செவ்வாய், 16 ஜூலை, 2024

பார்த்த திரைப்படம் - விக்ரம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


தலைநகர் தில்லியில் சில திரையரங்குகளில் தமிழ் படங்கள் வெளியானாலும், எனக்கு ஏனோ தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதில், அதுவும் 400, 500 என பணம் செலவு செய்து படங்கள் பார்ப்பதில் விருப்பம் இருப்பதில்லை.  தற்போது பல திரைப்படங்களை OTT தளங்களிலும் பார்க்க முடிகிறது என்றாலும் அலைபேசி வழி மட்டுமே என்னால் பார்க்க முடியும் என்பதால்  அதிலும் பார்க்கத் தோன்றுவதில்லை.  எப்போதாவது பார்த்தால் உண்டு.  சரி நாம் பார்க்கவில்லை என்றால் என்ன? மற்றவர்கள் பார்த்து, திரைப்படம் குறித்த அவர்கள் எண்ணங்களை இங்கே வெளியிடலாமே! அப்படி ஒரு திரைப்படம் பார்த்த அனுபவங்களை இன்றைக்கு திருமதி விஜி வெங்கடேஷ் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


******


விக்ரம் - வக்ரம்!



கமலஹாசன் நடித்த விக்ரம் படம் குறித்து இவ்வளவு சொல்கிறார்களே சரி பார்ப்போம் என்று hotstar ல் விக்ரம் பார்த்தேன்.

படம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஆயுத பூஜை தான். இரண்டு கொலைகளைப் பார்த்த பின்பு நாம் தயாராகி விடுகிறோம், இதோ இப்போ ஒரு வெட்டு, இப்போ ஒரு குத்து, இப்போ ஒரு அறுப்பு, இப்போ ஒரு ஷூட் என்று. பயன்படுத்தாத ஆயுதம் nuclear weapon மட்டும் தான், அதையும் Book பண்ணியாயிற்றாம் விக்ரம் 2-க்கு (3- க்கு?).


யோகா க்ரியா பண்ணினால் எந்தக் கத்திக் குத்தையும் சமாளிக்கலாம் என்று கமலைப் பார்த்ததும் தெரிந்தது. தோளில் 3" அகலம் 7" நீளம் கத்தி உள்ளே இறங்கியும், தானே அதை களை பிடுங்குவது போல் பிடுங்கிப் போட்டு விட்டு, நாம் செய்யும் க்ரியாவான தோளை circular ஆக சுழற்றினால் குத்துப்பட்ட இடம் சரியாகிவிடுகிறது, அதற்கு பின்பு தான் உடலில் பலம் ஏறி ஒரு 200 கொலை செய்கிறார். அப்புறம் ஒரு பஞ்சு, ஒரு band-aid தையல் ம்ஹும் ஒண்ணும் தேவையில்லை. ஆனால் தோளை மட்டும் அவ்வப்போது சுழற்றணும். அவ்வளவுதான்.


அரிவாள், கத்தி, ஈட்டி, துப்பாக்கி, machine gun, எல்லாவற்றாலும் கொன்றாலும் திருப்தி அடையாமல் 'பத்தல பத்தல' என்று first blood 1, 2, 3 போல் (கடைசி சொட்டு blood வரை)   பீரங்கியால் சுட்டுப் பொசுக்குகிறார். ஆனால் எத்தனை  ஜீப், கார்கள்  வெடித்து தூக்கி எறியப்பட்டாலும் அதன் முன் நிற்கும் விஜய் சேதுபதிக்கு ஒன்றுமே ஆவதில்லை. அவரும் சாகா வரம் பெற்றவர். இவர் க்ரியா என்றால் VS ஒரு சின்ன நீல மாத்திரை முழுங்கியே மஹா பாஹுபலியாகி இடது கை சுண்டு விரலாலேயே எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார். அடிக்கடி தன் தங்கப்பல்லை காட்டுகிறார், போதை பொருளுக்கு முன் தங்கம் கடத்தி இருப்பார் போல. Fahad Fasil-உம் தன் பங்குக்கு மக்கள் தொகையைக் குறைக்கிறார். வயதான வேலைக்காரி திடீரென (agent tina வாம்) வில்லன்களை வெறும் 2 சின்ன முள் கரண்டியாலேயே (spoon) போட்டுத் தள்ளுகிறார். 


ஆட்களை அறுப்பது போதாதென்று ஒரு கல்யாணத்தில் ஆட்டை அறுக்கட்டுமா  என்று கேட்டுவிட்டு பிரியாணி விவரமாக செய்கிறார்கள்! கடைசி காட்சியில் கௌரவ வேடம் தாங்கிய சூர்யா, ஒருத்தன் தலையை வெட்டிவிட்டு, ரத்தக் காட்டேரிபோல் உறுமிவிட்டு படத்தை சுபமாக முடிக்கிறார். (படம் முடிந்த பின் அவருக்கு  rolex வாட்ச் பரிசாகக் கிடைக்கிறது, கமலிடமிருந்து, நடிப்பைப் பாராட்டி!). ஒரு கொலைக்கு ஒரு கோடி வீதம் படம் வசூல் செய்திருக்கிறது. 


படம் பார்த்து விட்டு   யாரைப் பார்த்தாலும்  கையில் என்ன ஆயுதம் இருக்குமோன்னு, குலை நடுங்குகிறது😟.


மொத்தத்தில் விக்ரம் வக்ர பக் பக் ரம்.


விக்ரம் - சொல்ல விட்டது👇🏻


Fahad Fasil காதலியிடம் 'நான் யாரு, என்ன செய்யறேன்னு நீ கேக்காததுனாலதான் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, இனிமேயும் கேக்கலேன்னாதான் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்' என்று ஒரு அற்புத, உன்னத ஒப்பந்தத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். எந்த அளவு அந்தப் பெண் sincere ஆ அதை follow பண்றான்னா, அவன் பேரைக் கூடத் தெரிஞ்சுக்கல! ரெண்டு பேரும்  ஒருவரை ஒருவர் பேபி ன்னுதான் கூப்பிட்டுகறாங்க! So பசங்களுக்கு கல்யாணம் ஆறதுக்கு அவன் பையனா இருந்தா போதும்😁😜


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

16 ஜூலை 2024


26 கருத்துகள்:

  1. தொடர்ந்து எழுதுவதற்கு வாழ்த்துகள் விஜி வெங்கடேஷ் அவர்கள்.

    ஆனால் விக்ரம் 2 படத்திற்கு இப்போ போய் விமர்சனம் எழுதியிருக்கீங்களே. இதுக்கு விக்ரம் 1 படத்தைப் பற்றி எழுதியிருந்தால் பதின்ம வயது நினைவுகளாவது மிஞ்சியிருக்கும்.

    சமூகத்திற்கு நல்லதல்லாதவற்றை திரையில் தீமாக எடுத்துக்கொண்டு இந்த மாதிரி திரைப்படங்கள் வந்தால், தவறான பழக்கங்களே கூச்சமில்லாமல் செய்யும் இயல்பு (குற்றவுணர்ச்சி இருக்காது). இளைஞர்களுக்கு வந்துவிடும். ஆனால் அதைப்பற்றி நினைக்க யாருக்கும் நேரமில்லை. கமலஹாசன் 400 கோடி சம்பாதிக்க இந்தப் படம் அவருக்குப் பயன்பட்டது. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ நெல்லை....ஹாஹாஹாஹா அவங்க எழுதியிருக்கறது விக்ரம் முதல் படத்திற்கான விமர்சனம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

      // அதையும் Book பண்ணியாயிற்றாம் விக்ரம் 2-க்கு (3- க்கு?).// இந்த வரி....மற்றும்

      ஃபகத் பாஸில் பற்றி சொல்லியிருக்கும் பாரா இதையும் பார்க்கலையா!!!??? அவர் காதலியை 1 ல் போட்டுவிடுவாங்களே!

      கீதா

      நீக்கு
    2. ஹல்லோ கீதா ரங்கன்.... அம்பிகா கமல் நடித்த, சுஜாதாவின் கதை முதல் விக்ரம். என் கல்லூரி ஆரம்ப காலத்தில் வந்தது. இடைவேளை வரை கதை சூப்பர்.

      இந்த விக்ரம், நல்ல படங்களை வெற்றிபெறச் செய்வார்கள், மோசமான தீம் கொண்ட படங்களை பெருவெற்றிபெறச் செய்வார்கள் தமிழர்கள் என்பதை உணர்த்தவந்த படம்.

      நீக்கு
    3. ஆமாம் கீதா..  விக்ரம் 1 கமல் அம்பிகா நடித்து 1986 ல் வெளிவந்தது.  இவர் சொல்லி இருப்பது விக்ரம் 2 2022 ல் வெளிவந்ததது.

      நீக்கு
    4. ஓ அந்த விக்ரமை சொல்றீங்களா நெல்லை அண்ட் ஸ்ரீராம்....ஹாஹாஹா எனக்கு அந்தப் படம் நினைவுக்கு வரவே இல்லை!!!! ஆ அப்ப இது விக்ரம் 2 ஆ நமக்கு எங்க அந்த அளவு CK எல்லாம். அப்ப ஓகே!! ரெண்டுபேரும் தப்பிச்சீங்க!!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    5. 2022-இல் வெளி வந்த படத்திற்கு 2024-இல் விமர்சனம்! இதுவே இப்படி என்றால் 2024-இல் வெளிவந்திருக்கும் இந்தியன் - 2 இன்னும் மோசமாக இருக்கும் என்று ஒரு எச்சரிக்கையாகவும் இந்தப் பதிவினை கருதலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி, ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அபத்தங்களின் உச்சம். அலறல்... ஒவ்வொரு காட்சியிலும் நம்மீது தெறிக்கும் ரத்தம்... ஆனால் இந்தியன் - 2 வுக்கு இது பரவாயில்லை என்று ஆகிவிட்டது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபத்தங்களின் உச்சம் - அதே! பார்க்காமல் இருப்பது நல்லது தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    விமர்சனம் படித்தவுடன் "எப்படி தொடர்ந்து பார்த்தீர்கள்" என்று கேட்கத் தோன்றுகிறது விஜியிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவுக்கு முன்னால் வரை கமல் படமாச்சே நிச்சயம் ஒண்ணு ரெண்டு scene ஆவது தீனி போடும் என்று பகல் கனவு(பகலில்தான் பார்த்தேன்!) கண்டேன்.
      விஜி.

      நீக்கு
    2. கோமதிக்கா நானும் அப்படித்தானே செஞ்சேன்...பின்ன பதிவு ஒன்னு தேத்தலாமேன்னுதான்!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. விஜி உங்கள் கருத்தேதான் எனக்கும்....நானும் விக்ரம் படம் பார்த்தேன் அதாவது எல்லாரும் கொடுத்த ஹைப்னால...அதுவும் எனக்கு இன்வெஸ்டிகேஷன், த்ரில்லர், ஸ்பை, ஏஜன்ட் படம் என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதால் போனா.....ஓ கடவுளே!!! நானும் விமர்சனம் எழுதினேன் எங்கள் தளத்தில்.

    ஃபகர் பாஸில் பற்றி சொல்லியிருக்கும் பகுதியில் பேர் கூடத் தெரிஞ்சுக்கலைன்ற ஒரு வரியைத் தவிர....பொதுவா தேசத்திற்க்காக ஸ்பை ஏஜன்ட் வேலை செய்பவர்கள் அவர்கள் என்ன செய்யறாங்கன்றது மனைவிக்குக் கூடத் தெரியாமத்தான் இருக்கும் 99% அப்படித் தெரிந்தாலும் மனைவி (பெண்ணாச்சே!!!!!) High Profile ரகசிய பாதுகாப்பு பார்க்கும் ஆள் போல செயல்பட வேண்டும். இல்லைனா அவ்வளவுதான். highly risky life.

    நிஜ ஏஜன்ட்களின் உண்மைக் கதைகளை வாசித்திருக்கிறேன் அதனால் தெரிந்து கொண்டது இது.

    பார்க்கப் போனா அது ஸ்பை ஏஜன்ட் படம் போல இல்லை. வெட்டுக் குத்து படம் போலதான் எடுத்திருந்தாங்க. ஸோ 2 எல்லாம் பார்ப்பேன்???!!! ஹாஹாஹா நெவர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. வாசகம் மிக அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  6. விஜி வெங்கடேஷ்16 ஜூலை, 2024 அன்று 8:52 AM

    இந்தியன்2 பார்த்து நொந்த உள்ளங்களுக்கு விக்ரம் 2 மட்டும் என்ன வாழ்ந்தது இதே கன்றாவிதான் என்பதற்காக எழுதியது.இனிமேலாவது மக்கள் நல்ல படங்களை வெற்றி அடையச் செய்வார்களேயானால் நல்லது. விமர்சனம் எழுதுவதற்காக கூட இந்தியன் 2 பார்த்து இரு புலன்களையும் படுத்த விரும்பவில்லை. பிழைத்துப் போகட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில்தான் கமலையே காணோமாமே....!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா ஹைஃபைவ் விஜி!! ஆ உங்களை விஜின்றேனே...நீங்க என்னை விட (ரொம்ப !!!!) சீனியரா?!

      கீதா

      நீக்கு
    3. தொடர்ந்து இங்கே எழுதுவதற்கு நன்றி விஜி. இந்தியன் 2 பார்க்க வேண்டாம் என முடிவு செய்தது நல்லதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. தங்களது விமர்சனம் நல்ல நையாண்டி மிகவும் இரசித்தேன்.

    ஆனால் டூ லேட் சினிமாவே பார்க்காத நான் மதுரை வெற்றி திரையரங்கில் (அந்த நேரம் மதுரையில் தங்கியிருந்தேன்) படம் பார்த்தேன் முன்பே விமர்சனம் செய்து இருந்தால் ???

    எனது 180 ரூபாய் மிச்சமாக்கி இருப்பேன். தங்களது கேள்விகள் மிகச்சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா 180 ரூபாய் போச்சா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. விஜி வெங்கடேஷின் sarcastic விமர்சனத்தை வெகுவாக ரசித்தேன். விக்ரம் - ட்ரெய்லர் பார்த்தே படம் பார்க்கத் தோன்றவில்லை. நல்லவேளை பார்க்கவில்லை என்று இப்போது நிம்மதியாக இருக்கிறது. வர வர எல்லாப் படங்களும் வன்முறையின் உச்சத்தைத் தாண்டி எங்கோ போய்க்கொண்டிருக்கின்றன. காலக்கொடுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜி அவர்கள் பகிர்ந்து கொண்ட விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதமஞ்சரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. வாசகம் அருமை. சமீப காலமாக திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகள் பெருகி வருவது வருத்தத்தை அளிக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வன்முறை நிறைந்த சினிமாக்கள் - காலத்தின் கொடுமை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....