அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நோய்டா ஃப்ளவர் ஷோ - 2024 - நிழற்பட உலா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் கடந்த திங்களன்று இப்பக்கத்தில் எழுத ஆரம்பித்தது நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தொடரின் முந்தைய பகுதிக்களான சுட்டிகள் கீழே! அப்பகுதிகளை நீங்கள் படித்திருக்காவிட்டால், படித்து விடுங்களேன்.
த்வாரகா - சோம்நாத் - முதலாம் பாகம்
த்வாரகா - சோம்நாத் - இரண்டாம் பாகம்
த்வாரகா - சோம்நாத் - மூன்றாம் பாகம்
இதோ இன்றைக்கு, பயணத் தொடரின் நான்காம் பாகம் உங்கள் பார்வைக்கு! வாருங்கள் த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களின் வார்த்தைகளில் படித்து ரசிக்கலாம்! - நட்புடன் - வெங்கட் நாகராஜ், புது தில்லி! ஓவர் டு விஜி!
******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், உங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி.
காலை சோம்நாத் தரிசனம் முடிந்து வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்தோம். படு சுத்தம். சுற்றிலும் மரகதப் புல்வெளி. திருச்செந்தூர் போல கடலருகில் நீண்ட corridor போன்ற நடைபாதை, அதனருகில் ஒரு Bபாண் (அம்பு) ஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கம்பத்தின் உச்சியில் ஒரு உருண்டை வடிவம், அதன் வழியாக ஒரு அம்பு துளைத்துக் கொண்டு தென் துருவத்தைப் பார்க்க அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது அந்த அம்பிலிருந்து தென் துருவம் வரை நிலப்பரப்பே கிடையாது நீர் பரப்பு மட்டுமே என்பதைக் குறிக்க. அது பற்றிய குறிப்பு அக்கம்பத்தின் கீழே எழுதப்பட்டிருக்கிறது. பிரமித்துப்போனோம். எந்த திசை கருவிகளோ, தொலைநோக்கிகள் இல்லாத காலத்தில் (பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு) இத்தனைத் துல்லியமாக கணித்து இக்கம்பம் அமைக்கப்பட்டதை நினைத்துப் பூரித்துப்போனோம். பிரதான கோபுரத்துக்குப் பின்னால் இருக்கும் ஒரு கோபுரம் மேற்பகுதி தகர்க்கப்பட்டு மொட்டையாக நிற்கிறது. பார்வதி தேவி சன்னதியாம். அன்னிய படையெடுப்பு செய்தவர்கள் அழித்துவிட்டுப் போனபிறகு திரும்ப இக்கோபுரம் ஏனோ பூர்த்தி செய்யப்படவில்லை. அதனால் அம்பிகை சோமநாதர் சன்னதியிலேயே (லிங்கத்துக்குப் பின்னால்) அருள் பாலிக்கிறாள்.
பின்னர் அருகிலிருந்த தென்னாட்டு வைணவ கோவில் முறையில் அமைக்கப்பட்ட லக்ஷ்மி நாராயணர் கோவிலுக்குச் சென்று பெருமாளையும் கோதை நாச்சியாரையும் தரிசனம் செய்து கொண்டோம். மதியம் அறைக்கு வந்து சற்று நேரம் இளைப்பாறி இரவு 8 மணிக்கு சோம்நாத் கோவிலில் நடக்கும் lazer show பார்க்கக் கிளம்பினோம். தலைக்கு Rs.40/- டிக்கெட் வாங்கிக்கொண்டு பின்னால் இருக்கும் ஒரு திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் அமர்ந்தோம்.சுமார் 200 பேர் இருப்போம். திடீரென்று கோவில் வளாகத்தின் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு கும்மிருட்டு, எங்கும் நிசப்தம். கடலலையின் சப்தம் மட்டும் கேட்க, குழந்தைகள் கூட சிணுங்க மறந்து பார்த்துக் கொண்டிருக்க, அமானுஷ்யமான சூழல். திடீரென்று கோவில் கோபுரத்தின் மீது ஒளி பாய்ச்சப்பட்டு அதுவே வெண்திரையாகி பின்னணியில் ஒரு கனமான கம்பீரமான ஆனால் மெதுவான ஒரு ஆண் குரல் சோமநாத ஆலயத்தின் வரலாற்றை சொல்லச் சொல்ல அதற்கேற்ப திரை ஒளி, ஒலி வடிவம் பெற, அந்தக் குளிர்ந்த இரவு, பால் நிலவு, கண் முன்னே காணும் மாயா ஜாலம், அந்த கம்பீர காந்தக்குரல் அனைத்தும் நம்மை வேறு உலகத்துக்குக் கொண்டு செல்கின்றன.
எத்தனை எத்தனை படையெடுப்பு, ஆலய அழிப்பு, நகை சூறையாடல். இக்கோவிலை அன்னிய படையெடுப்பாளர்களிடமிருந்து காப்பாற்ற ஆலய பண்டிதர்களும், சேவகர்களும், பொதுமக்களும் கோவிலைச் சுற்றி மறைத்து நிற்க அனைவரையும் வெட்டிச் சாய்த்துவிட்டு உள் நுழைந்து அவர்கள் செய்த கோர அட்டூழியங்களும், பல்லாயிரம் மக்களின் உயிர்த் தியாகங்களும் நம்மை உலுக்குகின்றன. வாயில் கைக்குட்டை வைத்து மூடினாலும் அதை மீறி நம் கேவல் வெளிப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு படையெடுப்பு, சிதைப்புக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் மீண்டும் வானளாவ உயர்ந்து நின்ற, நிற்கும் அக் கோபுரத்தை நிமிர்ந்து பார்க்க நெஞ்சம் விம்முகிறது. சர்வேஸ்வரா, ஈரேழு புவனத்தையும் உன் சிறு நடன அசைவால் இயக்கும் உன் பெருமையை, சக்தியை யாராவது அடக்க முடியுமா, அளக்கத்தான் முடியுமா🙏🏻🙏🏻🙏🏻 காட்சி முடிந்து எங்கும் ஒளி பரவ கனத்த மனத்தோடும் கசிந்த கண்களோடும் அங்கிருந்து கிளம்பினோம்.
வெறும் புனித யாத்திரையாக மட்டுமல்லாது நடு நடுவே சுவாரசியமான சில நிகழ்வுகளையும் அது அளித்தது, சொல்கிறேன்.
திரும்பி rajkot வரும் வழியில் Girnar சென்றோம். அது ஒரு மலை யாத்திரை ஸ்தலம். 5500 படிகள் ஏறினால் அம்பாஜி என்னும் தேவி கோவிலும், 10000 படிகள் ஏறினால் தத்த மந்திர் எனப்படும் தத்தாத்ரேயர் கோவிலும் இருக்கின்றன. பயப்படவேண்டாம். rope car (பழனியில் winch என்பார்கள்) வசதி இருக்கிறது (அம்பா மாதா கோவில் வரை). இது ஆசியாவிலேயே நீளமான (2.13 KM) rope way யாம். 200 அடி உயரத்தில் அம்பா(ள்) கோவில் இருக்கிறது. தலைக்கு 700 ரூ கட்டணம் செலுத்தி 4 பேர்கள் தாராளமாக உட்காரும் (3x3) ஒரு சதுரப் பெட்டி போன்ற, சுற்றிலும் கண்ணாடி ஜன்னலுடன் கூடிய car ல் ஏறி உட்கார்ந்தோம் (நம் பாரம் ஏறியதும் நம் ஊர் ஆட்டோ போல சற்று ஆடியது!திடுக்.) தோழி உமா, நான் ஏற்கெனவே 5500 படிகள் ஏறியே (😧) போய் தரிசனம் பண்ணிவிட்டு வந்தாயிற்று. ஆகவே இப்போது வரவில்லை, நீங்கள் போய் வாருங்கள் என்று கழண்டு கொண்டாள், புத்திசாலி.
கார் மெதுவாக inch inch ஆக மேலே ஏறியது (வின்ச் என்பதை inch என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்). நடுவில் வரும் pillar ஐ கார் தாண்டும்போது லேசாக ஒரு குலுக்கல். நமக்கும் உள்ளே ச்சும்மா அதிருதில்ல😧. பயத்தை வெளிக்காட்டாமல் சுற்றிலும் தெரியும் மலைமகளின் மரகதப் போர்வையையும், தூரத்தில் இருக்கும் பளிங்கு நீர் நிலையையும் சற்றுக் கீழே தெரியும் ஜெயின் கோவிலையும், கீ......ழே படிக்கட்டுகள் வழியாக ஏறி வரும் சிலரையும் (யப்பா பாரக்கும்போதே முழங்கால் முனகியது!) பார்த்துக் கொண்டும், ரசித்துக்கொண்டும், எதிர் வரும் கார்களை (அவைகள் சல்லென்று வேகமாக இறங்குகின்றன. நானும், சரி இறங்கும்போது விர் ரென்று இறங்குவோம் போல என்று நினைத்தால், ம்ஹும், அப்பவும் எங்குளுது inch தான், புரியலை) போட்டோ எடுத்துக்கொண்டு பயணிக்க, கிட்டத்தட்ட 7 நிமிடத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டு விடுகிறது. வெளியே வந்து 18, 20 படிகள் ஏறினால் தேவி தரிசனம்🙏🏻. சுயம்பு மூர்த்தி போல இருந்தது. திரும்ப rope கார் பயணம்.
வரும் வழியில் ஒரு குஜராத்தி ஹோட்டலில் குஜராத்தி தேப்லா, (நம் வெந்தயக்கீரைச் சப்பாத்தி எண்ணையில் குளித்தது போல் ஒரு பண்டம்) வெங்காயம், பூண்டு போடாததாக (புனித யாத்திரையிலிருந்து திரும்புகிறோமல்லவா🙂) special ஆகச் செய்து வாங்கிக்கொண்டு காரில் ஏறினோம். விவேக் படம் போல் எங்கும் ரோடு வேலை, அதனால் ஏகப்பட்ட 'take diversion'. ஒரு வழியாக airport வந்து சேர்ந்து எங்கள் பார்த்த சாரதியை (டிரைவர் அனுபாய்) நன்றி சொல்லி (கவனித்து) விடை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தோம். அப்பாடா என்றபடி ,நல்லபடியாக எல்லாம் முடிந்து(?!) flight ஏறத் தயாரானோம். அவ்வாறு ஏற முடிந்ததா???? சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன்.
ஜெய் சோம்நாத்ஜி கி🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் துவாரகாதீஷ் கி🙏🏻🙏🏻🙏🏻
இப்பயணத் தொடரில் தொடர்ந்து என்னுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அடுத்த பகுதியில் மீண்டும் சந்திப்போம். அதுவரை… நட்புடன் விஜி வெங்கடேஷ்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
8 ஜூலை 2024
நாம் வைத்திருக்கும் திசைக்கருவிகள் போல் அல்லாமல் அவர்கள் அப்போது வேறுவகையில் வைத்திருந்திருக்கலாம்!
பதிலளிநீக்குபடங்கள் ஆவலைத் தூண்டுகின்றன.
பதிவு குறித்த தங்களது கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குவாசகம் அருமை. பயணத் தொடர் படிக்க அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்கள் மிக நன்றாக இருக்கிறது.
சோமநாத ஆலயத்தின் வரலாற்றை ஒளி, ஒலி காட்சியில் பார்த்து ரசித்த அனுபவம், மற்றும் அம்பா மாதா கோவிலுக்கு rope carல் பயணம் செய்த அனுபவம் இரண்டும் அருமையாக இருந்தது.
தொடர்கிறேன்.
வாசகமும் இந்த பயணத் தொடரின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குபதிவு வழி பகிர்ந்த செய்திகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஒலி ஒளிக்காட்சி சூப்பரா இருக்கும் போல....
பதிலளிநீக்கு//எங்கும் நிசப்தம். கடலலையின் சப்தம் மட்டும் கேட்க,//
ஆஹா! எனக்கு இப்படி இருக்க ரொம்பப் பிடிக்கும். இருட்டில் கடல் ஒலி அல்லது நதி ஒலி கேட்டுக் கொண்டே கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது சுகம்.
மலை அம்பா மாதா கோயில் ரோப் கார் பயணம் விவரங்கள் தெரிந்தது,
ஒரு Bபாண் (அம்பு) ஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கம்பத்தின் உச்சியில் ஒரு உருண்டை வடிவம், அதன் வழியாக ஒரு அம்பு துளைத்துக் கொண்டு தென் துருவத்தைப் பார்க்க அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது அந்த அம்பிலிருந்து தென் துருவம் வரை நிலப்பரப்பே கிடையாது நீர் பரப்பு மட்டுமே என்பதைக் குறிக்க. அது பற்றிய குறிப்பு அக்கம்பத்தின் கீழே எழுதப்பட்டிருக்கிறது.//
அப்போதைய தொழில்நுட்பம்!
பயண அனுபவங்கள் சிறப்பு.
கீதா
ஒலி ஒளி காட்சி நன்றாகவே இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் சில இடங்களில் கேட்டு/பார்த்து ரசித்திருக்கிறேன். தில்லியிலும் கூட இப்படியான காட்சிகள் இருக்கின்றன. சமீபத்தில் திருச்சியில் ஆரம்பித்தார்கள் - ஆனால் இது வரை பார்க்க முடியவில்லை - நன்றாக இல்லை என்று சிலர் சொல்லக் கேட்டேன்!
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
ஒலி ஒளிக்காட்சி நான் பார்த்ததில்லை ஜி இதுவரை. நீங்கள் சொல்லியிருப்பது போல் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும்.
நீக்குகீதா
வாய்ப்பு கிடைக்கும் போது பாருங்கள் கீதா ஜி. நன்றாகவே இருக்கும்.
நீக்குகிர்னர் பற்றி அறிந்ததில்லை. ஆனால் நிறைய இடங்களில் ரோப் காரில் சென்றிருக்கிறேன் (காண்டலா என்றும் சொல்வார்கள்). அதில் கால் வைக்கும் தரைப்பகுதியில் முற்றிலும் கண்ணாடியால் ஆன ரோப்காரிலும் பயணம் செய்திருக்கிறேன். கீழே பார்த்தால் தலை சுற்றும். 5000 படிகளா இல்லை 500 படிகளா? திருப்பதி மலைக்கே அவ்வளவு படிகளாயிற்றே.
பதிலளிநீக்குசோம்நாத் கஸினி படையெடுப்பைப் பற்றிப் படித்திருக்கிறேன். அவ்வளவு கொடூரமான நிகழ்வு. நான் அங்கு காணொளி பார்த்ததில்லை.
5500 படிக்கட்டுகள் தான் நெல்லைத்தமிழன். மிகவும் அதிக படிகள் இங்கே. மேலே இருக்கும் தத்தாத்ரேயர் கோயிலுக்கு சுமார் 10000 படிகள்.
நீக்குரோப் காரை ஹிந்தியில் உடன் கட்டோலா என்று அழைக்கிறார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரஸ்யமான சொல் நடை ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான தகவல்கள் விளக்கங்கள். அந்த ஒளி ஒலி நிகழ்ச்சி நேரில் கண்டது போல் இருந்தது.
பதிலளிநீக்குபார்வதி தேவியின் கோபுரம் ஏன் அதை இப்போதும் கட்டி முடிக்காமல் இருக்கிறார்கள்? இனி என்ன தடை செய்து முடிக்கலாமே?
ரோப்வே ஏறுமிடம் நீங்கள் சொன்னதை வைத்து ரொம்ப நேரம் எடுத்திருக்குமோ என்று நினைத்தேன் 7 நிமிடம் தான் இல்லையா.
துளசிதரன்
பார்வதி தேவியின் கோபுரம் - கட்டிமுடிக்காமல் விட்டிருப்பதன் காரணம் தெரியவில்லை துளசிதரன் ஜி.
நீக்குரோப்வே வழி சீக்கிரம் சென்றுவிடலாம் - நடந்தால் முடியாது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு