அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வரம் தரும் வாராஹி கோயில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் தகவல் : Bபோட்டியா…
Bபோட்டியா… - இது என்ன புதுசா ஒரு பெயர் என்று கேட்பவர்களுக்கு, இந்த வாரத் தகவலாக ஒரு விஷயம். ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மலைப் பிரதேசங்களில் மேய்ப்பர்கள், தங்களது ஆடுகளை Bபாக்(g) மற்றும் (Th)தேந்துவா என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புலி, சிறுத்தை போன்ற மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக பழக்கி வைத்திருக்கும் ஒரு வகை நாய் தான் Bபோட்டியா… அதிக முடி, கடுமையான பற்கள் கொண்ட இந்த வகை நாய்கள் தங்களது பற்களால் புலி, சிறுத்தை போன்றவற்றை பிடித்தால் விடாது என்று சொல்கிறார்கள். பார்க்கவே பயமாகவும் இருக்கும் இந்த Bபோட்டியா… இந்தப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் போது மேய்ப்பர்களுடன் இந்த வகை நாய்களை பார்த்ததுண்டு என்றாலும் அவை குறித்து அதிகம் யோசித்ததோ, தகவல்களைக் கேட்டதோ கிடையாது. எனது அலுவலக நண்பர் ஒருவருடைய வீட்டில் இந்த வகை சுமார் 15 வருடங்களாக வளர்த்து வருகிறார். மூப்பின் காரணமாக தனது முடிவு வந்துவிட்டது என்று அறிந்து விட்டதோ என்னவோ, கடந்த 10 நாட்களாக உணவருந்தாமல் இருக்கிறது என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். தனது முடிவுக்காக காத்திருக்கும் அவரது செல்ல நாய் குறித்து மனவருத்தம் அவரிடம் அதிகமாக இருக்கிறது. கேட்டதிலிருந்து எனக்கும் கொஞ்சம் வருத்தம் தான்!
******
இந்த வாரத்தின் நிதர்சனம் : வகுப்பறை…
அலைபேசிகள் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எல்லோருக்கும், குழந்தைகள் உட்பட அலைபேசி இல்லை என்றால் என்னவோ ஆகிவிடுகிறது. அதை விட்டு விலக யாருக்கும் பிடிப்பதில்லை. சமீபத்தில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் தொடர்ந்து காணொளிகளை (ரீல்ஸ்) பார்த்துக் கொண்டே இருந்தார். கைகள் தொடர்ந்து மேலே தள்ளிக் கொண்டே இருக்கிறது காணொளிகளை! கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படிச் செய்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது! ஏன் இத்தனை மோகம்! இதன் மூலம் என்ன கிடைக்கப் போகிறது? ஏதேனும் பயன் உண்டா? ஒன்றும் இல்லை என்பது தான் நிதர்சனம். இதைச் சொல்லும் விதமாக பார்த்த நிழற்படம் ஒன்று மேலே! பள்ளிகளில் நிழற்படம் சொல்வது போல காலம் வந்தாலும் வரலாம்! அப்படி வந்தால் அதிசயப் படுவதற்கில்லை. எங்கே போய் முடியப் போகிறதோ இந்த அலைபேசி மோகம்!
******
பழைய நினைப்புடா பேராண்டி : சப்பாத்தி – வட இந்திய கதை....
2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சப்பாத்தி – வட இந்திய கதை - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
அந்த கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதியவர் – அவருக்கென யாரும் கிடையாது. தள்ளாடும் வயது. கூடவே கூன் முதுகு வேறு. கையில் குச்சியை வைத்துக் கொண்டு தரையில் ஊன்றியபடியே கூன் முதுகோடு, தலையை மட்டும் தூக்கியபடியே நடந்து செல்வார். ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்மணி வைத்திருக்கும் சப்பாத்தியை எடுத்துக் கொண்டு ”தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்.... நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்”
ஒவ்வொரு நாளும் இப்படி பெண்மணி சப்பாத்தி வைப்பதும் அந்த முதியவர் அதை எடுத்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்தது. அது போலவே அந்த முதியவர் சப்பாத்தியை எடுத்துக் கொண்ட பின் ”தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்.... நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்” என்று சொல்வதும் தொடர்ந்தது. இப்படிச் சொல்வது தவிர வேறு ஒரு வார்த்தை பேச மாட்டார் அந்த முதியவர்.
பல நாட்கள் இப்படி தொடர்ந்து நடக்க, சப்பாத்தி வைக்கும் பெண்மணிக்கு மனதில் கோபம் உண்டாயிற்று. “நானும் தினம் தினம் இப்படி சப்பாத்தி செய்து வைக்கிறேன். இந்த முதியவரும் அதை எடுத்துக் கொள்கிறார். ஆனாலும், அவருக்கு கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி இருக்கிறதா? வாயைத் திறந்து நன்றி என ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஏதோ ’தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்.... நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்’ என்று சொல்லிப் போகிறாரே?” என்று யோசிக்கத் துவங்கினாள்.
அந்த யோசனை அவளுக்கு இன்னும் அதிக கோபத்தினை வரவைத்தது. அதிக கோபம் ஆபத்தான விளைவினை உண்டாக்குமே! அப்பெண்ணுக்கு அப்படி கொடுமையான யோசனை உண்டாயிற்று.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல் : ராஜா பய ஒண்ணு
முன்பு நிறைய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். தற்போது பாடல்கள் கேட்பது வெகு அரிது! சமீபத்தில் யூ தளத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட பாடல் - ராஜா பய ஒண்ணு என்கிற புதிய பாடல். விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா படத்தில் இந்தப் பாடல் வருகிறதாம். கேட்டுப் பார்த்தேன் - எனக்கு பிடித்திருந்தது! உங்களுக்கும் பாடல் பிடித்திருக்கலாம் - கேட்டுப் பாருங்களேன்.
மேலே உள்ள காணொளியை பார்ப்பதில் தடங்கல் இருந்தால் கீழே உள்ள சுட்டி வழியும் பார்க்கலாம்.
******
இந்த வாரத்தின் உணவு : விதம் விதமாய் சமோசா
நம் ஊரில் சம்சா எவ்வளவு விற்பனை ஆகிறதோ, அதை விட அதிக அளவில் இந்த ஊரில் சமோசா விற்பனை ஆகிறது. நம் ஊரில் கிடைக்கும் சம்சாவில் வெங்காயம் தவிர Stuffing ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை. ஆனால் இங்கே கிடைக்கும் சமோசாக்களில் Stuffing தான் பிரதானம். பொதுவாக உருளைக்கிழங்கு, பட்டாணி போன்றவை தான் அதிகம் இருக்கும். சில இடங்களில் முந்திரி, திராட்சை, பனீர் போன்றவையும் சேர்த்து சமோசா கிடைக்கிறது. வடக்கில் இதைச் சாப்பிடாதவர்கள், பிடிக்காதவர்கள் அபூர்வம். எங்கே விருந்து என்றாலும் சமோசா, பனீர் பகோடா, பானிபூரி என்று அதிக அளவில் உண்ணப்படும் உணவு இது. சமீப வருடங்களில் இந்த சமோசாவிலும் நிறைய முன்னேற்றங்கள் வந்து விட்டன. விதம் விதமாக கிடைக்கிறது. சாக்லேட் சமோசா கூட கிடைக்கிறது! ஒன்றிரண்டு வகைகள் நானும் சுவைத்திருக்கிறேன் என்றாலும் ஏனோ சாதாரண சமோச்சாக்களுக்கே எனது ஓட்டு. தில்லியின் மோதி நகர் பகுதியில் ”குமார் சமோசா வாலே” என்று ஒரு கடை - அவர்களிடம் முப்பது விதமான சமோசாக்கள் கிடைக்கின்றன! கடை குறித்த தகவல்கள், சமோசாக்களின் வகைகளை பார்க்க விரும்பினால் இணையத்தில் குமார் சமோசா வாலே என்று தேடிப் பாருங்களேன். மாதிரிக்கு ஒன்று கீழே!
KUMAR SAMOSE WALA.....MOTI NAGAR (youtube.com)
******
இந்த வாரத்தின் வேதனை : நிலச்சரிவுகள்
உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப் பிரதேசங்களில் மழை நாட்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. எல்லா வருடங்களும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதும், சொத்துக்கள் பாழாவதும் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த வருடம் கூட இப்படி நிறைய இயற்கையின் சீற்றம் பலரை பலி வாங்கியிருக்கிறது. ஒரு விதத்தில் மனிதர்களின் பேராசையும் இந்த மாதிரி அழிவுகளுக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மலைப் பிரதேசங்களில் நடந்து கொண்டிருக்கும் பிரம்மாண்ட கட்டுமானங்கள் அதற்கு சாட்சி. ஒரு இடம் கூட விடாமல், மலைகளைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 10-ஆம் தேதி பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த நிலச்சரிவு காணொளியில் பார்க்கும்போதே பயங்கரமாக இருந்தது. உங்களுக்கு விருப்பம் இருந்தால், இணையத்தில் காணொளிகள் உண்டு. தேடிப் பார்க்கலாம். மலைச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்பு, சேதாரம் என நினைக்கும் போதே மனதில் வேதனை.
******
இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை : அப்பாவின் வருகை
அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் மிகவும் குறைவு தான். எந்த மகனாலும் தனது அப்பாவை ஏனோ புரிந்து கொள்ள முடிவதே இல்லை என்று எனக்குத் தோன்றும். சமீபத்தில் படித்த எஸ்.ரா. அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை இந்த எண்ணத்தையே ஏற்படுத்தியது. கதை எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கலாம்! படிக்க நினைத்தால் கீழே உள்ள சுட்டி வழி படித்துப் பாருங்களேன்.
அப்பாவின் வருகை. – எஸ். ராமகிருஷ்ணன் (sramakrishnan.com)
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
27 ஜூலை 2024
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குசப்பாத்தி நீதிக்கதை படித்த நினைவு இருக்கிறது. மொபைல் மோகம் மிகவும் கொடிதுதான். நானுமே அதிலிருந்து விடுபட போராடும் ஒரு இளைஞன்தான். பாடலை ஓட்டி ஓட்டி நேற்றுதான் மஹாராஜா படம் பார்த்தேன். அதனுடன் கூட சட்னி சாம்பார் சீரிஸும் பார்த்தேன்! எஸ்ரா சிறுகதை படித்த நினைவாய் இருக்கிரகித்து. சென்று பார்த்தல் தெரியும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇயல்பான மனிதர்கள் தனித் தீவு அல்ல. ஆனால் அலைபேசிகள் மனிதர்களை. அப்படி ஆக்குகிறது, 70-2000 வரை தொலைபேசி செய்ததைப் போல. நாம் செய்த புண்ணியம், சன் நெக்ஸ்ட் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் சீரியல்கள் இருப்பதால், நாம் சென்றால் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, பிறகு ஓடிடி தளத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி, நம்முடன் பேசுகிறார்கள். இல்லையென்றால், சீரியல்கள் இல்லாத நேரமாகப் பார்த்து வரக்கூடாதா என்று கேட்டாலும் கேட்பார்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஇந்த வகை நாய்களைப் பற்றிய ஒரு நிகழ்வை நான் படித்திருக்கிறேன். எனக்கு பொதுவாகவே நாய் வளர்ப்பது (வளர்ப்பவர்கள்) பிடிப்பதில்லை. அவங்க பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றியோ இல்லை தங்களைச் சூழ்ந்துள்ள சமூகத்தைப் பற்றியோ அக்கறை இல்லாதவர்கள் என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குஉங்கள் எண்ணம் வியப்பளிக்கிறது! முரண்படுகிறது. மிகவும் எதிர்மறை கருத்தாக இருக்கிறது. பிற உயிரின் மீது அக்கறை உள்ளவர்கள் எப்படி சமூகத்தை புறக்கணிப்பவர்கள் ஆவார்கள்? மனிதன் தனக்கு மட்டுமே இந்த உலகம் படைக்கப் பட்டிருப்பதாக எண்ணுகிறான். பிற உயிர்களுக்கும் இந்த பிரபஞ்சம் சொந்தம் என்பதை உணர்வதில்லை, உலக சுழற்சிக்கு, உலகம் இயங்க பிற உயிர்களும் முக்கியம் என்றும் நினைப்பதில்லை. அதைவிட சக மனிதர்களின் பழக்க வழக்கங்களை வைத்து அவர்கள் சமூகத்துக்கு புறம்பானவர்கள் என்று எப்படி சொல்ல முடியும் நெல்லை? புரியவில்லை.
நீக்குநானும் கிட்டத்தட்ட இந்தக் கருத்தைக் கொடுக்க வந்தேன், இறை சக்தியை நம்பும் நாம், பிரபஞ்ச சக்தியில் உருவான அனைத்து உயிர்களுக்கும் இடமுண்டு என்பதையும் ஏற்க வேண்டும் இல்லையா?
நீக்குதனிப்பட்ட முறையில் நமக்கு விலங்குகளிடம் சில பயங்கள் இருக்கலாம் வளர்ப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அது தனிப்பட்ட விஷயம். ஆனால் வளர்ப்பவர்களை அவர்கள் சமூகத்தில் அக்கறை இல்லாத்வர்கள் என்பது எப்படிச் சொல்ல முடியும். மனிதர்களைக் கவனிக்க பலர் இருக்கிறார்கள். ஆனால் வாயில்லா உயிர்கள் அது ஆடு மாடாக இருந்தாலும் யானையாக இருந்தாலும் காட்டு விலங்குகளாக இருந்தாலும், பன்றியாகவே இருந்தாலும், இந்த உலகில் வாழ அவற்றிற்கும் உரிமை உண்டு. அதுங்களைப் பாதுகாக்க உள்ளவர்கள் சிலரே.
ஆறறிவு இந்த உலகை ஆக்ரமிக்க நினைப்பது எதில் சேர்ப்பது? இறை தத்துவப்படி?
அவதாரங்கள் என்று சொல்லப்படும் புராணக் கதைகளில் கூட சொல்லப்படுகிறதே. அந்த முகத்துடன் இறைவன் உருவங்கள் சொல்லபடுகிறது, வாகனங்களாகச் சொல்லப்படுகிறது. பைரவர், வராஹர் உட்பட!
இவை அனைத்துமே இந்த உலகிற்கு மிக முக்கியம் அறிவியலில் பயோ சங்கிலி படித்திருப்போமே!
வளர்ப்பவர்கள் எல்லோருமே சமூக அக்கறையும் கொண்டவர்கள்தான். அவர்கள் பேசுவதையோ, செயல்களையோ வைத்து அக்கறை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
கால்நடை மருத்துவத்தையும் சொல்வது போல் ஆகிறது.
கீதா
இப்படிப் பல வகை உயிர்களும் பூமியில் மட்டும்தான் இருக்கிறது இல்லைனா நாமளும் இருக்க முடிந்திருக்காது இந்த கோளில், மற்ற கோள்களைப் போல இருந்திருந்தால்?
நீக்குகீதா
ஸ்ரீராம்.. விதிவிலக்குகளை விட்டுவிடுவோம். எங்கள் வளாகம் மிக மிகப் பெரியது. அதில் பலர் நாய்கள் வளர்க்கின்றனர். மற்ற இடங்களிலும் நான் நாய் ஆர்வலர்களைப் பார்த்திருக்கிறேன். அவங்க என்ன பண்றாங்கன்னா... நாயை உலாத்துதலுக்குக் கூட்டிச் செல்கிறேன் என்ற பெயரில் புல்வெளிகளில் மற்றும் கண்ட கண்ட இடங்களில் கக்கா சூசு போக விடறாங்க. தளங்களிலும் பல நேரங்களில் கயிறு இல்லாமல் அவை வீட்டை விட்டு வரும்போது எனக்கு திடுக் என்று இருக்கும் (கடித்துவைத்துவிட்டால் ஒரு Sorry தான் மிஞ்சும்). ஒரு நாள் அதிகாலையில் ஒருவர் இரண்டு நாய்களோடு உலாத்தியபோது, இரண்டும் பிய்த்துக்கொண்டு ஓடின, அவர் துரத்தினார். இந்த நாய்களுடன் நட்பு கொள்கிறேன் என்ற பேர்வழியில் தெரு நாய்களும் வளாகத்துக்குள் உலா வருகின்றன. சிலர் என்ன பண்றாங்கன்னா (பார்க்க டீசண்ட் பெண்கள்), நாய் கக்கா போனதும் காகிதத்தில் எடுத்து புல்வெளியின் ஓரத்தில் மறைத்துவைக்கிறாங்க. சிலர், என்னவோ அவங்க நாய் எல்லோரோடும் ரொம்ப ஃப்ரெண்ட்லி என்று அவங்களாகவே கற்பனை பண்ணிக்கொண்டு கயிற்றுடன் விட்டுவிட்டு அவங்க முன்னால நடக்கறாங்க. இவங்க எல்லோரையும் சில பல வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், அவங்களுக்கும் சமூக அக்கறைக்கும் சம்பந்தமே இல்லை.
நீக்குகீதா ரங்கன்(க்கா) இறை, உயிர் வாழும் உரிமை, உயிர்களிடத்தில் அன்பு என்று பல விஷயங்களை எழுதுகிறார்கள். இதில் எனக்கு எந்த கருத்து வேற்றுமையும் கிடையாது. எந்த உயிரையும் வெறுப்பதிலோ கொல்வதிலோ நம் யாருக்கும் விருப்பம் இருப்பதில்லை. இருந்தாலும் சமூக அக்கறை இருப்பவர்கள் மாத்திரம்தான், நாயும் ஒரு உயிர் என்று நினைத்து அதனுடன் அன்போடு இருக்கக்கூடியவர்கள்தாம் நாயை வளர்ப்பதற்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன். நம் குழந்தையை நாம்தான் அடுத்த வீட்டில் கல்லெறியாமல், அடுத்தவர்களுக்குத் தொந்தரவு தராமல், பொது இடங்களில் சுகாதாரத்தைப் பேணும்படியாக வளர்க்கவேண்டும் இல்லையா?
கருத்துப் பரிமாற்றங்கள் நன்று. விதிவிலக்குகள் இருக்கலாம். சிலருக்கு விலங்குகள் மீது அதீத பிரியம் என்றால் சிலருக்கு வெறுப்பு/அருவெறுப்பு... எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது இயலாத காரியம்.
நீக்குநீங்கள் சமோசாவைப் பற்றி எழுதியிருந்தாலும் என்னைக் கவர்வது டோக்ளா இட்லி (மும்பையில் இதனை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணித் தருவார்கள்), காண்ட்விதான். எனக்குப் பிடித்த சமோசா ஆனியன் சமோசா, ஆனால் கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெயை நினைத்தால்மான் கலவரம். கர்நாடகாவில் பாமாயில் உபயோகம் மிக அதிகம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குவிதிவிலக்குகள் இருந்தாலும், பெண்கள்-மகள்கள் மற்றும் பெண்ணின் இயல்பான குணமுள்ள ஆண்-மகன் மட்டுமே அப்பாவை விரும்புகிறார்கள், நெருக்கமாக இருக்கிறார்கள். நானும், எதனால் அப்படி என நினைத்துக்கொள்வேன். வயதான பெற்றோரை மகள் பார்த்துக்கொண்டாள் என்று படித்ததுதான் அதிகம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குவாசகம் மிக அருமை வெங்கட்ஜி!
பதிலளிநீக்குBபோட்டியா…//
தகவல்கள் இது வரை அறியாதது.
Shepherd dog என்று சொல்லப்படும் வகைகளில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது.
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அலைபேசி பற்றிய கருத்து ஆமாம் அதேதான். அதன் பயன்பாட்டில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு குறைத்துக் கொண்டுவிடலாம்தான்.
பதிலளிநீக்குசப்பாத்தி கதை படித்த நினைவு இருக்கிறது, வெங்கட்ஜி, சென்று பார்த்தேன்!! தெரிந்தது.
கீதா
அலைபேசி மற்றும் சப்பாத்தி கதை குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குபாடல், நல்லாருக்கு. படம் இப்படி ஒன்று வந்திருக்கிறது என்பதும் தெரிந்தது.
பதிலளிநீக்குசமோசா பிடிக்கும் ஆனியன் சமோசா ரொம்பப் பிடிக்கும். உருளைக்கிழங்கு பட்டாணி மற்றும் வேறு வித பூரணம் வைத்துச் செய்யும் சமோசாக்கள் வட இந்தியப் பகுதிகளில்தான் நன்றாக இருக்கிறது. அதிகம் மசாலா தெரியாது அதில். இங்கு அவ்வளவு நன்றாக இல்லை.
ஆ! சாக்கலேட் சமோசாவும் வந்திருச்சா!
இங்கும் சாட் வகைகளில் முதலிடம் பிடிப்பது பானி பூரி, அப்புறம் Bhபேல், சமோசா, சான்ட்விச்!
எனக்கு தோக்ளா, கான்ட்வி ரொம்பப் பிடிக்கும்.
கீதா
பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குமலைகளைக் குடையக் குடைய மலைச்சரிவுகள் அதிகமாகத்தான் செய்யும்.
பதிலளிநீக்குஅப்பாவின் வருகை வாசித்த நினைவு இருக்கு எஸ் ரா அவர்களின் தளத்தை வாசிப்பதுண்டு. போய் பார்க்கிறேன்
கீதா
மலைச்சரிவு - பரிதாபம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
கைபேசி மோகம் ஆறுமாதக் குழந்தையிடம் கொடுப்பதை காண்கிறோம்.
பதிலளிநீக்குபாடல் நன்றாக இருக்கிறது. மகாராஜா படம் இன்னமும் பார்க்கவில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்குஅப்பாவின் வருகை. மிக நெகிழ்ச்சியான சிறுகதை. எனது தந்தையை நினைவுபடுத்தும் பல உரையாடல்கள். குணங்கள். தொடர்ச்சியாகப் பல சம்பவங்கள் நினைவிலிருந்து எழுகிறது…, நமது வாழ்வோடு இணைந்த சம்பவங்களைக் கதையாக வாசித்தாலும் அது நிஜமான நிகழ்வாகவே தோன்றி கதையோடு ஒன்றி விடுகிறோம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பாண்டியன் சுப்ரமணியம் ஜி.
நீக்குBபோட்டியா பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குபாடலும் அருமையாக இருந்தது. விஜய் சேதுபதி நடித்த புதிய படம் போலத் தெரிகிறது.
அலைபேசியை ஒதுக்கவும் முடியவில்லை, அதன் கெடுதல்களும் தெரியத்தான் செய்கிறது.
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
நீக்குஎஸ் ரா அவர்களின் கதை வாசித்த
பதிலளிநீக்குதெரியாமல் பாதியில் கருத்து வெளியாகிவிட்டது. வாசித்த கதை. குமார் தான் அனுபவத்தைச் சொல்வதாக மட்டுமே இருந்தது. நல்ல பெற்றோர் மகன் உறவு பற்றி உரையாடல்கள் சொன்ன விதம்.மகனின் உணர்வும் சொன்ன விதம் நல்லா இருக்கு .அப்பாவின் மனதில் மகனை மிஸ் செய்கிறார் என்பதுந்தெரிகிறது...அது போல் என் மனதில்
நீக்குமுடிவு கொஞ்சம் என்னவோ மிஸ் ஆவது போல்ஆகிவிட்டது போன்ற உணர்வு..!!!!!!
கீதா
ஆனால் நெகிழ்ச்சியான கதை. பல இடங்கள் உரையாடல்கள் உணர்வுகள் அருமை. ஆதி நினைவுக்கு வந்தார்!!!!
நீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குசப்பாத்தி – வட இந்திய கதை...
பதிலளிநீக்குதன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'. பட்டினத்தார் வாக்கியம் போல இருந்தது . பைத்தியம் போல பிச்சை கேட்டு சுற்றும் தம்பியை கொல்ல நினைத்து அப்பத்தில் விஷம் வைத்து கொடுப்பார் தமக்கை, பட்டினத்தார் அதை வாங்கி அக்காவீட்டு ஓட்டின் மேல் போடுவார் வீடு தீ பற்றி கொள்ளும்.
பிறருக்கு தீங்கு செய்தால் அது தன்னை வந்து சேரும் என்பதுதான் கதையின் நீதி.
முன்பு படிக்கவில்லை போலும் என் கருத்து அங்கு இல்லை இப்போதுதான் படித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதி அரசு.
நீக்குசப்பாத்தி – வட இந்திய கதை...
பதிலளிநீக்குஅப்பாவின் வருகை கதை படித்தேன், பிடித்தது. என் கணவரை போலவே இருந்தார் அப்பா சில குணங்கள் ஒத்து போனது. மகன் மகளாக இருந்தாலும் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத குணம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்கு