வெள்ளி, 22 ஜனவரி, 2010

குழந்தைக்கு என்ன பெயர்?




தமிழர்கள் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அதற்கு பெயர் வைக்க, அக்குழந்தை பிறந்த அன்று உள்ள நட்சத்திரத்திற்கு என்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிலர் பெயர் வைக்கிறார்கள். வெகு சிலர் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டியின் பெயரை வைக்கிறார்கள். வேறு பலர் இறைவனின் பெயரை வைக்கிறார்கள்.

இது போன்றே இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களும் பெயர் வைப்பதற்கு பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். சீக்கியர்கள் குழந்தை பிறந்தவுடன் "குருத்வாரா" சென்று வணங்கி பெயர் வைக்கச் சொல்லி குருவிடம் வேண்டுகின்றனர். அவரும் "குரு கிரந்த் சாஹிப்" என்ற அவர்களது புனித நூலை எடுத்துப் பிரித்து, அன்றைய தினத்தின் "வாக்" உள்ள பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள முதல் வாக்கியத்தின் முதல் வார்த்தையை எடுத்துக் கொடுக்கிறார். அதில் ஆரம்பிக்கும்படி அவர்களின் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு "மன்" என்ற வார்த்தை வருகிறது என்றால், "மன்மோகன், மன்மீத், மன்வீர்" போன்ற பெயர்களுள் ஒன்றை வைக்கிறார்கள். ஜாதி மத வேறுபாடு இருக்கக்கூடாது என்று இந்த ஏற்பாடு. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதில் எந்த பெயரை வேண்டுமானாலும் வைக்கலாம். பிறகு எப்படி அந்த பெயரைக் கொண்டவர் ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்வது? ஆணாக இருந்தால், பெயருக்குப் பின்னால் "சிங்" , பெண் என்றால் "கௌர்" என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆணாக இருந்தால் மன்மோகன் சிங், பெண்ணாக இருந்தால் மன்மோகன் கௌர்!. இது எப்படி இருக்கு?

பெயர் எப்படி இருந்தாலும் வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்கள், பண்டி, பப்ளி, லவ்லி, மோன்டி, பின்டூ என்று விதவிதமாக இருக்கும். நம் ஊரில் ரங்கு, வெங்கு, சீமாச்சு, ரங்காச்சு, என்று கூப்பிடுவது போல.

மிசோரம் மாநிலத்தில் உள்ளவர் பெயரை வைத்து அவர் ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஒரு வழி சொல்லித் தந்தார் அந்த ஊர் நண்பர் ஒருவர். பெரும்பாலான ஆண்களின் பெயர்கள் " a " வில் முடியும், பெண் பெயர்கள் " i " இல் முடியும். "Vanlalfela" என்பது ஒரு ஆண் பெயர். "Mimi", "Mengmawi" என்பதெல்லாம் பெண்களின் பெயர்கள். கஷ்டம்டா சாமி!.

"Lalrintluangi" இது ஒரு மிசோ பெண்மணியின் பெயர். இதை சரியாக உச்சரிப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க நிதி மந்திரிக்கு சிபாரிசு செய்ய நான் தயார் . போட்டிக்கு நீங்க ரெடியா?

10 கருத்துகள்:

  1. நல்லாத்தான் தலைப்பு வைக்கறீங்க!

    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஐடியா அந்த கௌர் சிங் ...

    பெரும்பாலும்ன்னு தான் சொல்லி இருக்காரே தவிர பேரை வச்சு கண்டுபிடிக்கிறது கஷ்டம் தான் .

    என்பையன் பேரை வடநாட்டுக்காரங்க கேட்டுட்டு பெண் என்றே நினைச்சிக்கிறாங்க.. ஆனா நம்ம ஊருல யாருக்கும் சபரிங்கறது பெண் என்று உடனே தோன்றுவதில்லை.. :)

    பதிலளிநீக்கு
  3. அட, இந்த ஊர்ல கால் சென்டர்ல இருந்து கூப்பிடுரதுங்க எல்லாம் என் பேருக்கு முன்னாடி மிஸ்டர் போட்டு பேரைக் கொலை பண்ணிக் கூப்பிடுதுங்க. கோபமா வரும் அந்த நேரங்கள்ல. ரொம்பக் கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
  4. ஆமா வெங்கி! நீங்க சொல்றது சரிதான்.

    சில நாடோடி இனத்தவர்கள் எந்த ஊரில் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊர் பெயரையே குழந்தைக்கு வைக்கிறார்கள். அதாவது, டெல்லியில் பிறந்தால் டெல்லி. திருப்பதியில் பிறந்தால் திருப்பதி. குற்றாலத்தில் பிறந்தால் குற்றாலம்.

    ஆமா! பெண்ணாடத்தில் ஆண் குழந்தை பிறந்தால் பெண்ணாடம் என்று வைப்பார்களா அல்லது ஆணாடம் என்று வைப்பார்களா?

    பதிலளிநீக்கு
  5. இப்படியும் பெயர் வைக்கலாமா?.....இப்ப நம்ம ஊர்ல சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தான் பேமஸ்..

    பதிலளிநீக்கு
  6. எங்க ஹெட் ஆபீஸ்ல ஒருத்தர் பேர் ‘சுகந்தி’ ஆனா அவர் ஆம்பளைன்னு அப்புறம் தெரிஞ்சுது.
    எங்க ஆபீஸ்ல ஒரு லேடி ‘சாந்தி’ வர ஈ மெயில் டியர் ஸார் னு வருது..

    பதிலளிநீக்கு
  7. வலைப்பூவில் எழுதறவங்க பலரும் புனை பெயரில்தான் எழுதறாங்க. ஆணா, பெண்ணான்னு தெரிஞ்சிக்க முடியல. அது தெரிஞ்சுப்பது எப்படின்னு கூட யாராவது பதிவு போடலாம்.

    :))

    பதிலளிநீக்கு
  8. நல்ல தலைப்பு
    ஒரு பெயரில் இவளோ விஷயமா சாமி தலைய சுத்துது
    முடியல

    பதிலளிநீக்கு
  9. konjam writer sujatha avarkal sayal... We are missing him so much. Thanks venkat

    பதிலளிநீக்கு
  10. "அய்யா வெங்கட் அவர்களே, சில சமயங்களில் தாயானவள் தன் அருமை மைந்தனை பொட்டபயலே என்றும் , மற்றுமொரு தாயானவள் தன் செல்ல மகளை, அவளின் நடை, உடை மற்றும் பாவனைகளை
    வைத்து , ஆம்பளை மாதிரி போறாள் என்றும் கூறுகிறார்களே, இப்படியிருக்க எந்தப்பெயர் வைத்தால்தான் என்ன என்றே நினைக்கத் தோன்றுகிறது."

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....