திங்கள், 4 மே, 2026

கதம்பம் - ஓட்டுரிமை - விருந்தினர் வருகை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ஓட்டுரிமை - 23.04.2026 : 






நான் முதன்முதலில் வாக்களித்தது என்றால் அது டெல்லியில் தான்! 18+ல் எனக்கு வாக்களிக்கும் உரிமை வந்த போது அப்பா எனக்காக வாக்காளர் அட்டை வாங்க விண்ணப்பம் ஒன்றை வாங்கியிருந்தார்! ஆனால் வாக்காளர் அட்டை வாங்குவதற்குள் எனக்கு 20 வயதில் திருமணமாகி விட்டது! அதனால் நான் வாக்களித்தது திருமணத்திற்கு பிறகு தான்! கிழக்கு டெல்லியில் நாங்கள் வசித்த பகுதியில் இருந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தான்!


அப்போது என்னவர் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டிருந்ததால் அவரும் டெல்லியின் ஏதோ ஒரு பகுதியில் polling officer ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார்! அப்போது மகளுக்கு மூன்று வயதிருக்கலாம்! அவளை கையில் பிடித்துக் கொண்டு சென்று வாக்களித்த நினைவுகள் மனதில் பசுமையாய்! 


அன்று மகளுக்கு நல்ல ஜூரம்! வழக்கமாக காண்பிக்கும் குழந்தைகள் மருத்துவர் Tilak Raj Dangwal அன்று வேறு பகுதியில் இருப்பதாகச் சொல்லவே, அருகில் இருந்த நண்பர் ஒருவர் தான் எங்களை U.P borderல் இருந்த டாக்டரிடம் தன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்! சங்கிலித் தொடராக எத்தனை நினைவுகள்!


இன்று அப்பாவையும் நினைக்காமல் இல்லை! அப்பாவும் அரசு ஊழியர் தானே! தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டால் அப்பா ஒருநாளும் அதற்காக சலித்துக் கொண்டதே இல்லை! முதல் நாளே அந்தப் பகுதிக்குச் சென்று தங்கி விடுவார்! அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து தனக்கான பணிகளை நிறைவு செய்து விட்டு நடு இரவில் தான் வீடு திரும்புவார்! உரிமை,கடமை என்பதைத் தாண்டி தேர்தல் பணியை செய்வதற்கான ஊதியமும் குடும்பத்திற்கு பயன்படுமே என்று தான் நினைப்பார்!


இன்றைய தினத்தில் குடும்ப சகிதமாக வாக்குச் சாவடிக்குச் சென்று அரைமணிநேரம் பொறுமை காத்து வரிசையில் நின்று வாக்களித்து விட்டு வீடு திரும்பினோம்! எங்கள் வாக்கு! எங்கள் உரிமை! நல்லதே நடக்கணும்! நாடும் வீடும் நல்லதோர் தலைவனின் தலைமையில், அவர்  காண்பிக்கும் வழியில் நேர்மறை எண்ணங்களோடு மேம்பட்ட வாழ்க்கைப் பாதையில் பயணப்படனும்!


வயதானோர், அவசர வேலைகளை விட்டுவிட்டு வாக்களிக்க வந்தோர், வீல்சேரில் புன்னகையை முகத்தில் ஏந்தியவாறு சென்ற மூதாட்டி, கைக்குழந்தையை எங்கேயும் விட முடியாத சூழல் என்று கைகளில் ஏந்தி வந்த பெண்மணி என்று வாக்களிக்க வந்த ஒவ்வொருவர் முகத்திலும் எதிர்பார்ப்பும், ஆவலும் உற்சாகமும் தென்பட, எல்லோரும் நினைப்பது ஒன்றே ஒன்று தான்! நல்லதே நடக்கணும்!


********



விருந்தினர் வருகை - 25-04-2026 : 



இந்த ஊர்ல ஒரு கல்யாணம்! அதான் அப்படியே உங்கள எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்!


நாளைக்கு காலைல ரயில்..! அதான் ராத்திரி பொழுது இங்க கட்டய சாய்ச்சுட்டு காலம்பற ரயிலுக்கு கிளம்பலாம்னு நினைச்சேன்!


அத்தை அத்திம்பேர், சித்தப்பா சித்தி, மாமா மாமி, சின்ன தாத்தா, சித்தி பாட்டி, மாமா தாத்தா, மாமி பாட்டி, மாமா பசங்க, அத்தை பொண்ணு என்று உறவுகள்..!


நானும் பாஸுவும் திருக்கோவிலூர் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோம்! ஏண்டா பாஸு! என்ன பத்தியெல்லாம் உன் பசங்க கிட்ட சொல்லியிருக்கியா?? 


ம்ம்ம்! அப்பா உங்கள பத்தியெல்லாம் நிறைய சொல்லியிருக்கார் மாமா!


பாஸூ! பையன இங்க கோயமுத்தூர்ல தான் சேர்க்கப் போறேன்! கார்டியனா உன்ன தான் போடப் போறேன்! பையன கொஞ்சம் பார்த்துக்கோடா!


நான் பார்த்துக்கறேண்டா! லீவு நாள்ள இங்க வீட்டுக்கு வரச் சொல்லு! நீ ஒண்ணும் கவலைப்படாத! பையன் நல்லா வந்துடுவான்!


இப்படி அப்பாவின் அம்மாவின்  ஸ்னேகிதர்கள்! ஒரே ஊரில் ஒன்றாக அக்கம்பக்கம் குடியிருந்தவர்கள்! ஒன்றாக வேலை பார்த்தவர்கள்! 


கடைசி பரீட்சையன்று மாலை பஸ்ஸை பிடித்து பிறந்த ஊரான சிவகங்கைக்கு சென்றது! கோடை விடுமுறை நாட்களை மாமா வீட்டிலும், அத்தை வீட்டிலுமாக இனிமையாக செலவழித்தது! தினம் ஒரு சினிமா பார்த்து ரோஸ் மில்க்கும், ஃப்ரூட் மிக்ஸும், நுங்கும் ருசித்தது! அத்தை வீட்டு கிணற்றடியில் நிலாச்சோறு சாப்பிட்டு அத்திம்பேர் சொன்ன ராஜா ராணிக் கதைகளை ஆவலுடன் கேட்ட நினைவுகள்!


கிணற்றில் தண்ணீர் இறைத்து பழகியது! துவைக்கும் கல்லில் அடித்து துவைத்தது! அத்தை வீட்டு ரேழியில் தூண்களைச் சுற்றிச் சுற்றி சைக்கிள் ஓட்டிப் பழகியது! வயிற்றை சுத்தம் செய்வதற்காக தரப்படும் வேப்பிலை உருண்டைக்கு பயந்து ஓடி ஒளிந்தது! அத்தை மகன் கொல்லைப்புறத்தில் என்னை வைத்து பூட்டி சாவியை ஓட்டின் மீது வீசி அதனால் பயந்து வந்த ஜுரம்!


இப்படி ஊரும், உறவுகளும், நட்புகளும் அவ்வப்போது ஒன்று கூடுவதும், நம் இல்லம் தேடி வருகை தருவதும், நாம் அங்கே விடுமுறை நாட்களை செலவிட செல்வதும் எனச் சென்ற இனிமையான வாழ்க்கை முறையில் மாற்றங்களும், வளர்ச்சியும் பல உண்டாகி விட்டது! விருந்தினர் வருகை என்பது இப்போது குறைந்தே விட்டது என்று சொல்லலாம்! 


நெடுநாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் இரண்டு நாட்கள் இனிமையாகச் சென்றது! டெல்லியில் எங்கள் பகுதியில் வசித்த நண்பர் கூட்டம் எல்லாம் ஆங்காங்கே பிரிந்து திசைக்கொரு புறமாக சென்று விட்டனர்! 


‘இங்க சொந்தத்துல ஒரு சதாபிஷேகம்(80ஆம் கல்யாணம்)! இந்த சாக்கிலாவது வெங்கட், புவனாவோடு இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்னு வந்தோம்! என்றனர் நண்பர் குமாரும், அன்புத்தோழி ஷோபனாவும்!


டெல்லி வாழ்க்கையில் அவ்வப்போது நாங்கள் எல்லாம் ஒன்று கூடி பேசுவதும், அரட்டையடித்து, கலாட்டா செய்வதும், ஆளுக்கொரு உணவாக தயார் செய்து சாப்பிடுவதும், வேலைகளை பங்கிட்டு செய்வதுமாக இருந்த நாட்கள் எல்லாம் பசுமையாக நினைவுகளில்! 30 வருடத்து நட்பு! அங்கே நட்புகள் தான் உறவுகள் என்றிருந்த நாட்கள்!


இனிமையாகச் சென்ற இரண்டு நாட்களும் கதைகள் பல பேசி, நினைவுகளை அசை போட்டு, வேலைகளை பகிர்ந்து, உண்டு, கோவில்களுக்கு அழைத்துச் சென்றது என்று வெகு இனிமையாக கடந்தது! மனதுக்கு இதமாகவும் ஒரு எனர்ஜி டானிக்காகவும் இருந்தது இந்த சந்திப்பு என்று சொல்வேன்!


இதோ இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்ம அமுதா கிருஷ்ணா அக்காவின் அலைபேசி அழைப்பு! நேரம் கிடைச்சா இங்க வா ஆதி! என்றார்! நீங்களும் எங்க ஊர் சித்திரைத் தேருக்கு வாங்கக்கா! வெயில் தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு!? என்றேன்!


என்ன! நீங்களும் விருந்தினர் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீங்களா??


********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

4 மே 2026


2 கருத்துகள்:

  1. இருபது வயதிலேயே திருமணமா..  பலே...  உங்கள் முதல் வாக்கும் தமிழ்நாட்டுக்கு வெளியில்தானா?
    அதுசரி..  யாருக்கு வாக்களித்தீர்கள் என்று சொல்வீர்களா என்று பார்த்தேன்!  :))

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் முன்பு குடியிருந்த வீடு நகரத்தின் மத்தியில் இருந்ததால் விருந்தினர் வருகை நிறைய இருக்கும்.  இப்போதெல்லாம் ரொம்ப ரேர்.  உங்கள் வீட்டில் விருந்தினர், நட்புகள் கூட்டம் இனிமை.  என்ஜாய்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....