிப்பிட்ட கடைகளுக்கு செல்லவே மிகுந்த சிரமப்பட வேண்டும். அதுவும் தீபாவளி சமயத்தில் கேட்கவே வேண்டாம்.

    நடுவில் நாங்கள் தி. லி செல்லும் போதும் ஒரு தடவை (அப்போது ஆடித்தள்ளுபடி) ஜவுளி வாங்குவதற்காக தி. லி நான்கு வீதியிலும் அப்படி ஒரு கூட்டம். நாங்கள் நடக்கவேயில்லை. :))

    உ. கி உடம்புக்கு நல்லதோ, கெட்டது சாப்பிட்டு கொண்டேதான் உள்ளோம். தில்லியில் பிரபலமாக இருக்கும் அந்த உணவுகளைப் பற்றியும் சொல்லுங்கள்.

    நடை தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....