இந்த ஆச்சி வேறு ஆச்சி....
படம்: இணையத்திலிருந்து....
அப்போ எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும்.
அன்னைக்கு ஆச்சிக்கு முன்னால எங்க வீட்டுல உள்ள ஏழுபேரு, எங்க அத்தை வீட்டுல உள்ள எட்டுல
இரண்டு பேரு, அப்பறம் பக்கத்து வீடு ஏக்கிமக்காவின்(இசக்கியம்மா அக்கா) வீட்டில உள்ள
ஏழுல மூணு பேரு அப்படி இப்படின்னு ஒரு பத்து பன்னிரண்டு பேரு சம்மணம் கூட்டி இருந்துகிட்டு
ஆச்சி சொல்லுக கதையை கேட்க தயாரா இருக்கோம். என்னை விட ஆறு வயசு சின்னவளான என் தங்கச்சி
கொஞ்சம் தள்ளி அடுக்களைக்கும் திண்ணைக்கும் நடுவுல நடையில வாஹா சாஞ்சு உட்கார்ந்து
இருந்த அம்மாவின் மடியில இருந்து திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருக்கு. அப்போல்லாம்
புள்ள பெத்து போடுவதில் பெரிய போட்டி இருந்திருக்கும் போல. எல்லோரும் கண்ணு வச்சு கண்ணு வச்சு இப்போ ரண்டு
மூணுக்கு மேல யாருமே பெத்துக்க மாட்டேங்காளே. அந்த கூட்டத்தில என்னைத் தவிர மீதி எல்லாம்
பொம்பளப் புள்ளைக கூட்டம். என்னைய ஒரு ஆம்பளையா மதிச்சாத்தானே.
அப்போ ஒரு பொடிசு, ஓடி வந்து முன்னால
இடம் கிடைக்காமல் ஆச்சிக்கு பின்னால போய் சம்மணம் போட்டது. இதப் பார்த்து எங்க வீட்டில
உள்ள இரண்டு பொடிசு கமுக்கமா சிரிச்சுது. ஏன்னா எங்க ஆச்சி "Gastro-ல
Maestro". பாவம் அந்த புள்ள ரொம்ப நேரம் ஆச்சிக்கு பின்னால இருந்ததுன்னா கஜாப்புயல்ல
மாட்டின நாகப்பட்டினம் மாதிரி ஆக வாய்ப்புண்டு.
இந்த சின்ன கூத்தப் பார்த்து எங்க அம்மாக்கு ஒரே சிரிப்பாணியா இருக்கு. "ஏட்டி லச்சுமி! ஆச்சிக்கு முன்னால
போய் இரு. நல்ல இடம் பார்த்து இருக்கதப் பாரு". அந்தப் புள்ளையும் முன்னால ஒரு
இடத்தப் புடிச்சு கஜாப்புயல்ல இருந்து தப்பிச்சுது. இப்படி வீட்டு திண்ணை சின்னப்புள்ளைகளால்
நிரம்பி ஜே ஜேன்னு இருந்தது.
எங்க வீட்டுல திண்ணையின்னு நாங்க சொல்லுகது
வீட்டின் மத்தியில் உள்ள பெரிய அறை. எங்க தாத்தா
ஆறு ஏழு பேரப்புள்ளைகள் ஓடி ஆடி விளையாடட்டும்னு கொஞ்சம் பெரிசாகவே வீட்டைக் கட்டி
வச்சிருந்தாரு. இந்த திண்ணைன்னு நாங்க சொல்லுக அறையிலதான் ராத்திரி ஒரு பெரிய சமுக்காளத்தை
விரிச்சு அதுக்கு மேல காதிகிராப்டு விரிப்போ இல்லாட்டி கோஆப்டெக்ஸ் விரிப்பையோ விரிச்சு
எல்லா புள்ளைகளையும் உருட்டி விட்டுருக்கும்.
எங்க ஊருல எல்லா வாத்தியார்மார் வீட்டிலேயும் இந்த காதி சமுக்காளமும் கோஆப்டெக்ஸ்
விரிப்பும் இல்லாம இருக்காதுல்லா. பின்னே வருஷத்துக்கு ஒருதடவையாவது தீபாவளிக்கோ பொங்கலுக்கோ
இந்த காதியையும் கோஆப்டெக்ஸையும் வாத்தியார்மாருக தலையில கட்டிட்டா மாசாமாசம் சம்பளத்தில
புடிச்சுக்கிடலாமுல்லா.
இந்த திண்ணையில கொஞ்சம் வளர்ந்த குண்டு
குருமா எல்லாம் ஒரு பக்கமா உருண்டுக்கிட்டு குசுகுசுன்னு உறக்கம் வருகது வரைக்கும்
பேசிக்கிட்டு இருக்கும். இந்த பொடி நண்டு நாழிகளையெல்லாம் இன்னொரு பக்கமா உருட்டி விட்டுருக்கும்.
காலையில எப்படியும் இந்த நண்டு நாழி ஸைடுல ஏதாவது ஒரு நண்டு
சமுக்காளத்தையும் விரிப்பையும் உப்புத்தண்ணியில நல்ல வாசனையா நனைச்சு வச்சுருக்கும். அதுலயும் ஒண்ணு ஏழு எட்டு வயசு வரைக்கும்
இந்த சர்வீஸை பண்ணிக்கிட்டு இருந்தது. இன்னொண்ணு உறங்கிக்கிட்டே விரலை சூப்பிக்கிட்டே
எழுந்திருக்கும். விரல் சூப்பின நண்டு இப்போது மத்திய வரித்துறையில 'சூப்பிரரண்டு'
ஆக இருக்கு. காலையில எல்லோரும் எழுந்ததும்
விரிப்பை நனைத்த பழியை அடுத்தாளுக்கு மேல போடுவதிலேயே பத்து நிமிஷம் போயிரும். எங்க
அம்மாவுக்கு இது ஒரு பெரிய வேலை. சமுக்காளத்தை காலையில வெயிலில் கொண்டு போட்டு காய
வைக்கணும். அப்பறம் அந்த விரிப்பை குளப்பறையிலோ ஆத்துலயோ கொண்டு ஊறவச்சு தொவைக்கணும்.
சமுக்காளம் ஒரு பத்து நாளைக்கு ஒருதடவை வெள்ளாவிக்கு போகும். நல்ல நேரப்போக்கைய்யா
எங்கம்மாவுக்கு.
இந்த திண்ணை புராணத்தில எங்க ஆச்சியை
திராட்டுல விட்டுட்டேன் பார்த்தேளா! இந்த ஆச்சி இருக்காளே ஆச்சி, லேசுப்பட்டவ கிடையாது.
பெரிய சொத்துக்காரி. அந்தக் காலத்திலேயே சம சொத்துரிமை பெற்றவள். ஆனால் தான் அவ்வளவு
பெரிய சொத்துக்காரி என்பது அவளுக்கு தெரியுமா என்பதில் எனக்கு இன்று வரை சந்தேகம் உண்டு.
அவ்வளவு அப்புராணிக்கிழவி. அவளுக்கு எங்க தாத்தா சொல்வது வேதவாக்கு. செக்குல கையெழுத்து
போடுவது போல் தாத்தாவுடன் வில் வண்டியில் பவதிக்கச்சேரிக்குப் போய் அவ்வப்போது கையெழுத்துப்
போட்டு வருவார், தான் பார்த்தேயிராத தன் பெயரிலுள்ள சர்வே நம்பரை விற்பனை செய்ய. மூத்த மகள் உள்ளூர்ல பெரிய பேர்போன வீட்டுல சம்பந்தம்.
இளைய மகளுக்கு நாரோல் குளத்து பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலே இருந்த லட்சுமி தியேட்டர் ஓணர்
வீட்டு சம்பந்தம். ஆனால் தன்னுடைய சம்பந்தி பெரிய சினிமாத் தியேட்டர் ஓணர் என்பதெல்லாம்
இவருக்கு தெரியுமான்னே எனக்கு தெரியவில்லை. அவ்வளவு எளிமை. இவருக்கு தன் கணவர், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
இதுதான் உலகம். இவர் வைக்கும் உள்ளித்தீயலுக்கு எங்க தாத்தா அடிமையாம். சாப்பிட்டு
முடித்து கைகழுவ அவசியமிருக்காதாம்.
என்னதான் எளிமையாக இருந்தாலும் தான்
காதில் அணிந்திருந்த பாம்படத்தை பெருமையாக கருதினார். மகள் வயிற்று பேத்தியை பார்த்தால்
"ஏ முத்தம்மா! நான் செத்தம்பொறவு இந்தப் பாம்படத்தை நீ எடுத்துக்கோ, சரியா!
"ஏன்னா அவளுக்கு எங்க தாத்தா பேரு போட்டிருக்காம். அதுக்கு இவ "போ, கிழவி!
உன்ன மாதிரி நான் காதை தோள் வரைக்கும் வடிச்சு போட்டுக்கிட்டு பாம்படத்தைப் போட்டு
ஆட்டிக்கிட்டு திரியேன்!" ன்னு செல்லமா ஆச்சியை கோணக்களி கிண்டுவா. அப்படியே ஆச்சி
இங்க வந்து மகன் வயிற்று பேத்தியை பார்த்தால் "ஏய் பவதியம்மா! யாருகிட்டயும் சொல்லாத.
இந்தப் பாம்படத்தை உனக்குதான் தருவேன்" என்பாள். ஏன்னா தன்பெயர் கொண்டவளாம். இந்தப் பேத்தி பாம்படத்தைப் போட்டுக்கொண்டு ஹோலிகிராஸ்
கல்லூரிக்கு போவதையும், இந்தியன் வங்கிக்கு வேலைக்கு போவதையும் மனக் கண்ணில் ஓட்டிப்
பார்த்தேன். பின்னே எனக்கும் நேரம் போகணும் இல்லையா!
ஆச்சி பேரப்புள்ளைகளைப் பார்த்து கதையை
ஆரம்பித்தாள், "மக்கா கேட்டயா. உங்க அப்பன் கண்ணப்பன் பொறந்து மூணு மாசம் இருக்கும்
பாத்துக்கோ. ராத்திரி கொஞ்சோல தண்ணிவுட்ட சோத்துல
மாங்கா புளிக்கறிய ஊத்தி செத்தோல கொத்தமல்லி தொவையல வச்சு திண்ணுக்கிட்டு புள்ளையை
தொட்டில்ல போட்டு ஆட்டிக்கிட்டே கொஞ்சம் தள்ளி படுத்தேன் பார்த்துக்கோ. ஒரே சடவா இருக்கு.
எப்போ கண்ணயந்தேண்ணு தெரியல்ல. இந்தப் பய கண்ணப்பன் தொட்டிலில கிடந்து நல்ல உறங்குகான்.
அப்போ திடீர்னு கண்ணு முழிப்பு தட்டிட்டு பார்த்துக்கோ. பார்த்தா ஒரு உருவம் தலையில
இருந்து கால் வரைக்கும் வெள்ளை துணியை போர்த்திக்கிட்டு தொட்டில சுத்தி சுத்தி வருகு. அவயம் போடலாம்னா எனக்கு தொண்டைகுழியில இருந்து சத்தம்
வரமாட்டேங்கு. நான் அனக்கம் காட்டாம பாத்துக்கிட்டே இருக்கேன். அது தொட்டில ரண்டு சுத்து
சுத்திக்கிட்டு புள்ளைய எட்டி பாத்துக்கிட்டு அப்படியே ஏணித்தடம் வழியா இறங்கி போயிற்று"
அப்படீண்ணு நீட்டி நிறுத்தினா ஆச்சி.
ஏற்கெனவே நெருக்கியடிச்சுக்கிட்டு இருந்ததெல்லாம்
இன்னும் கொஞ்சம்நெருங்கி ஒட்டிக்கிட்டு இருக்கு. நான் ஆம்பளப் புள்ளையாச்சே. யாருக்கு
மேலயும் ஒட்டாம பயப்படாம இருக்கிற மாதிரி இளிப்பா இளிச்சேன். எங்க அம்மாவுக்குத்தானே தெரியும் என்னோட இளிப்போட
அர்த்தமும் பிள்ளைகளோட நெருக்கியடிப்பின் அர்த்தமும். ஏன்னா இந்த மாதிரி கதையக் கேட்டா
முதல்ல பயப்படுவது அவதானே. உடனே எங்க அம்மா "நீங்க இந்தக் கதையை எத்தன தடவதான்
சொல்லுவையோ. புள்ளைகெல்லாம் பயப்படுகில்லா" ன்னு சொல்ல எங்க ஆச்சி அதைக் கண்டுக்காம
"கேட்டேளா மக்கா. அந்த உருவம் போனதும் நான் எந்திச்சு வடக்குப்பெறையில படுத்துக்
கிடந்த உங்க பாட்டாவை எழுப்பி சொன்னனா. அவரு சும்மா கெடட்டி. நம்ம மாடன் சாமி வந்து பார்த்திருப்பாரு. வேற எவம்ட்டி
இங்க வரமுடியும்னு சொல்லி புள்ளையை தொட்டில்ல எட்டி பார்த்துக்கிட்டு, நாளைக்கு இருட்டுனதும்
மாடனுக்கு வெளக்கு போடலாம்னு சொல்லிகிட்டு போய் படுத்துக்கிட்டாரு. நான் உறக்கம் வராம
கெதம் கெதம்ன்னு முழிச்சே கிடந்தேன். அடுத்த நாளைக்கு சாயங்காலம் மாடன்சாமிக்கு வெளக்கு
வச்சு, அவருகிட்ட இனிமே யாருக்கும் கண்ணுல படாம எங்க வாரிசுகளையெல்லாம் வந்து பார்த்து
ஆசீர்வதிக்கணும்னு சொல்லிக்கிட்டு வந்தாரு உங்க பாட்டா. அதுக்கும் பொறவு நம்ம மாடன்
சாமி நம்ம கண்ணுக்கு தெரியாம நம்மள நல்லா பார்த்துக்கிடுவாரு பார்த்துக்கோ" ன்னு
கதையை முடிப்பாள். எங்க தாத்தா மாடன் சாமியப் நேரில தைரியமாகப் பார்த்து பேசிக்கிட்டு
வருவாருண்ணு சொல்லுவதில் அவளுக்குப் பெருமை.
நல்லவேளையாக நான் நாத்திகனாக இல்லை.
இருந்திருந்தால் இந்த சுவாரஸ்யத்தை இப்போது இழந்திருப்பேன்.
இந்தக் கதையை சொல்லி முடிச்சதும் எங்க
வீட்டுல உள்ள பெரிய அக்காவும் அடுத்த அக்காவும் அவர்கள் பார்த்த பேய்க் கதையை ஆரம்பிப்பார்கள்.
"யம்மா! நேத்தைக்கு ராத்திரி ஒரு
எட்டு மணிக்கு நம்ம தெரு நடையில நாங்க ரெண்டு பேரும் இருந்து பேசிக்கிட்டு இருந்தமா.
தெருவுல ஒரே இருட்டா இருந்தது பாத்துக்கோ. அப்போ பொத்தையில இருந்து ரெண்டு உருவம் தலையோடு
முட்டாக்கு போட்டுக்கிட்டு எங்க முன்னாடியோட போகுது. இப்படி உருவத்தப் பார்த்தா தூன்னு
துப்புனா அதுக ஓடிரும்னு ஆச்சி சொல்லியிருக்கால்லா. அதனால இவ அந்த ரெண்டு உருவத்தையும்
பார்த்து தூன்னு துப்புனா பாத்துக்கோ. உடனே அந்த ரெண்டு உருவமும் கொஞ்சம் நின்னு திரும்பி
எங்களப் பார்த்து தூன்னு துப்பிக்கிட்டு போச்சு. நாங்க ரெண்டு பேரும் பயந்து போயி அடிச்சு
படிச்சு உள்ள வந்துட்டோம் பார்த்துக்கோ." உடனே எங்க அம்மா, "அட மூதேவி! இத
நேத்தைக்கே எங்கிட்ட ஏன் சொல்லாம இருந்தையோ. எத்தனை தடவ சொல்லியிருக்கேன். இருட்டுனதுக்கு
அப்பறம் தெருநடை பக்கம் தனியாக இருக்காதைங்கோன்னு. சரி. இத அப்பாகிட்ட சொன்னா என்னையில்லா
சண்டை பிடிப்பா."
பின்னே! இந்த தெருநடையில எங்கள் அம்மா
தலைமையில் அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் சமேதமாக ராத்திரி ஒன்பது மணிவரை அவ்வப்போது
மாநாடு நடக்கும். இந்த புள்ளைகள் உருவங்களை பார்த்த கதை எங்க அப்பா காதுக்கு போனால்
இந்த மாநாடுக்கு முற்றுப் புள்ளி வச்சுடுவார்னு பயம் வேற.
விஷயம் என்ன தெரியுமா. அப்போதெல்லாம்
எங்கள் ஊரில் வீடுகள் நெருக்கமாக இருக்காது. தள்ளி தள்ளி இருக்கும். வீடுகளின் முன்னும்
பின்னும் நிறைய காலி இடங்கள் கிடக்கும். அதுபோல எங்கள் வீட்டு முன்னால் ஒரு மேடான பெரிய
காலி இடம் கிடந்தது. அதை பொத்தை என்போம். அதன் நடுவில் ஒரு பெரிய உடைமரம். நான் அதை
குடைமரம்னுதான் சொல்லுவேன். ஒரு பிரம்மாண்டமான குடையை விரித்து வைத்த மாதிரிதான் இருக்கும்.
ராத்திரியானா இந்த அடர்ந்த உடைமரத்துக்கு கீழே கரும்கும்மிருட்டா இருக்கும். ஆள் இருந்தா தெரியாது. இதை பயன்படுத்தி சில சமயம்
வீட்டில் ஸ்வச்ச பாரத் மிஷன் இல்லாதவங்க அவசரத்துக்கு ஒதுங்கி விடுவார்கள். அப்படி
அன்னைக்கு ஒதுங்கின ஸ்வச்ச பாரத் பார்ட்டிங்கதான் எங்க வீட்டு வாசலில் ரண்டு பேரு இருக்கிறதைப்
பார்த்து விட்டு ஆள் அடையாளம் தெரியாம இருக்க தலையில முக்காடு போட்டுகிட்டு சத்தம்
போடாம போயிருக்கா. அந்த உருவங்களை பார்த்துதான் இவுக ரண்டு பேரும் தூன்னு துப்பி வீரத்தை
காட்டினது. என்னத்தச் சொல்ல?
அப்புறம் வருடங்கள் ஆனதும் அந்த உடைமரமும்
போய் வீடுகளும் நிறைய வந்து விட்டது. எல்லா வீடுகளிலும் கழிப்பறை வசதியும் வந்து விட்டது.
கூடவே எனக்கு ஒரு ஹைக்கூ(?) கவிதையும் வந்தது.
"காணாமல் போயின…
கொலுசுக்குரல் ராத்திரிப்பேய்கள்…
வீட்டினில் கழிப்பறை!"
என்ன நண்பர்களே, ஆச்சி சொன்ன கதையை
ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். வேறு ஒரு பகிர்வுடன் சந்திக்கும்
வரை....
நட்புடன்
இரா.ஈ. பத்மநாபன்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி..
பதிலளிநீக்குஆஜர்!!!
இன்று எழுவதற்கு தாமதம் அப்புறமா வரேன் ஜி..
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி.
நீக்குபொறுமையாக வரலாம். அவசரம் இல்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல அனுபவங்களை கொண்ட , அருமையான சொல்லாடலுடன் கூடிய கதை. மிகவும் ரசித்துப் படித்தேன். இடையிடையே சொற்களின் ஊகத்திற்கு சிரித்தேன். ஆச்சி என்றாலே கதைதானே! நினைவுகள் அருமை. மிகவும் சுவாரஸ்யமாக எழுதிய தங்கள் நண்பரின் எழுத்துக்கள் என்னை கட்டிப் போட்டன. தங்கள் நண்பருக்கு பாராட்டுகள். இதை எங்களுக்கு பகிர்ந்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... சௌக்கியமா? என்ன, திடீர்னு நடுவுல மறுபடி காணாமப் போயிட்டீக....
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்கு/என்ன, திடீர்னு நடுவுல மறுபடி காணாமப் போயிட்டீக.../
ஹா. ஹா. மறுபடியும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் மாதிரியா? வீட்டின் சூழ்நிலைகள் என்னை காணாமல் போகச் செய்து விட்டன. வேறு ஒன்றுமில்லை. அதான் திரும்பவும் வந்துட்டோம்ல்லே...ஹா ஹா.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஇப்பொழுது நான் கூட அடிக்கடி காணாமல் போய் விடுகிறேன். ஹாஹா.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... ஹாஹா.... சில சமயங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
ரெண்டு மூணா? இப்பல்லாம் இரண்டாவது பிள்ளையே அபூர்வம் அண்ணாச்சி! குட்மார்னிங்!
பதிலளிநீக்குஉண்மைதான். நானும் 'One is Fun' என்று மனதை தேற்றிக் கொண்ட கேஸ் தான்.
நீக்குஇரண்டாவது பிள்ளை அபூர்வம்... உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீங்க நானு எல்லாமே அதே இடத்துல தான்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
(விரல்) சூப்பின நண்டு சூப்பிரண்டு! ஹா.. ஹா... ஹா...
பதிலளிநீக்குஅண்ணாச்சி இப்படி டைமிங்/ரைமிங் ஆ பேசறது அண்ணாச்சியோட ஸ்பெஷாலிட்டி....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நாத்திகனாயிருந்தால் சில சுவாரஸ்யங்களை இழந்துதான் விடுவோம்! உண்மை. சுவாரஸ்யம். ஹைக்கூவும் அருமை!
பதிலளிநீக்குஉண்மை.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அருமையான கதை. போகிற போக்கில் இப்போதைய தம்பதிகளின் குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள கட்டுப்பாடுகளையும் சொல்லிச் சென்றவிதம் நன்றாக இருக்கிறது. ஒரே குழந்தையைப்பெற்றவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இது. ஆனாலும் எல்லோரும் ஒத்துக்கொள்வதில்லை, இரண்டாவது குழந்தைக்கு! என்னமோ பாரமாக நினைக்கின்றனர். :( வட்டார வழக்கு மொழி அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா
நீக்கு//விரல் சூப்பின நண்டு இப்போது மத்திய வரித்துறையில 'சூப்பிரரண்டு' ஆக இருக்கு//
பதிலளிநீக்குஹா.. ஹா.. ரசித்த இடங்களில்... இதுவும்.
ஹைக்கூ கவிதை ஸூப்பர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குமிகவும் ரசித்தேன் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு//தீபாவளிக்கோ பொங்கலுக்கோ இந்த காதியையும் கோஆப்டெக்ஸையும் வாத்தியார்மாருக தலையில கட்டிட்டா மாசாமாசம் சம்பளத்தில புடிச்சுக்கிடலாமுல்லா//
பதிலளிநீக்குரசித்தேன் உண்மையை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குபடிச்சு சிரித்துவிட்டேன். அந்த விரல் சூப்பின நண்டு "சூப்பிரரண்டு" ஆக இருக்கும் அந்த பெரிய நண்டு அண்ணாச்சிதானே!! ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஅப்பல்லாம் நிறைய குழந்தைகல் இருந்தது ஒரு விதத்தில் நன்றாகவே இருந்ததுதான். கூட்டுக் குடும்பம் என்றெல்லாம். அப்ப உள்ளதப் போல இல்லையே இப்ப நிலவரம்.....பொருளாதாரம் எல்லாம்...அப்ப கிராமத்த விட்டு யாரும் அதிகம் வெளிய போனதில்லை. நம்ம தலைமுறை எடுத்துக்கிட்டீங்கனா நாம படிச்சு வேலைக்குப் போறதுக்குனு பரீட்சை எழுதினு வெளிய வந்துடறோம்....அதுவும் ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்க வேற..அதான் குறைஞ்சுருச்சு. ஒவ்வொரு வண்டிக்குப் பின்னாடியும் வேற ஸ்லோகன் ஸ்லோகம் போல எழுதி வேற வைச்சுருக்காங்களே...நாம் இருவர் நமக்கிருவர்ன்னு....இப்ப நாம் இருவர் நமக்கு ஒருவர்னு....அரசும் அதைத்தான் விரும்புது!!
கீதா
//அந்த விரல் சூப்பின நண்டு "சூப்பிரரண்டு" ஆக இருக்கும் அந்த பெரிய நண்டு அண்ணாச்சிதானே!!//
நீக்குஇல்லை, சகோதரி! இந்த நண்டு சுகாதாரத்துறை நண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்கு//தீபாவளிக்கோ பொங்கலுக்கோ இந்த காதியையும் கோஆப்டெக்ஸையும் வாத்தியார்மாருக தலையில கட்டிட்டா மாசாமாசம் சம்பளத்தில புடிச்சுக்கிடலாமுல்லா//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா அதை ஏன் கேக்கீங்க அண்ணாச்சி எங்க வூட்டுலயும் என் மாமா ஆசிரியாராச்சே!! அதனால அதுக்கொன்னும் குறைச்சலே இருக்காதாக்கும்...
நாத்திகனா இருந்தா// கண்டிப்பா அந்த வரியை 100% டிட்டோ செய்கிறேன்.
பேய்க்கதை எல்லாம் ஹையோ நாங்க சின்ன வயசுல பேய் கூடவே பேசியிருக்கோம்ல!!! ouija போர்ட் வழியா!!!!!
ஹைகூ ரொம்ப நல்லாருக்கு....
மிகவும் ரசித்தேன் நாரோயில் வழக்கை...எத்தனை வருடமாச்சு!!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்கு//சாயங்காலம் மாடன்சாமிக்கு வெளக்கு வச்சு, அவருகிட்ட இனிமே யாருக்கும் கண்ணுல படாம எங்க வாரிசுகளையெல்லாம் வந்து பார்த்து ஆசீர்வதிக்கணும்னு சொல்லிக்கிட்டு வந்தாரு உங்க பாட்டா//
பதிலளிநீக்குநம்பிக்கைதான் அந்தக் காலத்து மனிதர்களை பயமில்லாமல் வாழ வைத்த்து.
இப்போது உள்ளவர்கள் அவர்களும் பயந்து அடுத்தவர்களையும் பயபடுத்தி மனநிலை சரியில்லை என்ர பெயரை வாங்கி கொண்டு இருக்கிறார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு//ஸ்வச்ச பாரத் பார்ட்டிங்கதான் எங்க வீட்டு வாசலில் ரண்டு பேரு இருக்கிறதைப் பார்த்து விட்டு ஆள் அடையாளம் தெரியாம இருக்க தலையில முக்காடு போட்டுகிட்டு சத்தம் போடாம போயிருக்கா. அந்த உருவங்களை பார்த்துதான் இவுக ரண்டு பேரும் தூன்னு துப்பி வீரத்தை காட்டினது. என்னத்தச் சொல்ல?//
பதிலளிநீக்குஎங்களைப் பார்த்து தூ தூன்னூ துப்பி விட்டு போச்சு என்றவுடன் நினைத்தேன் ஆளூங்க பேய் இல்லை என்று. ஆனாலும் சிரிப்பு வந்தது நீங்கள் சொல்லியவிதத்தில்.
கவிதையும் நன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகாலையிலேயே படித்துவிட்டேன். மிகவும் ரசிக்கும்படியான எழுத்து.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஎழுதிய விதமும்முடித்த விதமும்
பதிலளிநீக்குஅருமையிலும் அருமை
வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.
நீக்குஆச்சி அருமையாகக் கதை சொல்லியிருக்கிறார். நாகர்கோவிலில் படித்த போது கேட்ட அந்த வட்டார வழக்கு மீண்டும் இங்கு வாசிக்கும் போது நாகர்கோவில் நினைவுகளும் வருகிறது.
பதிலளிநீக்குஎழுத்து அருமை. பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.
நீக்குஉங்கள் தளம் நிரம்ப பத்மநாபன் கதைகள் இருக்கின்றனவே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குகருத்துக்கள் வழங்கி ஊக்குவித்த அனைவருக்கும் மற்றும் வாய்ப்பளித்த நண்பர் வெங்கட் அவர்களுக்கும் நன்றிகள் பல.
பதிலளிநீக்குஇன்னும் தொடர்ந்து எழுதுங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.