எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, February 24, 2015

சாப்பிட வாங்க: ச்சீலா!சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர் தனது மகன் திருமணம் ஹரியானாவில் நடக்க இருக்கிறது என்றும் அதற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றும் சொன்னார். சற்றே தொலைவில் உள்ள ஊர் என்பதால் வருவது சிரமம் என்று சொல்ல, பரவாயில்லை தில்லியில் ரிஜப்சன் [அவர் சொன்னதை அப்படியே எழுதி இருக்கிறேன்!] உண்டு, அதற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னார்.  சரி நிச்சயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்... [ஒரு மாலை வேளை, சமையலிலிருந்து விடுதலை ஆயிற்றே!]

பொதுவாகவே வட இந்திய திருமணங்களில் உணவிற்கு ரொம்பவும் முக்கியத்துவம் உண்டு. நிறைய சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நிறைய ஸ்டால்கள் மாதிரி வைத்து, ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒரு உணவு சுடச்சுடத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.  இந்நிகழ்ச்சியிலும் அப்படி நிறைய உணவுப் பொருட்களுக்கான ஸ்டால்கள் – [dh]தஹி [b]பல்லே பாப்டி, பானி பூரி, பாவ் [b]பாஜி, பன்னீர் டிக்கா, ஆலு டிக்கா, ஆலு ஃப்ரை, பனீர் ஃப்ரை, என தொடர்ந்து ஸ்டால்கள். இதைத் தவிர மக்கள் அமர்ந்திருக்கும் இடங்களுக்கே சுடச்சுட நொறுக்குத் தீனிகள் வந்த வண்ணம் இருந்தன.

அப்படி ஒரு ஸ்டாலில் எழுதி இருந்த உணவின் பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் புதிதாக இருக்க, அங்கே நின்றேன்! அந்த உணவின் பெயர் “மூண்ட் [dh]தால் [ch]ச்சீலா!  மூண்ட் [dh]தால் – இது தெரியாத பருப்பாக இருக்கிறதே என யோசிக்க, உடன் வந்திருந்த நண்பர் எனது சந்தேகத்தினை நிவர்த்தி செய்தார் – மூங்க் [dh]தால் என்பதைத் தான் தவறாக எழுதி இருக்கிறார்கள் – பாசிப்பருப்பினைத் தான் ஹிந்தியில் மூங்க் [dh]தால் என்று சொல்வார்கள்.  சரி இதிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தேன்!

அது என்ன ச்சீலா என்று உண்டு பார்த்தேன். நன்றாகத் தான் இருந்தது! தோசை போன்று செய்து அதன் மேலே பச்சைச் சட்னி தடவி அதற்கும் மேல் Stuff செய்து, தொட்டுக்கொள்ள, பச்சை சட்னியும், சிகப்புச் சட்னியும் தர வாங்கிக் கொண்டு உண்டபடியே நகர்ந்தேன்! வாவ்.... நல்ல சுவை! அதை எப்படிச் செய்வது என்று என் உடன் வந்த வட இந்திய நண்பரிடம் கேட்டேன் – அவர் சொன்னது எப்படி என்று பார்க்கலாமா!

தயாரிக்க ஆகும் நேரம்: 1 முதல் 1.5 மணி நேரம்.
சமைக்க ஆகும் நேரம்: சுமார் 30 நிமிடங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு – 1 கப், இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 6 பற்கள், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – மூன்று, சிகப்பு மிளகாய்த் தூள் – கொஞ்சம், பனீர் – கொஞ்சம், பச்சைச் சட்னி [கொத்தமல்லி தழைகள், புதினா தழைகள் ஆகியவற்றை அரைத்துச் செய்தது] ஆகியவை.

எப்படிச் செய்யணும் மாமு?

பாசிப்பருப்பை நல்லா நாலைந்து முறை கழுவி அதற்குப் பிறகு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீரில் ஊற வைச்சுக்கோங்க! ஒரு மணி நேரம் ஊறினாலே போதும். அதுக்குள்ள நம்ம மத்த வேலையைக் கொஞ்சம் பார்க்கலாம்! வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி எல்லாத்தையும் எவ்வளவுச் சின்னதா கட் பண்ண முடியுமோ அவ்வளவு சின்னதா கட் பண்ணிக்கணும்! சின்னதா கட் பண்றேன் பேர்வழின்னு கைவிரலைக் கட் பண்ணிக்கிட்டீங்கன்னா கம்பெனி பொறுப்பு ஏத்துக்காது சரியா!

இதையெல்லாம் செஞ்சு முடிச்சு, நடுவுல கொஞ்சம் லாலா எல்லாம் பாடிட்டு, கொஞ்சம் பராக்கு பார்க்கறதுக்குள்ள, பருப்பு நல்லா ஊறி இருக்கும்! ஊறின பிறகு தண்ணீரை வடித்து எடுத்துட்டு, அதை மிக்ஸில போட்டு – மிக்ஸி ஜார்ல தாங்க! – கொஞ்சமா மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு இரண்டையும் போட்டு, வெட்டி வைச்சு இருக்க வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாத்தையும் போட்டு, மிக்ஸில நல்ல மைய அரைச்சுக்கோங்க!  

அடுப்புல தோசைக்கல்லை போட்டு [அடடா மேலே இருந்து போட்டு, காஸ் ஸ்டவ்வ உடச்சிட போறீங்க!....  தில்லில ஒரு நண்பர் வீட்டுக்கு போனப்ப, அவங்க மனைவி, அடைக்கு அரைச்சு வச்சுருக்கேன்.... நீங்க வந்ததும் கல்லைப் போடலாம்னு உட்கார்ந்திருக்கேன்னு சொல்ல,  எங்க தலை மேலே கல்லைப் போட்டுடுவாங்களோ... அப்படியே எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா, எங்க பின்னாடி கடோத்கஜன் மாதிரி நண்பர் நிக்கறார்...  அப்புறம் தான் தெரிஞ்சுது தோசைக்கல்லை அடுப்பில் போடப் போறார்னு!] சூடாகும் வரைக்கும் காத்திருங்க....

தோசைக்கல் சூடான பிறகு, ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் விட்டு தோசை மாதிரி பரப்புங்க! ஒரு ஸ்பூன் எண்ணையை அப்படியே சுத்தி விட்டு வேகும் வரைக்கும் லாலாலாலின்னு பாட்டு பாடுங்க! அப்புறம் தோசைத் திருப்பி கொண்டு பொறுமையா திருப்பி போட்டு அப்படியே எண்ணையை மேலே ஸ்ப்ரே பண்ணுங்க!

அப்புறம் ஒரு ஸ்பூன் பச்சை சட்னியை அதன் மேல் பரப்புங்க! பனீர் இருக்கே, அதை கொஞ்சம் துருவி அதன் மேலே தூவுங்க! அப்படியே மடிச்சு சுடச் சுட தட்டுல போட்டு, பச்சைச் சட்னியோடு சாப்பிடக் கொடுங்க! இல்லைன்னா சாப்பிடுங்க! ச்சீலா செம டேஸ்ட் தான்!

 படம்: இணையத்திலிருந்து...

இது ஆந்திராவில் செய்யும் பெசரட்டு மாதிரி இருந்தாலும், இந்த ஸ்டஃப்ஃபிங் விஷயம் எல்லாம் வடக்கிற்கே உரித்தானது! எதையும் குண்டாக்கித் தான் நம்மாளுங்களுக்கு பழக்கம்!

என்ன நண்பர்களே....  ச்சீலா செய்து ருசிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்களேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: ரிசப்ஷன் முடிஞ்ச இரண்டு நாள் கழிச்சு ஒரு தடவை செஞ்சு பார்த்தேன்! நல்லாத் தான் வந்தது! சாப்பிட வாங்க பகுதி ஆரம்பிக்கப் போறதோ, இங்க பகிர்ந்துக்கப் போறதோ அப்போ தெரியாதே, அதனால ஃபோட்டோ எடுக்கல! Point to be noted!

44 comments:

 1. சரியான சாப்பாட்டு ராமன்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... பலர் இப்படி உண்டு! - எல்லா ஊர்களிலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. ஹாஹா.... இது நம்மூர் பெசரட்டு இல்லையோ!!!!

  இந்தப் பதிவைப் படிச்சதும்தான் சண்டிகர் வாழ்க்கையில் போய்வந்த கல்யாண ரிஸப்ஷன் தீனிகளைப் புடிச்சிக்கிட்டு வந்தவைகள் ஞாபகம் வருது. ஒரு நாள் ஆல்பமா போடணும்:-)

  ரிஸப்ஷன் நடந்த இடம் நம்ம தாராசிங் அவர்களின் ஸ்டுடியோ:-)

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊர் பெசரட்டு with some modifications! எது முதல் என்று யார் சொல்வது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. குறித்துக் கொண்டுள்ளேன். சிறு வித்தியாசங்களில் ருசி பெருமளவு மாறும் என்பது எங்கள் அனுபவம்!

  ReplyDelete
  Replies
  1. சிறு வித்தியாசங்களில் ருசி பெருமளவு மாறும்.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஆகா படிக்கப் படிக்க சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. செய்து தரச் சொல்லிடுங்க! சாப்பிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. ஏறக்குறைய பாசிப்பருப்பு அடை தான்.. ச்சீலாவுக்காக கொஞ்சம் பனீர்!..

  ஆனாலும் பதிவில் படிக்கும் போதே தெரிகின்றது - சுவை!..

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் பனீர்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ

   Delete
 6. வீட்டிலும் செய்வார்கள்... ஆனால் இது வேறு மாதிரி... சில கூடுதல் சேர்ப்புகள்... செய்து பார்க்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. ஆமாம் பெசரெட்டு தான் பனீர் மட்டும் எக்ஸ்ட்ரா அதான் அரைக்கப் போறோமே அப்புறம் எதுக்கு சின்னதா கட் செய்யணும்

  ReplyDelete
  Replies
  1. பெரிய துண்டுகள் சில சமயத்தில் அரைக்க நேரமெடுக்கும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 8. //வாவ்.... நல்ல சுவை! அதை எப்படிச் செய்வது என்று என் உடன் வந்த வட இந்திய நண்பரிடம் கேட்டேன்//
  இந்த வரியை எழுதியது வெங்கட் சார் என்றதால் நம்பிட்டேன் இது மட்டும் ஆவி, ஸ்கூல்பையன் , சீனு எழுதியிருந்தா மக்கா நீங்க தோழி என்று எழுதுவதற்கு பதிலாக நண்பர் என்று தவறுதலாக டைப்பண்ணியிருக்கீங்க என்று சுட்டிக் காண்பித்து இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. என் மேல் அவ்வளவு நம்பிக்கை.... கேட்கும்போதே புல்லரிக்குது போங்க! ஃபுல்லரிக்குதுன்னு தப்பா படிச்சுடப் போறீங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. நண்பர் வீட்டுல உங்க தலைய பார்த்து கல்ல போட்டாங்களா?? ஹ..ஹா....
  பசரெட்டு மாதிரி இருக்கேன்னு நினைத்தேன். நீங்களே சொல்லிட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை தலைல போடல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 10. சீலா குறிப்பு பிரமாதம்! சுவைத்ததும் உடனேயே குறிப்பை தேடிக் கண்டு பிடித்து, அதை உடனே செய்தும் பார்த்ததற்கு என் பாராட்டுக்கள்! சீலா ரவாவிலும் கடலைமாவிலும் கூட செய்வதுண்டு!

  ReplyDelete
  Replies
  1. விதம் விதமாகச் செய்கிறார்கள்.... பெரும்பாலும் பாசிப்பருப்பு தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. வணக்கம்
  ஐயா
  செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் நிச்சயம் செய்து பார்க்கிறோம்.... தகவலைஅற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 13. சுவையான உணவுப் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. செய்து பார்க்க வேண்டும்.
  நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 15. சுவையான பதிவு நண்பரே..
  தமிழ் மணம் நவராத்திரி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. பார்த்தா நல்லாதான் இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. சாப்பிடவும் நல்லாதான் இருக்கு ஜனா சார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. கருத்துச் சொல்லி இருந்தேன். போச்சா, போகலையா???????????????

  ReplyDelete
  Replies
  1. இது தான் முதல் கருத்து.... இதுக்கப்புறம் ஒண்ணு வந்துருக்கு கீதாம்மா....

   Delete
 18. போகலைனு நினைக்கிறேன். ச்சீலா ஒரு முறை பண்ணிப் பார்த்துச் சாப்பிட்டுச் சொல்றேன் என்ன பிரச்னைன்னா பனீர் போடணும்ங்கறீங்களே அதான் பிரச்னை. நம்ம ரங்க்ஸுக்குப் பனீர்னாலே அலர்ஜி. பனீர் பகோடா, பனீர் பரோட்டா, பனீர் மடர், பாலக் பனீர், பனீர் ஜல்ஃப்ரெய்ஸினு எல்லாத்திலேயும் இருக்கிற பனீரை எனக்குக் கொடுத்துடுவார். பனீர் இல்லாமப் பண்ணினா நல்லா இருக்காதா? பார்ப்போம். :) அதோடு பூண்டு இரண்டு பேருக்கும் அலர்ஜி! :))))

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது செய்ங்க... சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க. பனீர் இல்லாம சாப்பிட்டு இருக்கேன் - அதுவும் நல்லாத்தான் இருக்கு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 19. ’’ஒரு மாலை வேளை, சமையலிலிருந்து விடுதலை ஆயிற்றே!]’’ ஓஹ்ஹோஹோ உங்க வீட்டுல நீங்கதான் ஹெட் குக்கோ? வெரி குட்டு. அதான் நல்ல சாப்பாட்டு ரசிகராக இருக்கீங்கபோல?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவத்சன்.

   Delete
 20. ச்சீலா செய்வதுண்டு....பனீருடனும், பனீர் இல்லாமலும்......இது ஆந்திரா, வட இந்தியா கூட்டுத் தயாரிப்பு!!!! ஹஹஹ

  வெங்கட் ஜி கிட்டத்தட்ட பாத்தீங்கனா, ஒரு சில உணவு வகைகளைத் தவிர, பல வகைகளின் பெயர்தான் மாறுதே தவிர பல உணவு வகைகள் ஒரே மாதிரிதான் ஒரு சில மாற்றங்களுடன் கூட்டுத் தயாரிப்புடன்......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 21. நம்ம அடை மாதிரி இருக்கு....
  ஆனா நீங்க சொல்லிய விதத்தில் பசி வந்திருச்சு அண்ணா...
  தில்லிக்கு வந்தா சாப்பிடலாமோ...?

  ReplyDelete
  Replies
  1. தில்லிக்கு வாங்க வாங்கித் தரேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....