புதன், 3 ஜூலை, 2024

ஜெய் துவாரகாதீஷ் ஜெய் சோம்நாத் - பயணத் தொடர் - விஜி வெங்கடேஷ் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் கடந்த திங்களன்று இப்பக்கத்தில் எழுத ஆரம்பித்தது நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தொடரின் முதலாம் பாகத்தினை நீங்கள் படித்திருக்காவிட்டால், படித்து விடுங்களேன். இதோ இன்றைக்கு, பயணத் தொடரின் இரண்டாம் பாகம் உங்கள் பார்வைக்கு! வாருங்கள் த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களின் வார்த்தைகளில் படித்து ரசிக்கலாம்! - நட்புடன் - வெங்கட் நாகராஜ், புது தில்லி! ஓவர் டு விஜி!


******







இந்தப் பயணத் தொடரின் முதல் பகுதிக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், உங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி.  எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் காலை நேரே கோம்தியில் கால் நனைத்து, நீர் புரோஷித்துக்கொண்டு கோவில் சென்று ஆரத்தி தரிசனத்தில் கண்ணாரக் கண்ணனைக் கண்டு களித்தோம். பின்னர் ருக்மிணி கோவில் (துர்வாசர் சாபத்தால் கிருஷ்ணனைப் பிரிந்து 12 வருடங்கள் சற்று தள்ளி தனித்திருக்கும் கோயிலுக்கு) சென்றோம். அங்கிருந்து Bபேட்(தீவு) துவாரகா அதாவது கடல் கொண்டது போக மிச்சம் கடல் நடுவில் இருக்கும் நிலப் பரப்பிற்கு படகு சவாரி. 50 பேர் போக முடியும் படகில் 100 பேரை ஏற்றிக்கொண்டு (இதுபோல் புனித ஸ்தலங்களுக்கு கொரோனா வரமாட்டேன் என்று சபதம் செய்திருந்ததால், பலரும் mask இல்லாமல் கிட்டத்தட்ட ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே சமூக இடைவெளி கடைபிடித்தோம்) படகு விரைந்தது sorry நகர்ந்தது. வானம் தெரியாத அளவிற்கு வெண் பஞ்சுப் பொதி போன்ற பறவை கூட்டம், (பேர் கேட்கவில்லை அதனிடம்), மக்கள் விட்டெரியும் பிஸ்கெட் துண்டுகளைக் கவ்விக்கொள்ள. கீழே மீன்களுக்குப் போட பொரி packet-ம் மேலே பறவைகளுக்கு ஊட்ட பிஸ்கெட் packet-ம் விற்பவன் எங்களுடனேயே படகில் புனித யாத்திரை மேற்கொண்டான். பிஸ்கட்டை கையில் ஏந்தி உயர்த்தி காட்டினால் நம் கரங்களில் அதன் அலகு படாமல் நாசுக்காக கொத்திச் செல்கின்றன. 




கரை இறங்கி சற்று தூரம் நடந்தால் ஒரிஜினல் main துவாரகாதீஷ் கோவில். இங்கிருந்துதான் அகில உலகத்தையும் 100 வருடங்கள் கிருஷ்ணர் ஆண்டார். ஆனால் அது ரொம்ப சாதுவாக ரொம்ப சாதாரணமாக இருக்கிறது. ஆனால் அவர் பேரன் (ப்ரத்யும்னன் மகன்) அனிருத், தான் அரசாண்டு கொண்டிருந்த  எகிப்திலிருந்து (சந்தேகத்தை எங்கள் புரோஹித் கேஷவ் ஜியிடம் கேட்டுத்  தீர்த்துக் கொள்ளவும்) வந்து துவாரகையை கடல் கொண்ட பிறகு தாத்தாவுக்காக புதிதாக நிர்மாணம்  பண்ணிய, கரையில் இருக்கும் கோவில்(நாங்கள் தரிசனம் பண்ணியது) ஆர்ப்பாட்டமாக, பிரம்மாண்டமாக ஜொலிக்கிறது. பின்னர் ஒரிஜினல் main கோவில் வளாகத்திலேயே  சுதாமா (குசேலர்) கிருஷ்ணனை சந்தித்த இடம் இருக்கிறது. அத்தீவிலேயே சிறிது தூரத்தில் சமீபத்தில் நிர்மாணிக்கப்பட்ட golden krishna temple போனோம். தங்கப்பாளங்களாலும் பல கலர் கண்ணாடிகளாலும் இழைத்து கட்டியிருக்கின்றனர். க்ருஷ்ண அவதார நிகழ்வுகள்  அத்தனையும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணர் செய்த கோபிகா வஸ்திராபஹரணம் scene எல்லாம் தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக குளிக்கும் பெண்கள் நிஜ நீரில் கைகூப்பி நின்றபடி இருக்க தலையில் நிஜ முடியுடனும் (wig), மரத்தின் மேல் நிஜ புடவையும் (சற்று பழையதாக, அழுக்காக, ஏன் கொஞ்சம் விட்டால் அப்பெண்கள் இந்த புடவையை நீயே வைத்துக்கொள், எங்களுக்குப் புதுசு வாங்கிக்கொடு என்று சொல்லும் அபாயத்துடன்) தொங்குகின்றன. 



நல்ல வேளை தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக கஜேந்திர மோக்ஷ சம்பவத்தில நீரில் நிஜ முதலை இல்லை, பொம்மைதான். எல்லா  பொம்மைகளுமே அழகாகவும் பாவ(Bhav)த்துடனும் படைக்கப்பட்டிருக்கின்றன. உருவாக்கியவருக்கு ஒரு ஷொட்டு👏🏻👏🏻. அவைகள் முன்னால் நின்று சுயப்படம் (அதான் selfie🙂) எடுக்கும் கூட்டத்தால் பொம்மைகளுக்கு திருஷ்டி விழுவதில்லை என்பது கூடுதல் ஆறுதல். அங்கிருந்து திரும்பி கரைக்கு வந்து நாகேஸ்வர் (இன்னொரு ஜ்யோதிர்லிங்கம்) தரிசனம். முகப்பிலேயே சுமார் 40 அடி உயர, கண்மூடி அமர்ந்த அழகிய கம்பீர சிவபெருமான் (super cazzettes குல்ஷன் குமார் sponsor செய்ததாம் - ஓட்டுநர் தகவல்). உள்ளே சென்று சிவனை தரிசித்தோம். சன்னதியில் சிவ புராணம் படித்துத் தமிழ் மணத்தை அங்கு சற்று பரப்பிவிட்டு மனநிறைவுடன் வெளியே வந்து சற்று அமர்ந்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்...


கோபி தலாவ் என்னுமிடத்திற்குச் சென்றோம். சிறு குட்டை போன்ற நீர் நிலை. கிருஷ்ணனை சந்திப்பதற்கு வந்த கோபிகைகள் அங்குதான் குளித்தனராம். க்ருஷ்ணரைப் பார்க்குமுன் அவரைப் பார்க்கப் போகும் தருணத்தைப் பற்றி என்னவெல்லாம் பேசிக்கொண்டு குளித்தனரோ? (அல்லது குளித்ததாக பாவனை செய்தார்களோ). நீரைப் புரோக்ஷித்துக்கொண்டு கரை ஏறினோம். நீர் வற்றும்போது அந்த குளத்தில் இருந்து கிடைக்கும் கோபி சந்தனத்தை (ஒரு வித மண்) சிறு சிறு குச்சிகளாக்கி விற்கின்றனர். மறுபடி துவாரகாதீஷ் தரிசனம். நிதானமாக கண்களால் அம்மாயனைப் பருகினோம். அருகிலேயே கடலின் மேல் சுதாமா சேது என்கிற பாலம் இருக்கிறது. இரவில் வண்ண வண்ண வெளிச்சங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வீசுகிறது. அதன் மேல் சிறிது நடந்து சென்றால் கடற்கரையோரம்   பாண்டவர்கள் ஏற்படுத்திய 2 அடி விட்டமுள்ள 5 கிணறுகள்.ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொறு நதியின் பெயரை வைத்திருக்கின்றனர். அதற்குள்ளிருக்கும் நீர் (கடற்கரையிலிருந்தும்கூட) சிறிதும் உப்பு கரிப்பதில்லையாம். எட்டிப் பார்த்துவிட்டு நகர்ந்தோம். ஒட்டகங்கள் கரையோரம் சோர்வாக, உல்லாசப் பயணிகளை சுமந்து கொண்டு நடை பயில்கின்றன. அப்பாலத்தில் நின்றுகொண்டு கடலையும் சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பது தனி சுகம். 


சோம்நாத் நோக்கிப் பயணம்: வழியில் ஹர்சித்தி மாதா கோவில், சுதாமா palace பார்த்தோம். சுதாமா (குசேலர்) மாளிகை என்றதும் நாம் படித்த, கேட்ட, ரத்னமயமான தூண்களுடன் கூடிய தங்க மாளிகை நினைவுக்கு வரும். ஆனால், இது ஒரு சாதாரண கோவில். சன்னதியில், சுதாமா(குசேலர்), கிருஷ்ணர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றனர், அவ்வளவே. பின்னர் Bபால்கா தீர்த்தம் என்னும் கோவிலுக்குச் சென்றோம். அங்குதான் கிருஷ்ணர் பாதத்தை ஜரா என்னும் ஒரு வேடனின் அம்பு தைத்து அவரின் பூலோக வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அவர் அமர்ந்திருந்த மரமும் (5200 வருடங்களுக்கு முந்தையது - துவாபர யுகம்) அந்த சன்னதியிலேயே இருக்கிறது. கீழே பட்டுப்போனது போல் இருந்தாலும் கோபுரத்தின் மேலே நன்கு இலைகள் விட்டு பசுமையாக இருக்கிறது. கிருஷ்ணர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தன் தாமரைப் பாதத்தைக் காட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருக்கிறார். வேடன், எதிரே கீழே மண்டியிட்டு கரம்கூப்பிக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல் வடிவமைத்திருக்கிறார்கள். மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. என்னதான் அது பரப்ரம்மம், தன் பூலோக வேலை முடிந்து தன் விஷ்ணு லோகத்திற்கு புறப்படுகிறது என்று புத்திக்குத் தெரிந்தாலும் ஏனோ ஒரு இனம்புரியாத வேதனை. அங்கிருந்து 3 நதிகள் கடலில் சேரும் திரிவேணி சங்கம்.கரையில் பாண்டவர்கள் ஏற்படுத்தி பூஜித்த  5 லிங்கங்கள். இவை எல்லாத்தையும் காரை விட்டு இறங்காமலேயே driver கைகாட்டிய இடங்களில் தரிசித்து கன்னத்தில் போட்டுக்கொண்டோம். 


ஓட்டுனர் பற்றி சில வார்த்தைகள்: சள சள வென்று பேசும் அல்லது சிடு சிடு வென இருக்கும் ஓட்டுனர்களைப் பார்த்து பழகிய நமக்கு இப்படி வாயையே திறக்காமல் ”பரப்ரரும்மம் ஜகன்னாதம்” னு இருப்பவனைக் கண்டது ரொம்ப ஆச்சர்யம். நாங்கள் 50 வார்த்தைகள் பேசினால் 1 வார்த்தை பதில் (வந்தால்) வரும். He was a man of few sorry single word. காது கேட்கவில்லையோவென்று சில சமயம் DD யில் மதியம் 1 மணி செய்திகள் போல் ஜாடையாலும் முகத்தில் நவரசங்களைக் காட்டி அபிநயித்தும், பல சமயம் காட்டுக்கத்தல் கத்தியும் பார்த்தோம். ம்ஹும். அங்கு சில்லு கூடப் பெயரவில்லை. சுற்றியிருபோர் காது சவ்வு பிய்ந்தது தான் கண்ட பலன். பிறகுதான் தெரிந்தது மொழிப் பிரச்சினை என்று. ஆகவே எங்களை ரொம்பத் துன்புறுத்திக்கொள்ளாமல் ஏதோ கேட்டு, பதிலை உத்தேசமாகப் புரிந்து கொண்டு மேற்கொண்டு பயணித்தோம். 


கீதா மந்திர்: அங்கு கீதையின் 18 அதியாயங்களையும் உள்ளே இருபுறமும் சலவைக் கல்லில் செதுக்கியிருக்கிறார்கள். எழுத்துக் கூட்டிப் படிக்கத்தான் சமயமில்லை. அருகே ஆதிசங்கரர் தன் முதன்மை 4 சீடர்களுடன் போதித்த + தவமியற்றிய குகை. உள் நுழையும் வாயில் 2 அடிக்கு  2 அடி அளவு. நுழைவதற்குள் உடல் பாகங்கள் செய்த ஒத்துழையாமை இயக்கம் சொல்ல முடியாதது. நடுவில் மாட்டிக் கொள்வோமோ என்கிற பயத்துடனேயே நுழைந்தோம். திருமூலர் 'ஊன் (உடல்) வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார், நாங்கள் ஊணால்(உணவு) ஊன்(மட்டும்) வளர்த்தது தப்பாயிற்று. 4 x 2 இடத்தில் அப்போது 5 பேர் அமர்ந்திருந்திருக்கிறார்கள்(ஆதிசங்கரர் + 4 சீடர்கள்).இப்போது 6 பேர் (நாங்கள் 5 + பண்டிட்ஜி). அவர் சொன்னவற்றை கேட்டுக்கொண்டு கையில் தாயத்துக் கயிறு கட்டிக்கொண்டு மறுபடி தவழ்ந்து வெளியே வந்து மூச்சு விட்டோம். (தவழ்ந்து எத்தனை ஜென்மமாயிற்று👼🏻). காட்டில் தவம் செய்வதைவிட இது ரொம்ப கடினம்.


தொடர்ந்து எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை வரும் பகுதிகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இப்பயணத் தொடரில் என்னுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்.  அடுத்த பகுதியில் மீண்டும் சந்திப்போம். அதுவரை… நட்புடன் விஜி வெங்கடேஷ்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 ஜூலை 2024


18 கருத்துகள்:

  1. லேசான நகைச்சுவையுடன் கூடிய எழுத்துகளை ரசித்தேன்.  ஓட்டுநர் குறித்த வர்ணனைகள் புன்னகைக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் ரொம்ப நல்ல வாசகம்.

    சுவாரசியமான எழுத்து. அங்கங்கே புன்சிரிப்பும் சில இடங்களில் சிரித்தேவிட்டேன்.

    முதல் படமும் சீகல் பறவைகள் படமும் அழகு.

    ப்ரத்யும்னன் மகன் அனிருத் - எகிப்து கதை புதியதாக இருக்கிறதே. இதுவரை கேட்டதில்லை.

    மற்ற இடங்கள் பற்றிச் சொல்லியிருப்பதற்குப் படங்கள் சேர்த்திருக்கலாம். சின்ன நீர் நிலை, பாலம் ....

    சிவன் சிலை சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      விஜி அவர்களின் எழுத்து உங்களை புன்னகைக்க வைத்தததில் மகிழ்ச்சி. தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.

      படங்கள் - என்னிடம் இருந்தவற்றை சேர்த்திருக்கிறேன். குறிப்பிட்டு இருக்கும் சில இடங்களுக்கு நான் சென்றதில்லை என்பதால் படங்கள் என்னிடம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. ஆமாம் படங்கள் உங்கள் படங்கள் என்று தெரிந்தது வெங்கட்ஜி.

      //தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.//

      கண்டிப்பாக

      கீதா

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. ஓட்டுநர் - ஹாஹாஹாஹா....மொழி முக்கியம். அதுவும் வடக்கே பயணம் செல்ல வேண்டும் என்றால் மொழி ரொம்ப முக்கியம். நிறைய தகவல்கள் கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழி தெரிந்திருப்பது அவசியம் தான். நீங்கள் சொல்வது போல அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் நிறைய தகவல்கள் கிடைக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையத்திற்கு வருகிறேன் ஐயா. தங்களை இணையத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மகிழ்ச்சி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. ஓட்டுனர் மொழி தெரியாதவரானால் சுற்றுலா எப்படி சிறப்பாக இருக்கும் ?
    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டுனருக்கு தெரிந்த மொழி நமக்கும் தெரிந்திருந்தால் நல்லது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. விஜி வெங்கடேஷ்3 ஜூலை, 2024 அன்று 1:08 PM

    படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.தொடரை அழகாக தொகுத்து வெளியிட்ட கிட்டு விற்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி. தொடர்ந்து எழுதுங்கள்.

      நீக்கு
  7. வாசகம் அருமை.

    பயண அனுபவங்களை ரசனையுடன் சொல்கிறார்.
    படங்கள் அழகு.
    ஓட்டுனரை பற்றி சொன்னது சிரிப்பை வரவழைத்தாலும் கஷ்டபட்டது தெரிகிறது.
    கீதா மந்திர் குகை அனுபவம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. உங்கள் தளத்தில் புதிய அறிமுகமான உங்கள் உறவினர் அவர்கள் எழுதும் பயணப் பதிவு முதல் பகுதியும் வாசித்துவிட்டேன்.

    பயண அனுபவங்களை மிகவும் சுவைபட ரசித்து எழுதுகிறார். ஓட்டுனரைப் பற்றி சொல்லியிருக்கும் பகுதி சிரிப்பை வரவழைத்தது. எனக்கும் ஹிந்தி மொழி தெரியாது. வடக்கே பயணம் செய்ய வேண்டும் என்றால் தெரிந்திருக்க வேண்டும். சமீபத்திய ஏப்ரல் மாதத்தில் வடக்கே பயணத்தில் பெரிய மகன் கூட இருந்ததால் எங்கள் குழுவிற்கு வசதியாக இருந்தது. மகனுக்கு ஹிந்தி ஓரளவு பேசத்தெரியும் என்பதால் சிரமமில்லாமல் ஆங்காங்கே விவரங்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது,

    படங்களும் பயண விவரங்களும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய பதிவர் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. தொடர்ந்து ஆதரவு அளிக்கவும், ஊக்கம் தரவும் வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....