சனி, 19 அக்டோபர், 2024

காஃபி வித் கிட்டு - 206 - அந்தர் சே சுந்தர் - உடைந்து போன பர்னர் - மரியாதை - கேடியா உடையும் ஆபரணமும் - காகம் - முதுமை - Cluff


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மனசு தாங்க காரணம் - நடை நல்லது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : அந்தர் சே சுந்தர் 


சென்ற வருடம் JK Cement Wall Putty குறித்த விளம்பரம் ஒன்று வெளியிட்டார்கள்.  உங்களில் சிலர் இந்த விளம்பரத்தினை பார்த்திருக்கலாம். தொலைகாட்சி பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லாததால் சமீபத்தில் தான் இணையத்தில் பார்க்க நேர்ந்தது. என்னைப் போலவே பார்க்காதவர்கள் உங்களில் எவரேனும் இருந்தால் அவர்களது வசதிக்காக அந்த விளம்பரம் உங்கள் பார்வைக்கு.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம். 


A festive campaign by JKCement WallMaxX to celebrate the ones who make our homes #AndarSeSundar (youtube.com)


******

 

ராஜா காது கழுதை காது : உடைந்து போன பர்னர்


திருச்சியின் NSB சாலை இருக்கும் பகுதியில் பிரபலமான பல்பொருள் அங்காடி மங்கள் & மங்கள். அங்கே சமீபத்தில் ஒரு நாள் போனபோது நிறைய விஷயங்கள் ராஜாவின் காதுக்கு கேட்டன!  நிறைய விஷயங்கள் சுவாரஸ்யமானவை என்றாலும் ஒன்று மட்டும் இந்த வாரத்தின் ராஜா காது கழுதைக் காது பகுதியாக.  அலைபேசியில் யாரோ ஒரு பெண்மணியிடம் பேசிய பெண்மணி….


“சொல்லுப்பா…  நானா? நான் மங்கள் & மங்கள் வந்திருக்கேன்.  எங்கம்மா இருக்கே கேஸ் ஸ்டவ் பர்னரை ரெண்டா உடைச்சிடுச்சு… குக்கர்ல உள்ள தண்ணீ இருக்கோ இல்லையோ எப்பவும் வழிஞ்சு கேஸ் ஸ்டவ்ல தான் அதை விட அதிகமா தண்ணீ இருக்கும்! இப்ப பர்னர் ரெண்டா உடைஞ்சிடுகிச்சு.  மாத்தணும்னு எடுத்துட்டு வந்துருக்கேன்!” 


பொதுவாக மகளின் சமையல் குறித்த அனுபவங்களை அம்மாக்கள் சொல்வதுண்டு! இங்கேயோ அப்படியே உல்டா! 🙂


******


இந்த வாரத்தின் எண்ணங்கள்  : மரியாதை


நமது இராணுவ வீரர்களை பார்க்கும்போதே மனதில் அவர்களது கடினமான பணிச்சூழல் மனதில் வந்து போகும். சமீபத்தில் இரயில் பயணத்தில் சில இராணுவ வீரர்களையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் காவல் (CRPF, CISF) அதிகாரிகளையும் சந்திக்க நேர்ந்தது.  அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பென்ஷன் குறித்த சில சந்தேகங்களை கேட்டார்கள்.  எனக்குத் தெரிந்த விவரங்களை அவர்களுக்குச் சொன்னதோடு தங்களது எதிர்காலத்திற்கு இளமையிலேயே திட்டமிடவேண்டிய அவசியத்தையும் சொல்லிக் கொண்டு இருந்தேன்.  2016-க்குப் பிறகு அவர்களுக்கான ஊதியம் அதிகரித்து இருக்கிறது என்றாலும் அவர்களது கடுமையான வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை என்று பேசிக் கொண்டு இருந்தார்கள். அதை விட அவர்களுக்கு இருந்த வருத்தம் இத்தனை கஷ்டப்பட்டு உழைக்கும் எங்களுக்கு சகமனிதர்களிடமிருந்து கிடைக்கும் மரியாதை மிகமிகக்குறைவு  என்பதே. அவர்கள் பேசியதிலிருந்தே அவர்களது வருத்தத்தை புரிந்துகொள்ள முடிந்தது.  நம் நாட்டில் இராணுவ வீரர்களுக்குக் கிடைக்கும் மரியாதை எப்படிப்பட்டது என்பதை பலமுறை பார்த்திருக்கிறேன் என்பதால் அவர்கள் சொல்வதில் உள்ள உண்மையை என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது.  அவர்களது கடுமையான பணிச்சூழலில் சாதாரண மனிதர்களால் ஒரு சில நிமிடங்கள் கூட இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனது சில பயணங்களில் இப்படியான கடுமையான உழைப்பையும் சூழலையும் பார்த்திருக்கிறேன். 


******


பழைய நினைப்புடா பேராண்டி : கேடியா உடையும் ஆபரணமும்


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கேடியா உடையும் ஆபரணமும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான நாகேஷ்வரில் உச்சிகால பூஜை பார்த்தபின்னர் அங்கிருந்து அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம்.  அப்படி பயணிக்கையிலும், குஜராத்தில் கிராமங்களைக் கடக்கும்போதும், வழியில் பார்த்த ஆண்களும் பெண்களும் அணிந்திருந்த உடைகள் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தேன். வித்தியாசமான உடையில் இருக்கும் ஆண்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் வேண்டும் என நினைத்திருந்தேன்.


கோவிலை விட்டு வெளியே வந்து ஓட்டுனர் வசந்த் [bh]பாய் வண்டி நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்திற்கு வரும்போது அப்படி சில ஆண்களைப் பார்க்க முடிந்தது. என்றாலும் அவர்களைப் புகைப்படம் எடுக்கவில்லை. அவர்களிடம் பேசி அவர்களின் அனுமதி வாங்கியபிறகு புகைப்படம் எடுக்க வேண்டும். அவர்கள் பேசும் மொழி நமக்குப் புரியாதே என்ன செய்வது என்று யோசித்தபடியே நகர்ந்தேன்.  வண்டியில் அமர்ந்ததும் வசந்த் [bh]பாய்-இடம் புகைப்படம் பிடிக்க வேண்டியிருப்பதைச் சொல்லி, அடுத்து அப்படி உடையணிந்த ஆட்களைப் பார்க்கும் போது வண்டியை நிறுத்தி, அவர்களிடம் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க உதவி செய்யக் கேட்டுக் கொண்டேன்.


கோவிலிலிருந்து சில மீட்டர்கள் கடந்த பிறகு அப்படி இரண்டு ஆண்கள் சாலையில் வரவே, வண்டியை ஓரமாக நிறுத்தி, அவர்களிடம் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார் வசந்த் [bh]பாய்.  இரண்டு பேரில் மூத்தவர், உடனே “ஃபோட்டோ பாடோ, [b]பேட்[d], [b]பக்ரி, சப்[b] கா ஃபோட்டோ பாடோ” என்றார். அதாவது அவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகள், அவரை என அனைத்தையும் படம் பிடித்துக் கொள்ளச் சொன்னார். அவருக்கு ஹிந்தியில் நன்றி சொல்லி களத்தில் இறங்கினேன்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது : காகம்


யானையின் சடலம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது, காகம் ஒன்று அந்த சடலத்தைப் பார்த்ததும், மகிழ்ச்சியடைந்தது. உடனடியாகப் போய் அதன் மீது அமர்ந்து கொண்டது. போதுமான இறைச்சியை கொத்திக் கொத்தித் தின்றுவிட்டு, ஆற்றின் நீரைக் குடித்து ஆனந்தமாக அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. மிகுந்த திருப்தியுடன் தனது இறக்கைகளை விரிந்துப் பறந்து ஆனந்தக் கூத்தாடியது. காகம் யானையின் சடலத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டது, ஆஹா!

இது மிகவும் அழகான வாகனம், இங்கு உணவு மற்றும் தண்ணீருக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. நாம் ஏன் இதை விட்டுவிட்டு எங்கெங்கோ அலைந்து திரிய வேண்டும்?


ஆற்றங்கரையில் மிதந்து ஓடும் அச்சடலத்தின் மீது காகம் பல நாட்களாக கரைந்து கொண்டிருந்தது. பசி எடுத்தால் யானையின் சடலத்தை உண்பதும், தாகம் எடுத்தால் ஆற்று நீரை அருந்துவதும், என அதன் வாழ்வே ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்தது. பிரம்மாண்டமான நீர்நிலை, அதன் வேகமான ஓட்டம், கரையோரம் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் அழகிய காட்சிகள் என எல்லாவற்றையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஒரு நாள் நதியானது இறுதியாகக் கடலை வந்து சேர்ந்தது. நதி தன் இலக்கைக் கண்டுபிடித்துவிட்டது அது தான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தது. கடலைச் சந்திப்பதே அதன் இறுதி இலக்காக இருந்தது. ஆனால் அன்று இலக்கற்றுப் பறந்து திரிந்த அக்காகத்திற்கு மட்டும் அந்தநாள் மிகவும் துரதிர்ஷ்டமாகிப் போனது.


சில நாட்களாக நடந்த வேடிக்கை, முடிவுக்கு வந்தது. உணவு,குடிநீர், தங்குமிடம் என எதுவும் இல்லாத இடத்திற்கு அந்த யானையின் சடலமும் அந்த நதியும் அதனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. எல்லா இடங்களிலும் எல்லையற்ற உப்பு நீர் அக்காகம் அலைந்து திரிந்து சலித்துப் போனது. பல நாட்களாக களைப்புடனும் பசியுடனும் தாகத்துடனும் நாலா திசைகளிலும் சிறகுகளை அசைத்து,தனது கொடூரமான குரலால் கரைந்து கொண்டிருந்தது. கடலின் ஆழம் மற்றும் பரந்து விரிந்த மேகக் கூட்டங்கள் என அதன் முடிவற்ற திசைகளில் தேடியலைந்தது ஆனால் கடலின் முடிவை எங்குமே காண முடியவில்லை. கடைசியில், சோர்ந்து, சோகத்தில் மூழ்கி, கடலின் அதே வானளாவிய அலைகளில் விழுந்து மடிந்தது. அப்பொழுது பெரிய முதலை ஒன்று கடலுக்குள்ளிருந்து தனது தலையைத் தூக்கி அதனை மிகவும் லாவகமாக விழுங்கியது. 


உடல் இன்பங்களில் ஈடுபடும் மனிதர்களும் அதே காக்கையைப் போலத்தான் நகர்கிறார்கள், அவர்கள் உணவையும் தங்குமிடத்தையும் நிரந்தரம் என்று எண்ணிக் கொள்கிறார்கள், இறுதியில் எல்லையற்ற உலகப் பெருங்கடலில் பயணிக்கிறார்கள். 


யாரை வெல்வது?

யாருக்காக தோற்பது?

யாருக்காக இந்த சண்டை?

யாருக்காக இந்த ஓட்டம்?

யாருக்காக இந்த வாழ்க்கை?

யாருக்காக இந்த ஆணவம்?

வந்தவன் ஒருநாள் போவது உறுதி


உங்கள் கனவுக் கோட்டைகளை எல்லாம் மரணம் ஒரு நொடியில் தகர்த்தெறிந்து விட்டுச் சென்றுவிடும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்

- ஓஷோ


******


இந்த வாரத்தின் ரசித்த ஓவியம்:  முதுமை…


மத்யமர் முக நூல் குழுவில் இருக்கும் ரவீந்தர் ஊட்டி அவர்கள் வரைந்த ஓவியம் ஒன்றை முன்னரும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்.  இன்றைக்கு அவர் வரைந்த ஓவியங்களில் மீண்டும் ஒன்று, இந்த வாரத்தின் ரசித்த ஓவியமாக!  அட்டாகாசமாக வரைகிறார் மனிதர்.  பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.  



******


இந்த வாரத்தின் கார்ட்டூன் :  Cluff


John Longstaff Cluff என்ற பெயர் கொண்ட கார்ட்டூனிஸ்ட் மிகவும் பிரபலமானவர்.  அவர் வரைந்த கார்ட்டூன் ஒன்று இந்த வாரத்தின் ரசித்த கார்ட்டூன் ஆக உங்கள் பார்வைக்கு. 





******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

19 அக்டோபர் 2024

18 கருத்துகள்:

  1. ரசித்த விளம்பரம் கண்டேன்.  முதலில் புரியவில்லை.  அப்புறம்தான் விமான டிக்கெட் என்று புரிந்தது.  நன்று.  உழைப்பை மதிப்பவர்களும் இருக்கிறார்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பை மதிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் - குறைவாக இருந்தாலும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. ரா கா க கா வில் சொல்வது போல எங்கள் வீட்டு மில்க் குக்கரிலிருந்து அருவியாய் நீர் வெளியேறும்! சூடாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குக்கரிலிருந்து அருவியாய் நீர் வெளியேறும் - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ராணுவ வீரர் பற்றிய  தகவல் எனக்கொரு சிறுகதைக்கான கருவைக் கொடுத்திருக்கிறது.  

    இதற்கு முன்னரும் இதே போல உங்கள் பதிவொன்றில் சொன்ன நினைவு.  ஏதோ நிகழ்ச்சி ஏற்பாடு என்பது போல...  அப்போது மனதில் தோன்றிய கருவை குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.  என்ன கரு எனபதும் மறந்து போச்!  இந்தப் பதிவு என்று  படித்தால் நினைவு வரலாம்.  எங்கே தேட!  இதையாவது உடனே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதைக்கான கரு - மகிழ்ச்சி. எழுதுங்கள். முன்னர் ஒரு பதிவிலும் எழுதி இருந்தது நினைவில் இருக்கிறது. எந்த பதிவில் என்பது எனக்கும் நினைவில்லை. பார்த்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. ப பி, ஓவியம், கார்ட்டூன் அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகளை ரசித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. உழைப்பை மதிப்பதைச் சொல்லும் விளம்பரம் ரசிக்க வைத்தது!

    ஆமாம் இராணுவ வீரர்களுக்குச் சரியான மரியாதை இல்லாதது மிக மிக் வேதனையான விஷயம்.

    கேடியா உடையைப் பார்த்துவிட்டேன் ஜி. இதே போல பெண்கள் உடையில் வந்துவிட்டது இப்போது!

    ஓவியம் சூப்பர்

    காகம் கதை நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. கார்ட்டூனை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்ட்டூன் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. சுவாரஸ்யமான பகிர்வு.

    கார்ட்டூன் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  9. வாசகம் அருமை. விளம்பர காணொளி நெகிழ வைத்து விட்டது.
    தீபாவளியை உழைப்பாளி மகிழ்ச்சியாக மகளுடன் கொண்டாட வைத்த உள்ளம் வாழ்க
    படங்கள், கவிதை , ஓவியம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....