திங்கள், 24 டிசம்பர், 2018

பீஹார் டைரி – பட்னா சாஹிப் குருத்வாரா – குரு கோபிந்த் சிங் பிறப்பிடம்




பீஹார் மாநிலத்தின் தலைநகர் பட்னாவிற்குச் சென்றால் பார்க்க வேண்டும் என நினைத்திருந்த இடங்களில் ஒன்று பட்னா சாஹிப் குருத்வாரா. ஹர் மந்திர் என சீக்கியர்களால் அழைக்கப்படும் பட்னா சாஹிப் குருத்வாரா, சீக்கியர்களின் ஐந்து தக்த் [Takht] களில் இரண்டாவது புண்ணியத்தலமாக கருதப்படும் இடம். சீக்கியர்களின் ஐந்து தக்த்-களில் மூன்று பஞ்சாப் மாநிலத்திலும், இரண்டு வெளி மாநிலங்களிலும் இருக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் இருப்பவை – அம்ரித்சர் நகரின் அகல் தக்த், ஆனந்த்பூரில் இருக்கும் கேஷ்கர் சாஹிப் மற்றும் Bபட்டிண்டா – தல்வண்டி சாபோவில் இருக்கும் ஸ்ரீ டம்டமா சாஹிப் குருத்வாராக்கள். பஞ்சாபிலிருந்து வெளியே இருப்பவை முறையே பட்னா நகரின் தக்த் ஸ்ரீஹர் மந்திர் சாஹிப் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நான்டேட் பகுதியில் இருக்கும் தக்த் ஸ்ரீ ஹசூர் சாஹிப் ஆகியவை.

சீக்கியர்கள் அனைவரும் இந்த ஐந்து தக்த் குருத்வாராக்காளுக்கும் புண்ணியம் தேடி பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வேறு சில குருத்வாராக்கள் உண்டு என்றாலும், இந்த ஐந்திற்கும் செல்வதை ஒவ்வொரு சீக்கியரும் ஒரு கடைமையாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் பக்தி உணர்வு மேன்மையானது. அதை விட அவர்கள் செய்யும் களப் பணிகள் பற்றி நிறையவே சொல்லலாம். அதைப்பற்றி முன்பு கூட இத்தளத்தில் நான் எழுதியது உண்டு. இப்போது சீக்கியர்களின் பத்து குருமார்களில் ஒருவரான குரு கோபிந்த் சிங் அவர்களின் பிறப்பிடமான பட்னா சாஹிப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஸ்ரீ ஹர் மந்திர் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம். வாருங்கள் குருத்வாராவிற்குள் செல்வோம்.



இது வரை குருத்வாராவிற்கு நீங்கள் சென்றதில்லை என்றால் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். குருத்வாராவிற்குள் செல்வதென்றால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ”சிரானா” முக்கியத் தேவை – அதாவது உங்கள் தலையை துணி கொண்டு மூடி இருக்க வேண்டும். தொப்பி போட்டுக்கொள்ளலாமா என்றால் கூடாது! பெண்கள் தங்களது துப்பட்டாவினாலோ, புடவைத் தலைப்பினாலோ தலையை மூடிக்கொள்ள வேண்டும். ஆண்கள் கைக்குட்டையை வைத்து தலையை மூடிக்கொள்ள வேண்டும். குருத்வாரா வாயிலிலேயே ஒரு கூடையில் பச்சை, மஞ்சள், சிவப்புத் துணிகளை போட்டு வைத்திருப்பார்கள். அதனையும் கூட நீங்கள் தலையை மூட பயன்படுத்திக் கொள்ளலாம். கூடவே வாயிலேயே ஒரு சிறு அமைப்பு – அங்கே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அதில் நடந்து கால்களைச் சுத்தம் செய்து கொண்ட பிறகே குருத்வாராவிற்குள் செல்ல முடியும்.



குருத்வாராக்களில் பொதுவாக குரு க்ரந்த் சாஹிப் என அழைக்கப்படும் சீக்கியர்களின் குருமார்கள் சொன்ன சத் விஷயங்களைத் தொகுத்த புத்தகம் தான் முக்கியமான விஷயம். தவிர சீக்கிய குருமார்கள் பத்து பேருடைய உடமைகளும் சில இடங்களில் வைத்திருப்பார்கள். குரு க்ரந்த் சாஹிப் என மரியாதையுடன் அழைக்கப்படும் புத்தகம் தான் குருத்வாராக்களில் வழிபடும் விதத்தில் வைத்திருப்பார்கள். குருத்வாராவில் எப்போதும் அவர்களது குருமார்களின் சத்விஷயங்களை பாடலாகவும் பாடிக் கொண்டிருப்பார்கள். அதற்கு குருபானி கீர்த்தன் எனப் பெயர். இனிமையான குரலில் அவர்கள் பாடுவதைக் கேட்க நன்றாகவே இருக்கும். இணையத்திலும் அம்ரித்சர் குருத்வாராவிலிருந்து தொடர்ந்து குருபானி இசையைக் கேட்க முடியும். விருப்பமிருந்தால் கேட்கலாம்.

1666-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி பிறந்தவர் குரு கோபிந்த் சிங் அவர்கள். அவர்கள் பிறந்து சில வருடங்கள் வரை இதே பட்னா சாஹிப் பகுதியில் தான் இருந்தார். அதன் பிறகு பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஆனந்த்பூர் சாஹிப் சென்று விட்டார். பிறகு பட்னா சாஹிப் திரும்பினார் சீக்கியர்களின் 10-ஆவது குரு அதாவது கடைசி குருவான குரு கோபிந்த் சிங் அவர்கள். குருவின் சிறப்பான அறிவுரைகளில், பாடங்களில் ஈர்க்கப்பட்ட அவரது சிஷ்யர்களில் ஒருவரான சாலீஸ் ராய் ஜோஹ்ரி, தனது ஹவேலி [பங்களா] – யை தர்ம்ஷாலாவாக மாற்றினார். அங்கே தான் ஆனந்த்பூரிலிருந்து வந்த குரு கோபிந்த் சிங் அவர்களும் தங்கினார். பிறகு அதே இடத்தில் குருவின் நினைவாக ஹர் மந்திர் சாஹிப் உருவானது.



1839-ஆம் வருடம் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் ஹவேலி முழுவதும் தீக்கிரையானது. மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் மீண்டும் ஹர்மந்திர் சாஹிப்-ஐ அங்கே உருவாக்கினார். அந்தப் பணி நிறைவுறும் முன்னரே மஹாராஜா குருவின் சரணடியைச் சேர்ந்தார்.  பிறகு 1934-ஆம் ஆண்டில் பீஹார் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஹர் மந்திர் சாஹிப்-இன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 1954-ஆம் ஆண்டு தான் அது சீரமைக்கப்பட்டது. தற்போது நாம் பார்க்கும் ஹர்மந்திர் முழுவதும் சலவைக் கற்களால் உருவானது. பார்க்கவே அழகாக இருக்கும் இந்த குருத்வாராவில் சில நிமிடங்கள் அமர்ந்து குரு கோபிந்த் சிங் அவர்களின் ஆசியை வேண்டினோம். கூடவே குருபானியையும் கேட்டு ரசித்தோம்.



குருத்வாராவின் வாயிலில் அமர்ந்திருந்த பெரியவரை புகைப்படம் எடுத்து அவரிடம் காண்பிக்க, அவர் எனது முதுகில் தட்டி ஆசிர்வாதம் செய்ததை முன்னரே சொல்லி இருக்கிறேன். குருத்வாராவின் உள்ளே கேமரா, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்த தடை உண்டு. ஆனால் வெளியிலிருந்து படம் எடுத்துக் கொள்ளத் தடை இல்லை. வெளியில் வந்த பிறகு சில படங்கள் எடுத்துக் கொண்டோம். நானும் நண்பர் பிரமோத்-உம் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் – பட்னாவில் சந்தித்த திரு இராமசாமி அவர்கள் எடுத்த படம். எங்கள் இருவரின் தலையிலும் சிரானாவினை பார்க்கலாம்! குருத்வாராவிற்கு எப்போது சென்றாலும் ஏதோ ஒரு மன அமைதி கிடைக்கிறது. தில்லியிலும் சில குருத்வாராக்களுக்கு அவ்வப்போது செல்வதுண்டு.

பட்னா சாஹிப் குருத்வாரா என்கிற ஸ்ரீ ஹர் மந்திர் சென்று சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோபிந்த் சிங் அவர்களின் பிறப்பிடத்தில் தரிசனம் செய்தது மகிழ்ச்சியை அளித்தது. இந்த குருத்வாராவிற்கு சீக்கியர்களின் பத்து குருமார்களில் இன்னும் இருவரும் வந்து சென்றிருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும் – இங்கே அப்படி விஜயம் செய்தவர்கள் குரு நானக் மற்றும் குரு தேக் பகதூர் ஆகியோர். பட்னா செல்லும் வாய்ப்பு கிடைத்தால், பட்னா இரயில் நிலையத்திலிருந்து சுமார் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்னா சாஹிப் குருத்வாராவிற்குச் சென்று வரலாம். இங்கே ஒரு அருங்காட்சியகமும் உண்டு. நாங்கள் அங்கே செல்லவில்லை.

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    அந்த தாத்தா படம் முன்பு சாம்பிள்....டீசர்ல போட்டிருந்தீங்க இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் 🙏 கீதாஜி.

      ஆமாம். அந்தப் படம் முன்னரே வெளியிட்ட படம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. இப்பல்லாம் ஸ்ரீராம் போட்டிக்கு வரதே இல்ல இங்க லேன்ட் ஆவதில்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... இங்கே யாரும் போட்டிக்கு இல்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. ஹர் மந்திர் சாஹிப்பிற்கு எத்தனை இடிபாடுகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. விபத்துக்கள் தவிர்த்து இருக்கலாம். இயற்கைக்கு முன்னே கட்டிடம் எம்மாத்திரம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. நல்ல தகவல்கள் ஜி!

    ஆமாம் குரு க்ரந்த் சாஹிப் தொகுப்பு மட்டும் தான் வைத்திருப்பார்கள். ஒரே ஒரு முறை குருத்வாராவிற்குச் சென்றிருக்கிறேன் தில்லிதான் ஆனால் அது எந்த இடம் என்பதும் இப்போது மறந்துவிட்டது. உடன் வந்தவர்களில் நான் மட்டுமே உள்ளே சென்று வந்ததால் அவசர அவசரமாகப் போய் வந்ததால் ரொம்ப நினைவில்லாமல் போய்விட்டது 30 வருடங்கள் முன்னால்...துப்பட்டாவினால் தலையை மூடிக் கொண்டு...அது மட்டும் நினைவு இருக்கு...

    குருபானி கேட்டதுண்டு. நன்றாக இருக்கும். எனக்கு குருத்வாரா பிடித்திருந்தது. மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்.. பாட்னா குருத்வாரா பற்றி நிறைய தெரிந்து கொண்டோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகர் தில்லியில் நிறைய குருத்வாராக்கள் உண்டு. அடுத்த முறை தில்லி வந்தால் சொல்லுங்கள். நானே அழைத்துச் செல்கிறேன் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சுவாரஸ்யமான தகவல்கள். குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. குருத்வாரா பற்றிய சில காட்சிகளை ரங் தே பசந்தி படத்தில் பார்த்திருக்கிறேன். இந்திராகாந்தி காலத்தில் ஜனாதிபதி ஜெயில்சிங்குக்கு இங்கு பரிகார தண்டனை அளிக்கப்பட்டதையும் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாக்களில் வருவது உண்டு. குருத்வாராவில் கர்சேவா நிறையவே உண்டு. தானாகவே செய்வது தவிர இப்படி பரிகாரம் ஆகச் செய்வதும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. படங்களும் அருமை. நான் தலையில் துணி கட்டாமல்தான் போவேன் இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது போல இருக்கிறியாது என்று யாரும் கேஸ் போடவில்லையா?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி மனித சுதந்திரம்.... அதெல்லாம் இங்கே நடக்காது. கூர்மையான வேல்கம்பிகள், கத்திகள் உடன் குருத்வாராக்களை பாதுகாக்கவே நேர்ந்து விடப்பட்ட சீக்கியர்கள் நிறைய பேர் உண்டு. இந்தப் போராட்டம் எல்லாம் இங்கே நடக்க வாய்ப்பில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. குருத்வாராக்கள் நிறையப் பார்த்தாலும் உள்ளே சென்றது அமிர்தசர் பொற்கோயில் மட்டுமே! என்றாலும் இந்த நடைமுறைகள் தெரியும். ராணுவக் குடியிருப்புகளில் இருக்கும் குருத்வாராக்கள் சென்றிருக்கிறோம். பட்னாவுக்கே போனதில்லை. கயாவோடு திரும்பிட்டோம். என்றாலும் என்னமோ பிஹார் பார்க்க அவ்வளவு ஆர்வமும் இல்லை. ஆனால் செழிப்பாக இருக்கும். கங்கை அங்கே தன் பூரணச் செழிப்பையும் கொடுத்திருப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. இத்தனை இடர்பாடுகள் வந்தும் மந்திர் அழிந்து விடாமல் பாதுகாத்தது ஆச்சர்யமான விடயமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. குரு கோபிந்த் சிங் பிறப்பிடத்தைக் காணும் நல்வாய்ப்பு கிடைத்தது. சில புகைப்படங்களைப் பார்த்தபோது பஞ்சாப் பொற்கோயில் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. நிறைய குருத்வாராக்கள் பார்த்து இருக்கிறேன்.
    குரு கோபிந்த் சிங் பிறப்பிடத்தை தரிசனம் செய்தேன்.
    நன்றி.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. குருத்வாராவுக்குப் போய்வந்ததைச் சொன்னீர்கள். அங்கே உணவு அளித்திருப்பார்களே. அதைச் சொல்ல விட்டுப்போய்விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லங்கர் என அழைக்கப்படும் உணவு விநியோகம் எல்லா குருவாராக்களிலும் உண்டு. பெரும்பாலான குருத்வாராக்களில் அதற்கான நேரம் உண்டு. அம்ரித்சர் குருத்வாராவில் 24 X 7 லங்கர் உண்டு. ஹர் மந்திருக்கு நாங்கள் சென்ற போது லங்கருக்கான நேரம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. எஞ்சியது மட்டுமே இம்புட்டு அழகென்றால்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. //பீஹார் டைரி – பட்னா சாஹிப் குருத்வாரா – குரு கோபிந்த் சிங் //

    புரியாத பாசையிலெல்லாம் தலைப்புப் போடக்கூடாது :).

    நீங்களும் மஞ்சள் தொப்பி போட்டு சாமியார் ஆகிட்டீங்களோ?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா. குருவாரா உள்ளே செல்ல இப்படி கட்டுப்பாடு உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  15. உண்மையே. மிக அமைதியான இடம் என்று கருதுவது குருத்வாரா.
    நெல்லை சொல்லி இருப்பது போல லங்கார் போற்றி சொல்லவில்லையே. வரும் அனைவரின் பசி தீர்க்கும் இடம் . நல்ல படங்கள். இங்கே இருக்கும் குருத்வாராவுக்கும் பார்த்து வந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லங்கர்... நாங்கள் சென்ற போது லங்கர் நேரம் இல்லை என்பதால் காத்திருக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....