திங்கள், 31 டிசம்பர், 2018

சாப்பிட வாங்க - புதினா பராட்டா




புதினா பராட்டா – தக்காளி ஊறுகாய்/தயிருடன்….

பராட்டா – முதலில் ஒரு விஷயத்தினை தெளிவு படுத்திவிடுகிறேன் – பராட்டா என்றவுடன் நம் ஊர் மக்கள் இதனை மைதாவில் செய்யப்படும் வீச்சுப் Bபரோட்டாவுடன் குழப்பிக் கொள்கிறார்கள்! இந்தப் பராட்டா வட இந்திய மாநிலங்களில் கோதுமை மாவு கொண்டு செய்யப் படுவது. இந்தப் பராட்டாக்களில் பல வகைகள் உண்டு – லச்சா பராட்டா, ஆலு பராட்டா, கோபி பராட்டா, ப்யாஜ் பராட்டா, மட்டர் பராட்டா, மிக்ஸ் வெஜ் பராட்டா, பனீர் பராட்டா, மேத்தி பராட்டா என இதன் வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். தலைநகரின் பழைய பகுதியில் “பராண்டேவாலி கலி” என ஒரு தெருவே இருக்கிறது – இங்கே பல வகை பராட்டாக்களைச் சுவைக்கலாம் – அதிலும் இரண்டு மூன்று வகைகள் உண்டு – தவா எனும் தோசைக்கல்லில் செய்வது, எண்ணையில் பொரித்து எடுப்பது மற்றும் தந்தூரி அடுப்பில் சுட்டு எடுப்பது – என்று இருக்கிறது.

தலைநகரில் குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. சாதாரணமாகவே நான் இரண்டு வேளை சப்பாத்தி சாப்பிடுபவன். குளிர்காலம் வந்துவிட்டால் மூன்று வேளையும் சப்பாத்தி கொடுத்தாலும் மகிழ்ச்சி தான் – பொதுவாக இந்த ஊரில் குளிர் காலத்தில் அரிசி சாதம் சாப்பிட்டால் இன்னும் அதிகமாகக் குளிரும் என்று சொல்வதுண்டு. அந்த விஷயம் எனக்கும் பிடித்துக் கொண்டது. குளிர் வந்து விட்டால், சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து, சப்பாத்தியும், விதம் விதமான பராட்டாவும் செய்வது வழக்கம். சமீபத்தில் புதினா பராட்டா செய்த போது – மனதில் “ரொம்ப நாளா “திங்க” கிழமைப் பதிவோ, கதையோ எழுதி அனுப்ப”ச் சொல்லிட்டு இருக்காரே நம்ம ஸ்ரீராம், இதையே எழுதி அனுப்பலாமே என்று தோன்ற, இதோ எழுதியாச்சு – “எங்கள் பிளாக்”-ல் பதிவாகவும் வெளிவந்தாச்சு!

பராட்டா – எதில் செய்கிறார்கள் என்பதை முன்னரே சொல்லி விட்டேன் – சப்பாத்தி மாவு – வட இந்தியாவில் கிடைக்கும் சப்பாத்தி மாவு நன்றாகவே இருக்கும் – நம் ஊர் ரேஷன் கடை கோதுமையில் அரைக்கும் மாவு நன்றாக இருப்பதில்லை. இங்கே இருப்பவர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு – நாங்கள் எருமைக்கும் குதிரைக்கும் போடும் கோதுமையை விட தரம் தாழ்ந்த கோதுமை தான் உங்கள் ஊரில் கிடைக்கிறது என்பார்கள்! விதம் விதமான பராட்டாக்களை உண்பதுடன், செய்யவும் செய்வேன். அப்படிச் செய்த புதினா பராட்டா எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - இரண்டு கப்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
காரத்திற்கு – பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் [அ] கரம் மசாலா தூள். நான் கரம் மசாலா தான் பயன்படுத்தினேன்.
எண்ணெய்/நெய்.

எப்படிச் செய்யணும் மாமு?


1 – புதினா இலைகள்; 2 – பொடியாக நறுக்கிய பின்; 3 – கோதுமை மாவு [மேலே அஜ்வைன் [ஓமம்] தூவியிருக்கிறேன்; 4 – கோதுமை மாவின் மேல் பொடியாக நறுக்கிய புதினா இலைகள்

கோதுமை மாவுடன் உப்பு கலந்து கூடவே பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புதினாவினையும் கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போதே பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது கரம் மசாலாவினைச் சேர்த்துக் கொள்ளவும். நான் மிளகாய் சேர்க்கவில்லை – கரம் மசாலா தான் என்பதால் மாவுடன் பிசையாமல் வேறு முறையில் சேர்த்தேன். ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்தும் பிசைந்து கொள்ளலாம். மாவு சாஃப்டாக இருக்கும். நன்கு பிசைந்ததும் மாவினை மூடி வைத்து விடவும்.



5 – பிசைந்து வைத்த மாவு; 6 – மூடி வைத்ததைக் கூட ஃபோட்டோ எடுக்கணுமா?; 7 – உருண்டைகளாக உருட்டிய பின்; 8 – பராட்டாவாக இட்டபின்…


9 – எண்ணெய்/நெய் தடவி மேலே கரம் மசாலா தூவியுள்ளது; 10 – நீள வாக்கில் உருட்டியது; 11 – மீண்டும் உருண்டையாக…; 12 – மீண்டும் பராட்டாவாக இட்டபின்…

பதினைந்து நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். சப்பாத்தி மாதிரி இட்டுக் கொண்ட பிறகு கொஞ்சம் எண்ணெய் தடவி மேலே கொஞ்சம் கரம் மசாலா தூவி, அப்படியே இட்ட சப்பாத்தியை நீள வாக்கில் உருட்டி, உருண்டையாக ஆக்கி, மீண்டும் சப்பாத்தியாக இட்டுக் கொள்ளலாம். தவாவில் போட்டு, எண்ணெய்/நெய் விட்டு, இரண்டு புறமும் திருப்பி நன்கு வேகும் அளவிற்கு சுட்டு எடுக்க வேண்டியது தான். எல்லா பராட்டாவும் தயாரான பிறகு, ஊறுகாய் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்! சுவையாக இருக்கும். சிம்பிளான முறை தான் என்பதால் யாரும் செய்ய முடியும்!

தலைநகர் வந்த பிறகு தென்னிந்திய சமையலை விட வட இந்திய சமையலில் தான் அதிக நாட்டம் – சாம்பார், ரசம் என்று சாப்பிடுவதை விட இந்த ஊர் உணவு தான் அதிகம் சாப்பிடத் தோன்றுகிறது. அவ்வப்போது வட இந்திய உணவு வகைகளை முடிந்தால் “எங்கள் பிளாக்” அல்லது என் தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த புதினா பராட்டா முடிந்தால் செய்து பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்! மீண்டும் வேறு ஒரு சுவையான உணவு வகையுடன் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின் குறிப்பு: இன்றைக்கு வெளியிட வேண்டிய பதிவு, தட்டச்சு செய்ய இயலவில்லை. ஏற்கனவே எங்கள் பிளாக்-ல் “திங்க”க் கிழமை பதிவாக வெளியிட்ட எனது சமையல் பதிவு இங்கே இன்றைய பதிவாக.... எங்கள் பிளாக்-ல் வெளியிட்ட நண்பர்களுக்கு நன்றி. 

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    புதினா பராட்டா பார்த்தவுடன் டக்கென்று குழம்பிவிட்டேன்....மீண்டும் உங்கள் ப்ளாக்தானா? தேதி எல்லாம் செக் செய்தேன்....

    கடைசி வரி வாசித்ததும் புரிந்துவிட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் 🙏 கீதாஜி.

      ஹாஹா..... குழப்பம் வரவைத்து விட்டேன் போலும்.

      நீக்கு
  2. நல்ல ரெசிப்பி ஜி!!

    செம நளன் நீங்க!!

    அங்கு வாசித்தோமே...கண்டிப்பா உங்க சமையலுக்காகவே திங்க கூட்டம் வந்துட வேண்டியதுதான்! ஹா ஹா ஹா ஹா ஹா...பார்க்கவே சூப்பரா இருக்கு..அதுவும் இப்ப இங்க 15 நாலும் 14 டிகிரி ஃபீல் ஸோ சாப்பிட்டா சூப்பரா இருக்கும்..

    இங்கு எங்கள் வீட்டில் பராட்டாக்கள் நிறைய செய்யறதுண்டு ஜி..நேற்று காலிஃப்ளவர் பராட்டா..(ஸ்டஃப்ட் கூட ஒரே ஒரு உருளைக்கிழங்கு)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நளன்! ஹாஹா ..... மகிழ்ச்சி.

      பராட்டா இந்தக் குளிருக்கு ஏற்ற உணவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். இன்று மீண்டும் பராட்டா சாப்பிடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. காலை எழுந்தவுடன் பரோட்டா
    அதுவும் கோதுமை பரோட்டா
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பரோட்டா செய்த விதம் படிக்கும் போதே சாப்பிட்டமாதிரி சுவையாக இருந்தது வெங்கட், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரங்கராஜன் ஜி!

      நீக்கு
  6. எனக்கு தந்தூரி ரொட்டி பிடிக்கும் ஜி
    வேலைகள் நிறைய இருப்பதால் மீண்டும் அடுத்த வருடமே என்னால் வர இயலும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தந்தூரி ரொட்டி நல்லது.

      அடுத்த வருடம்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. அருமை.பராட்டா ஆலு,கோபி பிடிக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  9. விரைவில் செஞ்சு பார்த்துட்டு ரிசல்ட் சொல்றேன். புதினா மாமாவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, இப்படி முழுசா போட்டா எடுத்து போட்டுட்டு சாப்பிடுவாரே! என்ன செய்ய?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  11. பொதுவக பராட்டாக்கள் கனகாகப் பரஹ்துவார்கள் எனக்கோ மெலிதாக வேண்டும் ஆகவே வேறு பெயரில் சாப்பிடுவதுண்டு புதினா வாசனை பிடிக்காது எனக்கு ஏதோ மூட்டைப்பூச்சியின் வாசமோல் தோன்றும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. பரோடா செய்வதே பெரிய விசயம். அதை அருமையாக பதிவு செய்வது அதைவிட பெரிய விசயம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  13. பார்க்க அழகா இருக்குது. உங்களுக்கு ஹிந்தி பேசிப்பேசி டமில் போயிந்தி:) போல இருக்கே.. அது பரா அல்ல பரோ:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரா அல்ல பரோ :)) ஹாஹா... இது வட இந்திய பரா.... பதிவினை சரியாக படிக்கல! பெஞ்சு மேலே நில்லுங்க!

      வட இந்தியாவில் செய்யப்படும் கோதுமை மாவு பராட்டா, பராட்டா, பராண்டா, பராண்டே என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. நம் ஊரில் செய்யும் பரோட்டாவும் இதுவும் வேறு வேறு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....