எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 21, 2011

கிடைத்தாள் கனவு ராணி

தமிழகத்தில் ஏப்ரல் 13 அன்று தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் கிடைக்கப் பெறும் வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏற்படும் குளறுபடிகள்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். எனக்கும் வந்தது – பெறுவதில் அல்ல – வழங்குவதில். முன்பே ஒரு பதிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் உள்ள தொல்லைகள் பற்றி எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு.

நான் கொண்டு சேர்க்க வேண்டிய வாக்காளர் அட்டையில் ஒரு பதினெட்டு வயது பெண்ணின் அட்டையும் ஒன்று. அந்த பெண்ணின் பெயர் “சப்னா ராணி”. ஹிந்தியில் ”சப்னா” என்றால் கனவு என்று அர்த்தம். அந்த பெண்ணின் வாக்காளர் அட்டையில் அவள் பெயர், தந்தை பெயர், வயது, மற்றும் முகவரி இருக்கும். அதை வைத்து, அவளது வீட்டில் கொண்டு கொடுக்க வேண்டும்.

ப்ப்பூ! நமக்கு இது ஜூஜூபி வேலை. நேரா அந்த வீட்டுக்கு போய், கனவு ராணியை பார்த்து கொடுத்துட்டு வந்துடுவோம்னு கிளம்பினேன். முகவரி மதர் தெரசா க்ரெசண்ட், புது தில்லி என்று அறைகுறையாகவே கொடுத்திருந்தது. கூகிள் ஆண்டவரின் மேப்பில் தேடினால் மதர் தெரசா க்ரெசண்ட் என்பது தீன் மூர்த்தி பவனிலிருந்து ஆரம்பித்து டாக்டர் ராம் மனோகர் மருத்துவ நிலையம் வரை ராஷ்டிரபதி பவன் பின்னாலே 3-4 கிலோ மீட்டர் செல்லக்கூடிய அரைவட்டத்தில் ஒரு சாலை என்று தெரிந்தது.

அந்த சாலையில் மத்திய மந்திரிகள் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வசிக்கும் வீடுகளே இருக்கும். நான் தேடும் கனவு ராணி எங்கே இருக்காங்க என்பதே தெரியவில்லை. சில வீடுகளின் நடுவில் சின்னஞ் சிறிய வீடுகளும் இருந்தது. இரண்டு மூன்று வீடுகளில் சென்று கேட்டபோது ”போ போ, இங்க சப்னா இல்லை” என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான்.

பாதி வீடுகளில் நாய் வகைகளில் எத்தனை வகை உண்டோ அவற்றில் ஏதோ ஒன்று, “ நீ ஏண்டா எங்க வீட்டுக்குள்ளே வர்ர, வந்தா குதறிடுவேன்” என்று என்னைப் பார்த்து சொல்வது போல இருந்தது. என்ன செய்வது என்று சிவனேன்னு நின்று கொண்டிருந்தபோது, எதிரே கடவுள் மாதிரி அந்த பீட் தபால்காரர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பெரிய நமஸ்தே போட்டு, “அண்ணாத்தே, இந்த போட்டாவில இருக்கற கனவு ராணி எங்க இருக்கா, கொஞ்சம் பார்த்து சொல்லுங்க” என்று கேட்டேன்.

கடைசியில் அவர் தான் எனக்கு சரியான வழியைக் காண்பித்துவிட்டு மேலுதவியாக கூடுதலாக ஒரு தகவலையும் சொல்லி விட்டு போனார். அது என்ன தகவல்னா – கொஞ்சம் பொறுங்க, அதை கடைசியில் சொல்றேன்.

நான் இருந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது கனவு ராணியின் வீடு. " வந்தாள் மகாலக்ஷ்மியே " என்ற பாடல் ஸ்டைலில் "கிடைத்தாள் கனவு ராணியே" என்று மனதுக்குள் பாடிக்கொண்டே தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்காக தோண்டிப் போடப்பட்டிருக்கும் குழிகளையும், சீரற்ற நடைபாதைகளையும் தாண்டி அந்த கட்டிடத்தின் அருகில் செல்லவே 15 நிமிடம் பிடித்தது.

அந்த கட்டிடத்தின் அருகில் சென்ற பிறகுதான் பார்த்தேன், நம்முடைய முன்னோர்கள் பலர் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு இருந்தனர். கீழேயும் சிலர் விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர்களை ஒரு பயத்துடன் தாண்டும்போது ஒருவர் கிர்ர்… என்று குரல் கொடுக்க, நான் ஒரு அலறலுடன் அவரைத் தாண்டினேன்.

தபால்கார அண்ணாச்சி சொன்ன அடையாளங்கள் கொண்ட வீட்டின் ஒலிப்பானை அழுத்தியதும் தான் விபரீதம் தொடங்கியது. ”சப்னா ராணி” வருவதற்கு பதில் வீட்டிலிருந்து நான்கு-ஐந்து நாய்கள் குரைக்கும் சத்தம்தான் முதலில் வந்தது. பிறகு வந்த சப்னா ராணியின் பின்னால் ஒரு டாபர்மேன், ஒரு பொமரேனியன், ஒரு புல்டாக் என வகைக்கு ஒன்றாக ஐந்து நாய்கள் குலைத்தபடி வந்தன.

சிறிதாகத் திறந்த கதவு சந்து வழியே கைகள் நடுங்க வாக்காளர் அட்டையை அந்த கனவு ராணியின் கைகளில் திணித்துவிட்டு அங்கிருந்து “விடு ஜூட்!”.

"சரி சரி, அந்த தபால்கார அண்ணாச்சி என்ன சொன்னார்னு தானே கேட்கறீங்க?, 'அங்க நாய் இருக்கும்'- "ன்னு சொன்னாரு. சரி ஒரு நாய்தானே இருக்கும்னு போனா அங்கே ஒரு நாய் கூட்டமில்ல இருந்துச்சு!.

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட் நாகராஜ்

27 comments:

 1. ராஜேஷ்குமார் நாவல் படிக்கரமாதிரியே இருக்கு... நாய்கள் ஜாக்கிரதை போர்டு இந்தியில இல்லையா?

  ReplyDelete
 2. உங்க தங்க்ஸ்சை பக்கத்தில் வச்சுக்கிட்டே இப்படி தலைப்பு குடுக்க ஒரு தில்லு வேணும். நான் உங்களை பாராட்டுகிறேன் தல. ;-))

  ReplyDelete
 3. கனவு கலைஞ்சு போச்சே இப்படி.. ஏதாச்சும் சுவாரசியமா வரும் னு பார்த்தா இப்படி பீதி கிளம்பி தப்பிச்சு வந்தா போதும்னு ஆயிடுச்சே..

  ReplyDelete
 4. :))
  நல்ல மனுசன் எதோ நீங்க கொஞ்சமாவது ஜாக்கிரதயா போனீங்களே..
  உங்களுக்கும் போஸ்ட்மேனைப் புடிச்சு கேக்கனும் தோணுச்சு பாருங்க..:)

  ReplyDelete
 5. நிச்சயமா பக்கத்துல பொண்டாட்டியை வச்சுகிட்டு
  இந்த தலைப்புக்கேத்தாப்ல பதிவு எழுத முடியாதுனு தெரியும் .அதனால
  இப்பிடித்தான் ஏதாவது பீதி கிளப்பற பதிவா இருக்கும்னு நினைச்சேன்.
  சுவாரசியமான பதிவு.பகிர்வுக்கு நன்றி.அரசாங்க உத்யோகத்துல இந்த
  வாக்காளர் அட்டை விநியோகிப்பு ஒரு தொல்லை பிடிச்ச வேலை.நிறைய வீட்டுல மதிக்க கூட மாட்டாங்க

  ReplyDelete
 6. //நேரா அந்த வீட்டுக்கு போய், கனவு ராணியை பார்த்து கொடுத்துட்டு வந்துடுவோம்னு கிளம்பினேன்.//

  எப்புடீ? மேரே சப்னோ கீ ரானி கப் ஆயேகி து-ன்னு பாடிட்டே போனீங்களா?

  ReplyDelete
 7. //சப்னா ராணியின் பின்னால் ஒரு டாபர்மேன், ஒரு பொமரேனியன், ஒரு புல்டாக் என வகைக்கு ஒன்றாக ஐந்து நாய்கள் குலைத்தபடி வந்தன.//

  சப்னான்னா கனவு சரி; அதுக்கப்புறம் சப்னா ராணின்னாலே சிம்மசொப்பனம், ஸாரி, நாய்சொப்பனமா இருந்திருக்குமே? :-)

  ReplyDelete
 8. தொடருங்க, காத்திருக்கோம்......

  ReplyDelete
 9. மின்னஞ்சலில் வந்த திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை:

  ரொம்ப ஜோராக படு சுவாரஸ்யமாகக் கொண்டு போனீங்க. கடைசியில் அந்தக் கனவு ராணியை முழுவதுமாக நீங்களும் காணாமல், எங்களுக்கும் காட்டாமல், ஏதோ கதவிடுக்கில் நிறுத்தி இப்படிப்பண்ணிப்புட்டீங்களே!


  அடையாள அட்டையை வாங்கிக்கொண்டதாவது கனவு ராணியே தானா அல்லது கவ்விக்கொண்டது அவளின் நாய்களில் ஒன்றா என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது.

  எது எப்படியோ எனக்கும் இந்த நாய்களைக் கண்டாலே மிகவும் எரிச்சலாகத்தான் வரும். எப்படித்தான் அதனுடன் கொஞ்சிக் குலாவுகிறார்களோ. சரி சரி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்டு. நமக்கேன் வம்பு.

  நீங்க மீண்டும் வேறு யாரையாவது தேடிப்போனா ஜாக்கிரதை வெங்கட்.

  ஆனால் மறக்காம அந்த அனுபவத்தை மறக்காமல் இதுபோல பதிவாப் போட்டுடுங்க.


  VGK

  ReplyDelete
 10. BLO DUTY YA.........வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ஹ்ம்ம் நான் கூட எதோ காதல் கதைன்னு வந்தேன்

  ReplyDelete
 12. என்னது வாக்காளர் அட்டையை
  வீடுதேடிப்போயி கொடுக்கராங்களா?
  இதனை வயசான பிறகும் நான் பலமுறை அப்ளை செய்தும் இன்றுவரை
  என்அக்கு வாக்காளர் அட்டையே கிடைக்கலியே?

  ReplyDelete
 13. ரொம்ப ஜோராக படு சுவாரஸ்யமாகக் கொண்டு போனீங்க. கடைசியில் அந்தக் கனவு ராணியை முழுவதுமாக நீங்களும் காணாமல், எங்களுக்கும் காட்டாமல், ஏதோ கதவிடுக்கில் நிறுத்தி இப்படிப்பண்ணிப்புட்டீங்களே!


  அடையாள அட்டையை வாங்கிக்கொண்டதாவது கனவு ராணியே தானா அல்லது கவ்விக்கொண்டது அவளின் நாய்களில் ஒன்றா என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது.

  எது எப்படியோ எனக்கும் இந்த நாய்களைக் கண்டாலே மிகவும் எரிச்சலாகத்தான் வரும். எப்படித்தான் அதனுடன் கொஞ்சிக் குலாவுகிறார்களோ. சரி சரி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்டு. நமக்கேன் வம்பு.

  நீங்க மீண்டும் வேறு யாரையாவது தேடிப்போனா ஜாக்கிரதை வெங்கட்.

  ஆனால் அந்த சுவையான அனுபவத்தை மறக்காமல் இதுபோல பதிவாப் போட்டுடுங்க.

  வாழ்த்துக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 14. பயங்கரமான கனவாயிருக்கே :-))))

  ReplyDelete
 15. அந்த போஸ்ட் மேன் கிடைக்கலைன்னா உங்க நிலமை....

  ReplyDelete
 16. நல்ல பதிவு.
  சுவையாக எழுதுகிறீர்கள்.

  ReplyDelete
 17. இன்னும் கொஞ்சம் நாய்(கள்) விவரங்கள் எழுதி இருக்கலாம்.
  என்னென்ன வகை வச்சுருந்தாங்க? என்னென்னெ நிறம்?

  ReplyDelete
 18. வாக்காளர்களுக்கு அட்டை மட்டுமா.. வேற என்னன்னவோ தர்றாங்களாமே!!

  அதெல்லாம் டிஸ்ட்ரிப்யூஷன் எப்டி நடக்குது?

  நல்ல சுவையான பதிவு தான்...

  மீண்டும் சீக்கிரமா சந்திப்போம்...

  ReplyDelete
 19. நீங்க மீண்டும் வேறு யாரையாவது தேடிப்போனா ஜாக்கிரதை வெங்கட்.

  ReplyDelete
 20. எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்களோ அந்த நெடு நீள சாலையில் என்று நகம் கடிக்கையில் தபால்காரர் வந்தது நல்ல திருப்பம்!

  ReplyDelete
 21. எப்படியோ குரங்கு,நாய்,ராணி யார் கிட்டயும் மாட்டிக்காம திரும்பிட்டீங்க!
  மலை மந்திர் போய் முருகனுக்கு நன்றி சொன்னீர்களா?!

  ReplyDelete
 22. தனியா போய், நாய்கள், குரங்குகள், ராணின்னு எல்லாரையும் சமாளிச்சு வந்ததுக்காக இல்லைன்னாலும், தைரியமா இப்படி தலைப்புக் கொடுத்ததுக்காகவாவது “வீராதி வீரன்” பட்டம் தரணும் உங்களுக்கு!!

  ReplyDelete
 23. @@ வேடந்தாங்கல் கருண்: கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே. ராஜேஷ்குமார் அளவுக்கு நம்மால எழுத முடியாது நண்பரே.

  ## ஆர்.வி.எஸ்.: நீங்கள் எல்லாம் இருக்கீங்களேன்னு ஒரு அசட்டு தைரியம் தான் மைனரே! படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  @@ ரிஷபன்: ஆமாம் சார்! நிஜமாகவே அன்னிக்கு கனவு கலைந்துதான் போனது :) படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  ## முத்துலெட்சுமி: படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோ. அன்னிக்கு தபால்காரர் தான் எனக்கு அநாத ரட்சகர்!

  @@ ராஜி: கரெக்டா கண்டுபிடிச்சீங்க! ரொம்ப தொந்தரவு பிடித்த வேலை. தில்லியில் மக்கள் தொகை கணக்கு எடுக்கவந்த இரண்டு மூன்று ஆசிரியர்களுக்கு அடி, உதையே விழுந்ததுன்னா பார்த்துக்கோங்க! தவிச்ச வாய்க்கு தண்ணி கூட குடுக்கமாட்டாங்க! :( படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோ.

  ## சேட்டைக்காரன்: நல்ல பாடல். இதே பாடலை வைத்து கல்லூரியில் செய்த ஒரு நகைச்சுவை ஸ்கிட் நினைவுக்கு வந்தது! இந்த நிகழ்வுக்குப் பிறகு “சப்னா ராணி” என்ற பெயரைக் கேட்டாலே நாய்கள் தான் நினைவுக்கு வந்தது என்பது உண்மை. படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சேட்டை.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: சில வீடுகளில் மனிதர்களை விட நாய், பூனைகளுக்குள்ள மதிப்பு அதிகம் தான்! அவர்களுக்குத் தனி ரசனை :) படித்து, நீண்ட கருத்துரை சொன்னதற்கு நன்றி ஐயா!

  ## தென்றல் சரவணன்: சரியாகச் சொன்னீர்கள்! தொந்தரவு பிடித்த பி.எல்.ஓ. பணி தான். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. தங்களது முதலாவது வருகை என்னை மகிழ்வித்தது.

  @@ எல்.கே: அடடா ஏமாந்தீங்களா கார்த்திக்! காதல் கதை நம்ம டொமைன்ல இல்ல :( படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  ## லக்ஷ்மி: இங்கே தில்லியில் ஆரம்பித்து இருக்கிறார்கள். விரைவில் மற்ற நகரங்களிலும் தொடங்கி விடும் இந்தப் பணி. படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றிம்மா.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: தொடர்ந்து முயன்று கருத்தினை வெளியிட்டு விட்டீர்கள்! வாழ்த்துகள் :)))))).

  ## அமைதிச்சாரல்: பயங்கரம் தான் சகோ. படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோ.

  @@ கலாநேசன்: கிடைத்தே மோசமான நிலை! கிடைக்காமல் இருந்திருந்தால் – அதோகதிதான்!! படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சரவணன்.

  ## ரத்னவேல்: மிக்க மகிழ்ச்சி ஐயா! படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  @@ துளசி கோபால்: ஆனாலும் உங்களுக்கு கிண்டல் ஜாஸ்தி தான் டீச்சர்! நானே ஆளை விட்டா போதும்னு ஓடறதுக்கு இருந்தேன். இதுல என்ன வகை, என்ன நிறம்னு பார்க்கவா முடிஞ்சது :)))))) படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  ## அமுதா கிருஷ்ணா: படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  @@ ஆர். கோபி: நான் இருப்பது தில்லியில் நண்பரே. இங்கே தேர்தல் இல்லை! அப்படி இருக்கும்போதும் இங்கே இலவச டீவி எல்லாம் கிடையாது! விநியோகம் எல்லாம் பொதுவாக இருக்காது :)))) படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  ## சே. குமார்: என் மேல் உங்கள் அக்கரைக்கு மிக்க நன்றி நண்பரே. படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  @@ கே.பி. ஜனா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பக்கத்தில் உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி சார்.

  ## சென்னை பித்தன்: உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா! அங்கிருந்தபடியே மலைமேலிருக்கும் வள்ளி மளானை நினைத்து ஒரு நன்றியைச் சொன்னேன்!

  @@ ஹுசைனம்மா: தலைப்பு எல்லோரையும் ஏமாற்றிவிட்டதோ என ஒரு சந்தேகம்!!! ”வீராதி வீரன்” பட்டமாவது கிடைக்கிறதே!! படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

  இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி!!

  ReplyDelete
 24. சப்னோங்கி ராணி முக தரிசனம் கிடைக்கவே இல்லையா கடைசி வரை! இதில் உங்கள் எழுத்து பாணி வித்தியாசமாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நாய்களின் முக தரிசனம் தான் கிடைத்தது! எழுத்துப் பாணி - கொஞ்சம் மாறி இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....