நாளந்தா - அழிவின் சின்னங்கள்...
பீஹார் டைரி என்ற குறிப்போடு
பதிவுகள் எழுதி நிறைய நாளாயிற்று! தொடராக எழுதாமல் இப்படி தனித்தனி பதிவுகளாக எழுதுவதில்
ஒரு வசதி. Continuity விட்டுப் போய்விடுமே என்ற கவலையில்லை! முடிந்தால் எழுதலாம்
இல்லையென்றால் விட்டு விடலாம்! இதோ இன்றைக்கு ஒரு பீஹார் டைரி பதிவுடன் உங்களைச்
சந்திக்க வந்தாயிற்று. கடைசியாக எழுதிய பீஹார் டைரி பதிவு – வெந்நீர் ஊற்று – குதிரை வண்டி பயணம்!
– எழுதிய நாள் ஜனவரி 21! என்னே எனது சுறுசுறுப்பு! சரி வாருங்கள், இன்றைய பீஹார்
டைரி பதிவுக்குப் போகலாம்.
நாளந்தா - உள்ளே நுழையும் பாதை ரம்மியமாக...
நாளந்தா - அழிவின் சின்னங்கள் - விவரங்கள் தரும் தகவல் பதாகை...
பீஹார் செல்ல வேண்டும் என்று
திட்டமிடும்போது நாங்கள் பார்க்க நினைத்த இரண்டு இடங்கள் – நாளந்தா மற்றும் Bபோத்
Gகயா. நாளந்தா பற்றி வரலாற்றில் நிறையவே படித்திருக்கிறோம். அது உண்மையான வரலாறா
இல்லை திரித்து எழுதப்பட்டதா என்ற ஆராய்ச்சிக்குள் போக விருப்பமில்லை! நான் இங்கே
சொல்லப் போவதும், உங்களுக்கு நான் எடுத்த நிழற்படங்கள் மூலம் காண்பிக்கப் போவதும் அழிவின்
சின்னங்கள் மட்டுமே. எத்தனை பெரிய அளவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வளவு
பெரிய அளவில் ஒரு கல்விக்கூடத்தினை அமைத்து பல மாணாக்கர்களை படிக்க வைத்து அவர்களை
சிறப்புற உருவாக்கி இருக்கிறார்கள் என்பதைக் கேட்கும்போதே மனதில் ஆச்சர்யம்.
இன்றைய கல்விக் கூடங்களை வியாபாரத் தலங்களாகத் தான் பார்க்க முடிகிறது.
நாளந்தா - வழிகாட்டி சிங் உடன் நானும் நண்பரும்...
நாளந்தா சென்று சேர்ந்ததும் ஒரு
முதியவரை எங்கள் வழிகாட்டியாக அமர்த்திக் கொண்டோம். எழுபது வயதுக்கு அதிகமாகவே
இருக்கும் – சற்றே தளர்ந்த நடையில் எங்களுடன் பொறுமையாக நடந்து ஒவ்வொரு இடத்திலும்
நின்று நிதானமாக நாளந்தாவின் வரலாற்றைச் சொல்லிக் கொண்டு வந்தார் – எந்த மொழியில் –
ஆங்கிலம் அல்லது ஹிந்தி – இரண்டில் எந்த மொழியில் உங்களுக்கு விளக்கம் வேண்டும்
என்று கேட்டுக் கொண்டு ஆரம்பித்தார். இரண்டில் எதுவானாலும் எங்களுக்குப்
பரவாயில்லை என்று சொல்ல ஆங்கிலத்தில் தொடங்கினார். இந்த இரண்டு மொழிகள் தவிர,
ஜப்பானிய மொழி, ஃப்ரெஞ்ச், ஜெர்மன் என பல மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்.
பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டுமே வழிகாட்டியாக இருப்பது இவரது
வழக்கம் – இந்தியர்கள் காசு கொடுப்பதில் ரொம்பவே கஷ்டப்படுத்துவதாக பிறகு
சொன்னார்.
நாளந்தா - வழிபாட்டுத் தலம்...
நாளந்தா – அந்தக் காலத்திலேயே
பத்தாயிரம் மாணவர்களும் இரண்டாயிரம் ஆசிரியர்களும் ஒரே இடத்தில் தங்கி பயின்ற ஒரு
இடம் தான் இந்த நாளந்தா. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த
பல்கலைக்கழகம் பீஹார் தலைநகரம் பட்னாவிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை இந்த நாளந்தா பல
நாடுகளிலிருந்து வந்த மாணவர்களைப் பயிற்றுவித்த ஒரு இடம். இன்றைக்கு அந்தப்
பல்கலைக்கழகத்தின் அழிவுகள் மட்டுமே மிச்சம். இத்தனை நூற்றாண்டுகள் சிறப்பாகச்
செயல்பட்ட இந்த பல்கலைக்கழகம் பற்றிய குறிப்புகளை, ஏழாம் நூற்றாண்டில் இங்கே சில
காலம் தங்கியவர் ஹூவான் சுவாங்! இந்த இடத்தில் எப்படி கல்வி பயிற்றுவிக்கப்
படுகிறது, புத்தரின் வழியில் எப்படி மாணாக்கர்களை முறைப் படுத்துகிறார்கள்
என்பதையெல்லாம் விரிவாக எழுதி வைத்திருக்கிறார்.
வரிசை வரிசையாக ஆசிரியர்கள்
தங்கும் விடுதி, மாணாக்கர்கள் தங்கும் விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், என
ஒவ்வொன்றின் அழிவும் பார்க்கும்போது பல நூற்றாண்டுகள் முன்னர் சென்று அந்த இடத்தினை
முழுமையாகப் பார்க்க முடியுமா என்று கற்பனைச் சிறகை பறக்க விடலாம். மனதுக்குள்
அப்படியே அந்த பல்கலைக்கழகத்திற்குள் நிற்பது போல யோசிக்க, என்னைச் சுற்றிச்
சுற்றி பத்தாயிரம் மாணவர்கள் – சப்தமாக படித்துக் கொண்டிருந்ததைக் கேட்கும்
உணர்வு. இப்போதைய பள்ளிகள் போல வியாபார நோக்கம் அல்லாமல் சிறப்பான
ஆசிரியர்களையும், முயன்று படிக்கும் மாணவர்களையும் கொண்ட அந்த இடத்தில் நிற்பதே
நல்ல உணர்வினைத் தந்தது. கூடவே அழிவுகளைப் பார்க்கும்போது மனதில் வலி!
நாளந்தா - அழிவின் சின்னங்கள்...
நாளந்தா - அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொண்டு வந்த இடங்களின் ஒரு வரைபடம்... இன்னும் நிறைய இடங்கள் இன்றும் பூமிக்குள்...
எங்கள் வழிகாட்டி – சிங் அவர்கள்
சொன்ன விஷயங்களில் ஒன்று – இந்த பல்கலைக்கழகம் முழுவதும் மண் கொண்டு மூடப்பட்டது
என்பதும், பல இடங்கள் எரிக்கப்பட்டு என்பதும் கேட்கும்போது மனதை என்னமோ செய்தது.
இங்கே மண்கொண்டு மூடப்பட்ட பல்கலைக்கழகத்தின் வெகு குறைந்த பரப்பளவு இடங்களை
மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்து வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் இன்னும்
நிறைய விஷயங்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு கிடக்கிறது என்றும் வருத்தத்தோடு
சொல்லிக் கொண்டு வந்தார் –குப்த் என்று அழைக்கப்பட்ட ராஜ வம்சத்தினர் வழியில் வந்த
குமார குப்தா அவர்கள் தான் இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தினை அமைத்து சிறப்பாகச்
செயல்படுத்தினார்கள் என்றாலும், அசோகர் மற்றும் ஹர்ஷ்வர்த்தன் ஆகிய இரண்டு இராஜாக்களும்
தான் இந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.
ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே
வந்ததில் ஒரு இடத்தில் இருந்த அறைகளின் சுவர்கள் கருப்பு வண்ணத்திலேயே இருந்தது.
இங்கே பல ஆயிரம் அரிய நூல்களைக் கொண்ட ஒரு நூலகம் இருந்தது என்றும், அந்த
நூலகத்தினை படையெடுப்பின் போது தீ வைத்து எரித்து விட்டார்கள் என்றும், அவர்கள்
வைத்த தீ கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை எரிந்து கொண்டிருந்தது என்றும்
கேட்கும்போது நமக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. பல அரிய விஷயங்களை நாம் இழக்கக்
காரணமாக இருந்த அந்த வெறி பிடித்த மூடர்களை நினைத்தால் மனதில் அருவருப்பு. இந்த
இராஜ்ஜிய வெறி, இராஜாங்க வெறி, பதவி வெறி, ஆளும் வெறி இன்றைக்கும் வெவ்வேறு
ரூபத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது தான் வருத்தம் தரும் ஆதங்கம்!
நாளந்தா - அன்றைய பல்கலைக்கழகத்தில் இன்றைய மாணாக்கர்கள்...
என்னதான் அழிவின் சின்னங்கள்
என்றாலும், மனதில் வலி தரும் அந்தச் சின்னங்களை எனது கேமரா கண் வழி பார்த்து சில
பல படங்களை அங்கே எடுத்துக் கொண்டு மனதில் வேதனையோடு வெளியே வந்தோம். இது போன்று
ஒரு பல்கலைக்கழகத்தினை, ஒரு நூலகத்தினை இப்போது முயன்றாலும் அமைக்க முடியுமா
என்பது சந்தேகமே. நூலகம், நூல்கள் என்பவை நமது சந்ததியினருக்கு நாம் விட்டுப்
போகும் பொக்கிஷம். அவற்றை அழிப்பது என்ன ஒரு கேடுகெட்ட செயல் என்பதை நினைக்க
நினைக்க கஷ்டம் தான் அதிகமாகிறது. இப்படி ஒரு பல்கலைக்கழகத்தினை நம் நாட்டில்
நிறுவிய அந்த மஹான்களுக்கு நம் வந்தனங்கள், நமஸ்காரங்கள். இழந்தவை மறுபடி கிடைக்கப் போவதில்லை.
இனிமேலாவது மனிதர்களுக்குள்/நாடுகளுக்குள்
வெறுப்பும், சண்டையும், த்வேஷமும் இல்லாமல் இருக்கட்டும்.
வேறு சில செய்திகளோடு மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
வணக்கம் வெங்கட்ஜி! நுழைவு வாயிலே பசுமையாக இருக்கிறது ஆனால் உள்ளே அழிந்த நாளந்தா பகுதிகளைக் காணும் போது வேதனை ஒரு புறம் என்றால் அவை எப்படி நிர்மாணிக்கப்பட்டிருந்தன என்ற அடையாளங்கள் பிரமிப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
பிரமிப்பும் வேதனையும் கலந்த உணர்வு அங்கே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வளவு பெரிய அளவில் ஒரு கல்விக்கூடத்தினை அமைத்து பல மாணாக்கர்களை படிக்க வைத்து அவர்களை சிறப்புற உருவாக்கி இருக்கிறார்கள் என்பதைக் கேட்கும்போதே மனதில் ஆச்சர்யம்.//
பதிலளிநீக்குஆமாம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நூல்கள் எரிக்கப்பட்டு அதுவும் 6 மாதமாக எரிந்தது என்பதெல்லாம் மிகவும் வேதனை. மற்றவரை வெற்றி கொள்ள வேண்டும், அழிக்க வேண்டும் என்ற இந்த வன்மம், வெறி தான் ராஜாக்களிடமும் சரி, மக்களிடமும் சரி இருக்கிறது..வேதனையான விஷயம் ஜி.
கீதா
இங்கே பலருக்கும் வெறி ஏதோ ஒன்றின் மீது.... வேதனை.... வேறென்ன சொல்ல.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
தனிப்பட்ட மனிதனின் பதவிவெறி எத்தனை மனிதர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது. இந்தநிலை இன்றும் தொடர்கிறதே...
பதிலளிநீக்குஇந்த நிலை இன்றும் தொடர்கிறது... வேதனையான உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
குட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குஒரு நாட்டைஅழிக்க அதன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். கல்வியறிவைத் தடுக்க வேண்டும். அதைதான் செய்தார்கள் போலும். இன்றும் மிஞ்சி நிற்கும் ந்தக் கட்டிடங்களை பார்க்கும்போது பெருமையும் வேதனையும் சேர்ந்தே வருகிறது.
நாட்டை அழிக்க எத்தனை எத்தனை வேலைகள். எத்தனை சூறையாடல்கள். இங்கே இருந்ததை அழித்து, இங்கே இருந்து செல்வங்களைக் கவர்ந்து சென்று என எத்தனை செய்திருக்கிறார்கள்.... இப்போதும் சில விஷயங்கள் அப்படித்தானே தொடர்கின்றன....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இந்த மாதிரி பிரம்மாண்ட நூலகம் அழிக்கப்பட்ட சமீப வரலாறு இலங்கை யாழ்ப்பாண நூலகம். வரலாற்றின் கறுப்புப்பக்கங்கள்.
பதிலளிநீக்குநூல்களை எரிப்பதில் என்ன ஆனந்தமோ இவர்களுக்கு... இலங்கை யாழ்ப்பாண நூலக எரிப்பு - கறுப்புப் பக்கங்கள் - மறக்க முடியாதவை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பொக்கிஷங்கள் அழிந்தது மிகவும் வேதனை அளித்தது...
பதிலளிநீக்குவேதனையான விஷயம் தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எத்தகைய பொக்கிஷம் ...அதையும் அழித்தவர்கள் .....ம்ம்
பதிலளிநீக்குதீ கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை எரிந்து கொண்டிருந்தது....அப்படி என்றால் எவ்வளவு புத்தகங்கள் இருந்து இருக்கும் ....
வருத்தமான நினைவுகளின் சாட்சிகள்
நூல்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. அதனால் தான் பல மாதங்கள் எரிந்திருக்கிறது. வருத்தம் தரும் நினைவுகள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
After reading the content, I feel one need not search somewhere to know about Nalanda. Valuable content. The thoughts you shared are true.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.
நீக்குபிரமிப்பின் உச்சமான நாளந்தாவிற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. தமிழகத்தில் கடலோரத்தில் பூம்புகாரில் புத்த விகாரையின் எச்சங்கள் இவ்வாறுதான் அழிந்துகொண்டிருக்கின்றன...
பதிலளிநீக்குபுத்த விகாரைகளின் எச்சங்கள் அழிந்து கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
புத்தகங்கள் எனப்படும் போது நமக்கு உருவகமாகத் தோன்றுவது காகித பத்தகங்கள். குப்தர் காலத்திலும் அசோகர் காலத்திலும் காகிதங்கள் பயன்பாட்டில் இல்லை. சங்க இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் ஆண்டாண்டு காலமாக படியெடுக்கப் பட்டு காப்பாற்றப் பட்டன. அது போன்று நாளந்தா நூல்கள் எதில் எழுதி பாதுகாக்கப் பட்டன என்று அறிய ஆவல். எனக்கு தோன்றுவது பௌத்த தங்காக்களைப் போல் நூல்களும் துணியில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.அறிந்தவர் முக்கியமாக ஜம்புலிங்கம் ஐயா அவர்களை விளக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா பதில் சொல்வார் என நானும் காத்திருக்கிறேன்.
நீக்குபுத்தகங்கள் என்று பொதுவாக இங்கே சொல்லி இருக்கிறேன் - ஓலைச் சுட்வடிகள், துணிகள் என எப்படி வைத்திருந்தார்கள் என்றாலும் அழிக்கப்பட்டது வேதனை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
நாளந்தா குறித்து நிறையத் தெரிந்து வைத்திருந்தாலும் இந்தப் படங்களோடு பார்க்கையில் அதன் தாக்கம் அதிகம் ஆகிறது! எப்படி இருந்த நாடு! இன்று பிஹாருக்கும் கல்விக்கும் துளிக்கூட சம்பந்தமேஇல்லாத மக்கள்! :( நினைத்தாலே வேதனை. பலருக்கும் இப்படி ஒன்று இருந்ததா என்பதே தெரியுமோ, தெரியாதோ! :(
பதிலளிநீக்குஇன்று பீஹாருக்கும் கல்விக்கும் துளிக்கூட சம்பந்தமே இல்லாத மக்கள்.... அப்படியில்லை கீதாம்மா... நிறைய படித்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் - ஆனாலும் எண்ணிக்கையில் அதிகம் படிக்காதவர்கள் தான்!
நீக்குபடங்களோடு பார்க்கையில் தாக்கம் அதிகம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
மண்ணில் புதைந்து விட்டன என்றால் எனக்குப் புரிவதில்லை இயற்கையின் சீற்றமா காலத்தின் கொலமென்றால் அவை ஏன்மண்ணில் புதைய வேண்டும்
பதிலளிநீக்குஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட இடங்கள் மண்ணோடு மண்ணாகத்தானே புதையும். குப்பைகள் புழுதிகள் சேர்வதும், அங்கு மரங்கள், களைகள் வளர்ந்து அந்த இடமே மக்கிப்போவதும், 'மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டன' என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றன ஜி.எம்.பி சார்
நீக்குஏன் புதையவேண்டும் என்பதே கேள்வி கட்டிடங்களும் மக்கிப் போகுமா
நீக்குபல கட்டிடங்கள் வேண்டுமென்றே மண் கொண்டு மூடப்பட்டன... காலத்தின் கோலமல்ல! சில இடங்களில் புறக்கணிக்கப்பட்டதும் காரணம்.
நீக்குஉங்கள் கர்நாடகாவில் கூட எதிரிகள் படையெடுப்பின் போது ஊர் மக்களே கோவில்களை மண் கொண்டு மூடியது உண்டு - பிறகு அவை அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்டது என்று நீங்களும் படித்திருக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் அழகான கட்டுமான அமைப்பும், நூல்களும் ஆக இருந்த புகழ்வாய்ந்த ஒரு பல்கலைக்கழகம் மனிதனின் மண் பதவி ஆசையினால் அழிக்கப்பட்டு இப்படியான நிலை அடைந்தது வேதனையாக இருக்கிறது அதைப் பார்க்கும் போது.
பதிலளிநீக்குதுளசிதரன்
நேரில் பார்த்த போது இன்னும் வேதனை அதிகமாக இருந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
இது போன்று ஒரு பல்கலைக்கழகத்தினை, ஒரு நூலகத்தினை இப்போது முயன்றாலும் அமைக்க முடியுமா என்பது சந்தேகமே.//
பதிலளிநீக்குஉண்மை.
படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
புதையுண்டது போக மிச்ச பகுதிகள் படம் வேதனை கொடுப்பதாய் இருக்கிறது.
வேதனையான விஷயம் தான் கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி படித்திருந்தாலும், படங்களைப் பார்க்கும்போது மனதை என்னவோ செய்கிறது. அருமையாய் படங்கள் எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குநீங்கள் கற்பனயில் கண்டு களித்த நாளாந்தா பல்கலைக் கழகத்தை, பீகார் அரசு நவீன தொழில் நுட்பம் மூலம் 3D படமாக்கி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போட்டுக் காட்டலாம்.
நாளந்தா பற்றி சில காணொளிகள் இருக்கின்றன ஐயா. அரசின் அருங்காட்சியகத்தில் பீஹார் பற்றிய காணொளி காண்பிக்கையில் நாளந்தா பற்றியும் சொல்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.