எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, June 28, 2011

காதறுந்த ஊசியும் எவர்சில்வர் லோட்டாவும்…

"காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே.  இது நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்ட ஒரு வாக்கு.  திருவெண்காடர் என்ற இயற்பெயர் கொண்ட பட்டினத்தாரின் மகன்மருதப்பிரான்தனது தந்தைக்கு விட்டுச் சென்ற ஒரு பெட்டியில் ஒரு காதற்ற ஊசியும், ஒரு ஓலை நறுக்கும் இருந்ததாம்.  ஓலையில் எழுதி இருந்த வாசகமே மேலே சொல்லி இருப்பது.  அது கண்ட பிறகே திருவெண்காடர் துறவறம் பூண்டு பட்டினத்தார் என்ற பெயரில் நிறைய பாடல்களை நமக்காக விட்டுச் சென்றார் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்

தன்னுடைய தாயாருக்குத் தகனக் கிரியை செய்கையில் பாடிய பத்து பாடல்களில் பொதிந்து கிடக்கும் உண்மையை  யாரால் மறுக்க இயலும்.

முதல் பாடல்

     ”ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
     பையலென்ற போதே பரிந்தெடுத்துச்செய்ய இரு
     கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
     எப்பிறப்பிற் காண்பேன் இனி.”

பொருள்:  பத்து மாதங்கள் ஐயோ என்னுமாறு சுமந்து கால் முதல் தலையளவுள்ள உறுப்புகள் அனைத்தும் வருத்தமடைந்து பிரசிவித்து, ஆண் குழந்தையென அருகிலுள்ளோர் கூறக் கேட்டவுடனே விரும்பிக் கையில் எடுத்துச் செவ்விய இரண்டு கையிடத்தில் தாங்கி பொன்னணி பூண்ட மார்பகங்களிலுள்ள பாலை உண்ணுமாறு அளித்த அன்னையை இனி எந்தப் பிறப்பிற் காணப் போகின்றேன்?

பள்ளிப் பருவத்தில் இது போன்ற பாடல்களைப் படித்திருந்தாலும் நம்மில் எத்தனை பேர் இதனை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம்.  “காதறுந்த ஊசி…” படித்தும் மாய்ந்து மாய்ந்து தேவைக்கு அதிகமாகவே பொருள் தேடுகிறோம்.  தேடிய பொருளைக் காக்கவும் பலவித செயல்களைச் செய்கிறோம்

சில வருடங்களுக்கு  முன்பு நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்றிருந்தேன்.  பிரவாகமாக தங்குதடையின்றி அங்கே ஓடிக்கொண்டு இருந்த  கங்கையில் நாங்கள்  நீராடிக் கொண்டிருந்த  போது அங்கே ஒரு பெரியவரும் கையிலிருந்த லோட்டாவில் தண்ணீர் எடுத்து நீராடிக் கொண்டிருந்தார்.  கங்கையின் பிரவாகத்தில் கையிலிருந்த லோட்டா அடித்துக் கொண்டுச் செல்ல, பெரியவர் செய்வதறியாது திகைத்தார்

பக்கத்திலேயே நீராடிக்கொண்டு இருந்த அவரது மகன் இதனைப் பார்த்தவுடன், “இவ்வளவு வயசாச்சு, ஒரு லோட்டாவைக்  கூட பத்திரமா வச்சுக்க முடியாதா?” என்பது போன்ற சொற்களால் சுட, அந்தப் பெரியவர் வாயடைத்து நின்று கொண்டிருந்தார்அவர் இப்படித் திட்டத்திட்ட நாங்கள் கூட ஏதோ நவரத்தினங்கள் பதித்த தங்க லோட்டாவைத்தான் விட்டுவிட்டாரோ என நினைத்து, அந்த பெரியவரின் மகனிடம் கேட்டே விட்டோம்

தங்கமோ வெள்ளியோ அல்ல, சாதாரண எவர்சில்வர் லோட்டாஎன்று கூறிய அந்த மகன், “எதுவா இருந்தா என்ன?” என்று எங்களையும் சுட்டெரித்து, ”ஒரு பொறுப்பு வேண்டாம்…” என்று திட்டுவதைத் தொடர்ந்தார்.

மெத்தப் படித்து, பெரிய பொறுப்பில் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாராம்  அவர். எத்தனை படித்து, எவ்வளவு பணம் சம்பாதித்து என்ன, “எதைக் கொண்டு வந்தோம்கொண்டு செல்ல…..” என்பது புரியவில்லையே அவருக்கு.

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கிறேன்

வெங்கட்.
  


குறிப்பு:    பாடலின் பொருள் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு எம். நாராயண வேலுப்பிள்ளை அவர்கள் எழுதியபட்டினத்தார் வாழ்வும் வாக்கும்என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.

டிஸ்கி: பல பதிவுகள் எழுதிய ஜாம்பவான்கள்  இருக்கும் இப் பதிவுலகில் இந்தச் சிறுவனும் எழுத ஆரம்பித்து, இத்துடன் 150 பதிவுகள் எழுதிவிட்டேன் என்பதை  நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாகத் தான் இருக்கிறது.


50 comments:

 1. //மெத்தப் படித்து, பெரிய பொறுப்பில் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாராம் அவர். எத்தனை படித்து, எவ்வளவு பணம் சம்பாதித்து என்ன, “எதைக் கொண்டு வந்தோம்… கொண்டு செல்ல…..” என்பது புரியவில்லையே அவருக்கு//

  வேண்டியவை மட்டுமே நம்மிடம் இருக்க வேண்டும். மற்றவை தேவையில்லை..

  ஆனால்... 'வேண்டும்' என்பதை எப்படி வரையறுப்பது ? அதான் பிராப்ளம்..

  ReplyDelete
 2. என்ன ஒற்றுமை வெங்கட்!நான் மாத்ரு பஞ்சகம் பற்றி எழுதி முடித்து விட்டுப் பார்க்கிறேன்;நீங்கள் பட்டினத்தார் அம்மா பற்றிப் பாடிய பாடலை எழுதியிருக்கிறீர்கள்!
  நல்ல பதிவு!

  ReplyDelete
 3. 150 பதிவுகளை எட்டிவிட்டீர்களா? இதோ, பிடியுங்கள் என் பாராட்டுக்களை!

  ReplyDelete
 4. 150 க்கு வாழ்த்துக்கள்... எவர்சில்வர் லோட்டாவும் வாராது காண் கடைவழிக்கே!!! லோட்டாவிர்க்கு அன்றைக்கு மரணம்... பேட்டாவிற்கு என்றைக்கோ... பிதாவாகிய நமக்கு எப்பவோ என்று நினைத்திருப்பார் அந்தப் பெரியவர்... ;-)))

  ReplyDelete
 5. வாழ்த்துகள் நூற்றைம்பதுக்கு!

  ReplyDelete
 6. 150 க்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. //இத்துடன் 150 பதிவுகள் எழுதிவிட்டேன் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாகத் தான் இருக்கிறது.//

  உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்ச சந்தோஷமாக இருக்கலாம்; எங்களுக்கு நிறைய சந்தோஷம் வெங்கட்ஜீ!

  ReplyDelete
 8. //"காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே//

  வித் யுவர் பர்மிஷன், ஒரு சின்ன திருத்தம்:

  "வாதுற்ற அண்ணாமலையர் மலர்ப்பதத்தைப்
  போதுற்றபோது புகலுநெஞ்சே இப்பூதலத்தில்
  தீதுற்ற செல்வமென் தேடிப்புதைத்த திரவியமென்
  காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!"

  "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே," என்று முடிகிற இன்னொரு பாடலும் உண்டு.

  ReplyDelete
 9. பாடலும் அதற்கான விளக்கமும்
  தொடர்ந்து கூறியுள்ள கதையும் அருமை
  150 பதிவு என்பதும்
  இன்னமும் வீரியம் குறையாது
  நல்ல பதிவுகளாகத் தருவதும்
  உண்மையில் பெரிய சாதனைதான்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  //அவர் இப்படித் திட்டத்திட்ட நாங்கள் கூட ஏதோ நவரத்தினங்கள் பதித்த தங்க லோட்டாவைத்தான் விட்டுவிட்டாரோ என நினைத்து, அந்த பெரியவரின் மகனிடம் கேட்டே விட்டோம்…//

  ஒரு சிலர் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

  அந்த எவர்சில்வர் லோட்டாவுக்குப்பதில் தன்னையே கங்கை அடித்துச்சென்றிருக்கலாம் என அந்தப்பெரியவரின் மனம் வருந்தியிருக்கும், பாவம்.

  Voted 7 to 8 in Indli

  ReplyDelete
 11. எத்துணை படித்தாலும், அனுபவப்பட்டாலும் சில மாக்கள் நாகரிகமற்று இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். மகனின் ஏச்சைக் கேட்டு அந்த பெரியவரின் மனசு என்ன பாடுபட்டிருக்கும்.....ம்.ம்ம்..
  ஓக்கே...வெங்கட்ஜி 150 பதிவுகளை நிறைவு செய்தமைக்கு வண்டிவண்டியாய் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 12. 150 க்கு வாழ்த்துக்கள்.. உண்மையில் பெரிய விஷயம்...

  ’’காதற்ற ஊசியும்’’ ரெண்டு வாரம் முன் இட்லி வடையில் ஒரு பதிவுக்கு கமெண்ட் போட்டேன்...முழு பாட்டு அளித்த சேட்டையாருக்கு நன்றி...

  ReplyDelete
 13. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. 150க்கு வாழ்த்துகள். அதுவும் தத்துவ முத்தாய் பதிவு.

  ReplyDelete
 15. ஒன்னரைச் சதம்!!!! இனிய பாராட்டுகள். இது பல்கிப் பெருகட்டும் ஆயிரமாயிரமாக!

  அங்கிருக்கும் சங்கிலியில் லோட்டாவைக் கட்டிப்போட்டுருக்கலாம்!

  ReplyDelete
 16. ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு வெங்கட்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. 150 வது பதிவு அன்னை தமிழில் அன்னையைப் பற்றி
  அமர்க்களம் அன்பரே................
  விரைவில் ஆயிரமாவது பதிவிட வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 18. 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.

  சின்னவர் லோட்டாவை விட்டு இருந்தால் பெரியவர் போனல் போகுது வருத்தபடாதே என்று சொல்லி இருப்பார்.

  ReplyDelete
 19. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //ஆனால்... 'வேண்டும்' என்பதை எப்படி வரையறுப்பது ? அதான் பிராப்ளம்.// உண்மைதான். ஆனாலும்..... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே…

  # சென்னை பித்தன்: தற்செயலாக இருந்தாலும் நல்ல விஷயம் தானே… தங்களது வருகைக்கும் நற்கருத்திற்கும் நன்றி.

  @ கே.பி.ஜனா: தங்களது பாராட்டுகளுக்கு நன்றி சார்.

  # RVS: லோட்டா – பேட்டா, மொழி உங்களிடம் விளையாடுகிறது மன்னை மைனரே… தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @ ரேகா ராகவன்: வாழ்த்தியமைக்கு நன்றி. இந்த அளவுக்கு நான் எட்டியமைக்கு அடிகோலே நீங்கள் தானே…

  # அமைதிச்சாரல்: வாழ்த்துகளுக்கு நன்றி சகோ…

  @ சேட்டைக்காரன்: சேட்டைக்கார நண்பா, உங்கள் நிறைய மகிழ்ச்சிக்கு நன்றி. காதறுந்த ஊசி மட்டும் இன்றி காதற்ற ஊசி பாடலும் உண்டு என எனக்குச் சொன்னதற்கு நன்றி. நீங்கள் சொன்ன பாடலை எழுதியது யார்? அதையும் சொன்னால் உதவியாக இருக்கும்…

  # ரமணி: தங்களது இனிய வாழ்த்திற்கு நன்றி… உங்கள் கருத்துகள் என்னை இன்னும் எழுத ஊக்குவிக்கும்…

  @ வை. கோபாலகிருஷ்ணன்: வாழ்த்திற்கு நன்றி சார்.

  //அந்த எவர்சில்வர் லோட்டாவுக்குப்பதில் தன்னையே கங்கை அடித்துச்சென்றிருக்கலாம் என அந்தப்பெரியவரின் மனம் வருந்தியிருக்கும், பாவம்.//

  உண்மையான வார்த்தை. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  # என்றென்றும் உங்கள் எல்லென்: அந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த பெரியவர் நீண்ட நேரம் பேசவேயில்லை.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @ பத்மநாபன்: தங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே…

  # ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  @ ரிஷபன்: தங்களது வாழ்த்திற்கு நன்றி சார்.

  # துளசி கோபால்: வாழ்த்தியதற்கு நன்றி துளசி டீச்சர்…. லோட்டாவை கட்டிப் போட்டு இருக்கலாம். நாங்கள் குளித்த இடத்தில் சங்கிலித் தடுப்பு இல்லை. இருந்தால் ஒரு வேளை அந்த மகன் அப்பாவையே கட்டிப் போட்டு இருந்திருப்பார்…. :((((

  @ ராம்வி: தங்களது வாழ்த்துகளுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

  # A.R. ராஜகோபால்: தங்களது முத்தான கருத்திற்கு நன்றி நண்பரே…. ஆயிரமாவது பதிவு? பார்ப்போம்…..

  @ கோமதி அரசு: வாழ்த்தியமைக்கு நன்றிம்மா.

  //சின்னவர் லோட்டாவை விட்டு இருந்தால் பெரியவர் போனல் போகுது வருத்தபடாதே என்று சொல்லி இருப்பார்.//

  சத்தியமான வார்த்தைகள்…..

  ReplyDelete
 20. 150 பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. அருமையான கருத்துள்ள 150ஆவது பதிவு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. @ லக்ஷ்மி: வாழ்த்தியமைக்கு நன்றிம்மா....

  # அமுதா கிருஷ்ணா: வாழ்த்திய உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 23. வெங்கட்ஜி!

  எனக்குத் தெரிந்தவரையில் "காதறுந்த ஊசி" என ஈற்றடியில் வருகிற பாடல் எதுவும் இல்லை. "காதற்ற ஊசி " என்று முடியும் இரண்டு பாடல்களை பட்டினத்தார் பாடியுள்ளார். நான் குறிப்பிட்ட பாடலிலும் முதல் வரி "வாதுற்ற திண்புயர் அண்ணாமலையார் மலர்ப்பதத்தை....." என்று துவங்கும். நினைவில் இருந்து எழுதியதால் தவறு. மற்றபடி "காதறுந்த ஊசி' என்று முடியும் பாட்டு இருப்பதாய் தெரியவில்லை. நன்றி...

  ReplyDelete
 24. @ சேட்டைக்காரன்: தகவலுக்கு மிக்க நன்றி சேட்டை...

  ReplyDelete
 25. அருமை அருமை மக்கா...!!! வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 26. @ Mano நாஞ்சில் மனோ: நன்றி நண்பரே.... உங்கள் வலைப்பூவில் எழுதி வரும் பதிவர் சந்திப்புகள் மற்றும் குற்றாலப் பயணம் பற்றிய இடுகைகள் நன்றாக இருந்தது நண்பரே....

  ReplyDelete
 27. நாஞ்சில் மனோ!.. நல்ல படைப்பு....

  மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. 150-க்கு வாழ்த்துக்கள்.

  (லோட்டாவிற்க்கு கொஞ்சம் லேட்டா கமெண்ட்)

  ஒரு லோட்டாவிற்க்கே வார்த்தைகளை தோட்டாவாக்கிய பேட்டா ஒரு காட்டானாகத்தான் இருக்க வேண்டும்.

  (இந்த லோட்டா என்ற வார்த்தைப் பிரயோகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது தாய்வழி பாட்டியார். அவர் கணவர் பெயர் “சுப்பு” என்பதால் “கப்பு” (cup)என்று கூட சொல்ல மாட்டாராம், லோட்டா என்றுதான் சொல்வார். உப்பை ‘கரைப்பான்’ என்றுதான் சொல்வார். கப்பு, உப்பு, தப்பு, மப்பு எல்லாவற்றுக்கும் தனி அகராதியே வைத்திருந்தார்.)

  அது சரி லோட்டா என்பது தமிழா? இல்லை என்றால் அதன் தமிழ் பிரயோகம் என்ன? யோசித்து யோசித்து இருந்ததும் காலியாப் போச்சு

  ReplyDelete
 29. ரொம்ப நாள் கழித்துக் கேட்கிறேன்.. லோட்டா எனும் வார்த்தையை.. நல்ல பதிவு
  150க்கு வாழ்த்துக்கள். எனது நூறாம் பதிவு இன்று...

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள். தொடரட்டும் வெற்றிகள்.

  ReplyDelete
 31. @ JMD Tamil: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

  @ ஈஸ்வரன்: என்ன ஒரு கருத்து... அண்ணாச்சி இங்க தான் நீங்க நிக்கறீங்க... [கையில லோட்டாவோட...] உங்கள் தாய்வழி பாட்டியார் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்... ம்....

  லோட்டா... திருவரங்கம் பகுதியில் சிலர் சொம்பை ‘மொண்டாலி’ என்று கூட சொல்கிறார்கள்....

  ReplyDelete
 32. @ மோகன்ஜி: சில வார்த்தைகள் இப்படித்தான்... நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கும்போது ஒரு வித ஆனந்தம் தானே... இல்லையா ஜி! தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  # மாதேவி: தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 33. ஆங்! ஞாபகம் வந்திருச்சு. ஆகையால் ஓடி வந்தேன்!

  லோட்டா என்றால் குவளை. (கொஞ்சம் பெரிய குவளை). லோட்டாவும் தமிழ்தானோ?

  ReplyDelete
 34. பட்டினத்தார் படத்தில் TMS அவர்களே, பாடி நடித்திருப்பார்.
  மறக்க முடியாத படம் அது. பார்த்திருக்கிறீர்களா ?
  தத்துவக் கடலில் ஒரு துளி இந்த வரிகள்.

  ReplyDelete
 35. 150க்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 36. மேலும் எழுத வாழ்த்துக்கள்.

  லோட்டா நெல்லை/பாலக்காடு பகுதியிலிருந்து வந்த வழக்கு என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 37. லோட்டாவைப் பிடித்துக் கொண்டு காதறுந்த ஊசியைத் தொலைத்தேன் பாருங்கள்! அருமையான பதிவு. மறந்து போயிருந்த ஒன்றை நினைவுபடுத்தியது.

  ReplyDelete
 38. கொஞ்சம் லேட்டா வர்ரேன்..லோட்டாங்கறது போர்ச்சுகீசிய பாஷைன்னு என் ப்ளாக்கில ஒருத்தர் ரொம்ப நாள் முன்னால சொல்லிட்டுப் போனார்..
  150க்கு மனமுவந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 39. 150 க்கு இனிய வாழ்த்துக்கள்.

  தன்னுடைய தாயாருக்குத் தகனக் கிரியை செய்கையில் பாடிய பத்து பாடல்களில் பொதிந்து கிடக்கும் உண்மையை யாரால் மறுக்க இயலும்.//

  தத்துவம் வாழ்வியல் உண்மைகள் அனைத்தையும் நிதர்சனாய் கதறக் கதறச் சொல்லியிருப்பார்.

  ReplyDelete
 40. பாடலும் கதையும் அருமை!!
  150 பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 41. @ ஈஸ்வரன்: லோட்டாவிற்கு தமிழ் என்ன என்று யோசித்து தூக்கமே போய்விட்டது போல.... குவளை நல்ல வார்த்தை...

  # சிவகுமாரன்: தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.... பட்டினத்தார் படம் பார்த்து இருக்கிறேன் என்னுடைய 18-19 வயதில்... கூட வந்தது என் அப்பா... :)

  ReplyDelete
 42. @ கலாநேசன்: வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி சரவணன்...

  # அப்பாதுரை: லோட்டா, எங்கள் நெய்வேலி வீட்டில் கூட இருந்தது.... நண்பர் ஈஸ்வரன் கூட நெல்லை பகுதியைச் சார்ந்தவர்தான்.... ”காதற்ற ஊசி....” சில நாட்கள் முன்பு புத்தக அலமாரியில் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தபோது இந்த “பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்” புத்தகமும் கிடைத்தது....

  ReplyDelete
 43. @ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அட இந்த விஷயம் புதுசா இருக்கே.... இது போர்த்துகீசிய வார்த்தையா... ஒன்றும் புரியவில்லை.... அதனால் எந்த மொழி வார்த்தையோ, பயன்படுத்துவோம்... வாழ்த்தியமைக்கு நன்றி..

  # இராஜராஜேஸ்வரி: வாழ்த்துக்கு நன்றி.... பத்து பாடல்களுமே அருமையான பாடல்கள்.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

  @ மாதங்கி மாலி: வாழ்த்துகளுக்கு நன்றி சகோ....

  ReplyDelete
 44. 150 க்கு வாழ்த்துக்கள்.. நல்ல பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
 45. @ முத்துலெட்சுமி: வாழ்த்தியமைக்கு நன்றி. பட்டினத்தாரின் பல பாடல்கள் நன்றாக இருக்கும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 46. முத்தான 150‍வது பதிவு! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 47. @ மனோ சாமிநாதன்: உங்களின் வாழ்த்துகள் என்னை மகிழ்வித்தன.... உங்கள் தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 48. இவர் போல் எத்தனை பேர் இப்படி அல்லாடிக் கொண்டிருக்கிறார்களோ

  ReplyDelete
 49. # கோமா: நமக்குத் தெரிந்து சிலர்... தெரியாமல் எத்தனை எத்தனை பேரோ... :( சோகம்தான்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 50. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
  அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/


  Please follow

  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....