திங்கள், 7 ஜனவரி, 2019

பீஹார் டைரி – பாவாபுரி – பகவான் மஹாவீர் – ஜல் மந்திர்


ஜல்மந்திர் - பாவாபுரி, பீஹார்


பாவாபுரி – பீஹார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் இருக்கும் ஒரு இடம். இந்த ஊருக்கு அபாபுரி என்ற பெயரும் உண்டு – அதாவது பாவங்களே இல்லாத ஊர்! பாவாபுரி – பீஹார் மாநிலத்தின் தலைநகர் பட்னாவிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.  அட ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம் என நினைத்தால் நீங்கள் தவறு செய்கிறீர்கள். இந்த இடம் பீஹாரில் இருக்கிறது – மோசமான சாலைகள், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் கொஞ்சம் நேரம் அதிகம் எடுக்கும். நாங்கள் சென்ற போது எங்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாகவே எடுத்தது. வாருங்கள் பாவாபுரியில் என்ன ஸ்பெஷல் எனப் பார்க்கலாம்!


குளத்தின் நடுவே கோவில்....


கோவிலிலிருந்து பாலமும், குளத்தின் ஒரு புறமும்...  

பாவாபுரி – ஜெயின் மதத்தினை உருவாக்கியவரும் 24-வது தீர்த்தங்கரும் ஆன பகவான் மஹாவீர் அவர்கள் சமாதியான இடம் தான் இந்த பாவாபுரி. இங்கே ஒரு குளம் – குளத்தின் நடுவே அழகான கோவில் அமைத்திருக்கிறார்கள். பகவான் மஹாவீர் அவர்களின் பாதச் சுவடுகளை இங்கே அமைத்து பூஜிக்கிறார்கள். இந்தக் கோவிலை கி.பி. 528-ஆம் ஆண்டு பகவான் மஹாவீர் அவர்கள் சமாதி அடைந்த பிறகு, அவரின் மூத்த சகோதரர் ஆன நந்திவரதன் அவர்கள் அமைத்ததாக வரலாறு. பெரிய குளம் – வெளியிலிருந்து ஒரு குறுகிய பாதை வழியே குளத்தின் நடுவே செல்ல அங்கே ரொம்பவே அழகாக கோவில் அமைத்திருக்கிறார்கள். இந்தக் குளத்தில் சிகப்பு வண்ணத் தாமரைகள் பூத்துக் குலுங்கும் என்று சொல்கிறார்கள்.









நாங்கள் சென்ற போது குளமே பச்சைக் கலரில் இருந்தது – பாசி படர்ந்து இருந்த குளத்தில் தாமரை மலர்கள் இல்லை. நிறையவே கருப்பு வண்ண வாத்துகள் தான் இருந்தன. சுத்தம் என்றால் என்ன என்பதை இந்த ஊர் மக்கள், பீஹார் மாநிலத்தவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. எங்கும் அழுக்கு எதிலும் அழுக்கு. ஜெயின் மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் முக்கியமான புண்ணிய ஸ்தலம். மற்றவர்களுக்கும் இது பிடித்தமான இடம். ஆனாலும், இந்த இடத்தினை இவ்வளவு அழுக்காகவும், ஒழுங்கில்லாமலும் வைத்திருப்பார்கள் என்பதை அங்கே போன பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த இடத்தினை ஒழுங்காகப் பராமரித்தால் ஜெயின் மதத்தவர்களை மட்டுமல்ல மற்ற சுற்றுலாப் பயணிகளையும் இங்கே அழைத்து வர முடியும். ஆனால் பீஹார் மாநிலத்தவர்கள் “நமக்கென்ன வந்தது, யார் வந்தாலும் வராவிட்டாலும், நம் வேலை குட்கா போட்டு உமிழ்வது மட்டுமே” என்று இருக்கிறார்கள்.















பீஹார் மாநிலத்தில் இந்த பாவாபுரி இருந்தாலும், மஹாவீரர் சமாதி அடைந்த இடம் என்றாலும் இந்த மாநிலத்தில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாகவோ என்னவோ, ஜெயின் மதத்தினைச் சேர்ந்தவர்கள், இந்த இடத்திற்குச் செல்வதைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தானில் பாவாபுரி என்ற பெயரில் மிகவும் அழகிய தீர்த்தஸ்தலங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் இருக்கும் பாவாபுரி கோவில் பற்றி இணையத்தில் காணக்கிடைத்தது. அப்படியே இழைத்து வைத்திருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக ஒரு குடும்பத்தினர் தான் இந்த ராஜஸ்தான் பாவாபுரி வழிபாட்டுத்தலத்தினை அமைத்திருக்கிறார்கள். பீஹார் பாவாபுரி போலவே இங்கேயும் ஜல் மந்திர்! இணையத்திலிருந்து எடுத்த, ராஜஸ்தான் பாவாபுரியின் ஒரு நிழற்படம் சேர்த்திருக்கிறேன்.





பீஹாரின் நாளந்தாவில் அமைந்திருக்கும் பாவாபுரி கோவிலில் மஹாவீர் பகவானின் காலடிகளை வைத்திருக்கிறார்கள் எனச் சொல்லி இருந்தேன். இங்கே நாமும் பாதபூஜை செய்ய முடியும். அதற்கான கட்டணம் செலுத்துபவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள். மற்றவர்களும் அருகாமையில் சென்று தரிசிக்க முடியும்.  சில நிமிடங்கள் அங்கே அமைதியாக நின்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை. வெளியே வந்து கேமராவில் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். சிகப்பு வண்ண தாமரைகள் இருந்திருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற எண்ணம் வராமல் இல்லை. எத்தனை கொடுத்தாலும், இன்னும் இன்னும் எனக் கேட்பதை நிறுத்துவதே இல்லையே மனித மனம். கேமரா கையில் இருந்தால் சில விஷயங்களைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படி ஒரு விஷயமும் பாவாபுரியில் நடந்தது.


பாவாபுரி ஜெயின் மந்திர், சிரோஹி, ராஜஸ்தான்

மூன்று பெண்கள், பாவாபுரி ஜல் மந்திர் உடன் படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். அவர்களது அலைபேசியில் செல்ஃபி எடுத்தாலும் பெரிய கேமராவில் எடுக்க அவர்களுக்கு ஆசை. ஆனாலும் கேட்க ஏனோ வெட்கம் தடுக்க, அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள் – “ஃபோட்டோ எடுத்துத் தருவாங்களான்னு தெரியலையே… கேட்கலாமா? ஏய்… வேணாம்பா….” இப்படி அவர்களுக்குள் சம்பாஷணை. சிரித்தபடி அங்கே நான் படங்கள் எடுக்க, அவர்களுள் ஒரு பெண் மட்டும், “ஏய் கேட்டுதான் பார்ப்போமே…” எனச் சொல்லி “நமஸ்தே ஜி… ஃபோட்டோ எடுத்துத் தருவீங்களா? நீங்க ஃபோட்டோகிராஃபரா? இல்லை நீங்களும் எங்கள மாதிரியா, எடுத்தா, ப்ரிண்ட் எப்படி குடுப்பீங்க?” என வரிசையாகக் கேள்விகள்.

சிரித்தபடியே இல்லைம்மா, நானும் சுற்றுலாப் பயணிதான். என் தேவைக்காக நான் படம் எடுக்கிறேன், உங்களுக்குத் தருவது கடினம் என்று சொல்ல, “ஏய் இவரு நம்மள படம் எடுக்க மாட்டாராம்டி” என்றபடியே நகர்ந்து விட்டார். நானும் படங்களை எடுத்தபடியே குளத்தின் நடுவே இருக்கும் ஜல் மந்திரிலிருந்து பாலம் வழியே நடந்தேன். நிறைய பறவைகளும், வாத்துகளும் இருக்க, அவற்றை படம் எடுத்துக் கொண்டேன். பல பள்ளி மாணவர்களை அழைத்து வந்து அங்கே ரங்கோலி போட்டி வைத்திருந்தார்கள். ஜல்மந்திரைச் சுற்றி நிற்க வைத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஜல்மந்திரைப் பார்த்து படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  அழகான இடம் – ஆனால் பராமரிப்பின்றி இருப்பது கவலையளிக்கும் ஒரு விஷயம்.

என்ன நண்பர்களே பாவாபுரி பற்றிய தகவல்களும் இந்தப் பதிவும் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லலாமே!

வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஜல்மந்திர் போகும் வழி வாத்துக்ள் குளம் என்று ரொம்ப அழகாக இருக்கிறதே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      அழகான இடமே தான். பராமரிப்பு சரியில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அபாபுரி// டக்கென்று அபுரி என்று கண்ணில் பட்டது...ஹா ஹா ஹா (உபயம் ஸ்ரீராம்....) அப்புறம் அபாபுரி என்று புரிந்தது..

    //பீஹாரின் நாளந்தாவில் அமைந்திருக்கும் பாவாபுரி கோவிலில் நீங்கள் மஹாவீர் பகவானின் காலடிகளை வைத்திருக்கிறார்கள் எனச் சொல்லி இருந்தேன். // இந்த வரியில் நீங்கள் என்பதை சற்றே கவனியுங்கள்...டைப்போ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுரி - ஹாஹா அபாபுரி பார்த்ததும் எனக்கும் அபுரி நினைவுக்கு வந்தது. ஸ்ரீராமும்.... :)

      நீங்கள் - இப்போது நீக்கி விட்டேன். சுட்டியதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    2. ஹாஹா.... எங்கும் நிறைந்து இருக்கிறீர்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஹாஹா எனக்கு முதலில் அபுரி தான் தோன்றியது :))

      நீக்கு
    4. ஆஹா, உங்களோடு மூவர் அதே மாதிரி சிந்தித்து இருக்கிறோம்! மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  3. “ஃபோட்டோ எடுத்துத் தருவாங்களான்னு தெரியலையே… கேட்கலாமா? ஏய்… வேணாம்பா….” இப்படி அவர்களுக்குள் சம்பாஷணை. சிரித்தபடி அங்கே நான் படங்கள் எடுக்க, அவர்களுள் ஒரு பெண் மட்டும், “ஏய் கேட்டுதான் பார்ப்போமே…” //

    ஹா ஹா ஹா ஜி உங்களுக்கு நிஜமாவே ராஜா காது கழுதை காதுதான்!!! ஹா ஹா ஹா...

    பீஹார் என்றாலே என்னவோ தெரியலை டக்கென்று நல்லது மனதில் வருவதில்லை அந்த மாநிலத்தைப் பற்றி. படத்தைப் பார்த்ததுமே அப்படியான ஒரு மாநிலத்தில் இவ்வளவு அழகான இடமா என்று தோன்றியது.

    குளம் வாத்து எல்லாம் மனதை மயக்குகின்றது. அந்தப் பாலத்தில் நடந்து போவது சூப்பரா இருக்கும்ல....

    ஆனால் பராமரிப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி காதை தீட்டி வைத்துக் கொள்வது வழக்கமாக ஆகிவிட்டது. ஹாஹா.... காது நீண்டுவிடப் போகிறதே என்ற பயமும்.... ஹாஹா.

      நாங்கள் சென்றபோது ஒரு தாமரை மலர் கூட காலத்தில் இல்லை. பாசியும் காய்ந்து போன தாமரைக் கொடிகள் மட்டுமே இருந்தன. வாத்துகள் அழகாக இருக்க அவற்றை நிறைய படம் எடுத்து மகிழ்ந்தோம்.

      பாலம் வழி கோவிலுக்குச் சென்றது நல்ல அனுபவம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங். பாவாபுரி என்பது நம்மூர் வையாபுரியின் நார்த் இந்தியன் அண்ணாவோ என்று நினைத்தேன். சும்மா ஜோக்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பாவாபுரி வையாபுரியின் அண்ணன்.... ஹாஹா.... நல்ல கற்பனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்!!!!

      பாவா நா தெலுங்குல வேறு அர்த்தம் இல்லையோ!!?

      கீதா

      நீக்கு
    3. ஹாஹா... தெலுங்கு Bபாவா... இது Pபாவா.... :)

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. நல்ல இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாமலிருக்கிறார்க என்பது வருத்தம் தம் செய்தி. யாருக்குமேவா இது தோன்றாமல் போகும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தம் என்பது கொஞ்சம் கூட இல்லை. பீஹாரில் பராமரிப்பு சரியாக இருக்கும் இரண்டு இடங்கள் மட்டுமே பார்க்கக் கிடைத்தன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. படங்களும் இடங்களும் அழகு. படம் எடுக்கச் சொன்ன பெண்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களோ? பாவம்... ஏமாந்து போனார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகம் சேர்ந்தவர்கள் இல்லை. பீஹார் மாநிலத்தவர்கள் தான். ஹிந்தியில் பேசியதை அப்படியே ஹிந்தியில் எழுதாமல் தமிழில் எழுதி இருக்கிறேன். சில சமயங்களில் படம் எடுப்பது பிரச்சனை தரும் குறிப்பாக அங்கே படம் எடுப்பதை தொழிலாக கொண்ட நபர்கள் இருந்தால்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. விஹார் என்பதே பிகார் என்றாயிற்று என்றும் அதனால் பீகார் பௌத்த விகாரைகள் நிறைந்த ஊர் என்றும் கூறுவர். நீங்கள் அங்கு காணலாகும் சமணத்தைப் பற்றி பகிர்ந்துள்ளீர்கள். இப்போதுதான் முதன்முதலாக சமணத் தொடர்பு பற்றி அறிகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமணமும் அங்கே இருப்பதற்கு இது ஒரு சான்று. இன்னும் சில சமணத் தலங்கள் இங்கே உண்டு.

      பௌத்த விகாரைகள் நிறைந்த ஊர் - புத்கயா பகுதியில் எத்தனை எத்தனை புத்தருக்கான வழிபாட்டுத் தலங்கள். அங்கேயும் சென்று இருந்தோம். அது பற்றி பிறிதொரு பதிவில் சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. பராமரிக்காமல் அழுக்காக இருந்தாலும் உங்கள் படங்கள் அழகாக வந்திருக்கின்றன அண்ணா. காய்ந்த தாமரை இலை, கருப்பு வாத்துகள் என்று,. பாவாபுரி பாவங்கள் இல்லாத ஊருக்கு இந்த நிலைமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரைகள் இல்லாமல் இருந்த குளம் பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வாத்துகள் கொஞ்சம் அந்த கஷ்டத்தினை அகற்றியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  9. பாவாபுரி கோவிலும் படங்களும் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. குளத்தை பராமரித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்கிற எண்ணம் மேலோங்குகிறது...

    படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. இந்தக் குளத்தினை பராமரிப்பது முக்கிய வேலை. ஆனால் ஏனோ யாருமே பராமரிப்பை கவனிக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. பாவாபுரி கோயில் அருமை. ஆனால் குளத்தின் நிலைதான் பாவமா இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்கள் இப்படி பராமரிப்பின்றி இருக்க, புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்கள் உருவாவதும் சரியல்ல என்று எனக்குத் தோன்றும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  12. அங்கயும் தாமரை மலரலையோ!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நல்ல கேள்வி - குளத்தில் தாமரை மலரவில்லை! அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  13. நாங்கள் சென்ற போது குளமே பச்சைக் கலரில் இருந்தது – பாசி படர்ந்து இருந்த குளத்தில் தாமரை மலர்கள் இல்லை. நிறையவே கருப்பு வண்ண வாத்துகள் தான் இருந்தன. //

    அவை அழகு.
    அவை முக்குளிப்பது பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    முக்குளிப்பான் என்றும் சொல்வார்கள். பாவாபுரி குளமும் கருப்பு வண்ண வாத்துக்களும் மனம் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்குளிப்பான் - ஆஹா... இந்தப் பெயரை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை கோமதிம்மா....

      பார்த்துக் கொண்டே இருக்கலாம் - எங்களுக்கும் அப்படியே தோன்றியது. சில நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு.

    குளத்தின் சுத்தம்தான் பளிச்சுனு தெரியுது. நல்லா வச்சிருந்தா அந்த இடமே ரொம்ப அழகா இருக்குமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - ஒழுங்காகப் பராமரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பொதுவாகவே பீஹாரில் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு ஒருவருக்கும் இல்லை. விட்டால் நம் மீதே குட்கா உமிழ்ந்துவிடுவார்கள் என்ற பயம் அங்கே சென்ற போது வந்தது.

      சில பதிவுகளாக நீங்கள் வரவில்லையே என்று இன்று தான் தோன்றியது. பயணத்தில் இருந்தீர்களோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. அம்ரித்சர் தங்க கோவிலும் ஒரு குளத்து நடுவில்தான் இருக்கிறது ஏனோ இந்தஒப்பீட்டைத் தவிர்க்க
    முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்ரித்சர் குளம், குருத்வாரா - பிரம்மாண்டம். இங்கே இருப்பது சிறிய தலம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  16. பதில்கள்
    1. ஆஹா... வாங்க அதிரா. குளமும் வாத்துகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. திரும்ப வலைப்பூக்கே வந்துட்டேன் சகோ. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.... வாங்க... நல்ல விஷயம்.

      என்னதான் முகநூல் இருந்தாலும், எனக்கென்னமோ அதில் அத்தனை ஈடுபாடு வரவில்லை.

      தொடர்ந்து வலைப்பூவில் எழுதுங்கள். இங்கேயும் வருகை புரிந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல் சகோ.

      நீக்கு
  18. பாவாபுரி பீகாரின் மோசமான நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துகாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. ஒரு அழகான இடத்தை எப்படி வைத்து இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  19. மிக மிக அழகான இடமாக இருக்கிறது. குளம், அந்தச் சூழல் என்று. ஆனால் இப்படியான அழகான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பராமரிக்காமல் இருப்பது மிகவும் வேதனை.

    புதிய இடமும் தகவலும் அறிந்தேன் வெங்க்ட்ஜி. மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு புதிய இடத்தை உங்களுக்கு அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  20. அழகான இடம் ..


    வாத்துக்கள் படம் ரொம்ப ரொம்ப அழகு ..ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  21. குளமும் வாத்துக்களும் அழகோ அழகு! படங்களும் நன்றாகவே இருக்கின்றன. ஜெயின் சமூகத்தினர் இந்தக் கோயிலை ஒதுக்காமல் ஒரு பொதுவான ட்ரஸ்ட் ஏற்படுத்திச் சீரமைப்பு வேலைகள் செய்து அனைவரும் அடிக்கடி வந்து போகும்படி செய்யலாம். குஜராத், ராஜஸ்தான் ஜெயின் சமூகத்தவர் பலரும் நல்ல பண வசதி பெற்றவர்கள். அவர்கள் நினைத்தால் எவ்வளவோ செய்யலாம். மாநில அரசும் அதற்கு உதவலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தால் எவ்வளவோ செய்யலாம்.... உண்மை. பீஹார் மாநிலத்தில் இருப்பதை விட்டு அவர்கள் ஊரில் - அதாவது ராஜஸ்தானில் சிரோஹி மாவட்டத்தில் இப்படி ஒரு கோவிலை இழைத்து வைத்திருக்கிறார்கள்.... புராதமான கோவிலை அம்போ என விட்டுவிட்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....