திங்கள், 10 மே, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 10

இந்த தொடரின் கடந்த ஒன்பது பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்கள், சாப்பாடு, ஹிந்தி சொற்கள் என சில விஷயங்களைப் பற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த வாரம் வேறு சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?பார்க்க வேண்டிய ஒரு இடம்: தில்லி உயிரியல் பூங்கா – 214 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்கா தில்லியின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது. 1959-ம் வருடம் அமைக்கப்பட்ட இப்பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அனுமதி கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வீடியோ காமிரா எடுத்துச் சென்றால் அதற்கு தனிக்கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படும். செல்லும்போது கண்டிப்பாக உணவுப்பொருட்களோ, பிளாஸ்டிக் பைகளோ, பீடி, சிகரெட், தீப்பெட்டி போன்ற வஸ்துக்களையோ எடுத்துச் செல்லாதீர்கள். இங்கே முக்கியமாக பார்க்க வேண்டிய மிருகங்கள் – ஒட்டகச்சிவிங்கி, வெள்ளைப்புலி, நீர்யானை, காண்டாமிருகம், வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, வாலில்லா குரங்கு [மனிதக்குரங்கு].மனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்தில் “ஹோகா…. ஹோகா..” என்று கத்திக்கொண்டு அங்கே கட்டியிருக்கும் கயிறுகளில் வித்தை காமித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறது. வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். பூங்காவில் உள்ள அம்புக்குறியீடுகளைத் தொடர்ந்து நடந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் முழுப்பூங்காவினையும் உங்களால் கண்டுகளிக்க முடியும். நடந்து செல்ல முடியாதவர்கள் இங்கே உள்ள பேட்டரி பேருந்துகளிலும் செல்லலாம் ஆனால் பல அரிய காட்சிகளை நீங்கள் பார்க்கத் தவறி விடலாம். ஆகையால் காலாற நடந்து சென்று முழு பூங்காவின் அழகையும் ரசியுங்கள்.

சாப்பிட வாங்க: ஜல் ஜீரா: இரண்டு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த ஜீரகம், இரண்டு தேக்கரண்டி மைய அரைத்த புதினாதழை, ஒரு தேக்கரண்டி ஆம்சூர் பொடி, அரை தேக்கரண்டி கருப்பு உப்பு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து அதில் ஐந்து டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு மேலே சில புதினா இலைகளைப் போட்டு கிடைப்பதன் பெயரே “ஜல் ஜீரா”. இந்த வெய்யில் காலத்தில் பெப்ஸி, கோக் என்ற பானங்களை விட “ஜல் ஜீரா” பருகினால் "ஆகா ஆனந்தமா இருக்கே!"-ன்னு சொல்லுவீங்க .

இந்த வார ஹிந்தி சொல்: உயிரியல் பூங்கா பார்த்த தாக்கம் எனக்கு இன்னும் போகவில்லை. ஆகையால் இந்த வார ஹிந்தி சொல் மிருகம் சம்பந்தப் பட்டதாக அமைந்து விட்டதை தவிர்க்க முடியவில்லை. ஹிந்தியில் பிளாஸ்டிக் பையை “பன்னி” என்று சொல்கிறார்கள். பிளாஸ்டிக் கவர்களுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டதிலிருந்து கடைக்குப் போய் எதாவது பொருள் வாங்கினால் ”பன்னி நஹி ஹே!” என்று சொல்லி விடுகிறார்கள். அவன் நம்மள பன்னின்னு சொல்றானா, இல்லை பிளாஸ்டிக் கவர் இல்லைன்னு சொல்றானான்னு நாம தான் முடிவு " பண்ணி"க்கணும்.

இன்னும் வரும்…

10 கருத்துகள்:

 1. மனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்தில் “ஹோகா…. ஹோகா..” என்று கத்திக்கொண்டு அங்கே கட்டியிருக்கும் கயிறுகளில் வித்தை காமித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறது.

  உங்க கோபம் அப்படியே வார்த்தைகளில் வெளிப்பட்டு இருக்கு!

  பதிலளிநீக்கு
 2. ப‌ன்னி‍ - நெகிழியா? தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. பல அறியாத இடங்களின் தகவல்கள் இங்கு அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. இலவசமாக மிருக காட்சி சாலையை பார்க்க அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்றி.

  (என்னையும் பல சமயங்களில், எனது அன்னையார் "வானரமே" என்று அழைப்பார். இப்போது நான் அவ்வப்போது என் குழந்தையை அப்படி அழைக்கிறேன், சேட்டை தாங்க முடியாமல். அப்படி அழைப்பதும், அழைக்கப்பட்டதும் மகிழ்ச்சியையே கொடுத்தது.)

  பதிலளிநீக்கு
 5. வாங்க ரிஷபன் சார், நீங்கள் சொல்வது உண்மை தான். அங்கே தூங்கிக்கொண்டு இருக்கும் ஒரு கரடி மீது கல் எறிந்த ஒருவரையும், முதலை ஒன்றை நாராசமாக கத்தித் துன்புறுத்திக் கொண்டு இருந்ததையும் பார்த்து கோபம் வந்தது. அவர்களுக்குத் தெரியவில்லை, கூண்டுக்கு வெளியே இருக்கும் வரை தான் நாம் பலசாலிகள் என்று.

  வாங்க வடுவூர் குமார், வரவுக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  வாங்க பனித்துளி சங்கர், நன்றி.

  வாங்க KBJ சார், ரொம்பவே funny தான்.

  வாங்க ஈஸ்வரன் [பத்மநாபன்] அண்ணாச்சி, நிறைய விஷயம் வெளியே வராம இருக்கறது தான் நல்லது…. :)

  வெங்கட் நாகராஜ்

  பதிலளிநீக்கு
 6. "அயலார் துன்பத்தில் இன்பம் காணுவதும் ,எரியும் கொள்ளியில் எண்ணையை விட்டு ஆனந்தப்படுவதும் இங்கு பலரின் வாடிக்கையாகிவிட்டதை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு மெத்த நன்றி, அய்யா.! பலவருடங்களுக்கு முன்பு, திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு நாவலில் "உள்ளே இருக்கவேண்டியவர்கள்பலர் வெளியிலும்,வெளியே இருக்கவேண்டியவர்கள் பலர் உள்ளேயும் இருப்பதாகவும் " தன் மனவேதனையை பகிர்ந்துகொண்டார்.இன்றுவரை அவர் கூற்றில் மாற்றமேதுமில்லை!!

  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 7. வெங்கட் அண்ணாச்சி! நீங்கள் சொல்வது உண்மைதான். பல விஷயங்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லதுதான். உதாரணமாக, காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் கொஞ்சம் துயில் எழ நேரம் ஆகிவிட்டால் அப்பா கத்துகிறார், "எலேய்! எருமை மாடே! எழுந்திரு' என்று. கொஞ்சம் அசமந்தமாய் வழியில் நின்றால், தங்கையோ , 'வழியில் ஏன் நந்தி மாதிரி நிற்கிறாய்?' என்கிறாள். நம்மைப் பற்றி ஏதோ பேசுகிறார்களே என்று கொஞ்சம் ஒளிந்திருந்து கேட்டால் , 'அவனுக்கு பாம்புச் செவி, மெல்லப் பேசு' என்று பாம்பு பட்டம் வேறு. கொஞ்சம் பாடத்தில் மார்க் குறைந்தால், அக்கா, 'கழுதை! படிக்கிறதே இல்லை' என்று உதைக்கிறார். சரி, போர் அடிக்கிறதே என்று பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்த்தால், "ஒட்டகச் சிவிங்கி மாதிரி இங்கே என்ன எட்டிப் பார்வை?" என்று விரட்டுகிறார்கள். நண்பன்தானே என்று கொஞ்சம் கிண்டல் அடித்தால், அவனோ வடிவேலு பாணியில் "போடா! பண்ணி!" என்கிறான். மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து "ஒரு நடமாடும் மிருக கட்சி சாலை" என்று சொல்கிறார்கள். இதை எல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? ஏதோ, என் அம்மா மட்டும்தான் செல்லமாய் "வானரமே" என்று கொஞ்சுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 8. வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறத///

  நீங்கள் சொல்வது உண்மை தான்.
  :( எப்பவும் இதே கதைதான்

  பதிலளிநீக்கு
 9. நான் இன்னும் தில்லி உயிரியல் பூங்கா பொனதில்லை வெங்கட். :(

  ஜல்ஜீரா ரொம்ப நல்லது. பசியைத் தூண்டி விடும்.

  பன்னி - இது பொதுவாக கடைக்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் சொல்லும் வழக்கு சொல். இதையே கொஞ்சம் நடுத்தர, மேல் வர்க்கத்தினர் “லிஃபாஃபா” என அழைக்கின்றனர்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....