வியாழன், 25 ஜூலை, 2024

கதம்பம் - காது குத்தும் வைபவம் - ரேடியோவில் ஆத்திச்சூடி



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்றைய தினம் வெளியிட்ட காசி விஸ்வநாதர் கோயில் பதிவையும் வாழ்த்துப்பா பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******

காது குத்தும் வைபவம் - 7 ஜூலை 2024:




குழந்தை அழும் போது பெற்றோரும் உற்றாரும் மகிழ்வுடன் இருக்கும் தருணங்களில் ஒன்று காதணி விழா! அழும் குழந்தையை எல்லோரும் மாற்றி மாற்றி சமாதானம் செய்ய முயற்சித்தாலும் அந்த தருணத்தை எண்ணி எல்லோருமே சந்தோஷத்துடன் காணப்படுவர்!


அப்படியொரு காதணி விழாவில் தான் இன்று மகளும் நானும் பங்கேற்று வந்தோம்! விழா வெகு சிறப்பாக நடைபெற்றது! அங்கு அமர்ந்திருந்த போது மகளிடம் அவளுக்கு காது குத்தும் வைபவம் நிகழ்ந்ததை பற்றியும் இப்படியொரு காதணி விழாவில் என்னுடைய பதினைந்தாவது வயதில் எனக்கு இரண்டாம் முறையாக மூக்கு குத்தியதையும் சொல்லிக் கொண்டிருந்தேன்..🙂


மகளும் ஐந்தாம் வகுப்பிலிருந்தே தன் தோழிகள் மூக்குத்தி போட்டுக் கொள்வதை பார்த்து ஆசைப்பட்டாள்! பின்பு பயத்தின் காரணமாக ஒவ்வொரு முறையும்  தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறாள்! நேற்றைக்கு கூட குத்திக் கொள்கிறேன் என்றாள்! ஆனால் இன்று அந்தக் குழந்தையின் அழுகையை பார்த்ததும் மாட்டேன் என்கிறாள்....🙂


மகளின் ஆயுஷ்ஹோமம் டெல்லியில் எங்கள் வீட்டிலேயே எளிமையாக நடைபெற்றது! அப்போது எங்கள் பகுதியில் இருந்த கேரளத்தைச் சேர்ந்த ஒருவரின் நகைக்கடைக்குச் சென்றே மகளுக்கு காது குத்தினோம்! மகளின் அழுகையை பார்க்க முடியாது என்று என்னவர் அங்கு வர மறுத்து விட என்னுடன் அப்பாவும், கணவரின் பெரியம்மாவும் உடன் வந்தனர்!


பொதுவாக தாய்மாமாவின் மடியில் அமர்த்தி தானே காது குத்துவது வழக்கம்! அப்போது என் தம்பியாலும் டெல்லிக்கு வர இயலவில்லை! நகைக்கடைக்கு எங்களுடன் வந்திருந்த கணவரின் நெருங்கிய நண்பரின் மடியில் குழந்தையை அமரவைத்து தான் காது குத்தி வந்தோம்! 


காது குத்திய இடத்தில் புண்கள் வந்துவிடக்கூடாதென்றும் விரைவில் ஆறி விடவும் காதணியை முதலில் சின்ன வெங்காயத்தில் நன்கு அழுத்தி விட்டு பின்பு தான் காது குத்தினார்! சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன் அப்படிபட்டதாம்!


ஒவ்வொரு நிகழ்வும் எத்தனை இனிமையானது! இன்னமும் அப்பா செய்து தந்த சின்ன சின்ன விஷயங்களும், அப்பா உடன் இருந்த நிகழ்வுகளும் தான் மனது முழுவதும்  நிறைந்திருக்கிறது! அப்பாவின் தொப்பையை பிடித்துக் கொண்டு சைக்கிளில் பள்ளிக்குச் சென்றது முதல் அப்பா என்னுடன் உடன் இருந்த நேரங்கள், சொன்ன அறிவுரைகள், வாழ்க்கை நெறிகள் எவ்வளவோ இருக்கிறது!


காலம் வேகமாக ஓடினாலும் மனதில் பதிந்து விட்ட நினைவுகளில் எந்த மாற்றமும் இல்லையே! இன்னும் பசுமையாகவே இருக்கிறதே! அன்றைய நாளுக்கான சாட்சியாக இன்று  என்னால் இருக்க முடிந்ததையும் அதை மகளிடம் பகிர்ந்து கொள்ள முடிந்ததையும்  எண்ணி மிகவும் மகிழ்கிறேன்! மீண்டும் இப்படியொரு தருணம் என்பது அடுத்த தலைமுறையினரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே சாத்தியம்!


*******


ரேடியோவில் ஆத்திச்சூடி - 9 ஜூலை 2024:




காலைநேர பரபரப்பில்  fm கேட்பது என் பழக்கம்! இன்றைய சமையலாக  புதினாத் துவையலும், பீர்க்கங்காய் கூட்டும் என முடிவு செய்து கொண்டு துவையல் அரைப்பதற்காக புதினாவை ஆய்ந்து கொண்டே fm கேட்டுக் கொண்டிருந்தேன்!


Hello fm 106.4ல் காலைநேரத்தில் ஆத்திச்சூடி என்ற நிகழ்ச்சி நன்றாக இருக்கும்! ஆன்மீகம், தமிழ், நம் கலாச்சாரம், பண்பாடு, ஊர் திருவிழாக்கள் என்று பலதரப்பட்ட தகவல்களையும் அதில் தெரிந்து கொள்ளலாம்! ஜெயராம் என்பவர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குகிறார்! 


சமையல் வேலைகளுடன் இந்த நிகழ்ச்சியையும் ஆர்வத்துடன் கேட்பேன்! அதில் இன்று ஐவகை நிலங்கள் என்றதும்…


ஐவகை நிலங்கள்.... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நானும் உடன் சொல்லிக் கொண்டிருந்தேன். 


அடுத்து நான்கு வகை நவராத்திரிகள் கொண்டாடப்படுவதாக சொன்னதும் அதில் எனக்கு தெரிந்த இரண்டு நவராத்திரிகளை சொல்லிக் கொண்டிருந்தேன்! 


இப்போது ஆனி மாதம் அல்லவா! இந்த மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி , புரட்டாசியில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி, தை மாதத்தில் ஷியாமளா நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது! டெல்லியில் இருந்த போது வசந்த பஞ்சமி என்று அன்றைய தினம் பள்ளியில் மஞ்சள் நிற உடை, மஞ்சள் நிற உணவு என பின்பற்றுவார்கள்!


வாரம் ஒரு தமிழறிஞர் பற்றிய தகவல்களும் இந்த ஆத்திச்சூடி நிகழ்ச்சியில் பகிரப்படுகிறது!  ஒரு வாரம் காளமேகப் புலவர் பற்றிய தகவல்களும் அவர் எழுதிய பாடல்களும், அடுத்து முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதன் அவர்களைப் பற்றிய தகவல்கள், அடுத்து அந்த வரிசையில் இந்த வாரம் திரிகூட ராசப்ப கவிராயர் என்றதும்…


என் பள்ளிநாட்களில் என் தமிழாசிரியர் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்களும், திருஞானசம்பந்தன் சாரும் சொல்லித் தந்த பாடங்கள் நினைவுக்கு வந்தன! கற்பனையில் பாக்குமரங்கள், பலாமரங்கள் என  பசுமை போர்த்திய குற்றால மலையை வலம் வந்த நாட்கள் அவை!


கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த மகளிடம் திரிகூட ராசப்ப கவிராயர் என்றதும்...குற்றால குறவஞ்சியை எழுதினவர்! ஒவ்வொரு பாட்டும் குற்றால மலை எங்கள் மலையேன்னு முடியும் என்றாள்! அவளின் தமிழார்வத்தை எண்ணி மகிழ்ந்தேன்!


எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படித்தாலும் நம் தாய்மொழியை விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும்! எனக்கு டமில் தெரியாது என்று சொல்வது ஒன்றும் அழகல்ல! பிழையின்றி எழுதவும், உச்சரிப்பு சுத்தமாக பேசவும் தெரிந்து வைத்திருப்பதே அழகு!


இன்றைய நாள் இப்படியாக  இனிதானது!


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்




 

16 கருத்துகள்:

  1. சில நினைவுகள் மறக்க முடியாதவை.  மனதில் நின்று விடுவதோடு அவற்றை மீண்டும் மேலே கொண்டு வர, அதே போன்ற மற்றவர்களின் நிகழ்வுகளும், புகைப்படங்களும் உதவுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். நினைவுகள் சங்கிலி போல் பிணைந்து கொண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதை மேலே கொண்டு வரும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. என் பெரியவனுக்கு அஹங் அஹங் என்று தடக்கி தொடர்ந்து அழுதால் மூச்சு விட்டு அடுத்த கட்ட அழுகைக்கு போகமாட்டான்.  மூச்சுக்கு திண்டாடி முகமெல்லாம் நீலம் பாரித்து திணறுவதைப் பார்க்க பதட்டமாய் இருக்கும்.  பதட்டமாய் தட்டி கொட்டி அவனை நிலைக்கு கொண்டு வரவேண்டும்!  மருத்துவரிடம் சென்றால் இந்த நோய்க்கு பிடிவாதம் என்று பெயர்.  மருந்து, அழாமல் பார்த்துக் கொள்வதுதான் என்றார்.  காது குத்தும் அன்று நாங்கள் பதட்டமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்து ஒன்றும் நேராமல் பார்த்துக் கொண்டோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! சில குழந்தைகளுக்கு இப்படி ஆகிடும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. நான் FM ரேடியோ பக்கமே செல்வதில்லை.  உண்மையில் அவர்கள் விடாமல் பேசுவதும், தொடர்ச்சியான விளம்பரங்களும் அதற்கு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவருக்கும் கூட ரேடியோ கேட்பதில் விருப்பமிருக்காது. தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நிறுத்தத் தான் சொல்வார். .:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. திரிகூட ராசப்பக் கவிராயர் என்றாலே வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் என்று மனம் தானாகப் பாட ஆரம்பித்துவிடுகிறது. நானும் குற்றால மலையைக் கற்பனையிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். இன்னும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    எங்கள் மகளும் மூக்கு குத்திக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பிறகு திடீரென்று ஒரு நாள் ஆசை வந்து குத்திக்கொண்டாள். ரோஷ்ணிக்கும் ஒரு நாள் ஆசைவரும். காத்திருங்க. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்றால குறவஞ்சியை மறக்க இயலாது. மனதில் பசுமை போர்த்தி பதிந்திருக்கிறது.

      உங்கள் மகளும் ஒருநாள் மூக்கு குத்திக் கொண்டதைப் போல் இங்கும் நடைபெற்றது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க கீதா.

      நீக்கு
  5. வாசகம் அருமை. காது குத்து , பிறந்த நாள் படங்கள், மலரும் நினைவுகள் அருமை.
    இப்போது அழகு நிலையத்தில் காது, மூக்கு வலி இல்லாமல் குத்தி விடுகிறார்கள், மருமகள் மூக்கு குத்தி கொண்டாள்.

    நானும் Hello fm 106.4ல் காலைநேரத்தில் ஆத்திச்சூடி கேட்பேன் ஆதி.ஜெயராம் குரல் இலங்கை வானெலியில் ஒரு அறிவிப்பாளர் குரல் போலவே இருக்கும். நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் நம்பிக்கையோடு இருப்போம், என்று அவர் முடிப்பது பிடிக்கும் எனக்கு. காலை நேரத்தில் நேர்மறை எண்ணங்கள் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கும். பிரார்த்தனை நேரத்தில் முக தெரியாதவர்களுக்கு பிரார்த்தனை செய்து கொள்வது மன நிறைவை தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ fm நீங்களும் கேட்பதில் மகிழ்ச்சிம்மா. எனக்கும் நல்லதே நடக்கும் என்ற வார்த்தைகள் பிடிக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. வாசகம் நன்று.

    காதணி விழா பழைய பொக்கிஷப் படம்! வெங்கட்ஜியா அது!

    இப்போதெல்லாம் காது மூக்கு குத்துவது சுலபமா வலியே தெரியாம குத்தறாங்க.

    எனக்கும் பழைய நினைவுகள் மீண்டன

    FM ஒலிபரப்புத் தகவல்கள் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. காதுகுத்தும் வைபவம் பற்றி வாசித்த போது என் நினைவுகளும் பின்னால் சென்றது. என் மகளுக்கும் இது போல் ஒரு நகைக்கடைக்குச் சென்று அங்குள்ள ஒரு தங்க ஆசாரியைஅவருடைய பணியிடத்தில் உள்ளவரை வரவழைத்து குத்தப்பட்டது. காது குத்திய இடம் பழுக்காமல் இருக்க சின்ன வெங்காயத்தில் குத்தி செய்வது எல்லாம் நம் முன்னோர்கள் செய்து பார்த்து சக்ஸஸ் ஆன அறிவுரை. இப்படி எவ்வளவு இருக்கிறது! இருந்தாலும் அதனிடையே உங்கள் அப்பாவையும் நினைத்தது உங்கள் அப்பாவின் மீதான பாசத்தை நினைத்து நெகிழ்ச்சி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் காரணங்கள் பல இருக்கும். உங்கள் மகளுக்கும் இப்ப்டித்தான் நடைபெற்றதா! மகிழ்ச்சி. அப்பாவின் நினைவுகளோடு தான் ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  8. பொக்கிசப் படம் ,நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....