
"டொக், டொக், டொக், டொக்" என்று சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த எழுபத்தைந்தை கடந்துவிட்டிருந்த கணபதி.
அதிகாலை நாலு மணிக்கே அவருக்கு முழிப்பு வந்து விட்டது. கல்யாணி இருந்திருந்தால் ஒரு கப் காப்பியாவது கொடுத்திருப்பாள். ஆறு மணியாகியும் காப்பி வரும் அறிகுறிகள் எதையும் காணோம். சமையலறையில் ஆள் நடமாடும் சலனமோ, பாத்திரங்கள் உருளும் சத்தமோ எதுவுமில்லை. "மருமகள் ஜானகி தூங்கிக்கொண்டு இருக்கா போலிருக்கு!" என்று ரோட்டை வெறித்தபடி இருந்தார்.
அவரும் கல்யாணியும் பார்த்துப் பார்த்து கட்டி ஆண்டு அனுபவித்த வீடு. அவள் காலமான பிறகு உடல் ஒடுங்கி அவரின் நடமாட்டம் குறைந்து விட்டது. காலையில் காவிரிக்கரைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசல் திண்ணையில்தான் வாசம். சாப்பிடுவது கூட அங்கேயே.
வீட்டின் உள்ளே தண்ணீர் விழுகின்ற சலனம். "சரி எப்படியும் பத்து-பதினைந்து நிமிடங்களில் காப்பி வந்து விடும்..." மனக் கணக்கு போட்டவாறே உள்ளே பார்த்தபடி "டொக், டொக், டொக், டொக்" என்று சொல்லிக் கொண் டிருந்தார் கணபதி. "வந்துண்டு தானே இருக்கேன், அதுக்குள்ளே என்ன சத்தம்?" என்றவாறே வந்து அவரெதிரே ஜானகி வைத்த காப்பியை எடுத்து பொறுமையாக குடித்தார். இளஞ்சூட்டில் இருந்த காப்பி அவருக்கு ருசிக்கவில்லை.
பதினோரு மணிக்கு அவருடைய தட்டில் சாதம், குழம்பு, பொரியல் என்று எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு வந்து அவரெதிரே வைத்துவிட்டு வேற ஏதாவது வேண்டுமா என்று கூட கேட்காமல் உள்ளே சென்றுவிட்ட மருமகளைப் பார்த்ததும், கல்யாணி இருந்தவரை பார்த்துப் பார்த்து அவள் கையால் தனக்கு பரிமாறிய காட்சிகள் ஏனோ அவர் மனதில் வந்து போனது. இனிமேல் சாயங்காலம் ஒரு காப்பி, இரவு ஏதோ ஒரு பலகாரம். அவ்வளவு தான். அதற்கு மேல் எதுவும் கிடையாது.
இரவு நாலு இட்லியைத் தட்டில் போட்டு அவர் முன்னாள் வைத்து விட்டு பக்கத்து வீட்டு பங்கஜத்துடன் பேசப் போய்விட்டாள் ஜானகி.
"உன் மாமனார் ஏன் 'டொக், டொக் '-ன்னு அடிக்கடி சொல்லிண்டே இருக்கார்?" என்று பேச்சோடு பேச்சாகக் கேட்ட பங்கஜத்திடம்...
"ஏன்னு தெரியல, மாமியார் போனதிலிருந்தே இப்படித்தான் அப்பப்ப "டொக், டொக்,டொக், டொக்" ன்னு சொல்லிண்டே இருக்கு. அவருக்கு பைத்தியம் பிடுச்சுடுத்தோ என்னவோ யாரு கண்டா? என்று ஜானகி சொன்னது கணபதி காதில் விழாமலில்லை.
காலையில் காப்பி வைக்கும்போது ஒரு "டொக்", மதிய சாப்பாட்டின்போது ஒரு "டொக்", சாயங்கால காப்பிக்கு ஒரு "டொக்", இரவு பலகாரம் வைக்கும் போது ஒரு "டொக்" என்ற சத்தத்துடன் கடனே என்று வைத்துவிட்டு போகிற மருமகளை நினைத்து மனதுக்குள் சிரித்தபடியே "டொக், டொக், டொக், டொக்!" என்று மீண்டும் சத்தமாக சொல்ல
ஆரம்பித்தார் கணபதி.