வியாழன், 7 ஜனவரி, 2010

வானமே கூரை, நடைபாதையே பஞ்சு மெத்தை




தில்லியின் கரோல் பாக் பகுதி. பதினாறு வயது தினேஷ் மற்றும் அவனது தாய் வாழும் இடம். இருவரும் குப்பை பொறுக்கி, அதை விற்றுக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் கஷ்ட ஜீவன்கள். வீடு, வாசல், சொத்து என ஏதும் இல்லை. இருப்பதெல்லாம் ஒரு சில கிழிந்த உடைகள், இரண்டு மூன்று பாத்திரங்கள், ரொட்டி செய்ய ஒரு தவா இவையே. கிடைக்கும் சொற்ப பணத்தில் நடைபாதையிலே நான்கு செங்கல்களை வைத்து குப்பையை கொளுத்தி சமைத்துச் சாப்பிடும் பரம ஏழைகள். இவர்களை போலவே நிறைய ஏழைகள் இங்குள்ள பெரிய கடைகளின் முன் இருக்கும் நடைபாதைகளில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வானமே கூரை, நடைபாதையே பஞ்சு மெத்தை.

வெய்யில் காலம் என்றால் இவர்களுக்கு பரவாயில்லை, குளிர் காலத்தில் இவர்களது நிலை மிக மிக மோசம். ஐந்து-ஆறு டிகிரி குளிரில் எந்த விதமான குளிர்கால உடையும் இல்லாமல் நடுங்கியபடி இரவினை கழிக்க வேண்டிய பரிதாப சூழ்நிலை. எப்போதாவது ஏதாவது ஒரு சேவை நிறுவனம் கொடுக்கும் கம்பளிக்கு இவர்களுக்குள் நிறைய அடிதடி. யார் அவர்களுக்குள் பலவானோ அவருக்கே கிடைக்கும். மற்றவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

தினேஷிடம் ஏற்கனவே ஒரு கிழிந்த கம்பளம் இருந்தது. அது மட்டும் அவனுக்குப் போதவில்லை. அன்று இரவில் வந்த ஒரு சேவை நிறுவனத்தினர் 150 பேருக்கு கம்பளிகள் வழங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக தினேஷுக்கும் ஒரு கம்பளி கிடைத்தது. கீழே அட்டைப் பெட்டிகளை பிரித்துப் போட்டு, இரண்டு கம்பளி போர்த்தி இன்றாவது நன்றாக தூங்கலாம் என்று சந்தோஷமாக இருந்தான். அடிக்கும் குளிரிலும் "Tande Tande Paani-me Nahaanaa Chahiye" [சில்லென்ற தண்ணியில் குளிக்க வேணும்] என்று பாட்டு பாடியபடி இருந்தான்.

அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த கமலேஷ் வெறுப்பில் இருந்தான். அவனிடம் ஒரு கம்பளி கூட இல்லை. இன்றும் அவனுக்கு கம்பளி கிடைக்கவில்லை. முட்டி மோதி வண்டியிடம் அவன் சென்ற போது கம்பளி தீர்ந்து விட்டது. இன்றும் குளிரில் அவதிப்பட வேண்டியதுதான் என்று வந்து பார்த்தால், தினேஷிடம் இரண்டு கம்பளி. இரண்டில் ஒன்றாவது கொடுத்தால் பரவாயில்லை என நினைத்தான். தினேஷிடம் கேட்டபோது அவன் தர முடியாது என மறுத்து விட்டான். இருவருக்கும் பெரிய சண்டை. தினேஷுக்கு அவனது தாயின் பக்கபலமும் இருந்தது, கூடவே அவன் ஒரு காச நோயாளி என மற்றவர்களும் தடுக்கவே கமலேஷ் ஒரு வித வெறியுடன் அங்கிருந்து சென்று விட்டான்.

மறு நாள் காலையில் நடைபாதையில் ஒரே கூட்டம். போலீஸ் வந்து கூட்டத்தை விலக்கியது. அங்கே தினேஷ் நசுங்கிய தலையுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவன் போர்த்தியிருந்த பழைய கிழிசல் கம்பளி முழுவதும் ரத்தம். புது கம்பளி போன சுவடே தெரியவில்லை. கமலேஷையும் காணவில்லை.

சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சி இது. தினமும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனை காலம் தான் இப்படியே நடக்கும்? Survival of the Fittest என்று நம்மால் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

6 கருத்துகள்:

  1. என்ன கொடுமை சார் இது.. அந்தப் பையன் இப்படி புத்தி பேதலிக்கிற அளவுக்கு நிலைமை இருந்தா.. யாரைக் குறை சொல்வது? தாங்க முடியலப்பா..

    பதிலளிநீக்கு
  2. ஒரு நிமிடம் என்னை நாத்திகனாகவும் மறு நிமிடம் என்னை ஆத்திகனாகவும் ஆக்கிய செய்தி அது.

    பதிலளிநீக்கு
  3. வானமே கூரை படித்தேன். மனம் கனத்தது .டில்லிக்கு அடுத்தபடியாக குற்றங்கள் சென்னையிலும் தினமும் நடந்து வருகிறது. நேற்று கே. கே. நகரில் பெற்ற அம்மாவையே சொத்துக்காக மகன் கொலை செய்த அவலம் நடந்தேறியுள்ளது.மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதெல்லாம் போய் பணமே தெய்வம் என்றாகிவிட்ட காலத்தில் நாம் யாரை நொந்துகொள்வது. காலம் தான் இதற்கெல்லாம் நல்ல ஒரு பதில் சொல்லவேண்டும்.

    மந்தவெளி நடராஜன்..

    பதிலளிநீக்கு
  4. படித்து முடித்ததும், கண்கள்
    கலங்கியதென்னவோ உண்மை!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....