வெள்ளி, 25 அக்டோபர், 2024

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் - அதிகாலை சுபவேளை - நடை நல்லது - பகுதி பதினொன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு பதினொன்றாம் பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் - 10 செப்டம்பர் 2024:



முன்னர் இதே வரிசையில் எழுதிய பதிவோன்றில் வீட்டின் அருகே அமைந்துள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனை குறித்து எழுதி இருந்தேன். இன்றைய விஷயமும் அது சம்பந்தப்பட்டது தான். நான் நடந்து செல்லும் பாதையில் அந்த மருத்துவமனையின் நுழைவாயில்களில் ஒன்றாக அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்லும் வழியும் உண்டு. அந்த வாயில் இருக்கும் பகுதியின் அருகே இருக்கும் சாலையில் எப்போதும் குறைந்தது இருபத்தி ஐந்து ஆம்புலன்ஸ் வண்டிகள் நின்று கொண்டிருப்பதை நிச்சயம் பார்க்க முடியும்.


வெளியிடங்களில் இருந்து நோயாளிகளை அழைத்து வந்தவை சில வண்டிகள் என்றால் ஒரு சில வண்டிகள் நோயாளிகளுக்காக அல்லது சிகிச்சை பலன் இன்றி இறந்துபோனவர்களின் உடலை எடுத்துச் செல்ல காத்திருப்பவை. அரசு அவசர ஊர்திகள் தவிர தனியார் ஊர்திகளும் இங்கே நிறைய உண்டு. அவற்றின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் எப்போதும் இங்கே காத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பார்கள். 


எந்த வசதியும் இல்லாமல் சாலைகளில் இரவு பகல் பாராமல் காத்திருப்பது அவர்களது வாடிக்கை - மற்றும் சூழலும் கூட. பல சமயங்களில் அருகே இருக்கும் கழிவறைகளை பயன்படுத்திக் கொண்டு, வாகனத்தில் இருக்கும் நோயாளிகளுக்கான படுக்கையிலேயே உறங்கிக் கொண்டு இருக்கும் ஓட்டுனர்களை பார்த்திருக்கிறேன். தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேரம், பதினைந்து மணி நேரம் என காத்திருந்தும் கூட வாடிக்கையாளர் கிடைக்காமல் போவதும் நடப்பதுண்டு என்பதை ஒரு ஓட்டுனரிடம் பேசியபோது தெரிந்து கொண்டேன். 


அவசர நேரத்தில் உதவியாக இருக்கும் இந்த மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை அவருடன் பேசிய சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவசரம் என வரும்போது தங்களது திறமைகளை காண்பித்து நோயாளிகளை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதில் அவர்களுக்கு இருக்கும் பங்கு மாண்புக்குரியது என்றாலும் அதில் இருக்கும் கடின உழைப்பையும் ஆபத்தையும் யாரும் புரிந்து கொள்வதில்லை என்பதே நான் பேசிய ஓட்டுனரின் ஆதங்கமாக இருந்தது….. 


பல சமயங்களில் சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள நாம் விரும்புவதே இல்லை என்று அவரிடம் பேசி புறப்பட்டபோது தோன்றியது….. இது குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது சொல்லுங்களேன்.


*******


அதிகாலை சுபவேளை - 11 செப்டம்பர் 2024:



அதிகாலை நேர நடை நம் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு தர வல்லவை. ஒவ்வொரு நாளும் நடக்கும்போது எதிரே பார்க்கும் மனிதர்கள், காலை நேரத்திலேயே தங்களது உழைப்பை தொடக்கிவிட்ட குப்பை பொறுக்குபவர்கள், சாலைகளைச் சுத்தம் செய்பவர்கள், பால், பேப்பர் போடுபவர்கள், சில கடைக்காரர்கள் என ஒவ்வொருவரையும் பார்க்கும்போதே நமக்கும் அவர்களது சுறுசுறுப்பு கொஞ்சமேனும் ஒட்டிக் கொள்ளும்.


காலை நேரத்தில் கடைகள் பெரும்பாலும் திறந்திருக்காது என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே உழைக்கும் ஆட்டோ/கார் ஓட்டுநர்கள், இரவு நேரத்தில் வேலை முடித்து வீடு திரும்பும் நபர்கள் என ஒரு சிலர் தேநீர் அருந்துவார்கள் என்பதற்காக ஒரு சிறு குமுட்டி அடுப்பு, அதன் மீது கெட்டில், இதனைக் கைகளில் தூக்க ஒரு அமைப்பு, மறு கையில் ஒரு பை, அதில் மட்ரி(டி), ஃபேன் போன்றவை என இரண்டு கைகளிலும் சுமையோடு சுற்றி வரும் ஒரு உழைப்பாளி……


இரவு பலரும் மது அருந்திவிட்டு சாலையோரத்தில் வீசிச் செல்லும் கண்ணாடி/பிளாஸ்டிக் மது புட்டிகளை பொறுக்கி எடுத்து - காலை நேரத்திலேயே இப்படி வந்தால் தான் கிடைக்கும் புட்டிகளை விற்று, அதில் கிடைக்கும் காசை வைத்து அன்றைய தினம் உணவு பொங்கி சாப்பிட முடியும்….. - தனது முதுகில் சுமந்து இருக்கும் சாக்குப் பையில் போட்டு கொண்டு உலா வரும் உழைப்பாளி பெண்மணி…..


சாலையில் படுத்து உறங்கும் வீடற்றவர்கள் - அவர்களது மிகக் குறைந்த உடமைகளை பக்கத்திலேயே போட்டு விட்டோ, அல்லது தலைக்கு வைத்துக் கொண்டோ, திருடு போய்விடுமோ என்ற கவலை இல்லாமல், எந்த வித வசதியும் இல்லாமல் நன்கு குறட்டை விட்டு உறங்கும் அவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை என்று அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள்… அதனால் அவர்களுக்கு இப்படி உறக்கம் வருகிறது போலும்!


காலை நேரத்திலேயே குருத்வாரா வந்து பிரார்த்தனை செய்து செல்லும் சீக்கியர்கள், அந்த நேரத்திலேயே அவர்கள் செய்யும் தான தர்மங்கள்…..


சாலைகளில் அதிக நடமாட்டம் இருக்காது என்கிற நினைப்பில் தங்களது விலை உயர்ந்த காரில் அதி வேகமாகச் செல்லும் பணக்கார மனிதர்கள்….


இப்படி எல்லா நிகழ்வுகளையும் கவனித்தபடியே நடந்து செல்லும் நான்…….


அதிகாலை வேளை நடை….. இப்படி தினம் தினம் நமக்கு சில பாடங்களை, வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல இல்லை என்றாலும் எல்லோருடைய வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற தகவலை நமக்குத் தந்தபடி கடக்கிறது…… ஆனாலும் நம்மில் பலரும் ஒரு வித பயத்துடன் மட்டுமே வாழ்க்கையை எதிர் கொண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம்….. நடப்பது அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும்…… நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வோம்…..


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

25 அக்டோபர் 2024


9 கருத்துகள்:

  1. சிறு கடைகளில் தேநீர்...   தூக்கிப் போட்ட காலி பாட்டில்கள் சிலரது வாழ்வில் ஒருவேளை உணவு...  இங்கும் அங்கும் நேர் செய்து உலகம் எப்படியோ  கொண்டுதான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. சிறு கடைகளில் தேநீர்...   தூக்கிப் போட்ட காலி பாட்டில்கள் சிலரது வாழ்வில் ஒருவேளை உணவு... 

    இங்கும் அங்கும் நேர் செய்து உலகம் எப்படியோ  ஓடிக் கொண்டுதான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. நல்ல வார்த்தைகள் மனதில் நிற்பதை விட பன்மடங்கு யோசிக்காமல் பேசுவது மனதில் நின்று விடுகிறதென்பது உண்மை.

    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் நிலைமையை பற்றி கூறியது உண்மை. பாவந்தான் அவர்கள் நிலை.

    /சாலையில் படுத்து உறங்கும் வீடற்றவர்கள் - அவர்களது மிகக் குறைந்த உடமைகளை பக்கத்திலேயே போட்டு விட்டோ, அல்லது தலைக்கு வைத்துக் கொண்டோ, திருடு போய்விடுமோ என்ற கவலை இல்லாமல், எந்த வித வசதியும் இல்லாமல் நன்கு குறட்டை விட்டு உறங்கும் அவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை என்று அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள்… அதனால் அவர்களுக்கு இப்படி உறக்கம் வருகிறது போலும்!/

    நல்ல கருத்து. மனதில் பொருள்கள் பற்றிய பற்று, பாரங்கள் இல்லையென்றால் நிம்மதியான உறக்கங்கள் தானே வரும்தானே..! அனைத்தையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நடை தொடரட்டும். அதன் தொடர்பாக நல்ல சிந்தனைகளும் வளரட்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. பிறரின் உணர்வுகளை உணர்வது எல்லோருக்கும் வருவதில்லை ஜி

    சிறப்பான பகுதி

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை.

    ஆம், பொதுவாகவே நம்மைச் சுற்றி இருக்கும் பல விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்வது இல்லைதான். பாவம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், தெருவில் கிடக்கும் புட்டிகள் போன்றவற்றைப் பொறுக்கிச் சென்றால் ஏதோ ஒரு வேளை உணவு கிடைக்கும் என்று உழைக்கும் மனிதர்கள்....பாவம்.

    நான் பல முறை நினைத்ததுண்டு பாதையோரத்தில், நடைபாதையில் உறங்கும் மனிதர்கள் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் உறங்குவது பற்றி. அவர்களுக்கு அடுத்த நாள் பற்றிய கவலை, பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கவலை, பயணம் செய்யணுமே டிக்கெட் பதிவு செய்யணுமே என்ற கவலை, எதுவும் இல்லை. அதனால் உறக்கம்! பற்றில்லா வாழ்க்கை?

    நமக்கு அப்படி இல்லை. ஆனால் கவலைகளுக்கிடையிலும் மனதைப் பற்றில்லா வாழ்க்கைக்கான பயிற்சி செய்து உறங்குவது என்பது பெரிய சவால்தான் இல்லையா!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடும் மனிதர்களுக்கு கடவுள் கொடுக்கும் பரிசு நல்ல நிம்மதியான தூக்கம்.
    Aambulance ஓட்டுனர்கள் பாவம்.எப்போதும் பின்னாலிருந்து பதட்டம்,சோகம் அழுகுரல் இவையே கேட்டு கேட்டு மனம் மரத்துவிடும்.
    விஜி

    பதிலளிநீக்கு
  7. அவசரம் என வரும்போது தங்களது திறமைகளை காண்பித்து நோயாளிகளை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதில் அவர்களுக்கு இருக்கும் பங்கு மாண்புக்குரியது - உண்மைதான். அவர்களது உதவி தேவைப்படும்போது அத்தகைய சேவையில் உள்ளவர் யாரும் கிடைக்காத நேரத்தில்தான் அவர்களது அருமை புரியும்; அதே சமயத்தில் அவர்களது சேவையை பெற்ற பிறகு அவர்களை எவருமே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது வேதனைக்குரியது.

    நடை பயிற்சி செய்யும் நேரத்தில் நாம் நடைமுறையில் பயிற்சி செய்யவேண்டிய பல விடயங்கள் நமக்கு முன்னால் நடைபெறுவதை மனதில் பதியும் வண்ணம் பதிவாக்கம் செய்யும் உங்களின் (எழுத்து) நடை பிடித்திருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  8. வாசகம் நன்று. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் சேவை மதிப்பிற்குரியது. நடைப் பயிற்சி காட்சிகளும் பகிர்வும் சிந்திக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. வாசகம் அருமை.
    நடைபயிற் சியின் போது கண்ட உண்மை வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல இல்லை
    என்பதை சரியாக சொன்னீர்கள். சிலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், சிலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். "போகுமிடம் வெகு தூரமில்லை என்ற படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுபவரின் கஷ்டங்களை. அவர் வாழ்க்கையை சொல்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....