புதன், 2 அக்டோபர், 2024

பேருந்து பயணம் - மாப்பிள்ளை அழைப்பு - நகர் வலம் மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இன்றைய தினம்:  காந்தி ஜெயந்தி - காந்தி ஜி கொள்கைகளில் பலவற்றை மறந்து விட்டோம் என்றாலும் விடுமுறை நாள் என்பதை மட்டும் நினைவில் இன்னமும் வைத்திருக்கிறோம் என்ற அளவில் மகிழ்ச்சி! காந்தி ஜெய்ந்தி ஆன இன்றைய தினத்தில் அவரது சில கொள்கைகளையேனும் கடைபிடித்தால் நல்லதே! அவரது சில கொள்கைகள் எனக்கு பிடித்தவை அல்ல என்றாலும் பல நல்ல கொள்கைகளும் உண்டே - பிடித்ததை எடுத்துக் கொண்டு பிடிக்காததை விட்டுவிடுவோமே!


சென்ற இரண்டு வாரங்களாக நகர்வலம் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதியது நினைவில் இருக்கலாம்.  அந்த வரிசையில் இன்றைக்கு மூன்றாம் பதிவு! தில்லி பேருந்து ஒன்றில் பயணித்தபோது கிடைத்த ஒரு அனுபவம் குறித்து இந்தப் பகுதியில் பார்க்கலாம்!


மாப்பிள்ளை அழைப்பு:



சமீபத்தில் ஒரு சனிக்கிழமை மாலை நகர்வலம் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தில் எங்கே செல்ல வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இல்லை. கால் போன போக்கில் நடக்க 610 எனும் தடம் எண் கொண்ட பேருந்து வரும் நிறுத்தத்தை அடைந்து இருந்தேன். சில நிமிடங்களில் ஒரு குளிரூட்டப்பட்ட சிவப்பு நிற 610 வர அதில் ஏறி 50 ரூபாய் பஸ் பாஸை செயலி மூலம் வாங்கிக் கொண்டேன். பேருந்து ஓட்டுனருக்கு பின் ஜன்னலோர இருக்கை காலியாக இருக்க அதில் அமர்ந்து வேடிக்கை பார்த்து வந்தேன். 


சில நிமிடங்களில் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அந்த ஓட்டுநர் ஓர் காலத்தில் Bபராத் என்று இங்கே ஹிந்தியில் சொல்லப்படும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் குதிரை வண்டி ஓட்டிருப்பவராக இருக்க வேண்டும் என்கிற ஞானம் தான் அது! அத்தனை பொறுமை அவரிடம். மாப்பிள்ளை அழைப்பு எனும்போது ஆங்காங்கே நிறுத்தி மேள தாளத்துடன் நடனங்கள் புரிந்து மிக மிக பொறுமையாக திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி! பெண் வீட்டாரை காத்திருக்க வைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் மாப்பிள்ளை வீட்டாருக்கு! அதனை நினைவில் வைத்தோ என்னமோ பேருந்தினையும் அவ்வாறே மிக மிகப் பொறுமையாக செலுத்திக் கொண்டு சென்றார். பேருந்து நிலையம் வருகிறதற்கு முன்னரே வாகனத்தினை 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினார்! சாதாரண வேகம் 15 கிலோ மீட்டர்! 


ஒரு வழியாக நான் இறங்க வேண்டிய இடம் சென்று சேர - எனது வீட்டிலிருந்து அந்த இடம் சுமார் 13 கிலோ மீட்டர் - தில்லியின் போக்குவரத்து நெரிசலைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் 45 நிமிடத்தில் சென்று விடலாம்! ஆனால் அந்த ஓட்டுனர் எடுத்துக் கொண்ட நேரம் சுமார் ஒண்ணே கால் மணி நேரம்! நான் எனது வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பேருந்து நிலையம் வந்த போது அங்கே ஒரு முதிய பெண்மணி தனது இரண்டு பெரிய பைகளோடு காத்திருந்தார்.  அவர் என்னிடம் சுமார் 45 நிமிடங்களாகக் காத்திருப்பதாகவும் அவர் செல்ல வேண்டிய 610 பேருந்து வரவே இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்ததோடு, வேறு ஏதேனும் பேருந்து அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  


சிறிது நேரத்தில் அவருக்கும் எனக்கும் தேவையான அதே எண் கொண்ட பேருந்து வந்து சேர்ந்தது! ஒரு விஷயம் தெரியுமா? வந்தது அதே மாப்பிள்ளை அழைப்பு ஓட்டுனரைக் கொண்ட அதே சிவப்பு பேருந்து! மீண்டும் இந்தப் பேருந்திலா செல்வது என்ற எண்ணம் வந்தாலும், மாப்பிள்ளை அழைப்பு என்றால் மண்டபத்திலிருந்து கோவில், கோவிலிலிருந்து மண்டபம் என்று தானே இருக்கும் என மனதில் தோன்ற அதே பேருந்தில் ஏறிக்கொண்டேன்! சரி பொழுது போகட்டும் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்! மனதில் கூடவே ஒரு சந்தேகமும் வந்தது! அந்த சந்தேகம் எனது மாப்பிள்ளை அழைப்பு குறித்து யாரேனும் இந்த ஓட்டுனரிடம் போட்டுக் கொடுத்து இருப்பார்களோ என்ற சந்தேகம் தான்! 🙂


எனது திருமணத்தின் போது மாப்பிள்ளை அழைப்பு என்ற பெயரில் கோவிலுக்குச் சென்று வந்தாலும் கார் எல்லாம் வைக்க வேண்டாம் என்ற முடிவு எடுத்திருந்தோம் - கோவை ராஜ வீதியிலிருந்த மண்டபத்தின் அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு நடந்து சென்று நடந்தே திரும்பினோம்! உனக்கு கார் வைக்கலையே அதனால பேருந்திலேயே, கூட்டத்தோடு மாப்பிள்ளை அழைப்பு கூட்டிட்டு போறேன்! என்று இந்த ஓட்டுனரிடம் யாரேனும் சொல்லி இருப்பார்களோ :)  ஹாஹா….


தொடர்ந்து வலம் வருவோம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

2 அக்டோபர் 2024


8 கருத்துகள்:

  1. முகநூலிலும் படித்திருந்தேன். இங்கும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் படித்து பதிவை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிலர், வேகமாக வேலை செய்தால் இன்னும் புதிய வேலைகள் வருமே என்று இருக்கும் வேலையை மெதுவாகச் செய்வதுபோல அவர் பேருந்து ஓட்டுகிறாரா? இப்போல்லாம் இத்தனை தேரத்துக்குள் அந்தந்த இடங்களை அடையணும் என்ற நேரக் கட்டுப்பாடு இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிக வேலை செய்ய வேண்டியிருக்கலாம் - இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம். நேரக்கட்டுப்பாடு இருக்கிறது என்றே நினைக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை..இன்றைய வாசகமும் அருமை.

    மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தைப் பற்றி நீங்கள் சொன்ன கருத்தை ரசித்தேன். அந்த ஓட்டுனர் பேருந்தில் உள்ள அனைவரையும் மாப்பிள்ள அழைப்பு ஊர்வலமாக அழைத்து செல்கையில், யார் யாருக்கு என்ன அவரச வேலைகளுக்காக பயணிக்கும் நிர்பந்தங்களோ ..?அவர்கள் மனதால் மிகவும் சிரமபட்டிருப்பார்கள்.

    நீங்கள் கற்பனையில் உங்கள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தை நினைந்து ரசித்ததை நினைத்து நாங்களும் ரசித்து சிரித்தோம். 😆.

    இங்கு எங்களுக்கும் முன்பு ஒரு மழை நேரத்தில் இப்படியான பயணம் அமைந்தது. உங்கள் பதிவை படிக்கையில் அது நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவு வழி பகிர்ந்த செய்திகள் குறித்த தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. இங்கும் சில ஓட்டுநர்கள் இப்படி ஓட்டுகின்றனர். இங்கு நேரக் குறிப்புகள் உண்டு இந்த நேரத்திற்குத் தொடங்கி இந்த நேரத்தில் அடையணும் என்று ஆனால், அதுவும் நாம் ஒரு நேரம் நினைத்து இந்தப் பேருந்தில் ஏறினால் சரியாக இருக்கும் என்று நினைத்து ஏறிவிடுவோம், ஆனால் நம் நேரத்திற்கு இவர் கொண்டு விட மாடார் போல இருக்கிறதே என்ற நிலையில் ரொம்ப சாவகாசமாக ஓட்டுவார்கள்.

    அது போல பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள் குறிப்பிட்டிருக்கும் நேரத்தை விட (குறிப்பாக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்) தாமதமாக, ஆள் சேர்த்த பிறகுதான் கிளம்புகிறார்கள்.

    உங்கள் மாப்பிள்ளை அழைப்பு - அந்தக் கடைசிவரிகள் புன்சிரிப்பை வரவழைத்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் இந்த மாதிரி நபர்களால் நாம் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு செல்ல முடியாமல் போய்விடுகிறது. ஆனாலும் அந்த பிரச்னையை சமாளிக்க வேண்டியது தான் சிக்கல். உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....