புதன், 13 மார்ச், 2019

பீஹார் டைரி – நாளந்தா – கருப்பு புத்தரும் வெள்ளை மஹாவீரரும்


கருப்பு புத்தர்!

நாளந்தா அழிவுச் சின்னங்களைக் காணச் சென்ற போது கூடவே அதன் எதிர்புறத்தில் இருந்த அருங்காட்சியகமும் பார்த்து வந்ததைப் பற்றி எழுதி இருந்தேன். நாளந்தா அருகில் இன்னும் பல இடங்கள் – சில பழையவை, சில புதியவை இருக்கின்றன. அப்படிப் பார்த்த இரண்டு இடங்கள் தான் இந்தப் பதிவில் சொல்லப் போகிறேன். முதலில் மஹாவீரரைப் பற்றிப் பார்க்கலாம்.




நாளந்தாவிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குண்டல்பூர் என்ற இடம் தான் மஹாவீரர் அவர்களின் பிறந்த இடம் என்று சொல்கிறார்கள். அதனால் அவர் ஜன்மபூமியில் ஒரு பெரிய வழிபாட்டுத் தலத்தினை அமைத்திருக்கிறார்கள். பார்க்கும்போதே புதிய வழிபாட்டுத் தலம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த இடத்திலேயே ஒரு பெரிய தங்குமிடமும் அமைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் வழிபாட்டுத் தலங்கள் உடன் இப்படி தங்குமிடம் அமைப்பது வரும் பக்தர்களுக்கு வசதி, கோவில் நிர்வாகமும் சம்பாதிக்க ஒரு வழி! சில படிகள் ஏறிச் சென்றால் 11 அடி உயரமான மஹாவீரர் சிலை இருக்கிறது. விட்டத்திலும் அழகான வேலைப்பாடுகள். இந்த மஹாவீரர் கோவிலுக்கு இரண்டு பக்கமும் இன்னும் இரண்டு கோவில்கள்.



பகவான் மாவீரர் நந்த்யவர்த் மஹால் எனும் அரண்மனையில் பிறந்தவர் என்பதால் இந்தக் கோவிலும் மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள் என்று தகவல் பலகை சொல்கிறது. கோவிலின் மொத்த உயரம் 101 அடி என்றும் ஆளுயர மஹாவீரர் சிலை 11 அடி என்பதும் தகவல்கள். இரண்டு பக்கத்திலும் ரிஷப்தேவ் கோவிலும், த்ரிகால் சௌபிசி கோவிலும் அமைத்திருக்கிறார்கள்.  கோவில் வளாகம் சுத்தமாக இருக்கிறது என்றாலும், கோவிலுக்குச் செல்லும் வழி அத்தனை சுகமில்லை. சிறு கிராமம் தான் இந்த இடம். புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு கதையும் சேர்த்துச் சொல்ல, நாளந்தாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களையும் வந்து பார்த்துப் போகிறார்கள். நாங்களும் பார்த்தோம். வளாகத்தில் இருந்த கோழிக்கொண்டை பூ மிகவும் ஈர்த்தது!



நாளந்தா அழிவுச் சின்னங்களுக்கான சுற்றுச் சுவரை அடுத்து ஒரு சிறு கிராமம். அங்கே இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலத்தில் இருக்கிறார் கருப்பு புத்தர்! இந்த புத்தர் சிலையும் மிகவும் பெரிய சிலை தான். அழகாகவும் இருக்கிறார். தங்க நிற உடையில் இருந்த அவரைப் பார்க்க நாங்கள் சென்ற போது நிறைய வெளிநாட்டவர்கள் அங்கே அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் குரு போன்ற ஒருவர் மந்திர உச்சாடனம் செய்ய, அதை குழுவினர் தொடர்ந்தார்கள்.  சிலர் புத்தர் சிலைக்கு எண்ணை தடவ, சிலர் வாசனையான ஊதுவத்திகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த சூழலில் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தோம்.  இங்கே படம் எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு என்பதால் புத்தரை படம் பிடித்துக் கொண்டேன். .

இந்த புத்தர் ஒன்பது அடி உயரமாம். பூமி ஸ்பர்ஷ முத்ராவில் இருக்கிறார் என்றும் தகவல். இங்கே ஒரு விஷயத்தினையும் சொல்ல வேண்டும். கிராமத்தினர் இந்த புத்தர் சிலைக்கு இன்னுமொரு பெயர் வைத்திருக்கிறார்கள்! அந்தப் பெயர் தேலியா பாபா! தேல் என்ற ஹிந்தி சொல்லிற்கு எண்ணெய் என்று அர்த்தம். இந்தச் சிலைக்கு எண்ணெய் தடவி பிரார்த்தனை செய்தால் நாள்பட்ட வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை இங்கே உள்ள மக்களுக்கு இருக்கிறது. அதனால் புத்த மதத்தினர் அவர்களது வழிபாட்டு முறைகளைச் செய்ய, இந்து மதத்தினர் தங்கள் முறைப்படி எண்ணெய் வழிபாடும் செய்கிறார்கள்.  நம்பிக்கை தானே எல்லாம்! என்ன சொல்ல! சிலை மிகவும் அழகாக இருக்கிறது என்றால் வழிபாட்டுத் தலத்தின் பராமரிப்பு இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்று தோன்றியது.

கிராமத்துப் பாதைகள் வழியே தான் இந்த இடத்திற்கு வர வேண்டியிருக்கிறது. வழிபாட்டுத் தலத்தின் வெளியே கருப்பு புத்தர் சிலைகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். கூடவே எண்ணெய் விற்பனையும் அமோகமாக நடக்கிறது. கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் எண்ணெய் வாங்கிக் கொள்கிறார்கள். கிராமத்தினர் பலருக்கு இந்த இடத்தில் எண்ணெய் விற்பதும் புத்தர் சிலை விற்பதுமே தொழிலாக இருக்கிறது! சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுவதும் நடக்கிறது! நிறைய விலை சொல்லி பிறகு குறைப்பது போல குறைக்கிறார்கள். எண்ணெய் விலை இந்தியர்களுக்கு குறைவாகவும், வெளிநாட்டவர்களுக்கு அதிகமாகவும் சொல்வதையும் பார்க்க முடிந்தது. அனைவருமே பேரம் பேசுகிறார்கள்! அங்கே விற்பனையாளர்களின் இச்செயல் எல்லோருக்கும் தெரியும் போலிருக்கிறது!

புத்தர் சிலை கண் முன்னர் நிற்கிறது இன்னமும்! என்னமோ ஒரு ஈர்ப்பு அந்தச் சிலையில். நீங்களும் பார்த்து ரசிக்க, சில புகைப்படங்கள் மட்டும் இந்தப் பகிர்வில் இணைத்திருக்கிறேன். இந்தப் பதிவில் சொன்ன விஷயங்களையும் பகிர்ந்து கொண்ட படங்களையும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. குட்மார்னிங். கருப்பு புத்தர். இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.அப்படிப் பார்த்தால் எல்லா சிலையுமே கருப்பாய்த்தானே இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      எல்லா சிலையும் கருப்புதானே.... வடக்கே சிலைகள் கருப்பாக மட்டும் இருப்பது இல்லை. வெள்ளை, மற்ற வண்ணங்களில் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. புத்தர் சிலை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி..

    கருப்பு புத்தரா?!!! புதுசா இருக்கிறதே...வெள்ளை மஹாவீர்....ஓ சிலைகளின் வண்ணமோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. புத்தர் சிலை மிக அழகாக இருக்கிறது ஜி. தேலியா பாபா!!! இப்ப்டித்தான் மக்கள் வணங்கும் கடவுளர்க்குப் பெயர்கள் வருகிறதோ!!! ஆமாம் நம்பிக்கைதான்...இப்படி நம்பிக்கைகள் வருவதால் சுற்றுப்பட்டுக் கிராம மக்களுக்கு ஒரு வருவாய்!!

    மஹாவீர் குறித்த தகவல்கள், புத்தர் சிலை குறித்த தகவல்கள் எல்லாம் ஸ்வாரஸியம்

    படங்கள் செம அதுவும் அந்தக் கோழிக்கொண்டைப் பூ பிரமாதம். ரசித்தேன் ஜி


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை தானே எல்லாம். தேலியா மந்திர் என்ற ஒரு கோவில் க்வாலியரிலும் பார்த்ததுண்டு. அது பற்றி எனது பதிவு ஒன்று இருக்கிறது - மத்தியப் பிரதேசம் அழைக்கிறது தொடரில்.

      கோழிக்கொண்டை பூ - இயற்கை எப்படியெல்லாம் நம்மை அசத்துகிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. காலை வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    பத்வும் , படங்களும் அருமை.

    //அனைவருமே பேரம் பேசுகிறார்கள்! அங்கே விற்பனையாளர்களின் இச்செயல் எல்லோருக்கும் தெரியும் போலிருக்கிறது!//

    ஆமாம், பேரம் பேச தெரிந்தவர்கள் இல்லை என்றால் ஏமாற வேண்டும், அவர்களிடம் ஏமாந்த அனுபவம் உண்டு வட நாட்டு யாத்திரைகளின் போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட நாட்டு யாத்திரைகள் போது அனுபவம் கிடைத்ததா.... பெரும்பாலான ஊர்களில் இப்படித்தான் மா... இங்கே இன்னும் கொஞ்சம் அதிகம் - அதுவும் தென்னிந்தியர்கள் என்றால் இங்கத்தியவர்கள் ரொம்பவே ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  6. மகாவீரர் மற்றும் புத்தரைப் பற்றிய செய்திகளை ரசித்தேன். அனைத்து இடங்களிலும் தற்போது வியாபார நோக்கு என்பதானது பெருகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாபாரம் தான் பலருக்கு வாழ்க்கையே.... ஏமாற்றாமல் இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. வழிபாட்டுத் தலத்தின் சிறப்பை அறிந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. கருப்பு புத்தர் சுவாரஸ்யமான விடயங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. வழிபாட்டு தலங்கள் வியாபார தலமாகி ரொம்ப நாளாச்சுது. அதில் புத்தரை மட்டும் விட்டுவோமா என்ன?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிபாட்டு தலங்கள் வியாபார தலமாகி - இதற்கு மக்களும் ஒரு விதத்தில் காரணம் - நாம் கேட்பதால் தானே அவர்களும் தொடர்கிறார்கள்.... வரவேற்பு இல்லாமல் போனால் விற்பனை இருக்காதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  10. இந்த மஹாவீரர் கோயில் பத்தி ஏற்கெனவே படிச்ச நினைவு. நீங்கள் எழுதியா அல்லது வேறே எங்கேயானுமா தெரியலை! கறுப்பு புத்தர் இன்று தான் கேள்விப் படுகிறேன். படங்கள் எப்போதும் போல் அருமை.தகவல்கள் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாவீரர் பற்றி வேறொரு பதிவு எழுதி இருக்கிறேன் - அது பாவாபுரி! இந்தப் பதிவில் வந்தது புத்தகயா அருகே இருக்கும் கோவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. தக தகவென்று தங்கநிற ஆடையில் கருப்பு புத்தர் அழகு. அந்த வெள்ளை நிற உண்டியல் தான் கண்ணை உறுத்துது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான புத்தர் - கண்ணை உறுத்தும் உண்டியல்! உண்மை தான் அண்ணாச்சி. பொருத்தமே இல்லாமல் அங்கே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கருப்பு புத்தர் பற்றிய படமும், செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும், இடத்திலும், அவரவர்களுடைய செயல்கள் புதுமையாகத்தான் இருக்கிறது. நாம் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றுவது, எள் முடிந்து எண்ணெய்யுடன் சனி பகவானுக்கு வழிபாடு செய்வதைப் போன்று புத்தரின் சிலைக்கு எண்ணெய் தடவி வழிபாடு, இதன் பலனாக நம்பிக்கைகள் என்று இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. மகாவீரரின் கோவில்கள் பற்றிய விபரங்களும் அருமையாக இருக்கிறது.

    கோழிக் கொண்டைப்பூ அழகாக இருக்கிறது. சுவையான தகவல்களுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பழக்கம். பல இடங்களுக்குச் செல்லும்போது புதியதாக தெரிந்து கொள்ள முடிகிறது.

      கோழிக்கொண்டை பூ - எனக்கும் பிடித்த படம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  13. கறுப்பு புத்தர் சிலை, மகாவீர் பற்றிய தகவல்கள் எல்லாமே அருமை வெங்கட்ஜி. படங்களும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....