புதன், 5 மே, 2010

அண்டங்காக்கையை வென்ற பல்லவன்



நான் வாழ்ந்த நெய்வேலியில் நிறைய மரம் செடி கொடிகள் இருக்கும். அதனால காக்கா, மைனா, குருவி போன்ற பறவை இனங்களுக்கு குறைச்சலே இல்லை. எங்க வீட்டுல அம்மா எதையாவது காய வைக்கணும்னா மொட்டை மாடில காய வைத்து விட்டு எங்களை காவலுக்கு உட்கார வைத்து ஸ்கூல் புத்தகத்தை வேற படிக்கச் சொல்லி விடுவார்கள். சிறு வயதில் இது போன்று காக்காய்களிடம் இருந்து காப்பாற்றிய பல பொருட்களில் மறக்க முடியாத ஒரு பொருளைப் பற்றியே இங்கே சொல்லப் போகிறேன்.

”டேய் கண்ணா சீக்கிரம் வாடா, தொட்டி மேல கழட்டி வைச்ச என்னோட பல் செட்டை ஒரு காக்கா தூக்கிக்கிட்டு போறதுடா! சீக்கிரம் வந்து எப்படியாவது அதுக்கிட்டேயிருந்து திருப்பி வாங்கிடுடா?” என்றவாறே என்னைப் பார்த்துக் கத்திக்கொண்டே ஓடி வந்தார் பக்கத்து வீட்டு அம்மாள்.

”என்னாச்சு, என்ன ஆச்சு?” என்று கேட்டுக்கொண்டே என் அம்மாவுடன் நானும் வெளியே ஓடி வந்தேன். காக்காவின் மேல் ஒரு கண் வைத்தவாறே, பக்கத்து வீட்டு அம்மா சொன்னார், “புது பல் செட் வாங்கி ஒரு வாரம்தான் ஆகுது, அதைக் கழட்டித் துலக்கி தொட்டி மேலே வைச்சிட்டு வாய் கொப்பளிச்சுட்டு இருக்கேன், அந்த காக்கா என்னடான்னா, அதை ஏதோ மாமிசத்துண்டுன்னு நினைச்சு தூக்கிக்கிட்டு போயிடுச்சு”ன்னு. அவர் கண்களில் அழுகைக்கான ஆரம்ப அறிகுறிகள்.

மரத்து மேல பார்த்தா, காக்கையார் பல் செட்டை தனது கூர்மையான அலகினால் கொத்திக்கொண்டு இருக்கார். சரின்னு கீழே கிடந்த கல்லை எடுத்து அது மேல வீசினா, எதைப் பற்றியும் கண்டுக்காம தன் காரியத்திலேயே கண்ணா இருந்தது. சரி இது ஒண்ணும் வேலைக்காவாதுன்னு கிடுகிடுன்னு நான் மரத்துல ஏறி போகும்போது ’போடா போ’ன்னு பறந்து போய் மொட்டை மாடி மேல போய் உட்கார்ந்துடுச்சு.

வெற்றி அடையாமல் விடுவோமா? உடனே தாவித் தாவி மாடி மேலே போய் காக்காய பயமுறுத்தினா, "சே! சே! இவன் நம்மளவிட கேவலமா இருப்பான் போலிருக்கே”ன்னு பல் செட்ட கீழே போட்டுட்டுப் போக, அதை எடுத்து வந்து பக்கத்து வீட்டு அம்மா கிட்ட பெருமையோட கொடுத்து, “அண்டங்காக்கையை வென்ற பல்லவன்” என்ற பட்டம் வேற வாங்கினேன். (அப்பாடி இவன் ஏண்டா இந்த தலைப்பை வச்சான்னு இப்பவாவது புரிஞ்சுதா?) இனி மேலே படிங்க.

அதுதான் போச்சுன்னு பார்த்தா இங்கே தில்லிக்கு வந்த பிறகு கூடவா இந்த ”பல்” நம்மள தொந்தரவு பண்ணணும்?. நேத்து நண்பர்களோட மதிய உணவு சாப்பிடச் சென்ற போது எதிர் மேஜையில் ஒரு ஆள் தன்னோட முன் இரண்டு பல் இல்லாம ஒக்காந்து இருந்தார். என்னடான்னு பார்த்தா அவர் முன்னாடி ஒரு கண்ணாடி டம்ளர்ல தண்ணி. அதுக்கு உள்ளாற ஏதோ மிதக்குது. உற்றுப் பார்த்தா இரண்டு பல் வைத்த பல் செட், நம்மள பார்த்து ”என்னடா பல்லவா?” ன்னு கேக்கற மாதிரி தெரிஞ்சது. அதுக்கு தெரியல, நான் “அண்டங்காக்கையை வென்ற பல்லவன்”ன்ற பட்டம் வாங்கியவன்னு.

அதைப் பார்த்த அருவருப்பில் மதிய உணவு சாப்பிடாமலே நாங்கள் எல்லோரும் அங்கிருந்து எஸ்......கே..........ப்.

15 கருத்துகள்:

  1. அண்டங்காக்காயை வென்ற அபூர்வ பல்லவனைப் பற்றிப் பரணி பாடிப் பரிசில் பெறலாம் என்று சோற்றுப்புதூர் சொறிகால் வளவனின் ஆஸ்தானப் புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞர் கால்கடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறார் வேந்தே!

    பதிலளிநீக்கு
  2. ஆத்தாடி.. பல்செட்டா!!!.. ரங்க்ஸின் ஃப்ரெண்ட் ஒருவருக்கும் இப்படித்தான் incissors எனப்படும் முன்பற்கள் கிடையாது.அவரோட பல்செட்டை, சர்வசாதாரணமா கிடைக்கிற பாத்திரத்திலெல்லாம், சமையல் பாத்திரங்கள் உட்பட.. போட்டு வெச்சிருவார். விஷயம் தெரிஞ்சதும், கூடதங்கியிருந்த நண்பர்கள் அவரை க்ரூப்பிலிருந்து கழட்டி விட்டுட்டாங்க.

    உங்களதும் டெரரான அனுபவம்தான் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  3. 'பல்’லாயிரக்கணக்கான கதைகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. சந்தித்த உண்மை நிகழ்வுகளை மற்றவர் சிந்திக்கத் தூண்டும் வண்ணம் வழங்கி எல்லோரையும் சிரிக்கவைக்கும் கலையினிலும் கை தேர்ந்த "பல்லவன்" மேன்மேலும் இதுபோல் பல "பல்லவி"
    பாடவேண்டுகிறேன். வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  5. பல்லவரே! தங்களது பல்சுவை பதிவு ப(ல்)லே! ப(ல்)லே! தங்களது பதிவைப் படித்து விழுந்து விழுந்து சிரித்ததில் பல்வலி வந்துவிட்டது. நல்லவேளை, பக்கத்தில் பல்பொருள் அங்காடியில் மருந்து கிடைத்தது. தாங்கள் மேன்மேலும் பல்வேறு, பல்நூறு பதிவுகள் வழங்கிட பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. தமிலிஷ்-ல் வந்த ரங்கராஜனின் கருத்து:

    ”பல்லு பறந்த கதையை படித்ததும் பல்வித அனுபவம் கிடைத்தது போன்று இருந்தது.”

    பதிலளிநீக்கு
  7. ஹாஹாஹா... நல்ல பட்டம் தான் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  8. வாங்க LK, :) :)

    வாங்க சேட்டை, பல்லவர், தனது கடவாய்ப்பல்லை நோண்டுவதில் மும்முரமாக மூழ்கி இருப்பதால், பரிசில் பெற நீங்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

    வாங்க அமைதிச்சாரல், நிஜமாகவே ஒரு பயங்கர அனுபவமாகத் தான் இருந்தது.

    வாங்க ரிஷபன் சார், உங்களைப் போன்றோர்களின் ஆதரவு இருப்பதால்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

    வாங்க நடராஜன் சித்தப்பா, உங்களுக்கும் மேலே சொன்னது – “ரிப்பீட்டேய்ய்ய்…”

    வாங்க பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி, ’பல்’லாண்டு பாடி பரிசில் பெற எண்ணமா? வரிசையில் நீங்கள் ’சேட்டை’க்குப் பின் தான்.

    வாங்க ரங்கராஜன், “பல்”வித அனுபவம் – ரசித்தேன்.

    வாங்க விக்னேஷ்வரி, பட்டத்தை ஊர்ஜிதப்படுத்தியதற்கு நன்றி.

    தமிலிஷ்-ல் வாக்கு அளித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் ”டாங்ஸ்”பா.


    வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
  9. //அதைப் பார்த்த அருவருப்பில் மதிய உணவு சாப்பிடாமலே நாங்கள் எல்லோரும் அங்கிருந்து எஸ்......கே..........ப். //

    காமெடியில் ஆரம்பித்து டிரேஜடியில் முடித்துவிட்டீர்களே?

    பதிலளிநீக்கு
  10. வாங்க அமைதி அப்பா,

    உங்களது வரவிற்கும், கருத்துக்கும் நன்றி. காமெடியே ட்ரேஜடியாக மாறிவிட்டது என்னமோ உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  11. தலைப்பு பொருத்தமாத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  12. என்னை மிகவும் கவர்ந்துவிட்டது . பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. எக்ஸலண்ட்... சென்னைக் காக்காய்களாக இருந்திருந்தால் உங்கள் பருப்பு வெந்திருக்காது! போய்யான்னுட்டுப் போயிருக்கும். ஹி... ஹி....

    பதிலளிநீக்கு
  14. @ கணேஷ்: சுட்டி கொடுத்தவுடன் படித்து இப்படி ஒரு அருமையான கருத்தினை எழுதிய ’பல்’லவராயர் அவர்களுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....