செவ்வாய், 8 அக்டோபர், 2024

அப்பா - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தனது அப்பா குறித்த நினைவுகளை ஒரு பதிவாக இன்றைக்கு திருமதி விஜி வெங்கடேஷ் வெளியிடுகிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


அப்பா…


உலகெலாம் உயர்த்தி அம்மாவைப் போற்றும்;


அப்பாவின் தியாகமும் குறைந்ததில்லை சற்றும்!


அலட்டலில்லா மறை பாசமது;


மென்மையாய் தழுவிச்செல்லும் வாசமது!


கண்டிப்போடு பாசமும் கலந்திருக்கும்.


அதில் பாசம் அதிகமாய் அலர்ந்திருக்கும்!


தாய் விட்டுச் சென்ற இடத்தை சகஜமாய் நிரப்பி அன்புத் தாயுமானாய்!


கடமை, தர்மம், பரோபகாரப் பாதை வகுத்த பண்புத் தந்தையுமானாய்! 


கடின உழைப்பாலே உயர் பதவிகள் அடைந்தாய்;


இளமையில் வறுமை உற்றும் பணமெனும் போதை உனைக் கலைக்கவில்லை;


அதனால் நேர்மை கண்ணியம் கைச்சுத்தம் உனை விலக்கவில்லை!


பள்ளி இறுதியே படித்திருந்தும் உன் ஆங்கிலப் புலமை அதிசயம்!


நளன், பீமன்  வரிசையிலே உன் கைப்பக்குவம்  அற்புதம்!


பால்கோவா, பாசந்தி, பால்பாயசம் உன் கைபட்டு ஊரே மணக்கும்!


ருசித்தவர் நாவை விட்டு அவை அகல மறுக்கும்!


குழாய் போடவும் உனக்குத் தெரியும்!


கொல்லையில் வென்னீர் அடுப்புப் போடவும் தெரியும்!


ரேடியோ பழுது பார்க்கவும் தெரியும்!


பைகளுக்கு Zip போடவும் தெரியும்!


73 வயதில் கணினி வகுப்பில் சேர்ந்த  இளைஞர் நீ!


இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனும் பாரதி சொல்லை கடைப் பிடித்த யுவனும் நீ!


ஜோதிடம், எண் கணிதம்  எல்லாமே பயின்றாய்;


எதைதான் நீ விட்டு வைத்தாய்?


புகழ்ச்சியும் பாராட்டும் உன்னை பாதித்ததில்லை;  


கிண்டல், சீண்டலையும் நீ பாராட்டியதில்லை;


அதற்காக எமை நீ கோபித்ததில்லை!


மனதில் வைத்துக்கொண்டு எமை வாதித்ததுமில்லை!


அந்தளவு எமக்கு சுதந்திரம் தந்தாய்;


அன்பின் கதகதப்பாய் அருகாமை ஈந்தாய்!


பீமன் கதை கேட்டுக்கொண்டே தினம் கண் வளர்வது எமக்கு சலித்ததில்லை;


அதை கிராஃபிக்ஸ் effect உடன் புதிதுபோல் சொல்லவும் நீ சளைத்ததில்லை!


நிறைய படிக்க எமை ஊக்கினாய்; ரசிகத் தன்மையை எம்முள்  தேக்கினாய்!


உண்ணும் நேரம் என்பது சுவைக்கும் நேரமும்;


யாம் படித்த கதை பற்றி கதைக்கும் நேரமும்!


சிந்திப்பும் சிரிப்பும் அங்கு தாளாது;


காது வேறெதையும்  கேளாது!

 

Chess, Carrom, cards எதிலானாலும் நீயே வெல்வாய்;


வலுவில் தோற்று எம் ஆனந்தத்தில் கரைவாய்!


சிக்கனம் என்பது உன் பிறவிக்குணம்;


எனினும் எதற்கும் குறை வைக்காது உன் அன்பு மனம்!


பண்டிகைக்கு புதுத்துணி, பலகாரம், பட்டாசு எங்கும் நிறையும்;


தனக்கென எதுவும் வாங்காமலும் உன் மனம் தியாகத்தால் நிறையும்!


இன்னும் பல உண்டு நினைத்துக் களிக்க;


பற்றாது என் தமிழ் வார்த்தை அளிக்க;


எதைச் சொல்லி நான் பூர்த்தி செய்ய?


இயலாது உன் கீர்த்தி எழுதித் தீர்க்க!


இன்னினைவுகள் என்றும் அகலாது!


அசைபோட்டு தினம் தினம் மாளாது!


அப்பா, இத்தனை செய்தாயே எங்களுக்கு?


பிரதியாக ஒன்றுமே செய்யவில்லையே உனக்கு!


கொடுக்க மட்டுமே தெரிந்த உனக்கு உரிமையாய் கேட்க மட்டும் தெரியலையே?


நீ இருக்கும்வரை அதன் அருமையும் எமக்குப் புரியலையே! 


அதைச் சொல்லித் தருவோர் யாரும் இருக்கலியே!


உனைத் தந்தையாய் அடையக் குடுத்து வைத்தோம்;


இனிவரும் பிறவியிலும் நீயே எந்தையாய் வர ஆசை வைத்தோம்;


ஆயினும் பிறவா நிலை நீ அடைய கோரிக்கை வைத்தோம்🙏🏻


பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரே நாளில் (25 மே) அமைவது  கோடியில் ஒருவருக்குத்தான் வாய்க்கும்!


அப்பா, இதிலும் நீ கோடியில் ஒருவர்தான்🙏🏻🙏🏻🙏🏻


என்றென்றும் நீங்கா நினைவுகளுடன்


விஜி😓🙏🏻🙏🏻🙏🏻


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

8 அக்டோபர் 2024


7 கருத்துகள்:

  1. நெகிழ வைக்கும் பதிவு. அப்பா நினைவுகள் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    2. நன்றி.
      விஜி

      நீக்கு
  2. அப்பா ஓர் முடிவில்லா சரித்திரம்.

    மனம் கசிந்து விட்டது படிக்கும்போது...

    எந்தையை நினைவூட்டியது தங்களது பாமாலை.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய வாசகம் யோசிக்க வைத்தது கூடவே ஓர் எண்ணமும் எழுந்தது. சொன்னா சொல்லிக்கட்டும்...யாருக்காக நாம் வாழ்கிறோம் நமக்காகத்தானே prove பண்ண வேண்டுமா என்ன? என்றும் தோன்றியது. யாரையும் திருப்திப் படுத்த முடியாது என்பதால்,

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அப்பாவைப் பற்றிய வரிகள் நெகிழ்ச்சி!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....