எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 14, 2010

”சார், போஸ்ட்!”இன்றைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு, எப்போதாவது நமக்கு வரும் கடிதங்களைக் கொடுக்கும் அஞ்சல்காரரைத் தெரியும்? அலைபேசி, மின்னஞ்சல், கொரியர் போன்ற பலவித விரைவான சௌகரியங்கள் வந்துவிட்ட பிறகு, அஞ்சல் துறையின் மதிப்பு என்னவோ குறைந்தாலும், அதற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது.

நாங்கள் நெய்வேலியில் வட்டம் (Block) பதினொன்றில் இருந்த போது அந்தப் பகுதி முழுவதற்கும் ஒரே ஒரு அஞ்சல்காரர் தான். அவர் பெயர் வீரமணி. தினமும் சைக்கிளில் வந்து எல்லோரது அஞ்சல்களையும் அவரவர்களிடம் ஒப்படைப்பார். தெரு முனையில் அவரின் சைக்கிள் மணியோசையை கேட்டவுடனே நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வருவோம். அவ்வப்போது எங்களிடம் வீட்டில் உள்ள எல்லா நபர்களின் பெயரையும் சொல்லி விசாரிப்பார். இதைப் போன்றே அனைத்து வீடுகளிலும். அந்த அளவிற்கு எல்லோரையும் பற்றி அவருக்குத் தெரிந்து இருந்தது.

என்னுடைய அப்பா, சனிக்கிழமைகளில் அவரை பார்க்கும் போது அவர் கடிதம் ஏதும் தரவில்லையெனில் அவரைப் பார்த்து, “Nobody has written a letter?” என்று கேட்பது வழக்கம். அப்போது, ”இன்று ஒரு தபாலும் இல்லை” என்று சொல்லாமல், ”நாளைக்குத் தருகிறேன்” என்று சிரித்தபடியே செல்வார்.

அவருக்கு சிறு வயதிலேயே காது கேட்பதில் ஏதோ பிரச்சனை இருந்ததால் காதில் ஒரு கருவியை மாட்டிக்கொண்டு, சிரித்த முகத்துடன் எல்லோரையும் விசாரித்தபடி செல்லும் அவரின் உருவம் இன்னமும் என்னுள்ளிருந்து மறையவில்லை.

தற்போதோ, பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள், அவர்களது வீட்டில் உள்ள நபர்கள் எத்தனை, அவர்களது பெயர் என்ன, என்பது போன்ற ஒரு விஷயமும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நான் நெய்வேலியை விட்டு வந்து 19 வருடங்களும், எங்களது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் நெய்வேலியை விட்டு வந்து ஏறத்தாழ 15 வருடங்களும் ஆகிவிட்ட நிலையில் சென்ற மாதம் நெய்வேலி சென்றிருந்த என் தமக்கையைப் பார்த்த திரு.வீரமணி எங்கள் வீட்டில் உள்ள அனைவரது பெயரையும் சொல்லி விசாரித்திருக்கிறார். இதைக்கேட்ட போது நாம் எத்தனை எத்தனை நல்ல விஷயங்களை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது எனது மனதைத் தைத்தது.

வீரமணி போன்றவர்கள் நம் நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்பார்கள் என்று நினைத்துக் கொண்டே ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது வெளியே அழைப்பு மணியோசை. கொரியர் அலுவலகத்திலிருந்து வந்தவர் “சார், கொரியர்” என்று கூறி தபாலை நீட்டினார். கையொப்பமிட்டு அதைப் பெற்றுக்கொண்டு, அவரிடம் “உங்கள் பெயர் என்ன? தண்ணீர் குடிக்கிறீர்களா?” என்று கேட்டவுடன் அவர் முகத்தில் ஒரு புன்னகையுடன் “வீர்சிங்” என்றார்.

11 comments:

 1. போஸ்ட்மேன் என்றாலே சிறுவயதில் ஊரில் பார்த்த ஆவுடை என்ற அற்புதமான மனிதர் என் நினைவுக்கு வருவார். மீண்டும் அந்த மறந்து போன காலங்கள் குறித்தும் இந்த மின்னஞ்சல் யுகத்தில் நினைவூட்டியதற்கு நன்றி!

  ReplyDelete
 2. வீர்சிங் என்றதும் உங்களுக்கு வீரமணி ஞாபகம் வந்துடுச்சோ? :))

  ReplyDelete
 3. க‌டித‌ங்க‌ளுக்கு காத்திருத்த‌ல் சுக‌மான‌ அனுப‌வ‌ம். அதெல்லாம் ஒரு கால‌ம் சார்.

  ReplyDelete
 4. அண்ணாத்தே! காலத்தின் கோலத்தைப் பார்த்தீங்களா! போஸ்ட் Man - ஐ எதிர்பார்த்து நின்ற காலம் போய் கொரியர் Boy - க்கு காத்திருக்கிறோம். என்ன ஆனாலும் "Man" ன் முதிர்ச்சிக்கும், Boy - இன் வேகத்திற்கும் வித்தியாசம் உண்டல்லவா! .

  ReplyDelete
 5. அட ஃபினிஷ் பண்றப்ப கூட ஒரு அழகான டச்!

  ReplyDelete
 6. கிட்டத்தட்ட முற்றிலுமாக மறந்துபோன தபால்காரர்களை நினைவூட்டம் வண்ணம் இருந்தது இடுகை.

  ஸ்ரீ....

  ReplyDelete
 7. சார், பெஸ்ட்! - K.B.Jana

  ReplyDelete
 8. அடுத்த வீடென்ன, நமது வீட்டின் சொந்தபந்தங்களின் மேல் வைக்கும் அன்பு, ஆசை,பாசம், நேசம் போன்றவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அதனால் நமது நிம்மதியை இழந்து வாடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், நல்லிதயம் படைத்த, வீரமணி போன்ற "வாழ்வாங்கு வாழ்பவர்களின்" வாழ்க்கையை பார்த்தாவது நாமும் நமது இழந்தவற்றை மீட்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தை நாளைய சமுதாய கண்ணோட்டத்துடன் எழுதிய உமது உன்னத படைப்புக்கு நன்றியை நவில்கிறேன் அய்யா. வாழ்க நின் நயம்பட உரைக்கும் நேர்மை, வளர்க உம் தொண்டு.!!

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 9. //அலைபேசி, மின்னஞ்சல், கொரியர் போன்ற பலவித விரைவான சௌகரியங்கள் வந்துவிட்ட பிறகு, அஞ்சல் துறையின் மதிப்பு என்னவோ குறைந்தாலும், அதற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது//
  உண்மை.. இதைப் படித்தவுடன், எங்கள் வீட்டிற்கு அஞ்சல் கொடுக்கும் தபால்காரரின் நினைவு எனக்கும் வந்தது! இதுவரை எனக்கு வந்த பரீட்சைக்கான ஹால் டிக்கெட், இன்டெர்வ்யு கால் லெட்டர், அப்பாயின்மென்ட் ஆர்டர் என வரிசையாக எல்லாத்தையும் அவர் தான வந்து கொடுத்துள்ளார். இதில் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்ன வென்றால், முகவரியில் எந்தத் தவறு இருந்தாலும் என் பெயரோ என் தந்தையின் பெயரோ இருந்தாலே போதும், அஞ்சல் என் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடும் :)
  தபால்காரரைப் பார்த்தாலே மனதில் ஒரு உற்சாகம் பிறப்பதை யாராலும் மறுக்க முடியாது!
  நல்ல பதிவு.. நன்றி!

  ReplyDelete
 10. ada,intha photo appothilirunthu inaiyathalaththil irukkaa?coincident thaanga,thpalain arumai patri unarnthavangalukuthaanga theriyum.

  ReplyDelete
 11. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....