திங்கள், 4 ஜனவரி, 2010

முதல் நாள் முதல் ஷோ



நெய்வேலி நகரம் ஒரு அருமையான அமைதியான இடம். பிறந்ததிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை அங்கேயே இருந்தேன். முற்றிலும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் வாழும் ஒரு சொர்க்க பூமி.

முதலில் நெய்வேலி நகரம் முழுவதற்குமே "அமராவதி" என்ற பெயரில் ஒரே ஒரு திரை அரங்கம்தான். பிறகு "தேவி ரத்னா" என்ற பெயரில் மற்றுமொறு திரை அரங்கமும் வந்தது. "அமராவதி"யில் பழைய படங்களே திரையிடுவார்கள். ஆனால் தேவி ரத்னாவிலோ புதுப் படங்களும் திரையிடுவார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை "தேவி ரத்னா" திரை அரங்கில் ஒரு புதிய திரைப்படம் திரையிடப் போவதாக நெய்வேலி நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது என்று முடிவு செய்தோம். பிறகு ரசிகர் மன்றத்தில் சொல்லி பத்து டிக்கெட்களுக்கு ஏற்பாடும் செய்துவிட்டோம்.

புதுப் பட ரிலீஸ் நாளும் வந்தது. காலை பத்து மணிக்கு முதல் ஷோ. எல்லா நண்பர்களும் திரை அரங்கின் வெளியில் சந்திப்பதாக ஏற்பாடு. ஒவ்வொருவராக ஒன்பது பேர் வந்து விட்டோம். பத்தாவது நண்பர் வரவில்லை. இப்போது இருப்பது போல அலைபேசி வசதியெல்லாம் அப்போது இல்லை. ஆகையால் ஷோ ஆரம்பிக்க ஐந்து நிமிடம் இருக்கும் போது,"சரி நாம் எல்லோரும் உள்ளே சென்று விடலாம், ஒரு டிக்கெட் வீணாகப் போனால் பரவாயில்லை" என நான் சொன்னேன். அப்போது நண்பன் ஒருவன் "எதுக்குடா வேஸ்ட் பண்ணனும்? இந்த டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று காசு பண்ணி விடலாம்" என்று சொன்னான் .

என் கையில் இருந்த ஒரு டிக்கெட்டை அந்த நண்பன் அவசரமாக வாங்கிக்கொண்டு வெளியே போய் "ஒரு டிக்கெட் வேணுமா? ஐம்பது ரூபாய்" என்று கையை உயர்த்தி சத்தமாகக் கூவி விற்க, அடுத்த வினாடி அவன் மேல் ஒரு கும்பல் பாய்ந்தது. குறைந்தது இருபது பேராவது அந்த கும்பலில் இருந்திருப்பார்கள். இரண்டு மூன்று நிமிடத்திற்கு ஒரே கூச்சல் குழப்பம், என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதன் பின்னர் தலைமுடி எல்லாம் கலைந்து, சின்னாபின்னமாகி சோகமாக வெளியே வந்த அந்த நண்பன் போட்டிருந்த சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை. கையில் டிக்கெட்டும் இல்லை, காசும் போச்சு.

சரி எப்படியும் டிக்கெட் எடுத்தவர் எங்கள் அருகில்தானே இருப்பார் பார்க்கலாம் எனத் திரை அரங்கினுள் புகுந்தோம்.

ஐந்து நிமிடம் விளம்பரங்கள் ஓடி இருக்கும். இன்னமும் அந்த சீட் காலி. படம் ஆரம்பித்தது. பார்த்தால் திடீரென ஒரு அழகான இளம் பெண் வந்து அந்த சீட்டில் உட்கார எங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. நிச்சயமாக அந்த பெண் எங்களது நண்பரிடமிருந்து டிக்கெட்டை பறித்துக்கொண்டு போனவராக இருக்க முடியாது என்றே எங்களுக்குத் தோன்றியது . சரி எதற்கும் விசாரிக்கலாம் என " மேடம் இந்த ஸீட்டை எங்கள் நண்பருக்காக ரிசர்வ் செய்திருந்தோம், உங்களுக்கு எப்படி இது கிடைத்தது?" என்று கேட்டதற்கு அவர் நூறு ரூபாய் கொடுத்து ப்ளாக்கில் வாங்கியதாக கூலாகச் சொல்லிவிட்டு சினிமாவைப் பார்ப்பதில் மும்முரமாகிவிட்டார். நாங்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டோம். வேறு வழி?

டிக்கெட்டும் போச்சு பணமும் போச்சு - இது தவிர நண்பருக்கு வீட்டில் வேறு தனியாக அர்ச்சனை! - சட்டையை கிழித்துக்கொண்டு வந்ததற்காக.

10 கருத்துகள்:

  1. அப்பு! சொந்தச் செலவுல சூனியம் வைக்கிறதுன்னா என்னான்னு கேட்டியே! அதுதான் இது.

    அது சரி! அந்த ஒன்பது பேருல, பத்தாம் நம்பர் Figure பக்கத்திலே உட்கார்ந்து பிலிம் காட்டுன ச்சீ! பிலிம் பார்த்த ஒன்பதாம் நம்பர் அதிர்ஷ்டசாலி யாரு?

    பதிலளிநீக்கு
  2. நீங்க நெய்வேலியா?! எங்க சித்தப்பா டைம் கீப்பரா இருந்தார்.. லீவுல அங்க வந்து தங்குவோம்.. சுத்தி தோட்டம்.. மரங்கள்.. பக்கத்துல வில்லுடையான்பட்டி கோவில்.. ஆஹா.. சொல்ல மறந்துட்டேனே.. உங்க அனுபவம் கலக்கல்..

    பதிலளிநீக்கு
  3. அய்யா, இதற்குதான் பெரியவர்கள் அன்றே "பேராசை பெருநஷ்டம்,அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை," என்றெல்லாம் சொல்லிப்போனார்கள்.என்னதான் பட்டாலும் ஆசை, கடைசி நேரத்தில் கண்ணை மறைத்துவிடுகிறது

    மந்தவெளி நடராஜன்..

    பதிலளிநீக்கு
  4. சும்மா எப்படி இருக்கும் அப்படின்னு கற்பனைப் பண்ணிப் பார்த்தேன்... குபுக்குன்னு சிரிப்பு வந்திடுச்சு...

    இப்ப நினைச்சா சிரிப்பாத்தான் இருக்கு... ஆனால் அன்று அந்த நண்பர் சினிமா பார்க்கும் மனநிலையில் நிச்சயமாக இருந்திருக்க மாட்டார் என்பது நிஜம்.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள இராகவன்,

    எனது பதிவினை படித்து தங்கள் கருத்தினை பகர்ந்ததர்க்கு நன்றி. தாங்கள் சொன்னது உண்மை. பாதியிலே போய்விடலாமா என்று கேட்டு கொண்டு இருந்தார்.

    வெங்கட்
    புது தில்லி

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் ரிஷபன். எனது ஊர் நெய்வேலிதான். பிறந்ததிலிருந்து தில்லி வரும் வரை அங்கே தான் வாசம். நீங்கள் சொன்னது போல நெய்வேலி நகரில் அத்தனை விதமான மரங்கள். நல்ல ஒரு சுற்றுச்சூழல். கருத்து சொன்னதற்கும் நன்றி.

    வெங்கட் நாகராஜ்.
    புது தில்லி

    பதிலளிநீக்கு
  7. neyveli nilakkari niruvanathil panipurivor vasikkum idamo..?:) neyveli anal min nilayam verum thermal station..:) mathappadi amaravathi, devi rathna,...:) udane'main bazar,c b s, pay day bazar nu.. ore'nostalgia:):):)jolly ya irukku. en girls high school um gnabagam vanduduchu:)

    பதிலளிநீக்கு
  8. இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், ப்ளாக்ல,
    டிக்கெட் விக்கறதுக்கு தனி மூஞ்சி
    வேணும். நம்ம யாருக்கும் அது இல்லை
    என்பதே வருத்தம் கலந்த உண்மை!

    பதிலளிநீக்கு
  9. ஹா....ஹா....ஹா... இதுவும் ஒரு அனுபவம்தான்! இது மாதிரி உடை இழந்த ஒரு அனுபவம் எனக்கு தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் கிடைத்தது!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டி தந்தவுடன் படித்து கருத்தும் இட்டமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....