வெள்ளி, 22 மார்ச், 2019

பீஹார் டைரி – புத்த கயா – மஹா போதி ஆலயம்



புத்தகயா என்று தமிழில் நாம் சொன்னாலும்/எழுதினாலும் இந்த இடத்தினை Bபோத்dh Gகயா என்று தான் அழைக்க வேண்டும். இந்த Bபோத்dh Gகயாவில் தான் புத்தர் போதி மரத்தின் கீழே அமர்ந்து ஞானத்தினை அடைந்தார் என்பது வரலாறு. முழுமையாக வரலாறு பற்றி இங்கே சொல்லப் போவதில்லை. தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள சுட்டியில் தகவல்களை படித்து அறிந்து கொள்ளலாம்.





இந்த Bபோத்dh Gகயாவில் அமைந்திருக்கும் மஹா போதி கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைந்தது என்றாலும் பல வருடங்கள் அழிவுகளுக்கு உள்ளானது. தற்போது இருக்கும் வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அகழ்வாராய்ச்சி செய்த பிறகு இருக்கும் வடிவம். இந்த இடம் பற்றி சீனப் பயணி ஹூவான் சுவாங்க் அவர்கள் எழுதிய வரலாற்றிலிருந்து தான் பலவற்றையும் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இந்த இடம் இப்போது யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை அழகான இடம் என்பதை அங்கே சென்று தான் பார்க்க வேண்டும். பார்க்க முடியாதவர்களுக்காக நான் எடுத்த படங்கள் கொஞ்சம் உதவியாக இருந்தாலும், அந்த இடம் தரும் உணர்வு பெற அங்கே சென்று தான் ஆக வேண்டும்!





பற்பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த மக்கள் தொடர்ந்து அங்கே வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மஹா போதி ஆலயத்திற்குள் எந்தவித மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை. நிழற்படக் கருவிக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுமதி வாங்கிக் கொள்ளலாம். நாங்கள் எங்களிடம் இருந்த அனைத்து மின்னணு சாதனங்களையும் அதற்கான இடத்தில் வைத்து விட்டு, நிழற்படக் கருவிக்கான கட்டணத்தினை செலுத்தி நுழைவாயில் நோக்கி நகர்ந்தோம். அதற்கு முன்னர் நாங்கள் செய்த வேலை ஒரு வழிகாட்டியை அமர்த்திக் கொண்டது. முன்னூறு ரூபாய் மட்டும் கொடுத்தால் மஹாபோதி ஆலயம் முழுவதும் சுற்றிக் காட்டி, ஆங்காங்கே விளக்கங்களும் சொல்கிறேன் என்று சொன்னவரை உடன் அழைத்துக் கொண்டோம்.





வழியெங்கும் பல நாட்டு மக்கள் – இந்தியர்களை விட வெளிநாட்டவர்களே இங்கே அதிகம் என்று சொல்லும் அளவிற்கு வெளிநாட்டவர்களின் நடமாட்டம் – குறிப்பாக ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். ஜப்பான், சீனா, தாய்லாந்து, கொரியா என ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் புத்தமதத்தினர் இங்கே புனித யாத்திரையாக வருகிறார்கள். எப்போதுமே இவர்களது வருகை இங்கே அதிகம் என்பதால் வெளிநாட்டவர்களுக்கான தங்குமிடங்கள் இங்கே அதிகம் இருக்கிறது. Bபோத்dh Gகயாவில் இருக்கும் பலரும் பல மொழிகளை கற்று வைத்துக் கொண்டு வெளிநாட்டவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து சம்பாதிக்கிறார்கள். எங்களுக்கு அமைந்த வழிகாட்டியும் சிங்கள மொழி தெரிந்து வைத்திருக்கிறார் – வழியில் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார்.





இந்த வளாகத்திலேயே போதி மரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்வதற்கு முன்னர் சில இடங்களில் அமர்ந்து தியானம் செய்தாராம் புத்தர் பெருமான். ஒவ்வொரு இடத்திலும் நின்று நிதானித்து அந்த இடத்தினைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார் வழிகாட்டி. மஹாபோதி ஆலயத்தினைச் சுற்றி வந்து ஒவ்வொரு இடமாகப் பார்த்து, போதி மரத்தின் அடியில் சில நிமிடங்கள் நின்று பிரார்த்தித்த பிறகு ஆலயத்தின் உள்ளே சென்று புத்தர் பெருமானை வணங்கினோம். மனதுக்கு கிடைத்த அமைதி மதிப்பிட முடியாதது. அமைதியான அந்த மஹாபோதி ஆலயத்தின் அருகே சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தித்தோம். பக்தர்கள் வருவதும் போவதுமாக இருந்து கொண்டே இருந்தார்கள் என்றாலும் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருந்தது சிறப்பு.  எங்கெங்கு பார்த்தாலும் பூக்கள் அலங்கரிப்பும், ”புத்தம் சரணம் கச்சாமி” பிரார்த்தனைகளும். மனதுக்கு மகிழ்ச்சி தந்த அனுபவம் அந்த மஹாபோதி ஆலய வளாகத்தில்.




புத்த மதத்தினைச் சார்ந்தவர்கள் இங்கே நமஸ்கரிக்கும் விதம் சிறப்பானது. ஆலய வளாகத்தில் நிறைய இடங்களில் ஆறடிக்கும் மேலான பலகைகள் போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிக்கிறார்கள். அதற்கும் ஒரு வழிமுறை வைத்து இருக்கிறார்கள். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் வைத்து நமஸ்கரிக்கும்போது கைகளை முன்னே கொண்டு வந்து நமஸ்கரிக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு புத்தபிக்குவும் தனது வாழ்நாளில் ஒரு கோடி முறையாவது இப்படி நமஸ்கரிக்க வேண்டும் என்று வழக்கம் வைத்துக் கொள்வார்களாம் – தொடர்ந்து அவர்கள் நமஸ்கரிக்கும் விதம் பார்த்தபோது நாம் பத்து பதினைந்து முறை கூட தொடர்ந்து அப்படி நமஸ்கரிக்க இயலாது என்று தோன்றியது. ஒரு சிறு காணொளி கீழே.




இங்கே நிறைய விஷயங்கள் பார்க்க உண்டு. வாழ்க்கையில் ஒரு முறையேனும் Bபோத்dh Gகயா சென்று வாருங்கள். பீஹார் செல்ல வேண்டும் என்று சொல்லும்போதே அந்த மாநிலத்தின் மற்ற பிரச்சனைகள் நினைவுக்கு வந்தாலும் இந்த Bபோத்dh Gகயா சென்று வருவதற்காகவாது, அந்தப் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிடுவது நல்லது. மிகவும் சிறப்பான அனுபவங்களை அங்கே நீங்கள் பெற முடியும். புத்த மதத்தினைச் சார்ந்தவர்கள் அங்கே சென்று சில நாட்கள் தங்கி இருந்து வழிபாடு செலுத்திச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அங்கே தங்கவில்லை என்றாலும் ஒரு முறையேனும் அங்கே சென்று வரலாம். இந்தப் பதிவின் மூலம் நான் பார்த்த மிகக் குறைவான விஷயங்களையே இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

எடுத்த சில படங்கள் மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நிறைய படங்கள் உண்டு என்பதால் அவற்றை என்னுடைய கூகிள் ஃபோட்டோஸ் பக்கத்தில் சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்க விருப்பம் இருப்பவர்கள் கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்.


என்ன நண்பர்களே, இந்தப் பதிவில் சொன்ன விஷயங்களையும், நிழற்படங்களையும் ரசித்தீர்களா? பதிவு/படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

44 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட்ஜி! அழகான இடம் என்பது படங்களில் தெரிகிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அங்கு சென்று பார்த்தால்தான் அந்த உணர்வைப் பெற முடியும் என்பதும் தெரிகிறது. அழகான கலை நுணுக்க வடிவங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாஜி.

      அங்கே கிடைக்கும் அதிர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. நேரடியாக செல்வது உத்தமம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    கயா, புத்தகயா இரண்டும் எங்கள் பயணத்திட்டத்தில் இருப்பதாக அறிந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      இரண்டு இடங்களும் உங்கள் திட்டத்தின் பகுதி என அறிந்து மகிழ்ச்சி. தலைநகர் வழி பயணமா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மொபைல் சரி, அதைத்தவிர என்ன மின்னணு சாதனங்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்ஜர்கள், பவர் பேங்க், பென் ட்ரைவ், ரிமோட் கீ.... இன்னபிற!

      இதைத் தவிர பெரிய பைகள், கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவையும் தடை செய்யப்பட்ட பொருட்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வழிகாட்டிக்கு முன்னூறு ரூபாயா? மனதில் இருத்திக் கொள்கிறேன். அய்யங்கார் நமஸ்காரம் இபப்டித்தான் நான்கு முறை செய்வார்கள். ஆனால் கோடி முறையா? தவணை முறையில் என்றாலும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழுவிற்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்வார் வழிகாட்டி.

      அய்யங்கார் நமஸ்காரத்தினை விட இது அதிக கஷ்டமானதாகத் தெரிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மிக அழகிய இடம். பார்க்கும் ஆவல் வருகிறது. அவ்வளவுக்கூட்டம் இருந்தாலும் அங்கு அமைதி கிடைக்கிறது எனும் தகவல் வணங்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இடம். பார்த்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. இந்தப்பதிவு எனக்கும் கயா செல்லும் ஆசையை தூண்டி விட்டது ஜி.

    தற்சமயம் அமைதியை தேடி அலைகிறது மனது.

    காணொளி கண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தற்சமயம் அமைதியை தேடி அலைகிறது மனது.//

      என்னாச்சு கில்லர்ஜி?

      நீக்கு
    2. முடிந்த போது சென்று வாருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் உங்களுக்கு விரைவில் மன அமைதி கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஒவ்வொரு புத்தபிக்குவும் தனது வாழ்நாளில் ஒரு கோடி முறையாவது இப்படி நமஸ்கரிக்க வேண்டும் என்று வழக்கம் வைத்துக் கொள்வார்களாம்//

    ஹப்பா என்ன ஒரு நல்ல வழக்கம் இல்லையா....கிட்டத்தட்ட நாம் செய்வது போலத்தான் இருக்கிறதோ. எங்கள் வீட்டில் ஆண் பசங்க நமஸ்கரிக்கும் போது இப்படித்தான் விழுவாங்க. குறிப்பா என் பையன் டபால் டபால் நு எல்லாரும் திட்டுவாங்க என்னடா இது முட்டி போட்டு இப்படிப் பண்ணுறனு...இனி அவங்கிட்ட சொல்லனும் யாராவது சொன்னா...இதைக் காட்டி சொல்லுனு!!!!ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா.. நீங்கள் சொல்வதையும், அவர் நமஸ்காரம் செய்வதையும் பார்க்கும்போது எனக்கு மைக்கேல் மதனகாமராஜன் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது! "விஸ்வாசம்னா என்னன்னு தெரியுமா உனக்கு... பீம்... இந்த மாடிலேருந்து கீழ குதி" என்பார் கமல். பீம் மாடிலேருந்து கீழே தொப்பென குதித்து விட்டு கீழே "ஹையா... ஜாலி.... ஜாலி... இனொரு வாட்டி குதிக்கட்டுமா பாஸ்?" என்பார் ஏதோ குளிக்கச் சொல்லானது போல! கொஞ்ச நேரம் கழித்து கமல் நாகேஷிடம் "அவிநாசி... உங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கிறேன்..." என்று ஆரம்பிப்பார்..."இப்படிக்கு குதிப்பதற்கா? எவ்வளவு டைம் கொடுத்தாலும் என்னால் குதிக்க முடியாது" என்று டைம்லி பன்ச் விடுவார் நாகேஷ்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா...அந்த சீன் நினைவுக்கு வந்துச்சு...

      என் பையன் இப்படி விழுறத பார்க்கணும் ஏதோ தரைல நீஞ்சுவது போல கைய தேச்சுக்கிட்டு விழுவான்....நல்ல காலம் வீட்டுத் தரை ஸ்மூதா இருக்கும் இல்லைனா கைல சிராய்க்கும்...ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    3. எத்தனை எத்தனை பழக்கங்கள் இல்லையா... அங்கே இப்படி நிறைய பேர் நமஸ்கரிப்பதை பார்க்க முடிந்தது. முடிந்த போதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். வேறொரு புத்தர் ஆலயத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி நாங்கள் அங்கே இருந்தபோது இருபது முறைக்கும் மேல் வேர்க்க விறுவிறுக்க நமஸ்கரித்துக் கொண்டிருந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    4. இன்னொரு தடவை குதிக்கட்டுமா பாஸ்! இந்த வசனம் நான் அடிக்கடி சொல்வதுண்டு! :) விஸ்வாசம் என்றால் எது என்பதைச் சொல்லும் நல்ல காட்சி அது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. ஹாஹா... உங்கள் மகனும் இப்படி நம்ஸ்கரிப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. எத்தனை கூட்டம் இருந்தாலும் அமைதி என்பது வாவ் போட வைத்தது. கண்டிப்பாகப் பார்க்கணும் என்ற ஆவலும் வந்துவிட்டது.

    அந்தப் புத்தர் படம் ரொம்ப அழகு என்றால் அதன் கீழ் வரும் இரு கோபுரப் படங்களும் அட்டகாசம்!!! செமையா வந்திருக்கு...ரொம்ப அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருபவர்கள் அமைதியாக இருந்தால் நல்லது. நம் ஊர் கோவில்களில் இந்த அமைதி - குறிப்பாக பிரபலமான கோவில்களில் அமைதியைத் தேட வேண்டியிருக்கிறது! :)

      புத்தர் படம் - எனக்கும் பிடித்த படம் - நிறைய ப்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது - குறுக்கும் நெடுக்குமாக மனிதர்கள் - வெளியே இருந்து Zoom செய்து தான் எடுத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. மிகவும் அருமையான பதிவு. மறக்கமுடியாத அனுபவம்.புத்தர் தியானம் செய்த இடத்தில் நின்றபோது அப்படியே புல்லரித்து விட்டது. படங்களும் உங்கள் சொற்களும் மீண்டும் எங்களை புத்தகயாவிற்க்கு அழைத்து சென்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாத அனுபவம். இந்தப் பயணத்தில் நீங்களும் எங்களுடன் இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    புத்தகயா மஹா போதி ஆலய படங்களை பார்த்ததும் மனதுக்கு அமைதி கிடைக்கிறது. இன்னமும் நேரில் சென்று தரிசித்தால் தாங்கள் சொல்வது போல் அமைதி அலைகள் நம்மைச் சுற்றி சந்தோஷமளிப்பது உண்மை.

    படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அழகாக உள்ளது. முதலிரண்டு படங்களும் கண்ணை கவர்கின்றன. புத்தரின் அமைதி படங்கள் மனக் கவலைகளை போக்குகின்றன. தாமரை மலர் படம் மிக அழகு. கோவிலைப்பற்றிய தகவல்களுக்கு நன்றி. காணொளி கண்டேன். இந்த மாதிரி நமஸ்காரங்கள் செய்யவே இயலாது. அதுவும் கோடிதரம்.! அமைதியின் பிம்பமாக விளங்கும்,புத்தரின் அருள் இருந்தால்தான் இது சாத்தியமாகும். தங்கள் பதிவினால் புத்தகயாவுக்கு சென்ற திருப்தி கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதியான சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படி ஒரு இடத்தில் கொஞ்சம் நேரம் இருப்பது மனதுக்கு இதமானது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வர வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. Need not worry about the poor memory i am carrying. Your beautiful writing helps to remember the whole thing.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணத்தில் நீங்கள் இருவரும் எங்களுடன் இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  14. பதிவை இரசித்தேன்! நிழற்படங்களையும் இரசித்தேன்! Bபோத்dh Gகயா போகமுடியாதவர்களுக்கு அங்கே போனதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். நன்றி! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. கோபுரமும் வேலைப்பாடுகளும் அழகு, அவர்களின் கோபுரம் சதுர வடிவில் இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய கோவில்களில் பெரும்பாலான கோபுரங்கள் வித்தியாசமானவை. சில வட்ட வடிவ கோபுரங்களும் இங்கே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  16. என்னதான் படித்து அறிந்தாலும் நேரில் சென்று காண்பது போல் வருமா நண்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நேரடியாகக் கிடைக்கும் அனுபவம் சிறந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. அதில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிக்கிறார்கள்.

    திபெத்தியர்கள் இப்படி வழி எங்கும் இப்படி கீழே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டே தான் கைலாயத்தை வல்ம வந்தார்கள்.

    கோவர்ந்தனகிரியில் இது போல் கீழே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டே கிரி வலம் வருவார்கள். காணொளி கண்டேன்.

    ஸ்ரீ லங்காவில் புத்தர் கோவிலிகளில் இது போன்ற மலர்கள் விற்பார்கள் வாங்கி புத்தருக்கு சமர்ப்பணம் செய்வார்கள். அதனை தேனி மலர்களை மொய்க்கும். அல்லி, தாமரை நீலோத்பலம் முக்கிய இடம் பெறும்.

    பதிவு மிக அருமை. அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரி வலம் நமஸ்காரம் ஒவ்வொரு இடத்திலும் 108 நமஸ்காரம் செய்து கிரிவலம் வருபவர்களை கோவர்த்தன் பகுதியில் பார்த்ததுண்டு. பல மாதங்கள் ஆகும் அந்த கிரிவலம் செய்து முடிக்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  18. மிக மிக அருமையான இடம். அமைதி தவழும் இடம் என்று தெரிகிறது. வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை செல்வதற்கு.

    படங்கள் அத்தனையும் மிக அருமை வெங்கட்ஜி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  19. இந்த மாதிரி நமஸ்கரித்த வண்ணமே கயிலை மலையில் பரிக்ரமா செய்வார்கள். நமக்கெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....