அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் கடந்த திங்களன்று இப்பக்கத்தில் எழுத ஆரம்பித்தது நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தொடரின் முதல் இரண்டு பகுதிக்களான சுட்டிகள் கீழே! அப்பகுதிகளை நீங்கள் படித்திருக்காவிட்டால், படித்து விடுங்களேன்.
இதோ இன்றைக்கு, பயணத் தொடரின் மூன்றாம் பாகம் உங்கள் பார்வைக்கு! வாருங்கள் த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களின் வார்த்தைகளில் படித்து ரசிக்கலாம்! - நட்புடன் - வெங்கட் நாகராஜ், புது தில்லி! ஓவர் டு விஜி!
******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், உங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி.
சோம்நாத் வந்து சேர்ந்த பிறகு சாகர் தர்ஷன் ஹோட்டல் வந்து இறங்கி சாமான்கள் ரூம்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நேரத்தில் reception clerk இடம் booking details சரிபார்த்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் இடி இறங்கியது. அவன் 'காலை மதியம் இரவு மூன்று நேரங்களிலும் ஆரத்தி தவிர இரவு 10 மணி வரை தரிசனம் செய்து கொள்ளலாம் ஆனால் ஆரத்தி சமயத்தில் யாரும் உள்ளே அனுமதிக்கப்படக் கூடாதென்று Govt உத்தரவு, covid பரவாமலிருக்க” இது 10, 15 நாட்களாகவே இப்படித்தான் என்றான். மனசு கனத்துப் போயிற்று. ஆரத்தி தரிசனம் என்பது எவ்வளவு முக்கியமான பரவசமூட்டும் காட்சி என்பது எல்லோருக்குமே தெரியும். அது, நம் பெண்ணை சாதாரணமாகப் பார்ப்பதற்கும் கல்யாண கோலத்தில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம். சரி நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் மனச்சோர்வோடு ரூமிற்குப் போய் குளித்து ரெடியாகி தரிசனத்துக்குச் சென்றோம். அந்த தேவாதி தேவன், மகாதேவன், ஈஸ்வரன் அமர்க்களமாக காட்சி கொடுத்துக் கொண்டிருந்தான். பெரிய லிங்க வடிவு. அதன்மேல் பூ அலங்காரம். லிங்கத்துக்குப் பின்னால் பார்வதி தேவி சிலை அதற்குப் பக்கத்தில் முருகன். பார்க்க அபூர்வமாக நன்றாக இருந்தது. சன்னதிக்கு வெளியே இடதுபுறம் கணபதி.
வழக்கம்போல் 4, 5 முறை சுற்றி சுற்றி வந்து தரிசனம் செய்தும் மேலும் மேலும் பார்க்கும் எண்ணமே மேலோங்கியது, அதுவும் என் தோழி உமா (நானும்தான்) நடுவில் இருக்கும் இரும்பு தடுப்போடு தடுப்பாக ஈஷிக்கொண்டு பின்னால் வருபவர்களை முன்னால் போக விட்டு விட்டு அசையாது நின்று கொண்டிருக்க, கோவில் சேவகி tired ஆகி 'அம்மா தயவு செய்து இப்போ போங்க கொஞ்ச நேரத்தில் ஆரத்தி ஆரம்பிக்கும், அப்போ வாங்க' என்று சொல்ல என் இதயம் ஒரு pulse-ஐத் தவற விட்டது. காதில் விழுந்தது சரிதானா என்ற சந்தேகத்தை அவளிடம் கேட்டுத் தெளிவுற்று கண்ணீர் மல்க வெளியே ஓடி மற்ற தோழிகளுக்கும் விஷயத்தைச் சொல்லி அனைவரும் மறுபடி சன்னதியை நெருங்க, ஆரத்தி ஆரம்பித்து ”எண்ணுதற்கு எட்டாத எழிலோடு விண்ணும் மண்ணும் நிறைந்த அந்தப் பேரொளியான ஈசன் மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச் சுடர், தேனார் அமுது, பெருங்கருணைப் பேராறு” அக் கருணைப் பெருக்கினால் நிலம் தனில் வந்து தன் அருவத்தை காட்டிக்கொண்டு ஜெகஜ்ஜோதியாய் நம் முன்னே மின்னியது. ஆஹா ஆஹா கேட்டதைக் கொடுக்கும் தேவதைகள் பல இருக்க நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் வழங்கிய இந்த வஸ்து என்ன வஸ்து. ஈஸ்வரா, அம்மையப்பா என வாய் அரற்ற ஈசனின் சிரசிலிருந்து கங்கை நம் கண்களுக்கு இடம் பெயர, ஒரே சீரான ரிதத்துடன் கூடிய வாத்திய சப்தம் நம் உள்ளே மின்சாரத்தைப் பாய்ச்ச, உடல் லேசாக அதிர்வுற்று நடுங்கியது, சத்தியமாக குளிரினால் அல்ல. இது வேறு.
சொல்லாத, சொல்ல முடியாத, சொல்லுக் கடங்காத நுண் உணர்வு. 658 பாடல்களால் தானும் கரைந்து படிப்போரையும் கரைத்து உருக்கிய மாணிக்கவாசகப் பெருமானே 'ஓ என்று சொல்லர்க்கு அறியானை' என்று ஐயனைப் பாடச் சொற்கள் போதாமல் ஓ என்று அரற்றும் போது, நாம் எல்லாம் என்னத்தைச் சொல்ல, ஏது வார்த்தை நம் எண்ணத்தைச் சொல்ல. இது போதும், வேறெதுவும் வேண்டாம், இப்படியே மிச்ச சொச்ச காலத்தை அப்பனைப் பார்த்துக்கொண்டே கழித்து விடலாமா என்னும் பேராசை எழுந்தது நிஜம். யுகங்கள் கடந்தன, பலகோடி ஜென்ம பாபங்கள் கண்கள் வழியாகக் கரைந்தோடின. சுய உணர்வு பெற்ற போது ஆரத்தி முடிந்திருந்தது. வெளியில் செல்வது மாதிரி சென்று மீண்டும் மீண்டும் மீண்டும் அவன் தரிசனம். நானும் உமாவும் ஒரு ஓரத்தில் அவன் திருஷ்டி எங்கள் மீது படும் இடத்தில் நின்று கொண்டு சிவபுராணம் சற்று உரக்கவே படிக்க, ஈசனும், சுற்றியிருந்த அனைவரும் அதைக் கேட்டனர். ஒருவருமே எதுவும் சொல்லவில்லை. பேசவில்லை. நிசப்தம். ஏனெனில் அது மாணிக்க வாசகரின் வாக்கிலிருந்து உதித்து அதைக்கேட்டு ஈஸ்வரனே தன் கைப்பட எழுதிய ரத்தினச்சொற்கள் ஆயிற்றே. அவனுக்கு எங்கள் வாயாலும் சொல்லிக் கேட்க மனம் இருந்தது, அப்பனல்லவா. பிறகு அங்கிருந்து எங்களைப் பிய்த்துக் கொண்டு வெளியே வந்தோம். வேறு வழி?
வெளிப் ப்ராகாரத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த இரு சிறுமிகள் அலங்கரித்த இரு பூக்கூடைகளை கையில் சுமந்து கொண்டிருந்தனர். எட்டி உள்ளே பார்த்தால் சர்வாலங்காரத்துடன் லட்டு கோபால் (லட்டு என்பது பாலகிருஷ்ணன் கையில் இருப்பதல்ல, செல்ல அடைமொழியாம்). அதற்குப் பண்ணாத அலங்காரமில்லை. அந்த நீலமேக ஷ்யாமளன் சந்தனப் போட்டோடும், நகைகளோடும், அழகான வஸ்திரங்களோடும் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது, வெல்வெட் பஞ்சணை மீது. எங்கே சென்றாலும் அதைக் கையோடு கொண்டு செல்வார்களாம். அதை ரசித்துக் கொண்டிருக்கும் போதே அவ்வீட்டு சின்ன வாண்டு வந்து 'அப்படி உத்து உத்து பார்க்காதீர்கள், திருஷ்டி விழுந்துவிடும்' என்று அதனிலிருந்து எங்களைப் பிரித்து வைத்தான்.
சொல்ல விட்ட சில துவாரகா விஷயங்கள்: அங்கே கவனித்த ஒரு விஷயம், எங்கு பார்த்தாலும் பசுக்கள் வெகு சுதந்திரமாக நடமாடுகின்றன. அதன் சொந்தக்கார அம்மாக்கள் சரளமாக அதனுடன் குஜராத்தியில் பேசுவதும், செல்லமாக அதட்டுவதும் அப்பசுக்களும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தலையைக் குனிந்து கொண்டும் அசைத்துக்கொண்டும் கவனிப்பது வெகு அழகு. கோம்தி நதிகரையில் ஒரு பெண் ஒரு (சற்றுப் பெரிய) கன்றை வைத்துக்கொண்டு அதற்குத் தர தானிய உருண்டைகளை விற்றுக் கொண்டிருந்தாள். ஒருவர் அதை வாங்கி அதன் வாயில் ஊட்டாமல் (அதன் பல் வரிசையைப் பார்த்து பயந்து) கீழே வைத்துவிட்டார். வந்ததே கோபம் அவளுக்கு. திட்டிக்கொண்டு அவரை முறைத்துக் கொண்டே வெடுக்கென்று அதை எடுத்துத் தானே அதற்கு ஊட்டி விட்டாள். பிறகு நான் சற்றுத் தயங்கித் தயங்கி ஊட்டினேன் (🐮மாடு கடித்தாலும் 14 ஊசி உண்டோ என்ற பயத்தோடு😧). புண்ணிய க்ஷேத்திரங்களில் இருக்கும்வரை நாம் சரீர பிரஞையிலிருந்து சற்று விலகி இருக்கிறோம் என்பது கோம்தி நதிக்கரையில் உணரப்பட்டது. ஒரு பெரியவர் நெற்றியில் சந்தனம் இட்டுவிடக் கையில் சந்தனக்கிண்ணத்துடனும், சிறு அச்சுடனும் அனைவரையும் அழைக்க, நாங்களும் எங்கள் நெற்றியை அவரிடம் காட்ட வாங்கிய பணத்துக்கு (நெற்றிக்கு 10 ரூ) அவரும் திருப்தியாக எங்கள் நெற்றி முழுவதும் இட வலமாகத் தன் கை வரிசையைக் காட்டிக் கோலமிட, காலுக்குக் கீழே கோம்தி ஜிலீர், நெற்றியில் சந்தன ஜிலீருடன் சந்திர மௌளீஸ்வரனான சோம்நாதரை தரிசிக்குமுன், சந்தன மௌளீஸ்வரிகளாக எந்தவித சங்கோஜமுமின்றி கடைவீதி முதற்க்கொண்டு நடமாடினோம். மும்பையில் அவ்வாறு நடப்போமா? முடியுமா?
தொடர்ந்து எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை வரும் பகுதிகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இப்பயணத் தொடரில் என்னுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அடுத்த பகுதியில் மீண்டும் சந்திப்போம். அதுவரை… நட்புடன் விஜி வெங்கடேஷ்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
5 ஜூலை 2024
இன்றைய வாசகம் அருமையான வாசகம். வாசகம் என்பதால் விவரிக்கவில்லை இங்கு.
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குதேவாதி தேவன், மகாதேவன், ஈஸ்வரனை தரிசனம் செய்த போதும், ஆரத்தி சமயத்தில் கிடைத்த தரிசன அனுபவமும் மிக அருமையாக சொன்னீர்கள்.
லட்டு கோபால் படம் மிக அழகு.
பசுவிற்கு உனவு கொடுத்த் அனுபவம், மற்றும் பெரியவர் சந்தனபொட்டு வைத்து ஆசிர்வாதம் செய்ததும் அருமை.
தொடர்கிறேன்.
வாசகம், பதிவு வழி பகிர்ந்த படங்கள், அனுபவ விவரிப்பு என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆரத்தியும், இறைவனை தரிசித்ததையும் மிகவும் உணர்வுபூர்வமாக வர்ணித்திருக்கிறீர்கள், விஜி சகோ. அது போல அந்தச் சிறுமியர்கள் வைத்திருந்த பூக்கூடை பற்றியும்
பதிலளிநீக்கு//அவ்வீட்டு சின்ன வாண்டு வந்து 'அப்படி உத்து உத்து பார்க்காதீர்கள், திருஷ்டி விழுந்துவிடும்' என்று அதனிலிருந்து //
அவர்களுக்கும்தான் என்ன ஒரு பாசம், இறைவனையும் தங்கள் குடும்பத்து உறுப்பினராகப் பார்க்கும் பரவசம்!
கீதா
த்வாரகா - லட்டு கோபாலை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பது இங்கே உள்ள அனைவருக்குமே வழக்கம் தான் கீதா ஜி. இங்கே கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் - அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
லட்டு கோபால் குழந்தையின் படம் அருமை!
பதிலளிநீக்குபசுவை வளர்ப்பவர்களின் உணர்வும் புரிந்தது. அப்பகுதியும் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கீங்க
//புண்ணிய க்ஷேத்திரங்களில் இருக்கும்வரை நாம் சரீர பிரஞையிலிருந்து சற்று விலகி இருக்கிறோம் என்பது கோம்தி நதிக்கரையில் உணரப்பட்டது//
எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், இயற்கை ஆட்சி செய்யும் இடங்களுக்குச் செல்லும் போதும் நாம் அவற்றோடு ஒன்றிப் போகும் போது (இந்த ஒன்றிப் போவது என்பது அவசியம் இல்லைனா வராது) இந்த உணர்வு வருவது நிச்சயம்.
கீதா
லட்டு கோபால் படம், பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
லிங்கேஸ்வரரை தரிசித்த அனுபவத்தையும், ஆரத்தி அனுபவம் மிஸ் ஆகாமல் கிடைத்ததையும் உணர்வுபூர்வமாக எழுதி எங்களையும் அதில் இணைய வைத்து விட்டீர்கள் VV. இவ்வளவு பக்தியை நான் அனுபவித்ததில்லை. இனியாவது திருந்தலாமா என்று பார்த்தால் இன்றைய வாசகம் ஒரு அடி பின்னே நிறுத்துகிறது!!!
பதிலளிநீக்குபக்தியை அனுபவிப்பது நல்லது தான் ஸ்ரீராம் - இந்த வயதில் கூட அனுபவிக்கலாம் - வாசகம் குறித்து எண்ணாமல்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இந்த மாடுகக்ள் நடுத்தெருவில் நின்று இப்படி பயமுறுத்துவதை நானும் கவனித்திருக்கிறேன். நமக்குதான் பயமாயிருக்கும் , அவை நம்மை லட்சியமே செய்யாது!
பதிலளிநீக்குநமக்கு அதைக் கண்டால் பயம்! அவற்றுக்கு நம்மைக் கண்டால் பயம் - காண்பிக்காவிட்டால் கூட குறுகுறுப்புடன் நம்மைக் கவனிக்கும்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
கோம்தி உட்பட எல்லா ஆற்றங்கரைகளில் ஒன்றை நீங்கள் கவனித்திருக்கலாம். அங்கு யாரும் செருப்பை போட்டுக்கொண்டு ஆற்றில் இறங்க மாட்டார்கள். புனிதம். தப்பித்தவறி செருப்போடு நீங்கள் முன்னேறினால் ஆற்றங்கரையோர வியாபாரிகள் உங்களை நிறுத்தி செருப்பை கழற்ற வைத்து விடுவார்கள்!!
பதிலளிநீக்குவடக்கில் நதிகள் போன்ற நீர்நிலைகளுக்கு தரும் மரியாதை அதிகம் தான். நம் ஊரில் தான் எல்லாவற்றுக்கும் அவற்றை பயன்படுத்துகிறார்கள் - மரியாதை கொஞ்சம் கூட கிடையாது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
படித்து பாராட்டிய ishwara தரிசனத்தை அனுபவித்த அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குதொடர்ந்து இங்கே பதிவுகள் எழுதிட வாழ்த்துகள் விஜி.
நீக்குவர்ணனைகள் சிறப்பு
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குசொல்லர்க்கு அறியானை தரிசித்ததை அருமையாக சொன்னீர்கள். அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஆரத்தி எடுத்ததை நீங்கள் மிகவும் பரவசப்பட்டுச் சொல்லியிருப்பதை வாசித்த போது எங்களையும் அதில் கலந்து கொள்ளச் செய்த உணர்வு அனுபவம். தகவல்கள் அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகருத்தை வெளியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல
பதிலளிநீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி. தொடர்ந்து எழுதுங்கள்.
நீக்குஇளமை முதுமை என்பது ஆன்மாவுக்கு இல்லை...மனித உடல் அழியக்கூடியது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்கு