தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு
விமான நிலையத்தின் Terminal – 2 – ஒரு வருடத்திற்கு முன்னர் தான் இயங்கத்
துவங்கியது.
அங்கிருந்து புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தான் பீஹார்
மாநிலத்தின் தலைநகரான பட்னா வரை எனக்கான முன்பதிவு செய்திருந்தேன். ஏற்கனவே பல
முறை Terminal-1 மற்றும் Terminal-3-லிருந்து விமானப் பயணம் சென்றிருக்கிறேன்.
தில்லி மெட்ரோவின் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலமாகவே இந்த இரண்டாம் நிலையத்திற்கும்
செல்ல முடியும். மெட்ரோவிலிருந்து வெளியே வந்து சில நிமிடங்கள் நடக்க
வேண்டியிருக்கும் – வளாகத்திற்குள் தான் என்றாலும் ஐந்து-பத்து நிமிட நடை.
உடைமைகளை எடுத்துக் கொண்டு பொடி நடையாகப் போய்ச் சேர்ந்தேன். பாதுகாப்பு சோதனைகளை
முடித்துக் கொண்டு Boarding Pass-உடன் விமானத்திற்கான அறிவுப்பு வரக்
காத்திருந்தேன்.
காத்திருந்த பயணிகளை அப்படியே ஒரு
பார்வை பார்த்தேன் – ஒரு முகம் கூட தெரிந்த முகமாகவோ [அ] தமிழ் முகமாகவோ இல்லை –
எல்லாமே பீஹார் முகங்கள்! சென்னைப் பயணத்தில் பார்க்கும் முகங்களில் அனைத்து
இந்திய முகங்களும் கலந்து கட்டி இருக்கும். இந்தப் பயணத்திலோ எங்கும் பீஹாரிகள்.
என் ஒருவனைத் தவிர அனைவருமே பீஹார் மாநிலத்தவர்களாக இருக்க, எல்லோரும் என்னை ஒரு
மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்! ”என்னடா இந்த மதராஸி எதுக்கு பீஹார்
போறான்?” என்ற கேள்வி அவர்கள் அனைவருடைய மனதிலும் எழுந்தது போலும். சத்தமாக பேசிக்
கொண்டும், அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டும் விமான நிலையத்தினையே ஒரு வழி செய்து
கொண்டிருந்தார்கள் சில சிறுவர்களும் பெரியவர்களும்.
பொதுவாக உள்நாட்டு விமானங்களில் 15
கிலோ வரை Check-in Luggage-உம், 7 கிலோ வரை Cabin Luggage-உம் எடுத்துச்
செல்லலாம். ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானங்களில் சில சமயம் கொஞ்சம் குறைவான கட்டணம்
வாங்கிக் கொண்டு Cabin Luggage 7 கிலோ மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிப்பதுண்டு.
ஆனால், நம் இந்தியர்கள் திறமைசாலிகள் – அந்த பயணச் சீட்டை வாங்கி விட்டு, புளிமூட்டை
மாதிரி அடைத்துக் கொண்டு வருகிறார்கள். காத்திருந்த அனைவரிடமும் பல மூட்டைகள்!
பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கணவன் – மனைவி தங்களுக்குள் சண்டை போட்டுக்
கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்கும் சேர்த்து 14 கிலோ கணக்காக ஒரே பையில்
அடைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.
இத்தனை அளவு வரை தான் Cabin
Luggage-ஆகக் கொண்டு செல்லலாம் என்ற வரைமுறையெல்லாம் இந்த பீஹாரிகளிடம் சொல்லிப்
புரிய வைக்க முடியாது போலும். அனுமதித்து விட்டார்கள். தூக்க முடியாமல் தூக்கிக்
கொண்டு வந்திருக்கிறார். பாதி வழியில் கனம் தாங்காமல் பையின் ஒரு காது அறுந்து
போக, மனைவி அணிந்திருந்த துப்பட்டாவினை வாங்கி அதில் மூட்டையாகக் கட்டி தலையில்
வைத்துக் கொண்டு நடந்து வந்தாராம். கணவர், “இவ்வளவும் ஒரே பையில் அடைச்சு
எடுத்துட்டு வந்திருக்கியே” என மனைவியைத் திட்ட, மனைவியோ, ஏர்போர்ட் வளாகத்தில்,
“துப்பட்டா இல்லாமல் என்னை நடக்க விட்டியே” என்று திட்டிக் கொண்டிருந்தார்.
மனைவியின் கோபத்தினைத் தீர்க்க, கணவர் சென்று மதிய உணவு வாங்கிக் கொண்டு வந்தார்!
மனைவி முரண்டு பிடிக்க,
“உனக்காகத்தான் வாங்கி வந்தேன், சாப்பிடு!” எனச் சொல்ல மனைவி தன் கோபத்தினை
விடாமல் இருக்க, கணவர் சொன்ன ஒரு வாக்கியம் சண்டையை வளர்த்தது – “உனக்காகதானே 400
ரூபாய் கொடுத்து இந்த உணவை வாங்கினேன், சாப்பிடலைன்னா என்ன அர்த்தம்?”. மனைவி
பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் – “எனக்கு இவ்வளவு செலவு பண்ணறேன்னு சொல்லிக்
காட்டுகிறாயே?” என்று. அவர்கள் பேசும் பீஹாரி மொழியில் சண்டை போட்டாலும் புரிந்து
கொள்ள முடிந்தது. எல்லோரும் அவர்களையே பார்ப்பது தெரிந்ததும், இரண்டு பேரும்
சாப்பிட ஆரம்பித்தார்கள். அதற்குள் விமானத்திற்குள் செல்ல அழைப்பு வந்தது.
சாப்பிட்டு தட்டை அங்கேயே இருக்கைக்குக் கீழே போட்டு விமானத்திற்குள் சென்றார்கள்.
விமானப் பணிப்பெண்கள் பொதுவாக
பயணிகளின் உடைமைகளை மேலே Cabin-ல் வைக்க உதவுவார்கள். இங்கே அவர்கள் அனைவரும்
பார்த்துக் கொண்டிருந்தார்கள் – அவர்களுக்கு இந்த செய்கைகள் பழக்கம் போல –
வந்திருந்தவர்களே பெரும்பாலும் பெரிய பெட்டிகளையும் பைகளையும், மூட்டைகளையும்
திணித்துக் கொண்டிருந்தார்கள்! அனைத்து உடைமைகளும் ராமராஜன் கலர் – பிங்க், ஆரஞ்ச்
போன்ற கலர் பெட்டிகளும் பைகளும்! சிலர் அவர்களது பைகளை சீட் மீது ஏறி நின்றெல்லாம்
உள்ளே தள்ளினார்கள்! பேருந்து வந்து நின்றதும் எல்லோரும் ஏறிக்கொண்டு அங்கேயும்
இங்கேயும் மூட்டை முடிச்சுகளை வைப்பார்களே அது தான் நினைவுக்கு வந்தது. என்னிடம்
என் கேமரா பை மட்டுமே – அதைக் கூட கேபினில் வைக்க இடம் இல்லை. மடி மீது வைத்துக்
கொண்டேன் – வேறு வழி! ஒரு வழியாக எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர – விமானப் பணிப்பெண்களிடம்
பெருமூச்சு!
பணிப்பெண்களை படம்/காணொளி எடுத்த
பயணி பற்றி காஃபி வித் கிட்டுவில் ஏற்கனவே பார்த்தோம். ஒரு வழியாக பட்னா அருகே
சென்றபோது பணிப்பெண் குரல் ஒலித்தது – ஒலிபெருக்கி வழியே. பட்னா விமான நிலையத்தில்
VIP Movement. Parking Bay இல்லாததால் சில நிமிடங்கள் வானிலேயே சுற்றிக்
கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என. கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் அந்தரத்தில் நின்று
கொண்டிருந்தது விமானம். பிறகு ஒரு வழியாக தரையிறங்கியது. மிகச் சிறிய ரன்வே
என்பதால் தரையிறங்கியதும் சடன் ப்ரேக் போடுகிறார் விமானி. அப்படி ஒரு குலுக்கலுடன்
விமானம் சிறிது தொலைவில் நிற்கிறது. மீண்டும் பணிப்பெண்ணின் அறிவிப்பு –
தரையிரங்கினாலும் வெளியே செல்ல முடியாது – இன்னும் சில நிமிடங்கள் கழித்து தான்
Parking Bay நமக்குக் கிடைக்கும் என – பத்து நிமிடங்களுக்குப் பிறகு பட்னா விமான
நிலையம் என்னைப் பார்த்து வா ராசா வா என்றது…
மொத்தத்தில் இந்த விமானப் பயணம்
பேருந்து பயணம் சென்றது போன்ற உணர்வினையே தந்தது. பயணிகள் பலரும் விமானத்தினையும்
பேருந்து போலவே ஆக்கி இருந்தார்கள். வித்தியாசமான ஒரு விமானப் பயணம் இந்த விமானப்
பயணம். எனக்குக் கிடைத்த இந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி.
வேறு சில செய்திகளோடு மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் 🙏 கீதாஜி.
நீக்குசாப்பிட்டு தட்டை அங்கேயே இருக்கைக்குக் கீழே போட்டு விமானத்திற்குள் சென்றார்கள்.//
பதிலளிநீக்குஆ! விமான நிலையத்திலும் இப்படியா....நம்ம மக்கள் பல இடங்களில் இப்படித்தான் செய்கிறார்கள். அப்ப கை கூடக் கழுவாமத்தான் லக்கேஜை தூக்கினாங்களா!!!!!!ஹா ஹா ஹா
என்ன மனிதர்களோ...ஜி இது பல இடங்களிலும் நடக்கிறது. சில இடங்களில் கொஞ்சம் படித்தவர்கள் கூட இப்படிச் செய்கிறார்கள்...பார்க், திரையரங்கு என்று...
கீதா
சப்பாத்தி சாப்பிட கை. கூடவே சப்ஜி எடுக்க ஸ்பூன்.சாப்பிட்ட பிறகு கைகளை தட்டி, இரண்டு மூண்று டிஸ்யூவில் துடைத்து போட்டு போவது தான் இங்கே பெரும்பாலும் நடப்பது.
நீக்குஇதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரும் ஒரே மாதிரி. சுத்தம் செய்ய ஆள் இருக்கும் போது நான் எதுக்கு குப்பை போடாம இருக்கணும் என்ற எண்ணம் தான் பலருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
குட்மார்னிங் வெங்கட். முகத்தைப் பார்த்தே எந்த மாநிலத்தவர் என்று கண்டுபிடிக்கும் திறமைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.
நீக்குமுகம் வைத்து ஓரளவு யூகிக்க முடியும். பேசும் போது அதனை உறுதி செய்ய அவர்கள் மொழி, பேசும் விதம் பயன்படும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஸ்ரீராம் ஓரளவு யூகிக்க முடியும்....குறிப்பாக கேரளத்தவர், கர்நாடகா, ஆந்திரா கொஞ்சம் எளிது. வட மாநிலத்தவரை பொதுவாகக் கண்டு பிடிக்கலாம் ஆனால் வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் மொழி அப்புறம் உடை வைத்தும் ஓரளவு கண்டுபிடித்துவிடலாம்...
நீக்குஅதுவும் வெங்கட்ஜி இருக்கும் இடம் தலைநகரம் மற்றும் அதிகம் பயணம் செய்பவர் இல்லையா...அவருக்கு இது மிக மிக எளிதாகவே இருக்கும் ஸ்ரீராம்...
கீதா
முக வெட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரி - உடை வைத்தும் கண்டுபிடிக்கலாம். வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டரும் கோவை சரளாவும் அடிக்கும் கூத்து நினைவுக்கு வந்தது அந்தக் கணவன் மனைவி சண்டையைப் படித்தபோது!
பதிலளிநீக்குஜப்பானில் கல்யாணராமன் கவுண்டர்-கோவை சரளா செம கலக்கல்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சாப்பிட்ட பிறகு தட்டை இருக்கையின் அடியில் போட்டாரா? இவர்களுக்குத்தான் ஸ்வச் பாரத்.
பதிலளிநீக்குகல்வி அறிவு எவ்வளவு அவசியம் எனப் புரிய வைத்தது
ஸ்வச் பாரத். என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
நீக்குபடித்தவர் படிக்காதவர் வித்தியாசம் இல்லை. பெரும்பாலும் இப்படி இருக்கிறார்கள்.
நம் மக்கள் எந்த மாநிலத்தவரானாலும் குப்பைகள் போடுவதில் திறமைசாலிகள். ஃப்ராங்க்ஃபர்ட்டில் இருந்து சென்னை வரும்போது இப்படித் தான் குப்பைகளை உட்காரும் இடத்தின் கீழேயே போடுவதைப் பார்த்தேன். யாருக்கும் இது பற்றிய வெட்கமே இருப்பதும் இல்லை.
பதிலளிநீக்குவெட்கமா? கிலோ எவ்வளவு? எங்கே கிடைக்கும்? ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
விமான பயணம் பேரூந்து பயணமாக ஆகி விட்டது உண்மை.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களை அருமையாக சொன்னீர்கள்.
குப்பை கூடையில் போட அவகாசம் இல்லை போலும் சண்டை போட்டதில்.
சிலர் பஸ், விமானம், தியேட்டரில் சீட்டுக்கு அடியில் குப்பை போடுவார்கள்.
காரில் போகும் போது என்று குப்பைகளை தூக்கி போடுவது அதைவிட கொடுமை.
நம் ஊரில் இப்படி பொறுப்பற்ற செயல்களை செய்வது நிறைய பேர். ஒன்றும் சொல்வதற்கில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
உங்களின் எல்லாப் பதிவுகளையும் படித்து விடுகிறேன். மொபைல் வாயிலாக படித்து விடுவதால் விமர்சனம் எழுத முடிவதில்லை. இன்று பீஹார் என்பதால் வேகமாக உள்ளே வந்து கணினியில் படித்தேன். உங்களைப் போல வாழ்நாளுக்குள் இந்தியாவில் சகலபாகங்களில் சுற்றி வர வேண்டும் என்று தீராத ஆசையுண்டு.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. முடிந்த போது உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் ஜி.
நீக்குஇந்தியாவில் சகல பாகங்களுக்கும் சுற்றி வர ஆசை - வாழ்த்துகள் ஜி. நம் நாட்டில் தான் எத்தனை எத்தனை இடங்கள். நிச்சயம் சென்று வாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி!
>>> விமானப் பயணம் பேருந்து பயணம் சென்றது போன்ற...<<<
பதிலளிநீக்குவிமானப் பயணம் - தகர டப்பா டவுன் பஸ்ஸில் பயணம் சென்றது போல் ஆயிற்று!...
சிரிப்புத் தான் வர்றது!...
தகர டப்பா டவுன் பஸ்! - ஒரு முறை நெய்வேலியிலிருந்து விருத்தாச்சலம் சென்றபோது டவுன் பஸ் பயணம். நல்ல மழை வேறு. வெளியை விட உள்ளே அதிக மழை! :) மேற்கூரையில் அவ்வளவு ஓட்டை - ஜன்னல்களில் அடைப்பு ஏதும் இல்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
//மனைவி அணிந்திருந்த துப்பட்டாவினை வாங்கி அதில் மூட்டையாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு நடந்து வந்தாராம்//
பதிலளிநீக்குதுப்பட்டாவின் நிலை இப்படியாகி விட்டதே... ஜி
துப்பட்டாவின் நிலை - ஹாஹா... அந்த அம்மணி திட்டியது முழுவதும் இங்கே எழுத முடியவில்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி சிவபிரகாசம் தார்ஷிகன் ஜி!
நீக்குவிமானப் பயணமா பேருந்து பயணமா ....
பதிலளிநீக்குஇதே என் எண்ணத்திலும் நீங்களும் சொல்லிவிட்டிர்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குWe also witnessed the same. Anger does not come because of emotional maturity.Travel definitely gives one,more accepting of reality.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.
நீக்குநம் நாடு நம்விமானம் எப்படி வேண்டுமானால் நடந்து கொள்ளலாம் ஒரு முறை அயல் நாட்டுக்கு விமானத்தில் சென்றபோதும் இம்மாதிரி காட்சிகளைக் கண்டேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குநாகரீக வளர்ச்சியில் வடஇந்தியா நமக்கு பின்தங்கிதான் இருக்குப்போல!
பதிலளிநீக்குநம் ஊர் மட்டும் என்னவாம்? நம் ஊரிலும் இப்படியானவர்கள் நிறையவே இருக்கிறார்கள் ராஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சண்டை தீரவில்லை என்று விமானத்திற்கு தெரிந்திருக்குமோ...? ஹா... ஹா...
பதிலளிநீக்குசண்டை தீரவில்லை என விமானத்திற்கு தெரிந்திருக்குமோ? ஹாஹா - :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
துப்பட்டாவினால் இப்படி ஒரு உபயோகம்.
பதிலளிநீக்குஅவர்கள் துப்பட்டான்னு கேட்டு விமான நிலையத்தில் துப்பாமல் இருந்தாலே பெரிய காரியம்.
கேட்டு துப்புவதில்லை - அனுமதி வாங்கி செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை - போகிற போக்கில் துப்புவது தானே இவர்களுக்கு பிடித்த விஷயம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
சில சமயங்களில் இப்படி பட்ட சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. ஆனால் வசதி இல்லாதவர்களும் விமானத்தில் பயனிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பதிலளிநீக்குவசதி இல்லாதவர்களும் விமானத்தில் - நல்ல விஷயம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.