திங்கள், 25 மார்ச், 2019

நெய்வேலி நகருக்கு ஒரு பயணம் - நினைவுகளைத் தேடி - ஒன்று


சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது, நான் படித்து வளர்ந்த நகரமான நெய்வேலி நகருக்கும் சென்று வந்தேன். கடைசியாக அங்கே சென்று ஐந்து வருடங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் தான் பிறந்து வளர்ந்த இடம் ரொம்பவே பிடித்த இடம் தானே. ஒவ்வொரு முறை தமிழகம் செல்லும் போதும், பல இடங்களுக்குப் போக வேண்டும் என நினைத்துக் கொண்டு போவேன். ஆனாலும், கிடைக்கும் கொஞ்சம் நாளில் அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவழிப்பதில் தான் நாட்டம் இருக்கிறது. மூன்று பேருமாக பயணம் செய்வதில் சில அடிப்படை சிக்கல்கள் – மகளுக்கு விடுமுறை இருக்காது, வாரத்தின் ஒரு நாள் மட்டுமே விடுமுறை இருக்க, அதில் எங்கெங்கே செல்ல முடியும்? அதைத் தவிர செய்ய வேண்டிய வேலைகளும் நிறையவே இருக்கும்.  இம்முறையும் அப்படியே. ஆனாலும், ஒரு நாள் நெய்வேலிக்கு பயணம் செய்து விட்டேன்.



இல்லத்தரசியும், மகளும் வர இயலாமல் போக, நான் மட்டும் என்பதால் காலை முதல் பேருந்தில் சென்று அன்றைய இரவே திருச்சி திரும்ப முடிவு செய்தேன். அதிகாலை வீட்டிலிருந்து டவுன் பஸ்ஸில் சத்திரம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து நெய்வேலிக்கு ஒரு பேருந்து பயணம். திருச்சியிலிருந்து நெய்வேலி நகரம் செல்ல ஒரு பாசஞ்சர் இரயில் இருக்கிறது என்றாலும் அது செல்லும் நேரம் எனக்கு ஒத்து வராது. தனியாகச் செல்வதென்றால் சாலை வழி பயணத்தினையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது வழக்கம். பேருந்தில் கிடைத்த அனுபவங்கள் தனிப் பதிவுகளாக பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இப்போது நினைவுகளைத் தேடிய பயணம் பற்றி பார்க்கலாம். நெய்வேலி நகருக்குச் சென்றதும் நண்பரிடமிருந்து இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு நான் சிறு வயதில் சுற்றி வந்த இடங்களுக்கு ஒவ்வொன்றாக சென்று வந்தேன்.

எங்கள் வீடு....



நாங்கள் இருந்த வீடு அடையாளம் தெரியாத அளவு மாறி இருக்கிறது. வாயிலில் இருந்த காலி இடத்தில் தற்போது இருப்பவர் பெரிய அறை கட்டி இருக்கிறார். இருந்த மரங்களில் பல இல்லை. வாயிலில் இருந்த புளிய மரம் இன்னும் இருக்கிறது. வீட்டுக்குள், அதை ஒட்டிய தோட்டத்திற்குள் என்னால் செல்ல முடியவில்லை. வெளியிலிருந்து/தூரத்திலிருந்து படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். பக்கத்து வீட்டில் இருந்த புளிய மரத்தினையும் மற்ற மரங்களையும் முழுவதாக வெட்டி பூஞ்செடிகளை வைத்திருக்கிறார் தற்போது இருப்பவர்! எங்கள் தெருவிலும், பக்கத்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வாசலிலும் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டேன்.

உயர்நிலைப் பள்ளி:



ஒன்பதாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்குச் சென்றால் அங்கே என்னுடைய பழைய ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தே சென்றேன். எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவரையாவது சந்திக்க முடியும் என நினைத்து அங்கே சென்றேன். ஆனால், தற்போதைய தலைமை ஆசிரியரை சந்தித்த போது, தான் கொஞ்சம் அலுவலக வேலையில் மும்மரமாக இருப்பதால் உதவி செய்ய இயலாது என்று சொல்லி, வேறு ஒருவரிடம் பேசச் சொல்லி சென்றுவிட்டார். வெளியே சில மாணவர்கள் அமர்ந்திருக்க பள்ளியின் முகப்பினை மட்டும் படம் எடுத்துக் கொண்டு வரவே முடிந்தது. என்னுடைய வகுப்பறைக்குச் சென்று பார்க்க முடியவில்லை. நான் படித்த அதே வருடம் வேறு வகுப்பில் படித்த ஒருவர் தனது பெயரைச் சொல்லி தெரியவில்லையா எனக் கேட்டார் – கூடவே என்னை அவருக்குத் தெரியவில்லை என்ற உண்மையையும் சொன்னார்! 30 வருடங்கள் ஆகிவிட்டதே!

ஆலமர ஸ்டாப்பிங்:



நெய்வேலியில் இருந்த வரை இந்த ஆலமர ஸ்டாப்பிங் அடிக்கடிச் சென்ற இடம்.  பண்ரூட்டி வழியே எந்த உறவினர் வந்தாலும், இங்கே தான் இறங்கி நடந்து வருவார்கள். திரும்ப ஊருக்குப் போவதும் இந்த இடத்தில்  தான். எப்படியும் ஊருக்குப் போகும்போது, நெய்வேலியிலிருந்து பலாப்பழம், எலுமிச்சை, மாங்காய் என பலதும் அவர்களுக்குக் கொடுத்து அனுப்புவார் அம்மா. அதனைத் தூக்கிக் கொண்டு நடப்பது கடினம் என்பதால், சைக்கிளில் கொண்டு விடுவது இந்த ஆலமர ஸ்டாப்பிங்கில் தான். இந்த இடத்திற்கு இப்பயணத்தில் சென்று சில நிமிடங்கள் அங்கே நின்று இன்னமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் அந்த பெரிய ஆலமரத்தினைப் பார்த்தேன். ஒரு படமும் எடுத்துக் கொண்டேன். நம் சிறு வயதில் சுற்றிய இடங்களுக்கு இத்தனை வருடம் கழித்துச் செல்வது ஒரு சுகானுபவம் தானே!

நடராஜர் கோவில்....



ஆலமர ஸ்டாப்பிங்கில் இருந்து அடுத்ததாக நான் சென்ற இடம் நடராஜர் கோவில். மிகவும் அழகான கோவில் அது. நாங்கள் நெய்வேலியில் இருக்கும் போதே இந்தக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கோவிலுக்கு வருகிறேன். நான் சென்ற அன்று ஏதோ விசேஷம் என்பதால் விஸ்தாரமாக பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. நின்று நிதானித்து தரிசனம் செய்து பிரகாரத்தினைச் சுற்றி வந்தேன். இக்கோவிலில் ஒரு விசேஷ வசதி உண்டு. இங்கே வாயிலில் ஒரு பெரிய ஆராய்ச்சி மணி கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். கீழே ஒரு பெட்டி இருக்கும். ஆண்டவனிடம் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயம் ஏதேனும் இருப்பில், அதை ஒரு கடிதமாக எழுதி, மணியை ஒலித்து, கடிதத்தை கீழே உள்ள பெட்டியில் போட்டு விட வேண்டும்.  ஒவ்வொரு நாளும் காலை கோவில் திறக்கும்போது பெட்டியில் உள்ள கடிதங்கள் எடுக்கப்பட்டு நடராஜப் பெருமான் முன்னர் அந்தக் கடிதங்கள் படிக்கப்படும். இந்த வழக்கம் இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.  



நடராஜர் கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு அப்படியே வண்டியை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம், நாங்கள் பல சினிமாக்கள் பார்த்த அமராவதி திரையரங்கம் [தற்போது அந்த திரையரங்கம் ஒரு திருமண மண்டபம் – பக்கத்தில் நிறைய கடைகள் கொண்ட வளாகம் என மாறிவிட்டது], என அந்த இடங்களைப் பார்த்தபடியே வாகனத்தில் பயணம் செய்தேன். அங்கிருந்து அடுத்த சென்ற இடம்....

நினைவுகள் நீண்டு விட்ட படியால், அடுத்த பதிவில் தொடர்கிறேன். அதுவரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

48 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    என்ன அருமையான நினைவுகள் அதுவும் நம் ஊருக்குச் சென்று வரும் போது!

    குடும்பத்தோடு பயணம் என்றால் பல சமயங்களில் பல தடங்கல்கள் வரும். அதுவும் பள்ளி செல்லும் குழந்தை இருந்தால் அப்படித்தான். நம் குடும்பப் பணிகளும் இருந்தால் செல்வது அரிதாகிவிடுகிறதுதான்

    நானும் என் ஊருக்குச் சென்று பல வருடங்கள் ஆயிற்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      ஊருக்குச் செல்வதற்கு பல விஷயங்களை யோசிக்க வேண்டியிருப்பது உண்மை.

      உங்கள் ஊருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

      பல நினைவுகளை மீட்டெடுக்க உதவும் அப்பயணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. நடராஜர் கோயில் புதியதாக அழகாக இருக்கிறதே நன்றாகப் பராமரிக்கிறார்கள் போலும்..

    ஆராய்ச்சி மணி, கடவுளுக்குக் கடிதங்கள் அட! வித்தியாசமாக இருக்கிறதே..

    நானும் நெய்வேலிக்குச் சென்றிருக்கிறேன். பாண்டிச்சேரியில் இருந்த போது. இந்தக் காலனி ரொம்ப அழகாக இருந்தது. பல மரங்கள் சாலையிலும். ஒவ்வொரு குடியிருப்பின் பின்னும் பலா கண்டிப்பாக இருந்தது. மாமரமும். வீட்டின் பின் நிழலாகத்தான் இருந்தது. காலனி மிக நன்றாகச் சுத்தமாகவும் இருந்தது.

    உங்கள் படங்கள் அழகாக இருக்கின்றன ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடராஜர் கோவில் அழகானது. மிகவும் சிறப்பாக பராமரிக்கவும் செய்கிறார்கள். ஆராய்ச்சி மணி புதிய விஷயம் தான். அப்பா கூட ஏதோ கடிதம் எழுதியதாக நினைவு. ஒரு வேளை இந்தப் பயலுக்கு (எனக்குதான்) நல்ல புத்தியைத் தரச் சொல்லி கேட்டிருக்கலாம்.

      நெய்வேலி ஒரு திட்டமிட்ட நகரம் என்பதால் அழகாக இருக்கும். சுத்தமாக இருக்கும் ஊர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங். நெய்வேலி என்றாலே லிக்நைட்தான் நினைவுக்கு வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நெய்வேலி வரக்காரணமே லிக்னைட் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நினைவுகளில் எல்லா இடங்களிலும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது சரி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாயிலில் எடுத்துக் கொண்டதற்கு ஏதாவது சிறப்புக்காரணம் உண்டா? நாராயணா....நாராயணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாராயண நாராயண..... :)

      விளக்கம் கேட்டு இருப்பதால் மீண்டும் சொல்கிறேன்... எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது கட்டிடம் இந்தப் பள்ளி. என் சகோதரிகள் படித்த பள்ளி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படித்த பள்ளிக்குச் சென்று நினைவுகளை மீட்டிக்கொண்டது நெகிழ்வு.

    நானும் அப்படி தஞ்சை சென்றபோது நான் படித்த பள்ளி சென்று வந்தேன். எந்த ஆசிரியர் பெயர் சொன்னாலும் அவர் இல்லை என்ற தகவல் வருத்தம் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு கல்வி கற்பித்த பல ஆசிரியர்கள் இல்லை என்பது வருத்தமான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. உங்கள் திருமதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மகிழ்ச்சி... உங்கள் வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. கோவில் உண்டியலில் கடிதம் இடுவது புதிய தகவல் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்டியல் வேறு. கடிதம் சேர்க்க ஒரு தனிப்பெட்டி இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. நெய்வேலியை ஒரு சுற்று சுற்றி வந்தது போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. நம்ம சொந்த வீட்டைவிட இப்படி வாழ்ந்து வெளிவந்த வீட்டை பார்க்கும்போது நம் நினைவுகளை மீட்டெடுக்கும் சுகமிருக்கே! அதை நான் பலமுறை அனுபவிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  10. இனிமையான நினைவுகள்...

    ஒரே ஒரு சந்தோசம்... அந்த ஆலமரம் அங்கு இன்னும் இருப்பதே...

    துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. என் மச்சினன் நெய்வேலியிலிருந்தபோது சென்றிருக்கிறேன் சுமார் ஒரு வாரகாலம் நடராஜர் கோவில்பார்க்க வில்லை அங்கிருக்கும் கோவிலிலொருநடராஜர் சிலை மிகப்பெரியதுஎறு கேள்வி பட்டு இருக்கிறேன் கூனூரில் நான் படித்தபள்ளிக்குச்சென்று அதன் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டு இருந்தேன் பேச்சு வாக்கில் நான் எந்த வருடம் பள்ளி இறுதி படித்தேன் என்று கேட்டார் 1954 என்றேன் அவ்வருடம் அவர் பிறந்தே இருக்க வில்லை என்றார் ......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. நானும் நெய்வேலியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு வந்து இருக்கிறேன்.
    நடராஜர் கோவில், ஐயனார் கோவில், முருகன் கோவில் எல்லாம் போய் இருக்கிறேன்.
    நடராஜர் கோவிலில் அங்கு செய்வது போல் மதுரையில் பைரவர் பூஜை சமயம் இது போல் செய்வார்கள். தூத்துக்குடியில் சகாயமாதா கோவிலில் நம் கோரிக்கை எழுதி உண்டியல் பெட்டியில் போட வேண்டும் அதை மாதா முன் படிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. இனிமையான நினைவுகள். ஆலமரம் வெட்டபடாமல் இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. ஆஹா! பழைய நினைவுகள் என்றும் மகிழ்ச்சி தருபவையே. எனக்கும் கொஞ்சம், அதாவது ஒருமாத கால நெய்வேலி நினைவுகள் உண்டு. அங்கு சந்தையில் வாழைத் தார்கள் போன்றவை கொஞ்சம் வித்தியாசமாக ஏலம் விடுவதை பார்த்திருக்கிறேன். அமராவதியில் ராஜபார்வை திரைப்படம் பார்த்த நினைவும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  15. பழைய இடத்துக்கு நாம் போகும்போது உணர்வுபூர்வமாக நாம் உணர்ந்தாலும், அந்த இடங்கள் அந்நியப்பட்டிருப்பதுபோல தெரிவதைக் கண்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தினால் நாம் அந்நியப்பட்டது உண்மை தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. உங்கள் நினைவலைகள் ஸ்வாரஸியம். நம் ஊருக்குச் செல்வதென்றால் அது ஒரு மகிழ்ச்சிதான்.
    நான் பிறந்து வளர்ந்த ராசிங்கபுரம் கிராமம் (தேனீ அருகில்) இப்போது அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறது. என்றாலும் நினைவுகள் நினைவுகள்தானே!.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  17. Wonderful experience to see the home town and the important landmarks. The picture of your home beautiful. Helped to get to know Neyveli. Now you carried new memories too.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  18. நெய்வேலி நினைவுகள் எல்லாம் அருமை. நடராஜர் கோயில் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். இங்கிருந்த தீக்ஷிதர் நெருங்கிய நண்பர். ஆனால் இப்போது சிதம்பரம் போய்விட்டார். தொடர்பில் இல்லை. இந்த ஆலமரத்தடி எனக்கும்கொஞ்சம் அரை குறை நினவில் உள்ளது. நாங்கள் ஆனால் ஒரே முறை தான் நெய்வேலி வந்தோம். நீங்க பிறந்திருப்பீங்க! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  19. இது அரசுக்குடியிருப்புத் தானே! அங்கே குடியிருப்பவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப மாறுதல் செய்துக்கலாமா? நாங்க இருந்த ராணுவக் குடியிருப்புக்களில் பெரிய அளவில் மாறுதல் செய்துக்க முடியாது! ஆனால் வசதிகள் இல்லைனால் பண்ணிக்கலாம். உதாரணமாகச் சமையல் மேடை, சாமான்கள் வைக்கும் ஷெல்ஃப் இப்படி! கழிவறை வெஸ்டர்ன் வேண்டுமெனில் மாத்திக்கலாம். ஆனால் எல்லாத்துக்கும் முன் அனுமதி வாங்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசுக் குடியிருப்பு தான். மாற்றங்கள் செய்ய அனுமதி இல்லை. அப்படியே மாற்றங்கள் செய்தாலும், விட்டுச் சொல்லும் போது வாங்கிய நிலையிலேயே தர வேண்டியது கடமை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  20. எங்கள் சம்பந்தியும் நெய்வேலிதான். இரண்டு வருடங்களுக்கு முன் எங்களைஅவர்கள் குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுது, எங்களையும் அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது நெய்வேலிக்கும் ஒரு விசிட் அடித்தோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான இடங்களுக்கு நாங்களும் சென்றோம். என் மாப்பிள்ளை, அவருடைய சகோதரர், இருவரும் அவர்களின் முன்னாள் வீடு, படித்த பள்ளி(St.Pauls & Jawahar) இவைகளுக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  21. நாங்களும் அந்த நடராஜர் கோவிலுக்குச் சென்றிருந்தோம். மிகப்பெரிய நடராஜர், என்றாலும் என் மனதை ஏனோ கவரவில்லை. அந்த ஆராய்ச்சி மணி விஷயம் இப்போதும் நடைமுறையில்தான் இருக்கிறதாம்.

    நான் புகைப்படங்களும், குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். ஆனால் ஏனோ பதிவிடவில்லை. நெய்வேலி ஒரு அழகான ஊர். அந்த ஊரில் வசித்தவர்களுக்கு அதனை மீது அலாதி பாசம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அங்கே வசித்தவர்களுக்கு அந்த ஊர் சொர்க்கம். திட்டமிட்ட நகரம், நிறைய வசதிகள் என பிடித்தமான இடம் நெய்வேலி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்.

      நீக்கு
  22. நாங்க பிறந்து வளர்ந்த,படித்த ஊருக்கு செல்வதென்பது என்ன்வோ அளவிடமுடியாத மகிழ்ச்சி. நீங்க உங்க நாட்டிலிருந்தே இவ்வளவு வருடமாகிவிட்டது. அப்போ நான் பரவாயில்லை. வருடமொரு முறையாவது செல்கிறேன்.ஹா..ஆ..
    அழகான ஊர். படித்த பாடசாலைக்கு நீண்ட வருடத்தின் பின் செல்வது பழைய ஞாபகத்தினை ஏற்படுத்தியிருக்கும்.
    நடராஜர் கோவிலில் இருக்கும் கடிதம் வாசிக்கும் பழக்கம் புதுமையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இதே நாட்டில் இருந்தாலும், நெய்வேலிக்கு செல்வது இதுவரை சாத்தியப்படவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

      நீக்கு
  23. என்றும் மகிழ்ச்சி தரும் நினைவுகள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  24. நெய்வேலியில் எனது மாமா மகன் இருந்ததால் அடிக்கடி விருத்தாசலத்திலிருந்து போயிருக்கிறேன். பின்னர் கடலூரில் பணி புரிந்தபோதும் போயிருஜ்க்கிறேன். ஒவ்வொரு தடவை போகும்போதும் மாற்றத்த்தைக் கண்டிருக்கிறேன். 1957 இல் நான் பார்த்த நெய்வேலிக்கும் இப்போதுள்ள நெய்வேலிக்கும் எவ்வளவோ வேறுபாடுகள். எங்க்கே அவைகள் தெரிகின்றான் என்றால் அங்கேயே வளர்ந்து படித்த உங்களுக்கு எப்படியிருக்கும். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....