திங்கள், 17 டிசம்பர், 2018

கதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்



மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று என் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவு. பதிவினைப் படிக்கும் முன்னரே சொல்லி விடுகிறேன் – இது தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய பதிவு. நண்பர் நாரோலை அடுத்த ராஜாக்காமங்கலத்தினைச் சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லி வாசம். வாருங்கள் நண்பரின் எழுத்தினை ரசிக்கலாம் – வெங்கட், புது தில்லி.

கதை மாந்தர்கள் – ஃபுல் வக்கீல்…



ஆனாலும் மனுஷனுக்கு இப்படி ஞாபகமறதி இருக்கக்கூடாதய்யா. வங்கிக்கு ஒரு வேலையா போயிருந்தேன். டொக்கு டொக்குன்னு தட்டினால் டோக்கன் தரக் கூடிய மெக்ஷினில் தட்டினதும் சின்ன ஸ்கிரீனில் நம்பரும் காட்டியது. பாத்து வச்சுக்கிட்டேன். மெழுகுப் பேப்பரில் வந்த டோக்கனையும் டக்குன்னு பிடுங்கி பாக்கெட்டில் வச்சுக்கிட்டேன். ஒரேயொரு கவுண்டர்தான் இருந்தது. ஒரு ஆறு ஏழு பேரு அவரவர் முறைக்கு காத்திருந்தார்கள். சரி, நம்ம நம்பர் வருவதற்கு பத்து நிமிஷமாவது ஆகும். அப்படியே உட்கார்ந்து வாய் பார்ப்போம்ன்னு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன்.

சும்மா பொழுது போகாம பப்பரப்பான்னு வேடிக்கைப் பார்ப்பதைத்தான் வாய் பார்ப்பதுன்னு நாங்க சொல்லுவோம். இந்த வாய் பார்ப்பது என்பது அப்போதில் இருந்து இப்போது வரை போரடிக்காத சமாச்சாரம்.  மனுஷனாப் பொறந்துட்டா வாய் பார்த்துத்தான் ஆகணும். இங்க பாருங்க! பொறந்த பச்சபுள்ள இருக்கே, அது முகம் பார்க்க ஆரம்பிச்சதும் அதன் அம்மாவின் வாய் பார்க்க ஆரம்பிக்கும். அந்த அம்மா குழந்தையை செல்லமாய் கொஞ்சும் போது அம்மாவின் வாய் போற போக்குகளைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கிறது. அப்புறம் கொஞ்சம் வளர்ந்து ஒரு ஏழு எட்டு வயசு ஆகும் போது பப்பரப்பான்னு வேடிக்கைப் பார்க்க வேண்டியது. சுசீந்தரம் தேரோட்டத்துக்கு அம்மா கையை பிடிச்சுக்கிட்டே பஸ்ஸிலேருந்து இறங்கனதுமே "உங்கள் பாண்டியன் மிட்டாய்க்கடை உங்களை வரவேற்கிறது"ன்னு அவங்க வரவேற்கிற வரவேற்புல அவங்க வச்சுருக்கிற அரை ஆளு உயர சிலேபியையும் லட்டையும் எச்சி ஊற பார்த்துக் கிட்டே எதிரே வந்த அக்கா மேலேயோ ஆத்தா மேலேயோ இடிச்சதும் அம்மா " வா(ய்) பாக்காம பாத்து வாலே" ன்னு தர தரன்னு இழுத்துக்கிட்டு தேர் பாக்க கூட்டிப் போவா. அது ஒரு வகையான வாய் பார்ப்பு. அப்பறம் பத்து பதினெட்டு வயசு வரைக்கும் பள்ளிக்கூடத்தில வாத்தியார் வாயப் பார்த்து காலத்தைக் கடத்த வேண்டியது.

அதுக்கப்புறம் வரக்கூடிய இந்த பதினெட்டுக்கு மேல உள்ள வயசு இருக்கே, அந்த வயசுல வாய் பார்ப்பதைத்தான் எல்லோரும் தப்பாப் பார்ப்பாங்க. அதுவும் இந்த கேரளா பொண்ணுங்க இருக்குதே, இந்த பஸ் ஸ்டாண்ட்டில் நின்னுக்கிட்டு பக்கத்தில் நின்னுக்கிட்டிருக்கிற கூட்டுக்காரிக்கிட்ட கிசுகிசுக்கும், " எடீ! அங்ஙன நோக்கு! வாய்நோக்கி வந்நு" ன்னு நமுட்டு சிரிப்பு சிரிக்கும். ஆனா இந்தப் பயலுக மட்டும் பஸ்ஸ்டாண்டுப் பக்கம் போய் வாய் பார்க்கல்லைன்னா இந்தப் பொம்பளப் புள்ளைகளுக்கும் போரடிச்சிறாது? இந்த வயசுல நம்ம வள்ளுவரு கூட வாய் பார்த்து பொழுது போக்கிருப்பாரு போல. அதனால்தான் அவரு " யான் நோக்குங்கால் நிலன் நோக்கும். நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்" ன்னு அனுபவிச்சு எழுதி இருக்காரு. என்ன நான் சொல்லுகது. அந்த வயசு தாண்டியாச்சுண்ணா நேரம் போகாம தெரு முக்குல நின்னுக்கிட்டு ஊருல யாரு எங்க போறா, என்னத்த பேசிக்கிட்டு போறான்னு வாய் பார்க்க வேண்டியது.

அப்படியே வாய் பார்த்து பழகிப் போச்சா! அப்படியே நேரம் போனதும் தெரியல்லையா. திடீர்னு வங்கியில் இருக்கும் ஞாபகம் வந்து கவுண்டரில் என்ன நம்பர் போகுதுன்னு பார்த்தால் 44 ஐ காட்டியது. அட, என் நம்பர் 46 ஆ இல்லை 48 ஆ. மறந்திட்டனா! சரி, டோக்கன்தான் கைவசம் இருக்கேன்னு எடுத்து பார்த்தால் அதுல 4 தெரியுது. அடுத்த இலக்கம் தெரியல்ல. டோக்கன் மெஷினில் மை குறைந்து இருக்கும் போல. ஆஹா! கவுண்டரில் இருக்கும் அம்மணி வேற கவுண்டமணி மாதிரி கண்ணுக்கு தெரிகிறாரு. இப்ப போய் டோக்கனைக் கவுண்டர்மணியிடம் காட்டினால், உன் நம்பர் இன்னும் வரல்லை அந்தத் தலையான்னு கடுப்படிப்பாரோன்னு கலவரமாகிப் போச்சு. இப்பதானடா ஸ்கிரீனில் நம்பர் பார்த்தே. ஒரு பத்து நிமிஷம்கூட ஆகல்லயே, அதுக்குள்ள மறந்துட்டயடா பாவின்னு நினைச்சுக்கிட்டேன். எனக்கென்ன தெரியும், இந்த மெஷினுக்கும் மை காஞ்சு போகும்ன்னு. எப்படியோ வங்கி வேலையை முடித்துவிட்டு வந்தேன்.

இரண்டு நாள் கழித்து நண்பர் வெங்கட்டிடம் இந்தக் கதையைச் சொல்லி விட்டு "இப்படித்தான் வெங்கட்! இப்ப நடந்த விஷயம் டக்குன்னு மறந்து போகுது. ஆனா ரொம்ப பழைய விஷயமெல்லாம் பளிச்சுன்னு நினைவில் இருக்கு" அப்படின்னேன். மனுஷன் பதிலுக்கு சொன்னார், "அண்ணாச்சி! வயசாச்சுல்ல. அப்படித்தான் இருக்கும்." ன்னு சொல்லிக்கிட்டு சிரிக்கிறாரு. இத்தனைக்கும் நேத்து வரைக்கும் என்னைப் பார்த்து என்றும் இருபத்தெட்டுனு சொல்லிக்கிட்டு இருந்தவரு இப்ப கேட்டா அது வயசைச் சொல்லல்ல. இடுப்பு அளவச் சொன்னேங்கிறாரு.

சரி அது இருக்கட்டும். இப்ப எனக்கு நாப்பது வருஷத்துக்கு முன்னால எங்க தாத்தா ஒருத்தர் பண்ணுன கூத்து கண்ணுக்கு முன்னால வந்து கூத்தாடுது. இந்த தாத்தா லேசுப்பட்டவரு கிடையாது. ஃபுல் வக்கீல்ன்னா நாரோல் கோர்ட்டில் தெரியாத ஆளு கிடையாது. கொஞ்சம் மஞ்சளேறிய வேஷ்டி. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைபோல் சட்டையும் அதன் மேல் ஒரு வக்கீல் கோட்டும். கூடவே ஒரு வெளிர் கறுப்புக் குடை.  வாயில் என்னேரமும் வெற்றிலை பாக்கு. ஒரு பெரிய வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தார். வயசு எழுவது, எழுவத்தஞ்சு ஆவது வரைக்கும் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்தார். கோர்ட்டில் நீதிபதியில் இருந்து எந்த பெரிய கொம்பன் வக்கீல் என்றாலும் இவருக்கு 'அவன்-இவன்' தான். ஆனால் நேரில் அவர்களை கண்டால் அந்நியன் அம்பி தோற்றுப் போவான். அப்படியே குழைந்து காரியத்தை முடித்து விடுவார்.

அதே சமயம் கேஸ் விஷயத்திலும் கில்லாடி. ஏதாவது பழைய கேஸைப் பற்றி கேட்க வேண்டும் என்றால் இவரது வக்கீல், "ஓய்!  இங்க வாரும் ஓய். இந்த அரசன்விளை அனந்தன் கேஸ்ல எத்தனை வருஷம் ஓய் சிக்ஷ்சை போட்டா" என்று அருகிலேயே வைத்துக் கொள்வார். உடனே இவரு அந்தக் கேஸை நினைவுக்கு கொண்டு வந்து, "கேட்டேளா! எழுவத்தஞ்சாம் வருஷம் நம்ம பூதப்பாண்டி நாராயணசாமியாக்கும் மைசேட்டு (மாஜிஸ்திரேட்). நல்ல மனுஷன். நல்ல மனுஷன். அனந்தனுக்கு மூணு வருஷம்தான் போட்டாரு. இந்த அய்யாவு பண்ணிண வேலைக்கு வேற மைசேட்டுன்னா ஒரு அஞ்சு வருஷமாவது தீட்டி இருப்பாரு." என்று அது சம்பந்தமான லா பாயிண்ட் ஒண்ணு விடாம அலசி அந்த கேஸை போஸ்ட்மார்ட்டம் பண்ணுவாரு பார்க்கணும்.  பொதுவாக வக்கீல் குமாஸ்தாக்கள் ஏழைகளாக இருந்தாலும் கோர்ட் விஷயங்களில் ஞானஸ்தர்களாக இருப்பார்கள். அதனால் வக்கீல் குமாஸ்தாக்கள் பாதி வக்கீல்கள்தாம். இவரை அவருடைய வக்கீலே, "ஓய்! நீர் பாதி வக்கீல் இல்லை ஓய்! ஃபுல் வக்கீல் ஓய்" ன்னு சொல்லி சிரிப்பாரு. பின்னே! அவருடைய வேலை இவரால் பாதி குறையுமே!

இவர் எனது தந்தை வழி தாத்தாவின் தம்பி. தமிழ் புத்தாண்டு, சித்திரை ஒண்ணாம்தேதியானால் தேடி வந்து எல்லா பேரப்பிள்ளைகளுக்கும் இருபது பைசா முப்பது பைசா என்று கைநீட்டம் தருவார். அப்போது அது எங்களுக்கு பெரிய தொகை. அதனால் எங்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்.

ஆனால் இந்த டதிஸ்கூலில் படிக்கும் எங்க ஏரியா பெண் பிள்ளைகள் மட்டும் இவரைக் கண்டால் தலைதெறிக்க ஓடும். வேப்ப மூடு பஸ் நிறுத்தத்தில் இறங்கித்தான் இவருக்கு கோர்ட்டுக்கு போகணும். டதிஸ்கூல் புள்ளைகளுக்கும் ஸ்கூலுக்கு போகணும். "எடீ! அந்த பாட்டா நம்ம பஸ்லதான் வராரு. அவரு இறங்குகதுக்கு முன்னால நாம இறங்கி அவருக்கு முன்னால போயிறணும்டி" இதுதான் தினசரி காலைவேளைகளில் இவர் பயணம் செய்யும் அதே பஸ்ஸில் வரும் பெண் பிள்ளைகளின் தவறாத டயலாக்.

விஷயம் வேற ஒண்ணுமில்லை. இவர் பஸ்ஸை விட்டு இறங்கியதும் என்ன செய்வார் என்றால் நடந்து கொண்டே தன் மடித்துக் கட்டிய வேட்டியை பின்பக்கமாக தூக்கி விட்டு தனது கோவணத்தை இழுத்து சரி பண்ண ஆரம்பித்தால் தனது வக்கீல் ஆபீஸ் வந்ததும்தான் வேட்டியைக் கீழே இறக்குவார். பின்னால யாரு வரா, யாரு போறா ஒண்ணையும் பாக்க மாட்டாரு மனுக்ஷன். அவருக்கென்ன, முற்றும் துறந்த முனிநிலை. அவருக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் ஒன்று. ஆனால் அவருக்குப் பின்னால் செல்லும் நாம் முனிவர்களில்லையே!  வேப்பமூட்டு டாக்ஸி ஸ்டாண்டிலேயிருந்து தெரிஞ்ச டிரைவர் "ஓய்! பாட்டா! வேட்டிய இறக்கி விடும் ஓய். பொறத்த பொம்பளப் புள்ளக வருகுல்லா" ன்னு கத்துவான். "நீ சும்மா கெடல. எல்லா புள்ளைகளும் என் பேத்தி மாதிரி லே" ன்னு அவரு கோவணத்தை சரி பண்ணுகதிலேயே கவனமா இருப்பாரு. பாவம்! தப்பித்தவறி அவர் பின்னால் மாட்டிக் கொள்ளும் பெண் பிள்ளைகளின் நிலை இக்கட்டானது. சிரிப்பை அடக்கமுடியாமல் இவரை ஓவர்டேக் செய்யும் தருணம் அவர்களுக்கு கஷ்டமான தருணங்கள்தான். அதனாலேயே இவர் வரும் பஸ்ஸில் வரும் டதிஸ்கூல் பிள்ளைகள் இவர் இறங்குமுன் இறங்குவதிலேயே குறியாக இருப்பார்கள்.

இந்த ஒரு விஷயத்தினாலேயே அதே பஸ்ஸில் பயணம் செய்ய நேரும் போது அவர் எனது தாத்தா என்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வேன். ஆனாலும் ஒரு புள்ள அவரு என்னோட தாத்தான்னு கண்டு பிடிச்சுப் போட்டுல்லா. ஒரு மாசமா அதுக்கு கண்ணுல படாம சுத்த வேண்டியதாப் போச்சு. ஆனாலும் பயபுள்ள பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் குசும்பாதான் நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுட்டுப் போனது.

என்ன நண்பர்களே, ஃபுல் வக்கீல் பற்றிய நினைவலைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
 
வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி

50 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஓ அண்ணாச்சி பதிவா.....அட்டெண்டன்ஸ் வைச்சாச்சு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      அண்ணாச்சி பதிவே தான். வாங்க... படித்த பிறகு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. அட! வாய் பார்ப்பது! எங்க ஊர் பஸ்டான்ட்ல ஒரு பையனுக்கு என் கசின்ஸ் வைக்சிருந்த பட்ட பெயர் வாய் நோக்கி! மக்கா அவென் சரியான வாய் நோக்கி டே! ந்தா இங்க்ன வரான் பாருடே...என்று எச்சரிக்கை அடிப்பாங்க...ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எச்சரிக்கை அடிப்பாங்க.... இதுவும் உங்க ஊர் பேச்சு வழக்கு போல! :) இப்படி வாய் நோக்கிகள் நம் ஊரில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. எச்சரிக்கை மணி - மணி விட்டுப் போச்சு ஹா ஹா ஹா ஹா...அது வேற ஒன்னுமில்ல அங்க திங்க பதிவு உங்க பதிவுனு தெரிஞ்சுருச்சு உடனே அங்க ஓடிட்டேன்....திங்கறதுக்கு...அதான் இங்க கம்ப்ளீட் பண்ணலை கமென்ட் முடிச்சு....

      கீதா

      நீக்கு
    3. ஆஹா மணி விட்டுப் போச்சா! நான் ஏதோ உங்க ஊர் பேச்சு வழக்கு போலன்னு நினைச்சேன்!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். வக்கீல் குமாஸ்தாவா, குமஸ்தாவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      குமாஸ்தா - சரி செய்திருக்கிறேன் - ஒரு வேளை நாரோல் பேச்சு வழக்கில் குமஸ்தாவோ! நாரோல் காரர்கள் தான் சொல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஸ்ரீராம் குமஸ்தான்னும் சொல்லுறதுண்டே...

      சில செய்தி பேப்பர்ல கூட குமஸ்தான்னு வந்ததாக நினைவு....

      கீதா

      நீக்கு
    3. அண்ணாச்சியிடம் கேட்டபோது அவரும் இப்படித்தான் சொன்னார் - குமஸ்தா என்றும் சொல்வார்களாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. பாட்டா செய்யும் வேலைகளை எங்கள் தஞ்சையிலும் சில பெரிசுகள் செய்ததுண்டு... ஆனால் அவை எல்லாம் குறும்படங்கள். முழுநீள படங்கள் அல்ல!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை பெரிசுகள் செய்த குறும்பட விஷயங்களையும் சொல்லலாமே ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. நாரோல், வாய்ப்பார்ப்பது, என்று இன்னும் சில வட்டார வார்த்தைகளையும் படித்து மகிழ்ந்தேன். சுவாரஸ்யமாக எழுதுகிறார்.

    "கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு ஒரு கதை எழுதித் தரலாமில்ல அண்ணாச்சி... எங்க முகவரி தெரியுமில்ல...?!!!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு ஒரு கதை - எழுத சொல்கிறேன். எழுதினால் வாங்கி அனுப்பி வைக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அதே கேட்டுட்டீங்க...எனக்கும் தோனிச்சு...அண்ணாச்சி எபி க்கு அனுப்பச் சொல்லலாமேன்னு...

      கீதா

      நீக்கு
    3. அண்ணாச்சியிடம் கேட்டிருக்கிறேன். முடிந்தால் எழுதி அனுப்புவார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. வெங்க்ட்ஜி உங்கள் நண்பர் சொல்லி சென்ற நடை அருமை பாராட்டுக்கள் அவருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது வேறு சில பதிவுகளும் இங்கே உண்டு மதுரைத் தமிழன். நேரம் கிடைக்கும்போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அண்ணாச்சிக்கு வாழ்த்துகள் இறுதிவரை ரசிக்கும் நடை. பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. ரொம்ப ரசிக்கக்கூடிய நடை. பத்மனாபன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    /டதிஸ்கூலில்// - இதுதான் புரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டதி ஸ்கூல் - பள்ளியின் பெயர் அது தான் நெல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. பலரின் சுறுசுறுப்பிற்கு காரணமாக இருக்கிறாரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சுறுசுறுப்பான மனிதர் :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. ரொம்பவே ரசித்தேன் அண்ணாச்சி!/வெங்கட்ஜி!

    அதுவும் பல நினைவுகளை மீட்டுவிட்டது. வேப்ப மூடு ஜங்க்ஷன், வேப்ப மூடு பஸ் ஸ்டாப், டாக்சி ஸ்டான்ட், கோர்ட் ரோடு, டதி ஸ்கூல். என் கஸின்களில் இருவர் டதி ஸ்கூல் நாங்கள் மூவர் செயின்ட் ஜோசஃப் கான்வென்ட். அவர்கள் இருவரும் டதி ஸ்கூல் என்பதால் கல்லூரி அப்படியே விமன்ஸ் காலேஜ் போயிட்டாங்க நாங்க ஹோலிக்ராஸ் கல்லூரிக்குப் போனோம்.

    எங்கள் வீட்டு ஆண் பிள்ளைகள், ஊர் ஆண் பிள்ளைகளில் 90% எல்லோரும் இந்த டதி ஸ்கூல் போகும் முன்னரே வரும் எஸ் எல் பி பள்ளியில்தான் 6 ஆம் வகுப்பிலிருந்து படிச்சாங்க...ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை...

    இன்னும் பல நினைவுகள் வந்தது.

    பாட்டா என்றதும் எங்கள் ஊரில் இருந்த நாங்கள் சொல்லிச் சிரித்த பாட்டாக்கள் நினைவுக்கு வந்தார்கள்.

    அண்ணாச்சி ரொம்ப நன்றி மீண்டும் நாரோயில் நினைவுகள் மீட்டதற்கு. பல வருடங்கள் ஆகிவிட்டது அங்கு சென்று. போய்ப் பார்க்க ஆசையைத் தூண்டுது உங்க பதிவுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் நாரோயில் நினைவுகளை மீட்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி கீதா ஜி!

      அண்ணாச்சியின் மனைவி கூட இந்த டதி ஸ்கூலில் தான் படித்தார்களாம் - நேற்று பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. //அண்ணாச்சியின் மனைவி கூட இந்த டதி ஸ்கூலில் தான் படித்தார்களாம்// அதனால டதி ஸ்கூல் புள்ளைங்க மேல கொஞ்சம் பயம்தான்.

      நீக்கு
    3. ஹாஹா... அந்த பயம் இருக்கட்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. என்றும் இருபத்தெட்டு அந்த் பாராவை வாசித்துசிரித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... ஆமாம். நகைச்சுவை உணர்வு அண்ணாச்சிக்கு அதிகம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. இப்பவும் அண்ணாச்சி அப்படியே இருக்காரோன்னு கேட்க நினைத்து அப்புறம்...என்றும் இருபத்தெட்டு பதிவும் வாசித்துவிட்டேன் ஜி/அண்ணாச்சி!!

    சரி அந்த 28 எப்படி மெயின்டெய்ன் செய்றீங்கன்ற ரகசியத்தையும் அப்படியே எழுதலாம்ல! முடி உதிர்ந்து "அந்த தலை" க்கு நம்ம வெங்கட்ஜி நல்ல யோசனை எல்லாம் சொல்லிருக்காருல்லா..!

    ஹா ஹா ஹா


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் கூட 30 தான்! :) என்ன ரகசியம்னு சொல்லவே மாட்டேன்ன்னு அடம் பிடிக்கறாரே!

      இருபத்தி எட்டு பதிவும் வாசித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. ஆமாம். எங்கள் ஊரில் கூட பராக்கு பார்ப்பது என்று தான் சொல்வார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  15. //சுசீந்தரம் தேரோட்டத்துக்கு அம்மா கையை பிடிச்சுக்கிட்டே பஸ்ஸிலேருந்து இறங்கனதுமே//

    நானும் சின்ன வயதில் (நாகர்கோவிலில் இருக்கும் போது)அம்மாவுடன் சுசீந்தரம் தேரோட்டத்துக்கு போன போது பராக்கு பார்த்துக் கொண்டு (வாய்ப் பார்த்துக் கொண்டு) அம்மா புடவை என்று வேறு ஒருவர் புடவையை பிடித்துக் கொண்டு போய் விட்டேன். அப்புறம் அம்மா இல்லை தெரிந்து அழுத போது என்னை காவல் நிலையத்தில் அந்த அம்மாவிட்டு சென்றதும், காவல்துறை அதிகாரிகள் மிட்டாசி (ஒலைபெட்டியில் இருக்கும்) , தண்ணீர் பந்து எல்லாம் வாங்கி கொடுத்து என் பேர் அம்மா பேர், அப்பா பேர் எல்லாம் கேட்டு ஒலிப்பெருக்கியில் சொல்லி அம்மா வந்து அழைத்து போனது எல்லாம்
    பெரிய கதை.

    அருமையான எழுத்து.

    என் நாகர்கோவில் நினைவுகளை மீட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ நீங்கள் நாரோயிலில் இருந்தீர்களா... உங்கள் நினைவலைகளை மீட்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

      மிட்டாசி - ஆஹா! காணாமல் போனதால் கிடைத்த மிட்டாசியின் சுவை அதிகம் தான். அந்த பெரிய கதையையும் சொல்லுங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
    2. நானும் ரொம்ப நாளா ஆராய்ச்சி பண்ணி பார்த்துட்டேன். நாமளும் விடாம அம்மா கையைப் இறுக்கி பிடித்துக் கொண்டுதான் போகிறோம். ஆனால் எந்த நொடியிலே கை மாறுது, இல்லை புடவை மாறுதுன்னு இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.

      நீக்கு
    3. அது மட்டும் தெரிந்துவிட்டால்.... எனக்கும் இப்படி கை மாறிய அனுபவம் ஒன்று உண்டு! அதை பிறிதொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. வாய் நோக்குதல் கேட்டிருக்கிறேன் ஆனால் ஒரு பதிவு தேறும் அளவுக்கு அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு தேறும் அளவுக்கு - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. ஒரு சின்ன வாய் பார்ப்பதை வைத்து ஒரு பதிவே தேத்திட்டார். நல்ல நினைவுகள்! வட்டார வழக்குச் சொற்களை இத்தனை வருட தில்லி வாசம் மறக்கடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பதிவு தேத்திட்டார் - ஜி.எம்.பி. ஐயா எழுதியதை படித்ததால் வந்த கருத்தோ?

      தில்லி வாசம் என்றாலும் வட்டார வழக்கை மறக்க இயலுமா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  18. எங்கள் ஊரில் வாய் பார்ப்பது என்ற சொல் கேள்விபடத்தில்லை. மிக நகைசுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  19. வாய்ப்பளித்தமைக்கும் ஊக்குவித்தமைக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணாச்சி. தொடர்ந்து எழுதுங்க....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  20. அருமை. நாம பாக்கிற விஷயங்கள சொல்ற திறமையில்தான் எவ்வள்வு சுவாரசியமாயிடுது!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....