அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. சென்ற பகுதியில் மலைப்பகுதியில் பயணிக்கும் போது கிடைக்கும் அனுபவங்களையும், அங்கே பணிபுரியும் உழைப்பாளிகளின் தொடர்ந்த கடமையும் அவர்களது கடுமையான பணியும் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு மதிய உணவாக என்ன சாப்பிட்டோம் என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். இது போன்ற மலைப்பாதைகளில் பயணிக்கும்போது வழியில் பெரிய கிராமங்களோ, ஊர்களோ இருப்பது கடினம். அப்படியே இருந்தாலும் அவை மிகச் சிறிய ஊர்களாக இருப்பதோடு அந்த ஊரின் மக்கள் தொகையும் கூட மிகவும் குறைவாகவே இருக்கும். வழியில் பார்த்த ஒரு ஊரின் மக்கள் தொகை 30 என்பதை சாலையோர பதாகையிலேயே எழுதி வைத்திருந்ததை எங்களால் பயணித்தபடியே பார்க்க முடிந்தது - அதிலிருந்தே எவ்வளவு சிறிய ஊர் அது என்பதை உங்களால் உணர முடியும். நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தோம்.
மாலை நான்கு மணி ஆனபோது ஒரு பெரிய ஊர் - நாகோ என்கிற ஊர் வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருந்தது. சற்றே பெரிய ஊர் என்பதோடு அங்கே சில கடைகளும், உணவகங்களும் இருந்தன. பார்த்த முதல் கடையின் அருகே, மாலை நேரத் தேநீரை அருந்துவதோடு, ஓட்டுநருக்கும் எங்களுக்கும், வாகனத்திற்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு வாகனத்தினை நிறுத்தினோம். அந்தக் கடை சற்றே பெரிய கடை, தேநீர், உணவு மற்றும் தேவையான பொருட்களையும் அங்கே வைத்திருந்தார்கள். கடையை நடத்தியது சற்றே மூத்த பெண்மணி. அவரிடம் நாம் கொஞ்சம் வாய் திறந்தால் போதுமாக இருந்தது. பிரவாகமாக பேசிக் கொண்டே இருந்தார். நாங்கள் தேநீரும் பிஸ்கெட்டுகளும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்க நிறைய பேசினார். நடுநடுவே கடைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் கவனித்து அவர்களுக்கு வேண்டியவற்றையும் கொடுப்பதற்குத் தவறவில்லை. மலைப்பிரதேசம் என்பதால் இங்கே நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
என்ன மாதிரி பிரச்சனைகள் என்று கேட்க, குளிர்காலத்தில் அதீத பனிப்பொழிவு, வாழ்வாதாரமே கோடை சமயத்தில் சுற்றுலா பயணிகள் வரும்போது மட்டுமே இருப்பது, குளிர் நாட்களில் தேவையானவற்றை கோடை சமயத்தில் சேமித்து வைப்பது என நிறைய பிரச்சனைகள் சொன்னதோடு இன்னுமொரு விஷயமும் சொன்னார். அது - எப்போது மலைச்சரிவு ஏற்படும் என்றே தெரியாது - ஒரு வித பயத்துடனேயே இங்கே வாழ்க்கை நடக்கிறது. மலைப்பகுதி என்பதால் கட்டுமானம் - வீடுகள், கடைகள் கட்டுவது மிகவும் சிரமம். பல இடங்களிலிருந்து பொருட்கள் வண்டிகளில் வருவதற்கு அதிக அளவில் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பிரதான சாலைகள் வரை பொருட்கள் வந்து விட, அவற்றை மலைச்சிகரங்கள் மீது எடுத்து வருவதற்கு ஆட்களை அமர்த்த வேண்டும் - இல்லை எனில் குடும்ப உறுப்பினர்களே தோள்களிலும் தலையிலும் சுமந்து அப்பொருட்களை கட்டிடங்கள் கட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அதீத உழைப்பு தேவையாக இருக்கும் - வாழ்க்கை சுலபமல்ல என்று நிறைய தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதோ இன்றைக்குக் கூட இங்கிருந்து நான்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பெரிய மலைச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சாலையை சரி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் மலைச்சரிவு ஏற்பட, தகவல் தெரிவித்து, சாலையில் விழுந்த மண்ணையும் கற்களையும் அகற்றுவதற்கான வாகனங்கள் வந்து சேர முடியாமல் மற்ற வாகனங்கள் இருந்தால் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் திருப்பி விட்டு, தொடர்ந்து பணி செய்து தான் அந்த தடங்கலைச் சரி செய்ய வேண்டியிருக்கும். சில தடங்கல்களை சில மணி நேரங்களில் அகற்றி சாலை போக்குவரத்தினை சரி செய்து முடிக்க முடியும் என்றால், சில சமயங்களில் ஓரிரு நாட்கள் கூட ஆகும். நிலையில்லாத வாழ்க்கை என்பதை இங்கே நித்தம் நித்தம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் போக முடியாமல் இருந்தது. இதோ இப்போது தான் அங்கேயிருந்து ஒரு வாகனம் வந்தது என்று தெரிந்தது - இதோ அமர்ந்திருக்கிறார்களே அவர்கள் மலைச்சரிவு ஏற்பட்ட இடத்தினைக் கடந்து இங்கே வந்திருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு குடும்பத்தினரைக் காண்பித்தார்.
அந்த நபரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் கர்நாடகத்திலிருந்து Spiti Valley பயணம் வந்திருக்கிறார் என்று தெரிந்தது - மிகவும் பதட்டத்தில் இருந்திருக்கிறார் என்பதை அவருடன் பேசியபோது தெரிந்து கொண்டோம். சரியாக அவர்கள் திரும்பி வரும்போது மலைச்சரிவு ஏற்பட, அதைப் பார்த்ததில் கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருந்தார். எங்களிடமும் அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, நிறைய மலைச்சரிவு ஏற்படுகிறது. விரைவில் அந்தப் பகுதியைத் தாண்டி நாகோ வரை சென்று விடுங்கள். இரவு/இருட்டான பிறகு இந்த மலைப்பாதையில் பயணிப்பது பாதுகாப்பானது இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். எங்களது திட்டம் அன்றைய மாலை/இரவுக்குள் தபோ என்கிற இடத்திற்குச் செல்வதாக இருந்தது என்று சொல்ல, இல்லை இல்லை அதிக நேரம் ஆகும் - இருட்டிவிடும் - பாதையே தெரியவில்லை - அதனால் நாகோவில் தங்கிவிடுங்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். எங்களை விட அவர் அதிக பதட்டத்தில் இருப்பதாகத் தெரிந்தது. எங்கள் மீது அவருக்கு இருந்த அக்கறைக்கு நன்றி சொன்னோம்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த கடை பெண்மணி - என்னிடமே கூட நீங்கள் தங்குவதற்கான அறைகள் இருக்கின்றன. Aunty உடன் இன்றைக்கு தங்கி நாளைக்குச் செல்லுங்கள் என்று சொல்ல, அறைக்கான வாடகையைச் சொல்லுங்கள், பார்க்கிறோம் என்று சொல்ல அதற்கு அவர் நீங்கள் இங்கே தங்குவேன் என்று சொன்னால் தான் அறையைக் காண்பிப்பேன், அறைக்கான வாடகையையும் சொல்வேன் என்று சொன்னார். சரி பரவாயில்லை, நாகோ வரை சென்று அங்கே இருக்கும் சில இடங்களைப் பார்த்துவிட்டு இங்கேயே திரும்பி வருகிறோம் என்று சொல்லி அவருக்கு நன்றி சொல்லி, தேநீர், பிஸ்கெட்டுகளுக்கான பணத்தைக் கொடுத்தோம். நாங்கள் சாப்பிட்டபோதே உரிமையுடன் எங்கள் பிஸ்கெட்டுகளிலிருந்து ஒன்றிரண்டை எடுத்து அவரும் சாப்பிட்டுக் கொண்டார்! ஹாஹா… அவ்வளவு உரிமையுடன் எடுத்துக் கொண்டதும் நன்றாகவே இருந்தது. நிறைய பேசியதால், குறைவாகப் பேசும் எங்கள் ஓட்டுநர் ஷிம்பு அவருக்கு “Guppy Aunty” என்று பெயர் வைத்து விட்டார்.
ஹிந்தியில் Gup Shap என்று நீங்கள் கேட்டிருக்கலாம் - அதாவது பேசிக் கொண்டிருப்பது. ஒருவர் அதிகம் பேசினால் அவரை Guppy என்று சொல்வதுண்டு. அதனால் அந்தப் பெண்ணுக்கு “Guppy Aunty” என்றே பெயர் வைத்து விட்டார். எங்களுக்கு பை பை சொல்லி வழி அனுப்பியதோடு, ஓட்டுநர் ஷிம்புவிடம் கொஞ்சம் அதிக அன்புடன் வழி அனுப்பி வைத்தார் - கூடவே வேறு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்தால் இங்கே நிச்சயம் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று அன்புக் கட்டளையும் போட்டார். அவருக்கு நன்றி சொல்லி மேலும் பயணித்தோம். சில நிமிடங்களில் மலைச்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகே வந்திருந்தோம். அங்கே அப்போதும் பாதையை சீர்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு BRO சிப்பாய் பாதையோர பாறை மீது நின்று கொண்டு மலையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு பாதையையும் பார்த்து வாகனங்களை நிறுத்துவதும், மேலே பயணிக்க சைகைகள் காண்பித்தும் என்று தொடர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார். எங்கள் வாகனம் மெதுவாக அந்த இடத்தினைக் கடக்க, நாங்களும் மலையின் மீது ஒரு கண் வைத்தபடியே பயணித்தோம். மேலும் பயணித்து நாங்கள் பார்த்த இடம் எது, அங்கே பார்த்தவை என்ன, திரும்பி அதே “Guppy Aunty” யின் தங்குமிடம் வந்தோமா இல்லை வேறு எங்கேயும் தங்கினோமோ போன்ற தகவல்களை வரும் பகுதியில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
1 ஜூலை 2026




முப்பது பேர் மட்டும் கொண்ட ஊரா? ஆ... அவர்கள் வோட்டு எங்கே போட்டிருப்பார்கள்? போட்டிருப்பார்களா? அவர்களுக்கான ரேஷன் கடை, அல்லது கடைகள்?
பதிலளிநீக்குஅந்தப் பெண்மணி சொல்லும் சிரமங்களை உணர முடிகிறது. அந்த அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இருக்க வேண்டுமே... வேலைக்கு ஆட்களோ? அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர்தான் உதவிக்கொள்ள வேண்டும்!
பதிலளிநீக்குமினி காணொளி அசத்துகிறது. திரும்புவரை எடுத்திருந்திருக்கலாம்!
பதிலளிநீக்குமலைச்சரிவு, சரியில்லாத பாதை, இரவுப்பயணம் எல்லாமே இந்தப் பயணத்தின் சிரமங்களை சொல்கிறது. ஷிம்பு அப்புறம் திருந்தி விட்டாரா? ஒழுங்காக வந்தாரா? நம்மூர் சிம்பு பற்றி அவரிடம் சொன்னீர்களா?!!
பதிலளிநீக்கு