அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அப்பா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நகர்வலம் - 11 செப்டம்பர் 2024:
நான் இன்னிக்கு ஒரு போஸ்ட் போட்டிருந்தேனே! பார்த்தியா??
என்ன போஸ்ட்?
நகர்வலம்னு ஒண்ணு எழுதறேன் இல்லையா! அதுல எழுதியிருக்கேன்!
ஓ! அப்படியா! பார்க்கல! நாளைக்கு கிளாஸ்ல டெஸ்ட் இருக்குன்னு படிச்சிண்டு இருக்கேன்.
சரி! சரி! படி! படி!
ம்ம்ம்! தினமும் தான் எழுதிண்டு இருக்கார்! இன்னிக்கு என்ன காரியமா சொல்றாரே!!! சரி என்னன்னு தான் பார்ப்போமே!
புத்தகத்தை கீழே வைத்து விட்டு அலைபேசியை எடுத்து முகநூலுக்குள் கொஞ்சம் எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன்! அவர் குறிப்பிட்ட போஸ்ட்டுக்குச் சென்று வாசித்து பார்த்ததில் அதில் என்னை சற்று வம்புக்கு இழுத்திருந்தார்…:)
இத்தனை வருஷமா இப்படித்தானே செல்கிறது..🙂 ஏதோ ஒன்று என்னை கலாய்க்க அவருக்கு விஷயம் கிடைத்து விடும்! எப்படியோ சந்தோஷமா இருக்கட்டும்..🙂
******
Roshni Corner - CorelDraw - 11 செப்டம்பர் 2024:
அம்மா! கொஞ்சம் இங்க வந்து பாரேன்! இந்த வாரம் முழுவதும் காலேஜ்ல Domain course நடந்துண்டு இருக்குன்னு சொன்னேன் இல்லையா! அதுல இன்னிக்கு நான் டிசைன் பண்ணின டிரஸ் இது தான் என்று கணினியில் ஒரு frockஐ காண்பித்தாள்!
சொக்கா சோக்கா கீதேடா கண்ணா!
என்றதும் கலகலவென சிரித்துக் கொண்டாள்.
******
திருவோணம் - 15 செப்டம்பர் 2024:
நான் படித்தது வளர்ந்தது எல்லாம் கோவை என்பதால் எங்களைச் சுற்றிச் சுற்றி கேரளத்தவர்கள் தான் இருந்தார்கள்! அவர்களின் உணவு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், மொழி என அனைத்தும் எங்களுக்கு பரிச்சயம்! கோவையிலிருந்து ஒரு மணிநேர பிரயாணத்தில் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள பாலக்காடு சென்று விடலாம்! இந்நாளில் அன்று எங்களுடன் அன்போடு நெருக்கமாக பழகிய மனிதர்களை நினைத்துக் கொள்கிறேன்.
எங்கள் அரசுக் குடியிருப்பில் வருடந்தோறும் நடைபெறும் விமரிசையான ‘ஐயப்ப பூஜை’ பற்றி என்னுடைய ‘யாரிவள்’ தொடரிலே விரிவாக எழுதியிருப்பேன்! என்னைப் போன்ற சின்னஞ்சிறுமிகள் பட்டுப்பாவாடை சரசரக்க கைகளில் விளக்கு ஏந்தி செண்டை மேளங்கள் ஒலித்திட ஊர்வலமாக சாரதாம்பாள் கோவில் வரை சென்று வருவோம்!
ஓணம் என்றால் வாசல்தோறும் வண்ணமயமாய் அத்தப்பூக்கோலம் இட்டு மஹாபலி சக்ரவர்த்தியை வரவேற்பார்கள்! அன்றைய தினம் யாரேனும் ஒருவர் வீட்டில் ஓணம் சத்யாவுக்கான அழைப்பு இருக்கும்! கேரள உணவுகளில் எனக்கு எப்போதுமே விருப்பம் உண்டு! பாலடைப் பிரதமன், கோதுமைப் பாயசம், நேந்திரங்காய் உப்பேரி, சக்கவரட்டி, இஞ்சிப்புளி, அவியல் என்று சுவையான விருந்து அன்று இடம்பெறும்!
மனதிற்கான மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தும் நன்நாளில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து நலமோடும் வளமோடும் வாழ பிரார்த்தித்துக் கொள்வோம்! அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகள்.
******
சிரஞ்சீவி - அவரும் நானும் - 19 செப்டம்பர் 2024:
என்னம்மா காய் நறுக்கணும்? எடுத்து தாயேன்?
நீங்க இன்னும் கொஞ்ச நாழி தூங்க வேண்டியது தானே! நானே பண்ணிப்பேனே! தினமும் இப்படித்தான பண்றேன்! நேரம் சரியா இருக்கும்! இன்னைக்கு கிளாஸ் வேற இருக்கு!
சாம்பாருக்கு இவ்வளவு காய் போறுமா சொல்லு?
ம்ம்ம். போறும். போறும். தேங்காய் மட்டும் கொஞ்சம் கீறித் தரணும்!
வானொலி பண்பலையில் ‘ஆத்திச்சூடி’ என்ற நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டே அடுக்களை வேலையில் மூழ்கினேன். அதில் பரசுராமர் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் தொகுப்பாளர்.
அஸ்வத்தாமா, வியாஸர், அனுமன், பரசுராமர், க்ருபா, மகாபலி, விபீஷணன் போன்ற சிரஞ்சீவிகள் ஏழு பேர்!
அதில் பரசுராமர் இராமாயண காலத்திலும் மகாபாரத காலத்திலும் வாழ்ந்தவர்.
பரஷு என்றால் கோடரி! இன்றும் கேரளத்தில் பரஷு என்று கோடரியை குறிப்பிடுவர்!
சரி! இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் வர இன்னொருத்தர் யார்னு சொல்லேன் பார்க்கலாம்!
யாரு!!! என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!
ஹனுமான்!
மகாபாரதத்தில ஹனுமான் வருவாரா என்ன???
ம்ம்ம்! பீமன் போற பாதைல தன் வாலால வழியை மறைச்சிண்டு படுத்துண்டிருப்பாரே!
அட! ஆமா!
சரி! இந்த சிரஞ்சீவிகள் ஏழு பேர்ல மார்க்கண்டேயர் ஏன் வரலை! அவர் என்றும் பதினாறு ஆச்சே?
ம்ம்ஹூம்! சிரஞ்சீவியா இருன்னா என்ன அர்த்தம்! நீண்ட காலம் வாழணும்னு இல்லையா!
ஆமா!
வயசு ஏறினாலும் காலத்தை கடந்து இருக்கறவா தான் சிரஞ்சீவி. மார்க்கண்டேயர் கதை அப்படி இல்லையே!
ஓ!! சரி! சரி! இதை இப்படி எடுத்துக்கணுமா!
ம்ம்ம்! சரி! காய்கறியெல்லாம் நறுக்கிட்டேன்! சமையலை கவனி! அவ காலேஜுக்கு கிளம்பணுமே!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
9 அக்டோபர் 2024
இங்கும் படித்து ரசித்தேன். போனஸ் ரோஷ்ணியின் கைவண்ணம். பாராட்டுகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குரசனையான கதம்ப செய்திகள்.
பதிலளிநீக்குகதம்பம் மணக்கிறது ஐயா
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குரோஷ்ணியின் கைவண்ணம் அருமை.
//ஓ! அப்படியா! பார்க்கல! நாளைக்கு கிளாஸ்ல டெஸ்ட் இருக்குன்னு படிச்சிண்டு இருக்கேன்.
சரி! சரி! படி! படி!//
ரசித்தேன்.