அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட உலக மக்கள்தொகை தினம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்
வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்
வாரணாசியில் ஒன்பது நாட்கள் பதிவுத் தொடரின் சென்ற இரண்டு பகுதிகளில் வாரணாசி நகரின் கங்கைக் கரையில் அமைந்திருக்கும் எண்பத்தி நான்கு படித்துறைகளில் சில படித்துறைகள் குறித்த தகவல்களை நாம் பார்த்தோம். தொடர்ந்து இந்தப் பகுதியில் கங்கைக் கரையில் இருக்கும் மற்றொரு பிரபல படித்துறையான சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் குறித்த சில தகவல்களையும் அங்கே இருக்கும் வசதிகள் குறித்தும் பார்க்கலாம். பெயரிலிருந்தே இந்தப் படித்துறைக்கும் சந்த் ரவிதாஸ் அவர்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். யார் இந்த சந்த் ரவிதாஸ்? பார்க்கலாம் வாருங்கள்.
சந்த் ரவிதாஸ் - பன்னிரெண்டு சீக்கிய குருமார்களில் ஒருவரான சந்த் ரவிதாஸ் ஒரு கவிஞர் மட்டுமல்லாது ஆன்மீக குருவாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர். 15-16 நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர் தற்போதைய உத்திரப் பிரதேசத்தில் பிறந்தவர் என்றும், அவருக்கு உத்திரப் பிரதேசம், பீஹார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா என பல பகுதிகளில் பின் தொடர்பவர்கள் இருந்தார்கள் என்றும் அவரது எழுத்துக்கள் சீக்கியர்களின் புனித நூலான Gகுரு Gக்ரந்த் Sசாஹிப்-இல் இருக்கிறது என்றும் சொல்வார்கள். வாரணாசி நகரில் ராஜ் Gகாட் அருகே சந்த் ரவிதாஸ் அவர்களுக்கு ஒரு அழகான கோவில் அமைந்திருக்கிறது. அவரது நினைவாக, மாயாவதி அவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது ஒரு பெரிய படித்துறையை கங்கையின் தென்பகுதியில் ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி நிர்மாணிக்கப்பட்டு அழகான ஒரு படித்துறை - சந்த் ரவிதாஸ் Gகாட் என்ற பெயரில் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கிறது.
இந்த படித்துறையின் வெளியே சுமார் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அங்கே ஒரு அழகிய பூங்காவும், அதிக அளவில் பக்தர்கள் வந்து கொண்டாட்டங்கள் கொண்டாட வசதியாக இடமும் அமைத்திருக்கிறார்கள். சென்ற பகுதி ஒன்றில் சொன்னது போல கங்கையில் செல்லும் க்ருயிஸ் படகுகள் இந்தப் படித்துறையிலிருந்து தான் செயல்படுகின்றன. இது தவிர இந்த படித்துறையிலிருந்தே Hot Air Balloon/Helium Balloon மூலம் பறந்தபடியே வாரணாசி நகரையும், கங்கை நதி மற்றும் அதன் அழகிய படித்துறைகளையும் பறவைப் பார்வையில் பார்க்கும் சில வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் சென்ற போது எங்களால் இந்த வசதியை பயன்படுத்த முடியவில்லை என்பதில் வருத்தமுண்டு. வேறு ஒரு பயணத்தில் இங்கே சென்று முயற்சிக்க வேண்டும்.
வாரணாசி நகரில் நடக்கும் பிரபல திருவிழாக்களான (d)தேவ் தீபாவளி, கங்கா மஹோத்ஸவ் போன்ற நிகழ்வுகளும் தற்போது சந்த் ரவிதாஸ் படித்துறையிலேயே நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் தீபாவளி முடிந்த பதினைந்தாம் நாளில் தேவ் தீபாவளி எனும் உற்சவம் மிகவும் உற்சாகத்துடன் இங்கே கொண்டாடுவது வழக்கம். தேவ் தீபாவளி சமயத்தில் கங்கையின் அனைத்து படித்துறைகளிலும் லக்ஷக் கணக்கில் தீபங்கள் ஏற்றப்பட்டு மக்கள் பெருமளவில் வந்திருந்து பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாக இருக்கிறது. கங்கை நதி பாயும் அனைத்து பிரபல நகரங்களிலும் இந்த தேவ் தீபாவளியானது உற்சாகத்துடனும் மிகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுவது இங்கே வழக்கம். சுற்றிலும் இருக்கும் கிராமங்கள் அனைத்திலிருந்தும் மக்கள் வந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். பண்டிகைகள் என்பது எப்போதும் உற்சாகத்தினையும் மன நிம்மதியையும் அளிக்கக் கூடியது தான் என்பதில் சந்தேகமில்லை. நம்மிடம் இருக்கும் வசதியைக் கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது நல்லது - அதிகமாக ஆசைப்படாமல் இருக்கும் வசதிகளைக் கொண்டு கொண்டாட்டங்கள் அமைந்துவிட்டால் என்றென்றும் மகிழ்ச்சி தானே!
தேவ தீபாவளியின் சிறப்பு என்ன என்பதையும் சொல்லாமல் விடுவது சரியல்லவே? ஒவ்வொரு வருடமும் தீபாவளியை அடுத்த கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளன்று தேவலோகத்திலிருந்து அனைத்து தேவர்கள், தேவதைகள் பூமிக்கு வந்திருந்து கங்கையில் புனித நீராடுவதாக ஒரு நம்பிக்கை. தேவலோகத்தில் இருக்கும் அனைவரும் இந்த நாளில் கங்கையில் நீராடும் அதே நாளில் பூலோகத்திலிருக்கும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களும் கங்கையில் புனித நீராடுவதன் மூலம் புண்ணிய பலன்களை பெற முடியும் என்பது ஒரு வித நம்பிக்கை. அதனால் கங்கைக் கரையில் எண்ணிலடங்கா மக்கள் வந்திருந்து கங்கையில் புனித நீராடுவது வழக்கமாக இருக்கிறது. அந்த நாளில் வாரணாசி நகரின் அனைத்து படித்துறைகள் உட்பட நகரமே ஒளிவெள்ளத்தில் இருப்பது போல இருக்கும். சென்ற வருடத்தின் தேவ தீபாவளி அன்று 12 லக்ஷம் விளக்குகள் ஏற்றப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. நகரமே ஒளிமயமாக இருப்பதோடு கரைகளும் ஒளிமயமாக இருப்பதைப் பார்ப்பதே ஒரு வித அழகு தானே!
தேவ தீபாவளி கொண்டாட்டத்திற்கு நான்கு நாட்கள் முன்னர், அதாவது தீபாவளி கொண்டாட்டத்தை அடுத்த கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதஸி நாள் அன்று கங்கா மஹோத்ஸவம் என்ற பெயரில் தேவ தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்தக் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக வாரணாசி நகரிலும் கங்கை நதி பாயும் மற்ற இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. வண்ணமயமான இந்த விழாவினைக் காண மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது, வட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்து சேர்கிறார்கள். கோலாகலமான கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் உண்டு. இந்த வருடம் நவம்பர் மாதம் நீங்கள் காசிக்கு வரும் திட்டமிருந்தால் இந்த கொண்டாட்டங்களைக் கண்டு மகிழலாம். 11 நவம்பர் 2024 அன்று ஆரம்பித்து 15 நவம்பர் 2024 வரை இந்தக் கொண்டாட்டங்கள் நடக்க இருக்கிறது.
எனது இந்தப் பயணத்தில் இரண்டு முறை இந்த சந்த் ரவிதாஸ் படித்துறைக்கு சென்று வந்தேன். படகுப் பயணம் முடிந்து இந்த படித்துறையில் தான் நம்மை இறக்கி விடுவார்கள் என்பதால் அங்கே வெளியே வந்து சில நிமிடங்கள் அமர்ந்து அந்தச் சூழலை ரசிக்க மிகவும் சிறப்பாக இருந்தது. பூங்காவும் அழகாகவே பராமரித்து வருகிறார்கள். தவிர சந்த் ரவிதாஸ் அவர்களின் உருவச் சிலை ஒன்றும் இங்கே நிர்மாணித்து இருக்கிறார்கள். நான் அங்கே சென்ற நேரம் அதிக வெளிச்சம் இல்லாத நேரம் என்பதால் நிழற்படங்கள் எடுக்க இயலவில்லை. மாலை நேரங்களில் குடும்பத்துடன் சென்று வருவதற்கு ஏற்ற இடமாக இந்த படித்துறை இருக்கிறது. பல படித்துறைகள் பழமையாக இருந்தாலும், சந்த் ரவிதாஸ் Gகாட், நமோ Gகாட் போன்றவை புதியதாக நிர்மாணிக்கப்பட்டு இருப்பதால் இப்போது சிறப்பான வசதிகளுடன் இருக்கிறது என்பது பாராட்டுக்குரியது.
இங்கே இருக்கும் ஒவ்வொரு படித்துறைக்கும் ஏதேனும் ஒரு கதை இருக்கிறது என்பதும், ஒவ்வொன்றும் ஏதோ விதத்தில் பிரபலமாக இருக்கிறது என்பதும் தெள்ளத்தெளிவு. பொதுவாக சுற்றுலா பயணிகள் காசி விஸ்வநாதர் கோவில் அருகே இருக்கும் சில படித்துறைகளுக்கு மட்டுமே சென்று திரும்பிவிடுகிறார்கள் - அதுவும் கிடைக்கும் ஒன்றிரண்டு நாட்களில் அனைத்து படித்துறைகளுக்கும் சென்று வருவதும் சாத்தியமில்லை. படித்துறைகளையே பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே இருக்கும் எண்ணிலடங்கா கோவில்களை எப்போது பார்ப்பது? பல கோவில்கள் இன்றைக்கு இல்லாமலேயே போய்விட்டது. சில கோவில்கள் வீடுகளாக மாறிவிட்டது - சில வீடுகளுக்குள் மறைந்துவிட்டது! நாங்கள் சென்று இருந்த சமயங்களில் சில இடங்களை கையகப்படுத்தி அங்கே இருந்த கட்டிடங்களை இடித்த போது வெளிவந்த கோயில் சின்னங்கள், சிலைகள் போன்றவற்றையும் காண முடிந்தது. ஆண்டாண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தால் நம்முடைய புராதனச் சின்னங்கள் பலவற்றை காலப்போக்கில் இழந்து விடுவோம் என்பதற்கு காசி நகரமும் ஒரு எடுத்துக்காட்டு என்பதை அங்கே சென்ற பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.
தொடர்ந்து இந்தப் பயணத்தில் நான் சென்று வந்த சில இடங்கள்/கோவில்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். மேலும் சில அனுபவங்களுடன் உங்களை அடுத்த பகுதியில் சந்திக்கிறேன். அதுவரை தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
12 ஜூலை 2024
சந்த் ரவிதாஸ் படித்துறை பழமையானது அல்லவே என்ற எண்ணம் மனதில் தோன்றியது, உங்கள் மேற்கொண்ட வரிகளை படித்ததும் அகன்று விட்டது. அங்குதான் சகல வசதிகளும் இருக்கின்றன போலும். படங்கள் யாவும் அழகு, கவர்கின்றன.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அழகு. ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பார்க்கலாம்
பதிலளிநீக்குகாசி நகருக்குச் சென்று வரும் வாய்ப்பு உங்களுக்கு விரைவில் அமையட்டும்.
நீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது ஜி.
பதிலளிநீக்குதகவல்கள் சிறப்பு
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குபடங்கள் அழகு. அதுவும் வாரணாசி வைரமென ஜொலிக்கும் விதத்தை அருமையாக பிடித்திருக்கிறீர்கள். சில படங்கள் டிரோன் ஷாட் போன்று தோன்றுகின்றன. முதல் படம் படகின் நிழல் உட்பட வந்திருப்பது அருமை.
பதிலளிநீக்குJayakumar
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குதேவதீபாவளியும் அதன்சிறப்பும் அறிந்தோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு