எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 24, 2011

வாங்கியவன் கொண்டாட , நான் இங்கு திண்டாட, தயவு செய்து...தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து பொங்கலை முன்னிட்டு இந்த வருடமும் பொங்கல் விழா 22-23.01.2011 ஆகிய இரு தினங்கள் நடத்தியது.  இந்த பொங்கல் விழாவில் ”தென்னக கலாச்சார பண்பாட்டு மையம், தஞ்சாவூர்” வழங்கிய கிராமிய நடனம்  மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகளும், தில்லித் தமிழ்ச் சங்கம் வழங்கிய தில்லி மாணவர்கள் பங்கேற்ற திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன.

சிறப்பு நிகழ்ச்சிகளாய் சனி [22.01.2011] அன்று புஷ்பவனம் டாக்டர் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சியும், ஞாயிறு [23.01.2011] அன்று திண்டுக்கல் லியோனி குழுவினரின் பட்டிமன்றமும் ஏற்பாடு செய்திருந்தனர்.    விழாவில் சிறப்பு அம்சங்களாய் கோ-ஆப்டெக்ஸ், பூம்புகார், ஆவின் போன்ற நிறுவனங்களின் விற்பனை நிலையங்களும் ஹோட்டல் ராம் பிரசாத் நடத்திய உணவகமும் இருந்தன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் தேனீர் போலவே தேனீர் கிடைத்தது. கடன் அன்பை முறிக்கும் என்று பல கடைகளில் எழுதி இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.  இங்கே வித்தியாசமாய் கவிதையாய் எழுதி இருந்தார்கள்.

கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து கடன்
கேட்காதீர்!

நான் சனிக் கிழமை அன்று புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். முதலில் பிள்ளையார் பாட்டில் ஆரம்பித்து, இரண்டாவதாய் தை மகளை வரவேற்று, மூன்றாவதாக அவரது மிகப் பிரபலமான பாடலான “தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு” பாடலைப் பாடினார்.  பிறகு விறுவிறுப்பான கும்மிப் பாட்டு, மாடு பாட்டு, கோழிப் பாட்டு, ஜல்லிக்கட்டுப் பாட்டு, குழந்தைகளுக்கான பாட்டு என்று எல்லா மக்களும் ரசிக்கும்படி பல பாடல்களை பாடினார்கள்.  அவரின் இரு பாடல்களின் ஒலி வடிவம் கீழே [தில்லியில் பதிவு செய்யப்பட்டது அல்ல! மோகனன் என்ற நபர் தனது வலைப்பூவிலும் Muziboo-விலும் தரவேற்றம் செய்து உள்ளார்.  அவருக்கு எனது நன்றி]. Thamizha Nee Pesuvathu | Upload Music
தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! | Upload Music


நடுநடுவே நல்ல நகைச்சுவை உணர்வோடு பேசவும் செய்தார்.  கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பாடலான ”விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி” பாடலையும் பாடினார்.  மொத்தத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களைப் பாடி தில்லி தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல இசைவிருந்தினை நல்கினர் புஷ்பவனம் குப்புசாமி தம்பதிகள். அவர்களும், குழுவில் இருந்த மற்ற கலைஞர்களும் தில்லியின் கடும் குளிரிலும் இங்கே வந்திருந்து, அதுவும் ஒரு திறந்த வெளி அரங்கிலிருந்து மக்களை மகிழ்வித்ததற்காகவே பாராட்டலாம்!

இந்த இடுகையை நிறைவு செய்யுமுன் ஒரு சிறிய போட்டி – நமது ஊரில் பல உணவகங்களில் “டிபன் ரெடி! சாப்பாடு தயார்!!” என்று விளம்பரப் பலகைகள் வைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.  அதில் "தயார்" என்ற சொல் தமிழ்ச் சொல்லே இல்லை எனச் சொல்லி அதற்கான சரியான தமிழ்ச் சொல் என்ன என்று டாக்டர் குப்புசாமி அவர்கள் கேட்டார்.  நிகழ்ச்சியின் நடுவே அதன் பதிலையும் சொன்னார்.  “தயார்” என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை, நமது இலக்கியங்களில் இருந்த அந்த வார்த்தையை, பின்னூட்டத்தின் மூலம் சொல்பவர்களுக்கு ஒரு பொற்கிழி பரிசு!! – மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்!!

வேறு ஒரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்

33 comments:

 1. சீக்கிரம் விடை வரும். பொற்கிழி தயார வைங்க

  ReplyDelete
 2. தையார் என்ற ஹிந்தி வார்த்தையில் இருந்துதான் தயார் வந்தது.

  ஆயத்தம் என்பது நெருக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  ஒருவேளை எனக்குப் பொற்கிழி கிடைக்குமானால் அதைப் பிரதமரின் நிவாரண நிதியில் சேர்த்துவிடுங்கள்.தேர்தல் செலவுக்கு உதவும்.

  ReplyDelete
 3. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்

  பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! அஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

  லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க..

  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

  இனி தினமும் வருவேன்.

  ReplyDelete
 4. தயார் = ரெடி


  இப்போ இருக்கும் தொலைக்காட்சித் தமிழில் இதான் சரியா இருக்கும்.

  ReplyDelete
 5. பொற்கிழியா? மண்டபத்துலே யாராவது உதவி பண்ணினா எனக்குக் கிடைக்குமே! :-)

  தயார்=ஆயத்தம்

  ReplyDelete
 6. நான் நினச்சேன்.. சேட்டை சொல்லிட்டாரு.. ;-) ரெண்டு பேருக்கும் பாதி பாதி பொற்கிழியை கிழிச்சு கொடுத்துடுங்க... ;-)

  ReplyDelete
 7. விஞ்ஞானத்தை வளர்க்கபோரேண்டி பாடினாரா..ஆகா மிஸ் செய்தேன்.. வருவதாகவே இருந்து கடைசியில் கிளம்ப முடியாமல் ..

  ReplyDelete
 8. கடனுக்கு ஒரு கவிதையா ? அருமையான பகிர்வு.

  ReplyDelete
 9. உங்களுக்கு செலவு வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. அதனால ‘தயார்’ இல்ல.. ஹி ஹி..

  ReplyDelete
 10. தயார் பல மொழிகளில் உபயோகப் படுத்தப் படுகிறது. தனிமடலில் முதலிலேயே நான் சொல்லிவிட்டேன்

  ReplyDelete
 11. தயார் - ஆயத்தம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 12. ஆயத்தம்ன்னுதான் நானும் நினைக்கிறேன்..

  ReplyDelete
 13. கருத்துரையிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. உங்களில் பெரும்பாலானவர்கள் “ஆயத்தம்” என்ற வார்த்தையினைச் சொல்லியிருக்கீங்க. நிகழ்ச்சியின் போது புஷ்பவனம் டாக்டர் குப்புசாமி சொன்ன தமிழ்ச் சொல் அகநானூறு, புறநானூறு போன்ற இலக்கியங்களில் உபயோகித்த தூய தமிழ் சொல்! பார்க்கலாம் வேறு யாராவது அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்கிறார்களா என்று!

  நட்புடன்

  வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 14. பாட்டு ரெண்டும் நல்லா இருந்தது! நன்றி.

  தயார் என்ற சொல்லுக்கு மூலச்சொல் தையார்... ஏற்கெனவே சொல்லிட்டாங்க.

  தமிழ்ல, நேமி அல்லது இந்த சொல்லில் இருந்து வந்ததா? தெரியலையே?

  ReplyDelete
 15. சிக்கிரம் பதிலை சொல்லுங்க கேட்க தயாரா இருக்கிறோம்.தயார் - காத்து இருப்பதா..

  ReplyDelete
 16. @@ எல்.கே.: மின்னஞ்சல் பொற்கிழி தானே? :)

  @@ சுந்தர்ஜி: உங்களுக்குப் பொற்கிழி இருந்தால் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு அனுப்பி விடுகிறேன். குறைந்தவிலையில் உணவு உண்ண வசதியாக இருக்கும்!! :)

  @@ சக்தி ஸ்டடி செண்டர்: நன்றி சகோ. இனிமேல் உங்கள் வலைப்பூவையும் படிக்கிறேன்.

  @@ துளசி கோபால்: ஆஹா தொலைக்காட்சி தமில்?

  @@ சேட்டைக்காரன்: நிறைய பேர் ஆயத்தம் என்ற சொல்லினைச் சொல்லி இருக்கீங்க! பார்க்கலாம் :)

  @@ ஆர்.வி.எஸ்.: :))) நன்றி நண்பரே.

  @@ முத்துலெட்சுமி: அவர் பாடிய நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. கவலை வேண்டாம்! இந்த பாடலை ரசித்தபாடல் வலைப்பூவில் போட்டு விடுகிறேன்...

  @@ கனாக் காதலன்: மிக்க நன்றி.

  @@ அன்புடன் அருணா: உங்களது முதல் வருகை? மிக்க நன்றி சகோ.

  @@ ரிஷபன்: மிக்க நன்றி சார்.

  @@ எல்.கே.: தனி மடல் வந்தது. நன்றி..

  @@ சித்ரா: மிக்க நன்றி.

  @@ அமைதிச்சாரல்: மிக்க நன்றி சகோ.

  @@ கெக்கே பிக்குணி: பாடலை ரசித்தமைக்கு நன்றி நண்பரே....

  @@ அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி.. சீக்கிரம் சொல்லி விடலாம். மாலை சொல்லி விடுகிறேன்.

  ஒரு சின்ன குறிப்பு: தயார் என்பதற்கான அவர் சொன்ன தமிழ் வார்த்தையில் நான்கு எழுத்துக்கள். முதல் எழுத்து - அ. நான்காம் எழுத்து - ம்.

  ReplyDelete
 17. ”தயார்” என்ற தமிழ்ச் சொல் ”தையார்” என்று ஹிந்திக்குப் போயிருக்கக் கூடாதா?

  தயார் என்பதற்க்கு “அணியம்” என்பது பொருத்தமான தமிழ்ச் சொல்லாக அவர் கூறினார். ”சாப்பாடு அணியம்” என்று பார்த்து விட்டு, இரண்டு அணியம் பார்சல் சொல்ல வாய்ப்புள்ளது.

  (எனது நண்பர் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமியை ‘புப்பவனம் குஷ்புசாமி’ என்றே சொல்கிறார். அவரை என்ன செய்வது என்று தெரியவில்லை)

  ReplyDelete
 18. http://tamilhelp.wordpress.com/2009/07/13/tamil-words-for-common-shop-signs/

  இதுல இருக்குங்க.. பிரியாணி அணியம்.. :))

  இற்றைகளைப்போல இனி இதையும் பயன்படுத்தலாம் பதிவுகளில்னு நினைக்கிறேன்..:) நன்றி..

  ReplyDelete
 19. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 20. அட, ஒரு புது (!!) தமிழ் வார்த்தைத் தெரிந்து கொண்டேன். இதுபோல பல வார்த்தைகள் தெரிந்துகொள்ள நானும் அணியம்தான்!! (ஒரிஜினாலிட்டி மிஸ்ஸிங் போல இருக்குல்ல??) :-))))

  ReplyDelete
 21. நல்ல ஒரு அருமையான நிகழ்ச்சியை ரசித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். தயார் தமிழ்ச்சொல் இல்லையா? ஹி..ஹி..

  முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

  ReplyDelete
 22. யாருக்குமே பொற்கிழி வேண்டாமாம். நீங்களே சொல்லி நீங்களே பரிசையும் எடுதுக்கோங்க.:))))

  ReplyDelete
 23. @@ ஈஸ்வரன்: பத்மநாபன் அண்ணாச்சி, ”சாப்பாடு அணியம்! - இரண்டு அணியம் பார்சல்” சூப்பர் போங்க! ஆனா உங்களுக்கு பொற்கிழி கிடையாது. ஏன்னா நீங்களும் நானும் தானே இந்த நிகழ்ச்சிக்கே போனோம். சரி! நீங்களே விடையைச் சொல்லிட்டீங்க! இனிமே இந்த போட்டில பங்கெடுத்த அனைவருக்குமே ஒரு பொற்கிழி மின்னஞ்சல் செய்துடுவோம்!

  @@ முத்துலெட்சுமி: ஆஹா, வார்த்தை தெரிஞ்ச ஒடனே கூகுளாண்டவர் கிட்ட வரம் கேட்டுடீங்களா? நல்ல சுட்டி! இற்றைகள் மாதிரி இன்னோரு புது வார்த்தை, நமக்கு! இனிமே பயன்படுத்தலாம்! மிக்க நன்றி.

  @@ சே. குமார்: மிக்க நன்றி.

  @@ ஹுசைனம்மா: மிக்க நன்றி சகோ. நீங்களும் அணியம்!

  @@ கவிதை காதலன்: மிக்க நன்றி. ஹிஹிஹி…

  @@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா. தயார் என்பதற்கு தமிழ்ச் சொல் “அணியம்”! பொற்கிழி எல்லோருக்குமே மின்னஞ்சலில் வந்துட்டு இருக்கு!

  இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 24. ஐயம் விளக்குமின் (சரியா?)


  "இரண்டு அணியம் பார்சல்?"

  எப்படி?

  இரண்டு தயார் பார்ஸலா?

  ஙே.................

  ReplyDelete
 25. எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டிருக்கிறேன்
  கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளவும்

  ReplyDelete
 26. தயார் என்பதற்கு ஆயத்தம் அல்லது ஆயத்த நிலை என்று சொல்லலாமோ?

  புஷ்பவனம் குப்புசாமியின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால், பாடுகிறபோது அவர் கொஞ்சம் அதிகமாக அலட்டுகிற மாதிரி தோன்றுகிறது.

  ReplyDelete
 27. எல்லோரும் அணியா? வெங்கட் நாகராஜ்
  கொடுக்கும் பொற்கிழியை பெற.

  எல்லோரும் வாருங்கள் அணியாய்.

  நல்ல பகிர்வு. நான் சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனுக்கு சமைத்து கொடுத்தாள் அல்லவா கண்ணகி அதில் சாப்பாடு தயார் சாப்பிட வாருங்கள் என்று கூப்பிட்டு இருப்பார்களே அதில் என்ன சொல்லிக் கூப்பிட்டு இருப்பார்கள் என்று தேடிக் கொண்டு இருந்தேன்.

  ReplyDelete
 28. @@ துளசி கோபால்: ஙேஙே.... மிக்க நன்றி இரண்டாவது வருகைக்கு!

  @@ ராஜி: அழைத்தமைக்கு நன்றி. நானும் உங்களுடன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

  @@ கிருபாநந்தினி: மிக்க நன்றி சகோ.

  @@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 29. யோசிச்சு யோசிச்சு கொஞ்ச நேரத்துல மண்டையே காஞ்சுடுச்சுங்க...

  இன்னும் நம்ம தமிழையே முழுசா தெரிஞ்சுக்கலயே நாம...

  ReplyDelete
 30. @@ ஸ்வர்ணரேக்கா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வரவு. மிக்க மகிழ்ச்சி. கருத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 31. மிக்க நன்றி வெங்கட்... புதையுண்டு போகும் தூய தமிழ்ச் சொல்லொன்றை மீட்டெடுத்தமைக்கு! உங்க நண்பர் ஈஸ்வரனின் நண்பரின் குசும்பு தாங்கலை. நினைக்கும் போதெல்லாம் பீறிடுகிறது சிரிப்பு. (புப்பவனம் குஷ்புசாமி) தஞ்சாவூர் மண்ணெடுத்து ... அவரது ஆகச் சிறந்த பாடலாயிற்றே ! உங்க புண்ணியத்தில் மறுபடியும் கேட்டு மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 32. @@ நிலாமகள்: வருகைக்கு மிக்க நன்றி! பல தமிழ் வார்த்தைகளை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது வருந்தத்தக்க விஷயம்தான். நண்பர் ஈஸ்வரன் [பத்மநாபன்] அப்படித்தான். தினமும் அப்படி ஏதாவது என்னையும் அலுவலகத்தில் மற்றவர்களையும் கலாய்த்துக் கொண்டிருப்பார்!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....