புதன், 17 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - புதிய காசி விஸ்வநாத் மந்திர் (BHU) - பகுதி பன்னிரெண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட பார்த்த திரைப்படம் - விக்ரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா



வாரணாசி நகரில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கை என்பது கணக்கிலடங்காது. சிறியதும் பெரியதுமாக நிறைய கோவில்கள் இன்றைக்கும் இருக்கின்றன.  இவற்றைத் தவிர அழிந்து போன கோவில்கள் எத்தனை என்பதை அந்த காசி விஸ்வநாதரே அறிவார். பனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா நிறுவிய பண்டிட் மதன் மோகன் மால்வியா அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே புதியதாக காசி விஸ்வநாத் மந்திர் கட்டவேண்டும் என்று ஆசைப்பட அவர் அணுகியது பிர்லா குடும்பத்தினரை! பிர்லா குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட பல கோயில்கள் நம் நாட்டில் உண்டு - தில்லியில் என் வீட்டின் அருகே இருக்கும் லக்ஷ்மிநாராயண் மந்திர் என்று அழைக்கப்படும் பிர்லா மந்திர் உட்பட!  1931-ஆம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கோவில் முழுமை அடைய சில வருடங்கள் ஆனது - 1966-ஆம் ஆண்டு தான் முழுமை அடைந்தது.  இன்றைக்கு சற்றேறக்குறைய 58 ஆண்டுகள் பழமையான இந்த புதிய காசி விஸ்வநாதர் ஆலயம் மிகவும் அமைதியான சூழலில் அமைந்து இருக்கிறது. 



பல்கலைக்கழக வளாகத்திலேயே நான் தங்கி இருந்ததால் சில தினங்கள் அதிகாலையில் எழுந்திருந்து தயாராகி புறப்பட்டு அங்கே பொடிநடையாக சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தேன்.  மிகவும் அமைதியான சூழல். 77 மீட்டர் உயரம் கொண்ட கோவிலின் பிரதான கோபுரம் சற்று தொலைவில் இருந்தே கண்ணுக்குப் புலப்படும் என்பதால் கவலையின்றி நடக்கலாம். முதல் முறை இங்கே சென்றபோது Google Maps துணையுடன் சென்று விட்டேன். அதற்குப் பிறகு அங்கே செல்ல அதன் துணை தேவையிருக்கவில்லை.  பிரதான காசி விஸ்வநாதர் கோவில் போல அல்லாமல், பொதுவாக இங்கே பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதில்லை.  ஆர அமர இறைவனுக்கு அருகே அமர்ந்து அங்கே வைத்திருக்கும் சொம்புகளால் இறைவனுக்கு நம் கையாலேயே ஜலாபிஷேகம் செய்யலாம்.  வெளியே கிடைக்கும் பூக்கள்/வில்வ இலைகள், விசேஷமான காய்கள் (பார்க்க படம்) போன்றவற்றை வாங்கிக் கொண்டு சென்றால் அவற்றையும் நம் கையாலேயே காசி விஸ்வநாதருக்கு அர்ப்பணிக்கலாம். 




வட இந்திய கோவில்கள் எல்லாவற்றிலும் இப்படி நம் கையாலேயே தொட்டு பூஜை செய்வதற்கான வசதிகள் இருக்கிறது.  இங்கே கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் ஆகம விதிப்படி இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால் இப்படியான அனுமதி இருக்கிறது.  எல்லோரும் தொடர்ந்து தண்ணீர், பூக்கள் என தொடர்ந்து அபிஷேகம் செய்து கொண்டே இருப்பார்கள் என்பதால் பராமரிப்பது சிரமமாக இருக்கும்.  அருகே அமர்ந்து கொண்டு, பூஜைகள் செய்து, இறைவனை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளும் படி அமைப்பு இருப்பதால் நமக்கு சற்று வித்தியாசமாக தெரியும்.  ஆனால் வட இந்தியாவில் பல வருடங்கள் இருந்து விட்ட எனக்கு, தற்போது இந்தப் பழக்க வழக்கங்கள் வித்தியாசமாக தெரிவதில்லை.  நானும் இந்த ஊர் பக்தர்களைப் போல சிவபெருமான் உருவத்திற்கு அருகே அமர்ந்து கொண்டு அவர்கள் போலவே தொட்டு, அபிஷேக அலங்காரம் செய்து விடுவதுண்டு. அருகிலேயே சிறிது நேரம் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய இங்கே வசதிகள் இருக்கிறது. 



படம்: இணையத்திலிருந்து...

இந்த ஊர் கோவில்கள், நமது ஊர் போல அழகிய சிற்பங்கள், பாறை சிற்பங்கள் கொண்டவை அல்ல. பெரும்பாலும் பளிங்குக் கல் சிற்பங்களாக இருக்கின்றன. அதனால் ஏனோ எனக்கு இந்த ஊரில் இருக்கும் பளிங்கு சிற்பங்களைக் காணும்போது பக்தி Bபாவம் உண்டானது இல்லை.  மனதை ஒரு நிலைப்படுத்தி தியானத்தில் அமர்வது என்பது இந்த ஊர் கோயில்களில் சற்று கடினம்.  பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் இந்த காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் நான் சில மணித்துளிகள் கண்களை மூடிக்கொண்டு எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு மூல மந்திரங்கள் ஜெபித்துக் கொண்டு இருந்தேன்.  சுற்றிலும் நடப்பது என்ன என்பதை அறியாமல் நமக்குள்ளே இப்படி பக்தியில் மூழ்கி இருப்பது எப்போதேனும் மட்டுமே நடக்கக்கூடியது.  அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கே அப்படியே அமர்ந்து கொண்டிருந்தேன். நல்ல குளிர் நாளில் இப்படி தரையில் அமர்ந்து கொள்வது கடினம் - நல்ல வேளையாக அந்த இடத்தில் சின்னச் சின்னதாய் கம்பளங்கள் போட்டு வைத்திருந்தார்கள் - அதனால் குளிர் தெரியாமல் கீழே அமர்ந்து கொள்ள முடிந்தது. 



படம்: இணையத்திலிருந்து...

வாரணாசி நகரில் இருந்த போது மூன்று நாட்கள் இங்கே சென்று வர முடிந்தது.  பிரதான காசி விஸ்வநாதர் கோவிலில் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதோடு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இறைவனைக் கண்டு அவனிடத்திலே நம் கவலைகளைச் சொல்ல முடியும்.  இங்கே அப்படி இல்லாமல் அருகிலேயே அமர்ந்து பத்து பதினைந்து நிமிடம் கூட One-to-One பேசிக்கொள்ள முடியும் - Bபாவனையாக தான்! கூட்டம் இல்லாமல் இருக்கும் கோயில்களில் இது மிகவும் பிடித்தமான விஷயமாக அமைந்து விடுகிறது எனக்கு.  அதிக அளவு பிரபலமான கோயில்களுக்குச் செல்லாமல், இறைவன் தனியே தன்னந்தனியே நமக்காகவே காத்திருப்பது போன்ற இது போன்ற கோயில்களுக்குச் செல்வதே அதிகம் பிடித்திருக்கிறது.  இந்தக் கோயிலிலாவது பக்தர்கள் வருகை இருந்தது.  யாருமே இல்லாமல் இருக்கும் ஒன்றிரண்டு கோயில்களுக்கு இந்தப் பயணத்தில் சென்று வந்தேன். அந்தக் கோயில் எது, அங்கே என்ன சிறப்பு போன்றவற்றை வரும் பகுதி ஒன்றில் சொல்கிறேன்.  இப்போதைக்கு இந்தக் கோயில் அனுபவங்கள் தொடர்கின்றன. 



படம்: இணையத்திலிருந்து...

மூன்று நாட்கள் இங்கே சென்ற போது கிடைத்த அமைதி மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.  அதுவும் பல்கலைக்கழக வளாகத்தில் இயற்கை எழில் அதிகம் - சாலையின் ஓரங்களில் பெரிய பெரிய மரங்கள் இருப்பதால் இயற்கையின் எழில் இங்கே அதிகமாக இருக்கிறது.  இப்படியான சாலைகளில் நடந்து செல்வது மிகவும் பிடித்திருந்தது. தவிர மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் என அனைவரும் காலை நேரத்திலேயே எழுந்து நடைப்பயிற்சி செய்வதும், சாலையோர சிறு பூங்காக்களில் அமைந்திருக்கும் உடற்பயிற்சி உபகரணங்களை பயன்படுத்துவது என பார்க்கும்போது நமக்கும் அவர்களது பரபரப்பு ஒட்டிக்கொள்ளும் வகையில் இருந்தது. கோயிலுக்குச் செல்லாத நாட்களிலும் கூட காலையில் எழுந்து பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே கொஞ்சம் நடந்து வருவதை வழக்கமாக வைத்திருப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாக இருந்தது.  தில்லி போன்ற பெருநகரில் வசிக்கும் எனக்கு, அதுவும் கொடுமையான புகைமண்டலத்தில் இருக்கும் சமயத்தில் இயற்கையுடன் இயைந்த நாட்கள் பிடித்தமானதாக இருந்தது. 


வாரணாசி நகரில் இருந்த ஒன்பது நாட்களில் பார்த்த சில கோயில்கள், கிடைத்த அனுபவங்கள் இன்னும் வரும் பகுதிகளில் தொடரும்.  அது வரை எனது இப்பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருக்கும் படி வேண்டுகிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

17 ஜூலை 2024


12 கருத்துகள்:

  1. கொடுத்து வைத்தவர் நீங்கள்.  இது மாதிரி அருகே அமர்ந்து தொட்டு பொதுஜனமே பூஜை செய்வதை நானும் என் ஒரே வட இந்திய பயணத்தில் கண்டேன். 

    உள்ளே புகைப்படம் எடுக்க ஆட்சேபிக்கவில்லையா?  எதிரே அமர்ந்திருக்கும் பச்சை சட்டைக்காரர் முறைக்கிறாரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம் நான் எடுத்தது இல்லை - கீழே இணையத்திலிருந்து என்று தெரிவித்து இருக்கிறேனே ஸ்ரீராம்.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. இறைவன் எங்கும் எதிலும் இருந்தாலும் வட இந்தியக் கோவில்கள் பலவற்றில் அந்த உணர்வு எனக்கு உண்டாவதில்லை. காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை அப்படி அல்ல. இருந்தாலும் இறைவனைத் தொடுவதை என்னால் நினைக்கக்கூட முடியவில்லை (தென் இந்திய நடைமுறைகளே மனதில் இருப்பதால்). ரொம்ப வாய்ப்பு வந்தால் பாதங்களை மாத்திரம் தொடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் இப்படியான பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதனால் இங்கே உள்ளவர்களுக்கும், பழகிப் போன என்னைப் போன்றவர்களுக்கும் வித்தியாசமாகத் தெரிவதில்லை.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    வட நாட்டில் சிவனுக்கு கண்டங்க்கத்திரி மாலை , எருக்கப்பூ , இந்த சாமந்தி(செண்டுப்பூ) போடுகிறார்கள். நம் ஊரில் பிள்ளையாருக்கு மட்டும் எருக்கம்பூ. சாமந்தி பூ ஏற்று கொள்ள் மாட்டார்கள் கோவிலில். எனக்கும் கூட்டம் இல்லாமல் இறைவனை தரிசனம் செய்ய பிடிக்கும். பிரதோஷ நேரத்தில் கூட்டம் இல்லா கோவிலுக்கு போவோம் நானும் அவர்களும். இப்போது வீட்டிலிருந்து பார்க்கிறேன் இணையத்தில்.
    படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. தொட்டு பூஜை செய்வது அபூர்வமான விடயமே....

    தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. நான் கோயில்களுக்குச் செல்வதுஅடிக்கடி இல்லை என்றாலும் எனக்கு இந்த இரு விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். இறைவனை அருகில் சென்று அமர்ந்து தொட்டு வணங்குவது பிடிக்கும். ஏதோ நாம் நம் பெற்றோருடன் இருப்பது போன்ற ஓர் உணர்வு கிடைக்கும்.

    // யாருமே இல்லாமல் இருக்கும் ஒன்றிரண்டு கோயில்களுக்கு இந்தப் பயணத்தில் சென்று வந்தேன். அந்தக் கோயில் எது, அங்கே என்ன சிறப்பு போன்றவற்றை வரும் பகுதி ஒன்றில் சொல்கிறேன். //

    ஆஹா எனக்கும் பிரபலமான கோயில்கள் கூட்டம் நிறைந்த கோயில்களை விட யாருமே இல்லாத கோயில்கள்ன்கு செல்வது ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

    உங்கள் அனுபவங்களை வாசித்ததும், இந்த அனுபவம் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஒரு ஆசை எழுகிறது.

    நல்ல அனுபவங்கள் ஜி. படங்கள் எல்லாம் மிக மிக அழகு, அதுவும் முதல் படம் செம

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும், அனுபவங்களையும் இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. புதியகாசிவிஸ்வநாதர் மந்திர் நாங்களே அபிஷேகம் செய்து பூசிக்கும் வசதி , மனதுக்கு சாந்தி ஆக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....