சனி, 23 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – தண்டாய் - பதிவர் அறிமுகம் – திண்ணை – நாலு பேருக்கு ஒரு படுக்கை



காஃபி வித் கிட்டு – பகுதி – 25

சாப்பிட வாங்க – தண்டாய்….


இந்த வாரத்தில் தான் வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஹோலி மற்றும் சிவராத்ரி சமயத்தில் இங்கே தயாரித்து அருந்தும் ஒரு பானம் தான் தண்டாய்… இதிலே பாங்க் எனப்படும் பதார்த்தம் கலக்காமல் கொழுப்பு சத்து நிறையந்த பால், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி விதைகள், கசகசா, ஏலக்காய், சோம்பு என பலவிதமான பொருட்களைச் சேர்த்து செய்யப்படும் இந்த தண்டாய் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஹோலி மற்றும் சிவராத்ரி சமயத்தில் வீடுகளில் செய்து பருகுவார்கள். தில்லி போன்ற நகரங்களில் கடைகளிலும் கிடைக்கிறது. இந்த தண்டாய் தயாரிக்க பொடிகளும் கிடைக்கிறது – அதை வாங்கி சூடான பாலில் கலந்து அருந்தலாம்.  நான் கடையில் தான் பருகினேன். எப்படிச் செய்வது என்பதை பார்க்க நினைத்தால் இங்கே பார்க்கலாம்! காணொளியாக எனில் ஹிந்தியில் இங்கே இருக்கிறது!

முகநூலில் ரசித்த வாசகம் – திண்ணை

மனிதன் எப்போது வீட்டிலிருந்து திண்ணையை எடுத்தானோ, அப்போதிருந்தே சக மனிதனை பற்றிய அவனுக்கு உள்ள அக்கறை போய் விட்டது! – மூவார் முத்து என அழைக்கப்படும் ARR.

படித்ததில் பிடித்தது – ஈனப் பெருஞ்சுவர் – பதிவர் அறிமுகம்:

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கையில் 2017-முதல் ”சிராப்பள்ளி மாதேவன் – எண்ணும் எழுத்தும்” என்ற வலைப்பூ காணக் கிடைத்தது. கவிதைகள், கட்டுரைகள் என பலவும் எழுதிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் எழுதிய கவிதை ஒன்று படித்ததில் பிடித்ததாக இங்கே…

ஈனப் பெருஞ்சுவர்

அன்று
கட்டைச்சுவற்றில்
கரித்துண்டு கொண்டு
யாருக்கும் தெரியாமல்
சொற்களாய் எழுதப்பட்ட
படங்களாய்,

இன்று
இணையப் பெருஞ்சுவற்றில்
அடையாளம் தெரியாதவரால்
பகிரப்பட்ட படத்திலிருந்து
உதிரும் சொற்களாய்,

எப்பொழுதும்
துகிலுரியப்படுபவள்
அவளே.

ஆண்டுகள்
தாண்டியும் மாறிடாத
ஆண்மனம்.

 சிராப்பள்ளி ப. மாதேவன்/02-02-2019

நான்கு பேருக்கு ஒரு படுக்கை - இரயில் பயணத்தில்:

வடக்கே, குறிப்பாக உத்திரப் பிரதேசம், பீஹார் செல்லும், அங்கிருந்து வரும் இரயில்களில் பயணிப்பது கொஞ்சம் சவாலான விஷயம். சமீபத்தில் வாரணாசி மற்றும் ப்ரயாக்ராஜ் சென்று திரும்பும்போது ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் எனும் முழுதும் குளிரூட்டப்பட்ட இரயிலில் தில்லி திரும்பினேன். குழுவினர் அனைவருக்கும் வேறு பெட்டியிலும் எனக்கு வேறு பெட்டியிலும் இரு[படு]க்கை! அப்போது பார்த்த ஒரு குடும்பம் பற்றி தான் இங்கே சொல்லப் போகிறேன் – கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் [இருவரும் பத்து வயதுக்குள்ளே]. நான்கு பேருக்கும் சேர்த்து இரண்டு படுக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்திருக்கிறார் – அதுவும் RAC தான் கிடைத்திருக்கிறது. இரயில் புறப்படும் வரை அவரது பயணத்திற்கான இருக்கைகள்/படுக்கைகள் கிடைக்க வில்லை. ஒரே சீட்டில் நான்கு பேரும் பயணித்து விடுவோம் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் – ஒரு இரவு தானே சமாளித்து விடலாம் என்கிறார். குழந்தைகள் இருவரும் எங்களுக்கான படுக்கை இது என மற்றவர்கள் படுக்கைகளில் ஏறிப் படுத்துக் கொண்டுவிட அவர்களை இறக்கி அந்த ஒரு இரு[படு]க்கையில் தூங்க வைப்பதற்குள் அத்தனை அவதி! எத்தனை கஷ்டம் அந்தக் குழந்தைகளுக்கு. ப்ரயாக்ராஜிலிருந்து கான்பூர் வரும் வரை இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டிருந்தார். ஒரு வழியாக கான்பூரில் ஒரு இடம் கிடைக்க கொஞ்சம் நிம்மதி ஆனது எனக்கு! இப்படி பயணிப்பது என்ன ஒரு அவஸ்தை! இந்த இரயில் பயணங்களில் கிடைத்த இரண்டு அனுபவங்கள் தனிப்பதிவுகளாக விரைவில்!

இந்த வாரத்தின் நிழற்படம்:



சிலரைப் பார்க்கும்போதே நிழற்படம் எடுக்க வாகான/தோதான முகம் என்று தோன்றும். அப்படித் தோன்றினாலும் எல்லோரையும் படம் எடுத்து விட முடிகிறதா என்ன? இந்தப் பெரியவரை படம் எடுக்க அவரிடம் பேச வேண்டியிருந்தது. சமீபத்தில் கும்பமேளா நடந்த ப்ராயாக்ராஜ் சென்ற போது எடுத்த படம் இந்தப் படம். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

இந்த வாரத்தின் விளம்பரம்:

சில விளம்பரங்கள் நம்மை மிகவும் இரசிக்க வைத்து விடும். விளம்பரம் எதற்காக, விளம்பரம் செய்யப்படும் விஷயம் நமக்கு எந்த விதத்தில் பயனுள்ளது என்ற எண்ணம் வராமல் பார்க்க பிடிக்கும் வகையிலான விளம்பரங்கள் சில மட்டுமே. அப்படி சமீபத்தில் பார்த்துப் பார்த்து ரசித்த ஒரு விளம்பரம் இந்த விளம்பரம் – நீங்களும் பாருங்களேன்.




இதே நாளில் – பின்னோக்கிப் பார்க்கலாம்:

தலைநகர் தில்லியில் நாங்கள் வந்த போது இருந்த ஒரு வாகனம் பற்றி 2011-ஆம் ஆண்டு இதே நாளில் எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவு இன்றைய பின்னோக்கிய பார்வையாக….  படிக்காதவர்கள் படிக்க பதிவின் சுட்டி கீழே…

ஃபட்-ஃபட்டியா….

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி. காஃபி வித் கிட்டுனு தண்டாய் உடன் ஆரம்பிச்சுருகீங்க! ஹா ஹா ஹா. எங்கள் வீட்டில் இது மிகவும் பிடிக்கும். அதுவும் மகனுக்குப் பால் பேஸ்ட் எல்லாமே ரொம்பப் பிடிக்கும்...

    திண்ணை வாசகம் அருமை. உண்மையும். அதில் மற்றொரு பக்கமும் இருக்கிறது. எங்கள் ஊரில் இந்தத் திண்ணை வம்பை வளர்த்தது இப்போதும் வளர்க்கிறது. அதுவும் அனாவசியமாக

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      காஃபிக்கு பதிலா இன்னிக்கு தண்டாய்! மில்க் பேஸ்ட் பானகங்கள் எனக்கும் பிடித்தவை.

      திண்ணை வம்புகளும் வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. கவிதை அருமை. பதிவரின் தளத்தையும் நோட் செய்து கொண்டாயிற்று ஜி.

    வடக்கே ரயிலில் இந்தப் படுக்கை விஷயம் ரொம்பவே சகஜம் என்றே நினைக்கிறேன்..பெரியவர்களே கூடப் பிரச்சனை பண்ணுவதுண்டு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் தளத்தினை தொடர்பவர்கள் குறைவு தான். பின்னூட்டங்களும் நான் பார்த்த வரை இல்லை.

      வடக்கே இரயில் பயணம் - குறிப்பாக பீஹார்/உத்திரப் பிரதேசம் பயணம் - படுத்தல் திலகங்கள் நிறைய பேரை சந்திக்க முடிந்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. விளம்பரக் காணொளி அப்புறம் பார்க்கிறேன் ஜி.

    ஃபட்ஃபட்டியா பதிவு பார்க்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் காணொளியும் முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங் கிட்டு!

    தண்டாய் பருக மனம் ஆவலாகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம். தலைநகர் தில்லி வாருங்கள் சுவைக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஈனப்பெருஞ்சுவர் - நல்ல வார்த்தையாடல். கவிவரிகள் சாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தையாடல் சிறப்பு. அவரது தளத்தில் இன்னும் சில கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அவரது சிக்கனத்தை என்ன சொல்ல... அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் பாவம். வடநாட்டு ரயில் பயணங்கள் பற்றிமுன்னரே நீங்களும் கீதா அக்காவும் நிறைய சொல்லி இருக்கிறீர்கள். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கனம் என்று சொல்வதற்கில்லை. இங்கே ஹிந்தியில் இப்படிச் சொல்வார்கள் - சப்b chசலேகா! எந்த வித கட்டுப்பாடும் இவர்களுக்கு இல்லை! எப்படியும் சென்றுவிடலாம் என்ற எண்ணம் உண்டு.

      பயப்படத் தேவையில்லை - கண்டுகொள்ளாமல் விட்டால் நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. தாடிப்பெரியவரை நீங்கள் படம் எடுப்பதை பின்னால் ஒரு முண்டாசுக்காரர் ஆர்வத்துடன் கவனிக்கிறார் பாருங்கள்!​ படம் நன்றாய் இருக்கிறியாது.

    தளர்ந்த வயதிலும்
    தளராத பயணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நன்றாய் இருக்கிறியாது. //

      நன்றாய் இருக்கிறது என்று வரவேண்டும்!!!!

      நீக்கு
    2. முண்டாசுக் காரர் பார்க்கிறார்! ஹாஹா... அவரையும் படம் எடுப்பேனா என்கிற ஆர்வமாக இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தட்டச்சு தகறாறு! :)) சரியாகவே படித்தேன்! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. நெகிழ்ச்சியான சிறுகதை மூலம் விளம்பரம். நன்றாய் இருக்கிறது. பின்னோக்கி - நான் முன்பு படிக்காதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - நல்ல சிறுகதைக்கான கரு. கதையாக எழுதுங்களேன்.

      ஃபட்ஃபட்டி பதிவு நீங்கள் படிக்காதது தான். இப்போது படித்து விட்டீர்களே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. நேரமின்மையால் இணையத்தில் படிப்பது குறைந்துவிட்டது அதனால் கருத்துக்கள் இடுவதும் குறைந்துவிட்டது மன்னிக்கவும் சில நேரங்களில் படித்தாலும் கருத்து இட நேரமில்லை நேரம் கிடைக்கு போது உங்கள் தளம் வந்து படித்து கொண்டுதான் இருக்கிறேன் இது ஒரு தகவலுக்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் - அதுதான் பலருக்கும் பிரச்சனை.

      நானும் உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. மனிதன் எப்போது வீட்டிலிருந்து திண்ணையை எடுத்தானோ, அப்போதிருந்தே சக மனிதனை பற்றிய அவனுக்கு உள்ள அக்கறை போய் விட்டது!

    உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. அந்த முதல் புகைப்படத்தை பார்க்கும்போதே அந்த தண்டாயை பருக ஆவலாக இருக்கிறது.

    "//கும்பமேளா நடந்த ப்ராயாக்ராஜ் சென்ற போது //" - கும்பமேளாவைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா? எழுதியிருந்தால் அந்த லிங்கை பதிவிடுங்கள். எழுதவில்லையென்றால், கண்டிப்பாக எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்டாய் முடிந்தால்/கிடைத்தால் பருகலாம்...

      இதற்கு முன்னர் சென்ற போது கிடைத்த அனுபவங்களை எழுதி இருக்கிறேன். நாளைய பதிவில் அதற்கான சுட்டிகள் வரும்! இம்முறை சென்ற போது கிடைத்த அனுபவங்களை தொடராக எழுதும் எண்ணம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  12. //திண்ணையை எடுத்தானோ, அப்போதிருந்தே சக மனிதனை பற்றிய அவனுக்கு உள்ள அக்கறை // - அப்படியா? திண்ணை, பெரியவர்கள் அங்கே உட்கார்ந்திருக்கும்போது, தெருவில் வருபவர்களை அல்லது அக்கம்பக்கத்தாரைக் கூப்பிட்டு உட்காரச் சொல்லி அரட்டை அடிப்பதற்காகத்தான் இருக்கு என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. //உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? // - You never know whether you have met THE person. அது அவரவர்களின் அதிருஷ்டத்தைப் பொறுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. நறுக்கென்று அனைத்து செய்திகளும் அருமை. கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் திண்ணைகள் இருந்தன. குடும்ப சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டுப் பிரிந்தபோது நான் ஏங்கியனவற்றில் ஒன்று இந்த எங்கள் வீட்டு திண்ணை. எங்களுக்கெல்லாம் அது ஒரு போதி மரம்கூட. தாத்தா உட்கார்ந்து பேப்பர் படித்தது, ஆத்தா கதை சொல்லியது, அப்பா 18ஆம்பேருக்கு சப்பரம் ஒட்டியது, அம்மா அனைவருக்கும் சோறு ஊட்டியது, சகோதரர்களுடன் ஆட்டம்போட்டது, நண்பர்களுடன் சண்டையிட்டது எல்லாமே இங்குதான். அனைத்தையுமே தொலைத்துவீட்டோம் இப்போது. அதன் நினைவாக தஞ்சையில் வீடு கட்டும்போது வாசலில் இரு கடப்பைக்கற்களைப் போட்டு திண்ணையைப் போன்று வைத்துள்ளேன். மனதிற்கு ஓரளவு நிறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்ணை - உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்ததில் மகிழ்ச்சி. திண்ணை பலருக்கும் நீங்கா நினைவுகளைத் தந்த இடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  16. விளம்பரம் செமையா இருக்கு. என்ன அழகான இடம்....இயற்கை! செமையா இருக்கு...எடுத்த விதம் மற்றும் சினிமேட்டோக்ராஃபி ரொம்ப அழகு! ரசித்தேன்...என்ன விளம்பரம் என்பதைப் பற்றிக் கூட யோசிக்கவில்லை!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அவர்கள் சொல்ல வரும் விஷயம் - கம்பெனி விளம்பரம் பற்றி யோசிக்கவில்லை நானும். சொல்லிய விதம் பிடித்திருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  17. திண்ணை பலவிதத்தில் நன்மை. சிலவிதத்தில் வம்பு மடம். சிறியவர்களுக்கு விளையாட்டுக் கூடம்.
    வழிப்போக்கர்களுக்கு ராத்தங்கலுக்கு உகந்த இடம்.
    வம்பும் வீட்டுக்குள் வந்து விட்டது. பல ஆண்கள் கண்கள் எங்களை
    உறுத்தியதால் திண்ணையை மறைத்து விட்டோம். ஈனச்சுவர் கவிதை
    உண்மை. பட்படியில் பயணம் செய்த்பெரியவர்கள் இருக்கிறார்கள்.ஹார்லி டேவிடசனா
    அது வாவ்.

    தண்டாய் மிக இனிமை. சாப்பிட ஆசை.

    இரயில் பயணங்களில்னு ஒருதொடர் ஆரம்பிக்கவும்.
    சுவாரஸ்யம். நன்றி வெங்கட் அலையஸ் கிட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரயில் பயணங்களில்னு ஒரு தொடர்.... :) எழுதலாம்!

      பதிவின் அனைத்து பகுதிகளையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  18. சிவராத்திர் அன்று தண்டாய் குடிச்சா விரதமிருப்பது எப்படி?! விரதம் அன்னிக்கு எளிதில் ஜீரணமாகும் பால் பழம்தானே சாப்பிடனும்?!
    சாதுவின் படம் எதார்த்தமா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரதம் இருக்காதவர்கள் இது குடிக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  19. அனைத்தும் அருமை.
    சொல்லுங்க அண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியில்
    யாருடைய பார்வை அதிக பவர் உள்ளது என்ற கேள்விக்கு
    கல்லூரி மாணவிகள் சொன்ன பதில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள திண்ணையில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும் பாட்டி என்று சொன்னார்கள். அவர்களால் பாதிக்கபடுகிறோம் என்றார்கள்.


    திண்ணையில் உள்ள பாட்டிகளால் இன்றும் கஷ்டபடுவதாய் கல்லூரி பெண்கள் சன் தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் .

    அறிவுரை சொல்லும் பாட்டி தொந்திரவு என்றால் என்ன பசெய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவுரை சொல்லும் பாட்டியை யாருக்கும் பிடிப்பது இல்லை! பொதுவாக அறிவுரை சொல்வதே யாருக்கும் பிடிப்பது இல்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  20. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கு பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  21. அனைத்தும் அருமை. கவிதை மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  22. //ஆண்டுகள்
    தாண்டியும் மாறிடாத
    ஆண்மனம்.// உறுத்தும் உண்மை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....