சனி, 20 ஜூலை, 2024

காஃபி வித் கிட்டு - 194 - மழை வரும் முன்னே… - ஒன்பது சுவையில் ரப்டி… - கதவைத் தட்டிய பேய்.... - நிலாவில் கால் - Sign Language - மாட்டிக்கொண்ட எலி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சிறிது வயிற்றுக்கும் - காசி நகரின் உணவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : மழை வரும் முன்னே…



நம் நாட்டில் எத்தனையோ பழமையான கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்திலேயே இருக்கும் கோயில்கள், அதன்  பெருமை என்ன போன்றவற்றை இன்னும் அறிந்திருக்காத போது, இந்திய தேசத்தில் இருக்கும் ஆச்சரியமான கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட கோயில்கள் குறித்து நாம் அறிவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.  உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் கான்பூர் நகரம் அருகே பெஹத்தா புஜுர்க் (Behata Buzurg) எனும் இடம் இருக்கிறது என்றும் அங்கே இருக்கும் ஒரு கோவில் ஆச்சரியம் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சமீபத்தில் படித்தேன்.  மழை வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே கோவிலின் பிரதான விக்ரஹமாக அமைந்திருக்கும் ஜகன்னாத் சிலை இருக்கும் இடத்தின் மேற்கூரையிலிருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விடும் என்றும் மழை பெய்த உடன் அப்படிச் சொட்டுவது நின்று விடும் என்றும் சொல்கிறார்கள்.  இந்தக் கோவில் கட்டப்பட்ட ஆண்டு எது, யார் கட்டினார்கள் போன்ற விவரங்கள் இல்லை என்றாலும் பதினொன்றாம் நூற்றாண்டில் கடைசியாக புனரமைக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.  எத்தனை நுணுக்கமான வேலை என்பதை கேட்கும்போதே பிரமிக்க வைக்கிறது அல்லவா! இப்படி எத்தனை எத்தனையோ பிரமிக்க வைக்கும் கலை நுணுக்கங்கள் நம் நாட்டிலே இருந்திருக்கிறது என்பதை எப்போது தான் உணர்ந்து கொள்வோமோ? அத்தனையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் எல்லோருக்கும் புரியவேண்டுமே! 


******


இந்த வாரத்தின் உணவு : ஒன்பது சுவையில் ரப்டி…



ரப்டி - பாலைச் சுண்டச் சுண்ட காய்த்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு தான் ரப்டி எனப்படுவது.  வடக்கில் மிகவும் பிரபலமான இனிப்பாக இந்த ரப்டி சொல்லப்படுகிறது. ஜலேபி மீது ரப்டி, லஸ்ஸி மீது ரப்டி, இப்படியில்லாமல் தனியாகவே ரப்டி என விதம் விதமாக ரப்டி தயாரிக்கிறார்கள். பாலுக்கு குறைவே இல்லாத இந்த ஊரில் இப்படித் தயாரிப்பதில் ஆச்சர்யம் இல்லை தான்.  சாதாரணமாக ரப்டி சாப்பிட்டு இருக்கிறேன் என்றாலும் சமீபத்தில் பழைய தில்லியின் ஒரு பகுதியான சாந்த்னி சௌக் பகுதிக்குச் சென்றிருந்தபோது அங்கே ஒரு பழமையான உணவுக் கடை குறித்து கேள்விப்பட்டதால் அங்கே சென்று இருந்தேன். அந்தக் கடையில் பல வகை உணவு கிடைக்கும் என்றாலும் அங்கே கிடைக்கும் ஒன்பது வகை/சுவையில் ரப்டி மிகவும் பிரபலம் என்று சொன்னதால் சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்டேன்.  இந்தக் கடையில் ஒரு விசேஷம் - வாங்குவதற்கு முன்னர் சுவைத்துப் பார்க்கவும் கொஞ்சம் தருகிறார்கள் என்பதால் ஒன்றிரண்டு வகைகளை சுவைக்கலாம்! மிகவும் பிரபலமான கடை - ஷீஷ்கஞ்ச் குருத்வாரா அருகே இருக்கிறது. தில்லி பயணிக்க வாய்ப்பிருந்தால் இந்தக் கடையில் சில வகை ரப்டி சுவைத்துப் பார்க்கலாம்! 


******


பழைய நினைப்புடா பேராண்டி : கதவைத் தட்டிய பேய்....


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கதவைத் தட்டிய பேய்.... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


“டக்...டக்...டக்......”  கதவைத் தட்டும் ஓசை......


உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.  அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்திருப்பார்கள் போலும்!


மீண்டும்  “டக்...டக்...டக்......” 


கூடவே ஒரு குரலும்..... “மல்லிகாம்மா.. கதவைத் திற.....”   மல்லிகாம்மா.... கதவைத் திற.....”  உள்ளே இருக்கும் அம்மாவிற்குக் குரல் கேட்டு “யாரது எனக் கேட்க, இங்கே நிசப்தம்...


மீண்டும் சிறிது நேரம் கழித்து “மல்லிகாம்மா.. கதவைத் திற.....”   மல்லிகாம்மா.... கதவைத் திற.....”  என்ற குரல் கேட்க, பெரியம்மா சத்தமாக அம்மாவிடம் கதவைத் திறக்காதே என்று சொன்னதோடு, தாழ்வாரத்தில் கிடந்த ஒரு துடப்பம் எடுத்து தரையில் அடி அடி என அடிக்க, குரலும் உருவமும் நகர்ந்து விட்டதாம்.


வாசல் கதவை விட்டு அகன்ற பேய் அடுத்ததாக ஜன்னல் வழியாக வந்துவிடுமோ என அவசரம் அவசரமாக எல்லா ஜன்னல் கதவுகளையும் மூடிவிட [பொதுவாகவே நெய்வேலியில் எல்லா ஜன்னல்களும் காற்றோட்டத்திற்காக, திறந்தே தான் இருக்கும்], ஜன்னல்களிலும் “டக்....டக்....டக்....”  ஓசை. அதற்கும் உள்ளே இருந்து பதில் வராது போக, தோட்டக்கதவிற்கு தாவியது கதவைத் தட்டிய பேய்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த நாள் இனிய நாள் : நிலாவில் கால்


1969-ஆம் வருடம் ஜூலை மாதம் 20-ஆம் நாள் - கிட்டத்தட்ட 55 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் தான் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நிலாவில் முதன் முதலாக கால் பதித்தார். வானியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  அறிவியல் வளர்ச்சி என்பது நல்ல விஷயம் தானே. நம் நாட்டில் உள்ள பலருக்கும் (சிலருக்கு பிடிக்காது போனதும்), சந்திரயான் 3 வெற்றி பெற்றது எந்த அளவு மகிழ்ச்சி தந்தது என்பது கண்கூடு.  


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் :  Sign Language


ஒன்பது வருடங்களுக்கு முன்னர் எடுத்த விளம்பரமாக இருந்தாலும் இன்றைக்கு பார்க்கும்போதும் மனதைத் தொடும் விதமாகவே இருக்கிறது சாம்சங்க் விளம்பரம் ஒன்று.  நீங்களும் பாருங்களேன்!



மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


Hearing Hands - Touching Ad By Samsung (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த துணுக்கு :  மாட்டிக்கொண்ட எலி



ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள். எலிக்கு தன்னை சுத்தி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி. இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுத்தி ஜாடியில் உள்ள தானியத்தை உண்டது. நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய் ஒரு நாள் தீர்ந்தே விட்டது. எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேறவே முடியாது.


இனி தினம் யாராவது தானியம் போட்டால் மட்டுமே அதற்க்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான். அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியதை, வேண்டும் என்பதை சாப்பிட முடியாது.


நீதி: சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமை ஆக்கி, அதற்கு சொகுசாய் நம்மை வாழப்பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும்.


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 ஜூலை 2024


32 கருத்துகள்:

  1. இன்று இங்கு வந்து பிளாக்கை திறந்ததும் ஒரு ஆச்சர்யம்...  நேற்று இரவு ஒரு கடையில் மூன்று வகை ரப்டி யுடன் இந்திராணி ரப்டி என்கிற பெயர் பார்த்து வியந்தேன். 

    இன்று காலை எழுந்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி.  ஒரு எலி கிச்சனிலிருந்து ஓடியது.  ஆ...  ஐந்தாறு வருடங்களாக அதுவும் புது வீட்டுக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளாக இந்தத் தொல்லை இல்லாமல் இருந்ததே..   இராஃபைட் கூட புதுசாத்தான் வாங்கனுமே..  எப்படி இதை வெளியேற்றுவது என்ற சிந்தனையோடே நடைப்பயிற்சி செய்து வந்தேன்...

    இந்த இரண்டு பற்றியும் உங்கள் பதிவின் தலைப்பில்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... உங்கள் அனுபவங்களுடன் ஒத்துப் போயிருக்கிறது இந்த காஃபி வித் கிட்டு பதிவு - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் அருமை.  கோவில் பற்றிய செய்தி சுவாரசியம்.  

    பழைய பதிவு பேய்க்கதை சுவாரஸ்யம்தான்..  அப்போதைய கேள்வியே இன்றும்!

    விளம்பரம் ஒரு நொடியில் கண்களை ஈரப்படுத்தியது.  எலிநீதி சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மிகவும் தேவையான வாசகம் எல்லோருக்குமே!

    எபியிலும் பேய்...இங்கும் பேய்!!!! ஹாஹாஹாஹா

    அங்கும் ஆஜர் வைத்துவிட்டு வருகிறேன் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பேய் நினைவுகள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  4. நம் நாட்டில் எத்தனையோ பழமையான கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்திலேயே இருக்கும் கோயில்கள், அதன் பெருமை என்ன போன்றவற்றை இன்னும் அறிந்திருக்காத போது, இந்திய தேசத்தில் இருக்கும் ஆச்சரியமான கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட கோயில்கள் குறித்து நாம் அறிவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. //

    ஆமாம் ஜி. சமீபத்தில் கூட சுதா மூர்த்தி அவர்கள் மக்களவையில் தன் முதல் பேச்சில் இதைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிக முக்கியமான இரு கருத்துகளை முன் வைத்தார்.

    பெஹத்தா புஜுர்க் // ஆமா நானும் சமீபத்தில் வாசித்தேன் இந்த நிகழ்வு குறித்து. உடனே ஆர்வம் எழுந்தது அங்கு சென்று தங்கியிருந்து இதைப் பார்க்க வேண்டும் என்று!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதா மூர்த்தி அவர்களின் முதல் உரை - பாராளுமன்றத்தில்! நானும் கேட்டு ரசித்தேன். சிறப்பாக பேசினார் என்பதில் சந்தேகமில்லை.

      பெஹத்தா புஜூர்க் - உங்களுக்கும் செய்தி பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. சென்று பார்க்க எனக்கும் எண்ணம் வந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. ஆ!! வெங்கட்ஜி இன்றும் ரப்டியா அதுவும் ஒன்பது சுவையில்!! ஆசை எழுகிறது சுவைக்க ஆனா ஒவ்வொன்றிலும் கால் ஸ்பூன் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்தாலே என்னை எறும்பு மொய்த்துவிடுமோன்னும் தோணுதே!

    கதவைத் தட்டிய பேய் கொஞ்சம் நினைவு இருக்கு வாசித்ததும் விரட்டியது பற்றியும்! உங்கள் அப்போதைய பயம் பற்றியும்....கதையாக எழுதலாம் இதை.

    நிலவுக்குச் சென்றது, அறிவியல் வளர்ச்சி, எல்லாமே நல்ல மகிழ்ச்சியான விஷயங்கள் நல்ல வகையில் கையாண்டால் நன்மைதான்.

    நேற்று பாருங்க மைக்ரோஸாஃப்ட் cloud ல ஏற்பட்ட பிரச்சனையால் உலகமே ஒரு சில விஷயங்களில் ஸ்தம்பித்துப் போனது குறிப்பாக விமானங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் இப்ப சரி செய்திட்டாங்க முக்கியமான பிரச்சனையை. என்றாலும் குழப்ப நிலை நீடிக்கிறதாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்பது சுவையில் ரப்டி - ஒவ்வொன்றும் ஒரு ஸ்பூன் எடுத்துச் சாப்பிட்டால் கூட சர்க்கரை அளவு அதிகரிக்கும் - அதே அதே!

      கதவைத் தட்டிய பேய் - முன்னர் படித்ததும் நினைவில் - மகிழ்ச்சி.

      அறிவியல் வளர்ச்சி நல்லது தான் என்றாலும் அதிக அளவில் அதன் மீதான Dependance ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு மைக்ரோசாஃப்ட் பிரச்சனை ஒரு உதாரணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. ரப்டி ஒருமுறையேனும் சுவைத்துப் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வாருங்கள் ஐயா. சுவைத்துவிடலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. வாசகம் அருமை.
    மல்லிகாம்மா யார் என்ற ஆவல் வந்து விட்டது.
    எவ்வளவு தட்டியும் காதில் விழவில்லை மல்லிகாம்மாவுக்கு.
    வீடு தெரியாமல் இரவு நேரம் உங்கள் வீட்டு கதவை தட்டி விட்டார்களோ!

    மாட்டிக்கொண்ட எலி படித்தவுடன் "பாட்டியின் வீட்டு பழபானை"
    பாடல் நினைவுக்கு வந்தது. "கள்ளவழியில் செல்பவரை எமன் காலடி பற்றி தொடர்வான் "என்று வரும் கடைசியில் நீதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மல்லிகாம்மா - எனது அம்மா தான்!

      பாட்டி வீட்டு பழம்பானை - சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. மனதை தொட்ட காணொளி.

    நான் என் அப்பாவுக்கும் sign language கற்றுக் கொடுத்தாலும் அவருக்கு அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

    நேற்று ஒரு குறும்படம் ஹிந்தியில் - கண்ணில் நீர் துளிர்க்க வைத்த ஒன்று பார்த்தேன். படம் பார்த்தேனே தவிர பெயரை நோட் செய்யாமல் விட்டுவிட்டேன். இப்ப நேற்றைய ஹிஸ்டரில பார்த்த நேரத்தை வைத்து தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை ஏன்னு தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      Sign Language - அந்த வயதில் புதிதாக கற்றுக் கொள்வது சற்று சிரமம் தான்.

      நீங்கள் பார்த்த குறும்படம் - அடடா... சில சமயங்கள் இப்படி நடந்து விடுகிறது. மீண்டும் பார்க்க வேண்டும் அல்லது பகிர வேண்டும் என நினைப்போம் - ஆனால் சேமிக்காமல் விட்டுவிடுவோம். இப்போதெல்லாம் பார்த்த உடனே அதன் சுட்டியை எனக்கே Whatsapp வழி அனுப்பிக் கொள்கிறேன் - பகிர நினைக்கும்போது வசதியாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. எலியை வைத்துச் சொன்ன துணுக்கு நீதி அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலி துணுக்கு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  10. மாட்டிக்கொண்ட எலி கதை ஜியோ பயனர்களை மறைமுகமாக குறிப்பிடுவது போல் உள்ளது. துவங்கும்போது எல்லாமே இலவசம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டு கட்டணம். தற்போது கட்டண உயர்வு. மாட்டிக்கொண்ட எலி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா ஹாஹாஹஹா எனக்கும் தோன்றியது ஆனால் நமக்கு எதுக்கு வம்புன்னு விட்டேன்!

      கீதா

      நீக்கு
    2. மாட்டிக் கொண்ட எலி - ஜியோ பயனர்கள் - ஹாஹா... இது அதற்கு முன்னரே வந்த துணுக்கு! ஆனாலும் இதையும் குறிக்க பயன்படுத்தலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
    3. இதில் வம்பென்ன இருக்கிறது! சிலருக்கு பிடிக்காமல் போகலாம் - அவ்வளவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. இன்றைய கதம்பம் மிகவும் பிடித்திருந்தது.

    மேலோட்டமாகப் படிக்க முடியாமல் அதுபற்றி யோசிக்கவும் வைத்துவிட்டது. அதனால் ஒன்றைப்பற்றி மாத்திரம் எழுத முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கு பிடித்ததாகவும் இருந்ததோடு, யோசிக்கவும் வைத்திருக்கிறது - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. வாசகம் அருமை. அலுவலகத்தில் பல விஷயங்களில் கறாராக நடந்துகொண்டதும், பிடிக்காத கசக்கும் உண்மையைத் தேன் தடவாமல் தந்ததும் நினைவுக்கு வருது.

    பெஹெத்தா புஜுர்க்காணவேண்டிய கோவில்.

    தில்லியில் யாத்திரையின்போதுதான் வரும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அடுத்த முறையாவது இரண்டு மூன்று நாட்கள் தங்கி இடங்களையும் உணவகங்களையும் காண நினைத்திருக்கிறேன். (தினமும் பெங்களூருக்கு இரயில் இருக்காதே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - பல சமயங்களில் இப்படி கறாராக நடக்க வேண்டியிருக்கிறது - வேறு வழியில்லை.

      பெஹத்தா புஜூர்க் - காண வேண்டிய கோவில் தான்.

      அடுத்த தில்லி பயணத்தில் சுவைக்கலாம் வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. கதவைத் தட்டிய பேய்... மனப்பிராந்திதான் பேயாக உருவம் எடுக்கிறதோ?

    எலி பாட்டில்... நல்ல நீதிக் கதை. சுலபமாக ஏதும் கிடைக்கிறது நமக்கு என்றால், நம் பூர்வ ஜென்மப் புண்ணியம் விரைவில் கரைகிறது என்றே பொருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதவைத் தட்டிய பேய் - மனப் பிராந்தி - இருக்கலாம்!\

      பூர்வ ஜென்மப் புண்ணியம் கரைகிறது - ஆஹா... இப்படியும் இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. வாசகம் நன்று.

    கோயில்கள் பற்றிச் சொல்லியது ஆமாம் நம் நாட்டில் காணவேண்டியவை நிறைய இருக்கின்றன.

    பேய் என்பதெல்லாம் மனப்பிராந்தி என்றே தோன்றும்.

    காணொளி மனதைத் தொட்டது.

    நிலாவில் கால் பதித்து 55 வருடங்களான தினமா இன்று!

    மாட்டிக் கொண்ட எலி நீதி நன்று

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  15. விளம்பர காணொளி மனதை தொட்டது. நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்தனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரக் காணொளி உங்கள் மனதைத் தொடும் விதத்தில் இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....