வெள்ளி, 29 மார்ச், 2019

மூடப்படும் அரசுப் பள்ளிகள் – நினைவுகளைத் தேடி – மூன்று


சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய நினைவுகளைத் தேடி பதிவுகளின் சுட்டி கீழே.

நினைவுகளைத் தேடி – ஒன்று இரண்டு

வில்லுடையான்பட்டு கோவில் தரிசனம் முடிந்த பிறகு வண்டியை எனக்கு மிகவும் பழக்கமான இடம் ஒன்றை நோக்கிச் செலுத்தினேன். அந்த இடம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், பிறகு ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் படித்த பள்ளி.

அந்தப் பள்ளியில் தான் எனக்கு பால பாடம் ஆரம்பித்தது. முதல் வகுப்பில் எனக்கு ஆசிரியையாக இருந்தவர் திருமதி நாமகிரி. இன்றைக்கும் அவர் முகம் நன்கு நினைவில் இருக்கிறது. அவர் இப்போது இல்லை என்றாலும் அவரது முகம் இன்னும் மறக்கவில்லை. கொஞ்சமாகவா படுத்தினேன் நான்! வீட்டிலிருந்து அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளி சென்று அவர் என்னை என் வகுப்பில் விட்டு பிறகு தனது வகுப்பிற்குச் செல்வார். சில நிமிடங்களில் நான் அழுது கொண்டே ஓட்டமாய் ஓடி அக்காவின் வகுப்பில் அமர்ந்து கொள்வேன். பள்ளி, படிப்பு என்றால் ஏனோ எட்டிக் கசப்பு! கூடவே ஒரு பயம்! ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது என் வகுப்பிற்கும், அக்காவின் வகுப்பிற்கும் மாற்றி மாற்றிச் செல்வது அப்போதைய வழக்கம். இன்றைக்குக்கூட அக்கா இதைச் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொள்வார்.

நாமகிரி டீச்சர், எஸ்தர் டீச்சர், ஜெயலட்சுமி டீச்சர், நீண்ட மூக்கு இருந்ததால் மூக்கன் என்ற பட்டப் பெயரில் நாங்கள் அழைத்த ஒரு ஆசிரியர், கன்னங்கரேல் என இருந்ததால் தீஞ்ச வடை என நாங்கள் அழைத்த தலைமை ஆசிரியர் [பட்டப்பெயரால் அழைத்து அழைத்து, உண்மைப் பெயர் மறந்து விட்டது!] என ஒவ்வொரு ஆசிரியரும் நினைவில் இருக்கிறார்கள். எத்தனை விஷயங்களை அந்தச் சிறு வயதில் அவர்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். சின்ன வயதில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் தானே நம்மை வாழ்நாள் முழுவதும் நடத்திச் செல்லும்! ஒரு ஆசிரியர் நான் செய்த அல்லது செய்யாத விஷயத்திற்கு என்னை குச்சியால் அடித்து விட, அடுத்த நாள் அப்பா அவரிடம் சண்டைக்குச் சென்றது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது!

முதன் முதலாக சைக்கிள் ஓட்டப் பழகியது, என்னை அடித்த சக மாணவனுடன் கட்டிப் பொறண்டு சண்டை போட்டு அவன் வயிற்றில் கடித்து வைத்தது! [ஹாஹா... நாய் மாதிரி கடிச்சு வைச்சுருக்கேன்!], ஓணான் அடித்தது என பலப் பல நினைவுகள் அந்தப் பள்ளியில் படித்த காலங்களிலிருந்து. இன்னும் நிறைய விசயங்கள் நினைவில் – ஆனால் சொல்ல முடியாத நினைவுகள் – ஹாஹா! – பள்ளியில் செய்த பல விஷயங்களை இங்கே சொல்ல முடியாது! கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இமேஜும் டேமேஜ் ஆகிவிடும்! இப்படி பல நினைவுகளை எனக்குத் தந்த நெய்வேலி வட்டம் 18-ல் இருந்த NLC நடுநிலைப்பள்ளி வாயிலுக்குச் சென்றபோது அங்கே ஆள் நடமாட்டமே இல்லை. பள்ளியை சில காலம் முன்னர் மூடி விட்டார்களாம்! என்ன காரணம் எனக் கேட்ட போது அப்பள்ளியில் படிக்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைந்தது தான் காரணம் என்றார்கள்.

நாங்கள் நெய்வேலியில் இருந்த போது என்.எல்.சி. நிறுவனம் நடத்திய பள்ளிகள் தான் நிறைய. தனியார் பள்ளிகள் எனப் பார்த்தால் ஜவஹர் பள்ளி, செயின்ட் பால்ஸ், க்ளூனி போன்ற சில பள்ளிகள் தான் இருந்தன. என்.எல்.சி. நடத்திய பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. ஜவஹர் பள்ளியில் படித்த மாணவர்கள் பல முறை மாநில அளவில் முதல் மதிப்பெண்களை பெற்றதுண்டு. என்.எல்.சி. நிறுவனத்தின் பள்ளிகளில் படித்த மாணவர்களும் மாநில அளவில் முதல் பத்து இடங்களில் வந்ததுண்டு. முன்பெல்லாம், தனியார் பள்ளிகளை விட என்.எல்.சி. நிறுவனத்தின் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, நிறுவன ஊழியர்களின் குழந்தைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் மட்டுமே என்.எல்.சி. நிறுவன பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்க, என்.எல்.சி. நிறுவனமும் சில பள்ளிகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மூடப்படும் பள்ளிகளில் இருக்கும் மாணவர்கள் அடுத்த பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். நான் படித்த பள்ளியும் அப்படித்தான் மூடி விட்டார்கள் எனத் தெரிந்த பொது மனதில் வலி. நான் படித்த, என் கல்விக்கு வழிகோலிட்ட பள்ளியின் வாயிலில் சிறிது நேரம் நின்று கொண்டு இருந்தேன். அலைபேசியில் ஒரு படமும் எடுத்துக் கொண்டேன். பல மாணவர்களை உருவாக்கிய ஒரு பள்ளி இப்படி மூடிக்கிடப்பது ரொம்பவே வருத்தம் தந்தது.

என்.எல்.சி. நிறுவன பள்ளிகள் மட்டுமன்றி பல ஊர்களிலும் உள்ள அரசுப் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருவது ரொம்பவே வருத்தம் தரும் விஷயம். என்னதான் தனியார் பள்ளிகள் பல இருந்தாலும், அவை வாங்கும் கணக்கில்லாத கட்டணம் கட்ட முடியாதவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். அரசு நடத்தும் பள்ளிகள் தான் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி தருகின்றது. பல தனியார் பள்ளிகளை அரசியல்வாதிகளும், கட்சிப் பிரமுகர்களும் நடத்துகின்றார்கள் என்பதால் மூடப்படும் அரசு பள்ளிகள் பற்றி யாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. இனி எப்போதும் இந்த நிலை மாறாது என்று தோன்றுகிறது.

மனதில் வலியுடன் நான் படித்த பள்ளியை விட்டு விலகிச் சென்றேன். அடுத்த இடம் செல்லும் வரை பள்ளியும் பள்ளி நினைவுகளுமே என் நெஞ்சில் நிறைந்து இருந்தது. நினைவுகளைத் தேடி வரிசையில் அடுத்த பதிவுடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

50 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    பள்ளி, படிப்பு என்றால் ஏனோ எட்டிக் கசப்பு! //

    ஆஹா! அப்ப நமக்கு செட்டுக்கு ஆள் இருக்கு!! ஹா ஹா ஹா எனக்கும் எட்டிக்காயாகத்தான் இருந்தது. பயம் அதே...என் மகனுக்கும் ரொம்பவே இருந்தது. மிகவும் கட்ஷ்டப்பட்டான் 12 ஆம் வகுப்பு வரை.

    எனக்குப் பள்ளிக்குப் போவது என்றால் கேம்ஸ், தோழிகள், கலை நிகழ்சிகள் இவைதான் பிடித்த விஷயம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      நமக்கு செட்டுக்கு ஆள் இருக்கு! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஹா ஹா ஹா வெங்கட்ஜி நீங்க அப்ப அடித்துப் புறண்டு சண்டை போட்டு வயிற்றில் கடித்ததை நினைச்சு சிரித்துவிட்டேன்...

    ஜவஹர் பள்ளியில்தான் என் தோழி கல்லூரியில் ஒரு வருட சீனியர் சந்திரா அவங்க ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் இப்போதும் அங்குதான் இருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதில் செய்த விஷயங்களை இப்போது நினைத்தால் “அட இப்படியெல்லாம் இருந்திருக்கிறோமே....” என நினைப்பதுண்டு!

      உங்கள் சீனியர் நெய்வேலியில் - மகிழ்ச்சி! நெய்வேலியில் பலரை இப்போது நினைவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. அரசுப் பள்ளிகள் மூடப்படுவது மிக மிக வேதனையான விஷயம். இதைப் பற்றி நிறைய பேசலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை - மூடப்படும் பள்ளிகள் நிறைய காரணங்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட்.

    எனக்கும் என் முதல் ஆசிரியையின் பெயர் நினைவில் இருக்கிது.

    தெய்வசிகாமணி டீச்சர். சுண்டைக்காய் வாசனை வரும்படி ஒரு பௌடரோ செண்ட்டோ போட்டிருப்பார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      சுண்டைக்காய் வாசனையுடன் ஒரு செண்ட்/பௌடர்! எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நான் பள்ளி செல்ல அழுததில்லை. நான் சென்றதே நேரடியாக மூன்றாம் வகுப்பில்தான்! ஆனால் சில கூத்துகள் அடித்திருக்கிறேன். என் நினைவுகளும் வெளியில் சொல்லிக்கொள்ளும் வண்ணம் இல்லை! இந்தக்கூத்து உயர்வகுப்பில் கூடத் தொடர்ந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரடியாக மூன்றாம் வகுப்பு - முன்னரே ஒரு முறை நீங்கள் சொல்லி இருப்பதாக நினைவு.

      வெளியில் சொல்லிக் கொள்ளும் வண்ணம் இல்லை! ஹாஹா! :) பல விஷயங்களை வெளியில் சொல்ல முடிவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஆம், தனியார் பள்ளிகள், ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகள்... அரசியவியாதிகளால் நடத்தப்பட்டு வீணாகிக் கொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருகிறது. நம் நண்பர் கரந்தை ஜெயக்குமார், மதுரை சரவணன், கஸ்தூரி ரெங்கன், சிபிமலையப்பன் ஸ்ரீராம் போன்றவர்கள் விதிவிலக்குகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் வலையுலக நண்பர்கள் போன்ற ஆசிரியர்கள் வெகுவும் அரிது தான். எல்லா இடங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்தே இருப்பது இயல்பு தானே...

      அரசியல்வியாதிகள் கல்வித் தந்தைகளாக உருவாகி இருப்பது சோகமான விஷயம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. பள்ளிக்கால அனுபவங்கள் எல்லோருக்குமே சுகமான அனுபவமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்குமே சுகமான அனுபவம்! உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அரசுப் பள்ளிகள் மூடப்படுவது வேதனையான விஷயம்.
    தங்களின் பள்ளிக்கால அனுபவங்கள் என்னையும் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் எழுதலாமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. என்னோட முதல் வகுப்பு ஆசிரியர் பெயரும் மனோரஞ்சிதம் டீச்சர். நான் மூன்றாம் வகுப்பு அதே பள்ளியில் படிக்கையிலேயே இறந்து விட்டார். என்னை அதிர்ச்சி அடைய வைத்த செய்தி இது! ஏனெனில் கணவன் கொடுமையால் மருந்து குடித்து இறந்தார் எனச் சொல்லப்பட்டது. அப்போல்லாம் இம்மாதிரிக் கேள்விப் படும்போது பயம் அதிகம் வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... கணவன் கொடுமையால் இறந்து போன ஆசிரியர்.... வருத்தம் தந்த செய்தி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. நான், என் அண்ணா, தம்பி மூவரும் படித்த அந்தப் பள்ளியும் இப்போது மூடப்பட்டு உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... பல பள்ளிகள் காலப் போக்கில் மூடப்படுகின்றன என்பது வேதனை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. என் பள்ளி நினைவுகளை நினைவுபடுத்திய பதிவு. அந்நாட்களை மறக்கவும் முடியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பள்ளி நினைவுகளையும் மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. இனிய நினைவுகள் ஜி... பலருக்கும் அவரவர் பள்ளிக்கூட நினைவுகளை நினைக்க வைத்து விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் அவரவர் பள்ளிக்கூட நினைவுகள் - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. பள்ளிகள் மூடப் படுவது வேதனைக்குரியதுதான். ஆனால் அதற்கு முழு பொறுப்பு நாம்தான். நாம் நம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வில்லையே.மாணவர்கள் இருந்து பள்ளிகளை மூடினால் அது தவறு.வேறு வழியின்றி கடைசி வாய்ப்பாகத்தான் பள்ளிகள் மூடப் படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலைதான். பல் பள்ளிகள் ஆசிரியருக்காகத் தான் இயங்குகிறது.10 க்கும் கீழ் உள்ள மாணவர்கள் பயிலும் பள்ளிகள் சென்னையிலும் நிறைய இருக்கிறது என்றால் நம்ப முடியுமா> ஆனால் உண்மை அதுதான்.ந்மது ஆங்கில மோகம்தான் அரசு பள்ளிகள் முடுவதற்குக் காரணம். 2000 தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மெதுவாககுறைய ஆறம்பித்தது. 2010க்குப்பிறகு பெறும் வேகமான வீழ்ச்சி ஏற்பட்டது. இப்போது அரசு பள்ளிகளில் நிபந்தனையுடன் ஆங்கில வழிக் கல்வி தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் அரசு பள்ளிகளில் படிப்பதை கௌரவக் குறைவாக நினைக்கிறார்கள்.வேறு வழி இல்லாதவர்கள்தான் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள், இதுதான் இன்றைய நிலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. பள்ளிகள் மூடப்படுவதற்கு பல காரணிகள் உண்டு - அரசு மட்டுமே அல்ல...

      தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  14. பழைய நினைவுகள் என்றும் இனியவை.பள்ளி மூடப் படுவது .... வருத்தமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

      நீக்கு
  15. 18 blockil ulla school stright road il puthu kovil ulla veedu eaka veedaka eruthathu.
    Sathukudi maram ulla veedu.
    Karutha teacher oru tamil aiyyaa thaney.
    Eanakum avar headmastera eruthu erukar.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தமிழ் தான் எடுத்தார். புத்து கோவில் இருந்த வீடு - நினைவில் இல்லை.

      அந்த சாலை அப்பர் சாலை தானே? சாத்துக்குடி மரம் எங்கள் வீட்டில் கூட இருந்தது...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபா.

      நீக்கு
  16. //பட்டப்பெயரால் அழைத்து அழைத்து, உண்மைப் பெயர் மறந்து விட்டது!//

    கோபம் வந்தால் முகம் சிவக்கப் பிரம்பால் விளாசுவார் என் 6ஆம் வகுப்பு ஆசிரியர். அவருக்குச் சக மாணவர்கள் சூட்டிய பெயர் 'செங்குரங்கு'. அவர் பெயர் மறந்தே போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செங்குரங்கு! எப்படியெல்லாம் பெயர் வைத்திருக்கிறோம்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவிலிநம்பி.

      நீக்கு
  17. என் அப்பாவிற்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும். சில சமயம் தனியார் பள்ளி, பல சமயம் அரசு பள்ளியில் தான் நாங்கள் படித்தோம். அரசு பள்ளியில் முன்னுரிமை உண்டு இடையில் வந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தனியார் பள்ளியில் வருடம் முதலில் வர வேண்டும் என்பார்கள்.


    எல்லா பள்ளியிலும் கணக்கு டீச்சர் மட்டும் கொஞ்சம் கோவமாய் இருப்பார்கள்.மற்ற டீச்சரும் மகிழ்ச்சியாக ஜாலியாக் உரையாடுவார்கள் பள்ளி பிள்ளைகளிடம்.

    கீதா ரெங்கன் சொல்வது போல் பள்ளி நாட்களில் படிப்பதை விட தோழிகளுடன் விளையாட்டு, அரட்டை, கலைநிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுதல், அதற்கு பயிற்சி செய்ய வகுப்பை கட் செய்தல் இதுதான் பெரும்பாலும்.

    சிவகாசியில் படித்த போது கொடி போல் அழகாய் ஒரு டீச்சர் அவர்கள் பேர் ரோஜா .
    எனக்கு வகுப்பு எடுத்த எல்லா டீச்சரும் பிடிக்கும்.

    கீதா சாம்பசிவம் சொன்னது போல் எனக்கு வகுப்பு எடுக்காத டீச்சர் ஒருவர் கணவன் கொடுமை தாங்காமல் தீ வைத்துக் கொண்டு இறந்தார். நான் 11 வது படிக்கும் போது.
    அவர்கள் அமைதியான அதிர்ந்து பேசாத டீச்சர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் பல நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி. நினைவுகள் இனிமையான நினைவுகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  18. இனிய மலரும் நினைவுகள்..

    ஆனாலும் படித்த பள்ளி மூடப்பட்டு விட்டதைக் காணவும் கேட்கவும் மனம் வருந்துகின்றது...

    நவீன அரசியல்வாதிகள் மக்களுக்கென்று அளித்த அவலம் இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீன அரசியல்வாதிகள்... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  19. என் மச்சினன் மகள் ஜவஹர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  20. என் முதல் வகுப்பு ஆசிரியர் பெயர் பசுபதி. மற்றொருவர் பெயர் கோவிந்தராஜ்.

    அரசுப் பள்ளிகள் மூடப்படுவது வருத்தத்திற்கு உரியது. அதற்கு அடிப்படை வசதிகளை செய்து தராத அரசாங்கம் மட்டுமல்ல, கடனே என்று பணி புரியும் ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் வெற்று பெருமைக்காக அரசுப் பள்ளியை தவிர்க்கும் பெற்றோரும் காரணமே.

    நான் முதல் வகுப்பு படித்தபோது உயர்நிலைப் பள்ளியாக இருந்த இராஜாக்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டு நன்கு செயல்படுகிறது. சில ஆசிரியர்கள் அங்கு உண்மையாகவே நன்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

    வாத்தியாருக்கு பட்டப்பெயர் வைக்காத மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தியாருக்கு பட்டப்பெயர் வைக்காத மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? ஹாஹா! அதானே....

      உங்கள் நினைவுகளும் மகிழ்ச்சி தந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  21. வெங்கஜி உங்கள் பழைய சம்பவங்களின் நினைவுகள் அனுபவங்கள் எல்லாமே சுவையாக ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. சிறுவயது சண்டைகளை இப்போது நினைத்தால் சிரிப்பாக வரும்.

    தொடர்கிறோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயது சண்டைகள்... சிரிப்பு தான் இப்போது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  22. நாங்கள் படித்த அரசுப்பள்ளி 20 வருடங்கள் முன்பே மூடப்பட்டுவிட்டது.
    அதற்குப் பதில் தனியார் பள்ளிகள் வந்துவிட்டன.
    எனக்கு கணக்கு மாஸ்டர் தான் பயம். கையில் ஸ்கேல் வைத்திருப்பார்.

    என்னை முதுகில் அடித்த மாரி நினைவில் இருக்கிறான். அடுத்த நாள் அவனை நானும் அடித்தேன்.
    பயமில்லாத பருவம். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயம் அறியா பருவம்.... இனிய நினைவுகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  23. பள்ளிக்கால நினைவலைகள் என்றுமே இனியவை
    பள்ளிகள் மூடப்படுவது வேதனைதான் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  24. படித்த பள்ளிக்குச் சென்று வந்தால் ஏற்படும் நினைவுகளால் மனம் பல்வேறு உணர்வுகளால் ததும்பி விடும். நாங்கள் படித்த பள்ளிக்குச் சென்று வந்த அனுபவம் இங்கே :‘https://tamilamudam.blogspot.com/2010/09/blog-post.html’. நீங்கள் படித்த பள்ளி மூடப்பட்டு விட்டது வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவின் சுட்டி தந்தமைக்கு நன்றி. அங்கே சென்று படித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  25. பள்ளிக்கூடம் (பாடசாலை எனவும் சொல் உண்டு எங்க ஊரில்)என நாங்க சொல்வதுண்டு.ஆனா இவ்வழக்கு இப்ப மறைந்து ஸ்கூல் என சொல்கிறார்கள். பள்ளிப்படிப்பு என்பது மறக்கவே முடியாததொன்று. நானும் ஊருக்கு சென்றபோது என் பள்ளியை பார்த்தேன். அது மெயின்ரோட்டில் இருப்பதால் town செல்லும்போது கடந்துதான் செல்லவேண்டும். இப்போ முன்பு மாதிரி இல்லாமல் நன்றாக வசதிகள் செய்து முன்னேற்றியிருக்கிறார்கள். உங்க பதிவு எனக்கும் பழைய ஞாபகத்தினை ஏற்படுத்திவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....