எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 6, 2015

ஃப்ரூட் சாலட் – 124 – விஜயன் - அப்பா சொல்லும் பொய் – அம்மா


இந்த வார செய்தி:நாகர்கோவில்: முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்யும் சராசரி மனிதர்
கொட்டும் மழை, அடிக்கின்ற வெயில் என மாறி, மாறி மிரட்டும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில், நாகர்கோவிலின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோர்த்து, முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு போக்குவரத்தை சீர் செய்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (50). அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 3 ஆண்டுகளாக என்பதுதான் ஆச்சர்யம்.நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த விஜயனிடம் பேசினோம். `நாகர் கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகாராஜபுரம் என்னோட சொந்த ஊரு. திருமணம் ஆகல்ல. அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் நிறுவன செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அவங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவை குறைஞ்சிடுச்சு.பிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஒரு சேவை யாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். முழுசா 3 வருஷம் தாண்டிடுச்சு.தினமும் காலையில் 8 மணிக்கு வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். பின்னர் மாலை 5 மணிக்கு வந்து விட்டு இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். வேப்பமூடு, கோட்டாறு, செட்டிக்குளம் பகுதிகளில் மாறி, மாறி டியூட்டி பார்ப்பேன். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி, வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. தினமும் இரவு நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுல போய் படுத்துப்பேன்.செக்யூரிட்டியா இருக்கும் போது வாங்குன காக்கி சட்டை, பேன்டை போட்டுக்குவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது சிலர் மதித்து நடப்பர். சிலர் வித்தியாசமாக கூட பார்த்துட்டு போவாங்க.யார் எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியாய் இருக்கிறது என்றவர் சாலை சீரமைப்பு பணிகளில் மூழ்கினார்.இன்றைய தி இந்து இணைய பக்கத்தில் வெளிவந்த செய்தி இது. சக மனிதர்களுக்காக சேவை செய்யும் இவரது நல்ல மனதிற்கு ஒரு ஓ போடுவோமா!இந்த வார முகப்புத்தக இற்றை:கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. இதயத்தில் இடம்பெற்ற் அனைத்தும் அருகில் இருப்பதில்லை. இது தான் வாழ்க்கை!இந்த வார குறுஞ்செய்தி:FRIENDSHIP IS LIKE STANDING ON WET CEMENT. THE LONGER YOU STAY, THE HARDER IT’S TO LEAVE, AND YOU CAN NEVER GO WITHOUT LEAVING YOUR FOOTPRINTS BEHIND.இந்த வார இசை:எனது நண்பரின் மகன் ராகுல் சென்குப்தா, தான் கிடாரில் வாசித்ததை YOUTUBE-ல் தரவேற்றம் செய்திருக்கிறார்.  நீங்களும் கேட்டு மகிழ இதோ அந்த துள்ளலான இசை! 


இந்த வார விளம்பரம்:Metlife Hongkong விளம்பரம் ஒன்று பார்த்தேன். அப்பா தன் குழந்தைக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று சொல்லும் விளம்பரம் – நிச்சயம் உங்கள் மனதினைத் தொடும்.  பாருங்களேன்!
ராஜா காது கழுதை காது:நேற்று ஒரு திருமண வரவேற்பிற்குச் சென்றிருந்தேன். மணமக்கள் ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள்.  அங்கே DJ எல்லாம் வைத்திருந்தும் ஒருவரும் நடனமாடவில்லை. சாதாரணமாக வட இந்திய திருமணங்கள் அனைத்திலும் DJ வைத்து குத்தாட்டம் இல்லாது இருக்காது.  இதில் வித்தியாசமாக DJ இருந்தும் நடனமில்லை.  அப்போது ஒரு பஞ்சாபி நபர் சொன்னது – “என்னப்பா இது ஒருத்தரும் நடனமாடவில்லையே.  இதே எங்கள் பஞ்சாபிகளாக இருந்திருந்தால், DJ இல்லைன்னா கூட பரவாயில்லை, Tent House காரர் வைத்திருக்கும் Generator சத்தத்துக்கு கூட நடனமாடி இருப்போம்!படித்ததில் பிடித்தது:
நா பெத்த ராசாவே ....!  
நான் பெத்த ராசாவே 
நான் பெத்த ராசாவே  

நாளும் கிழமையும் போகுது  
நல்லது கெட்டது சுத்தி நடக்குது  
எனக்கு ஏதும் புரியல  
எப்ப நீ வருவா தெரியல
 
எச்சி கூட முழுங்கல உன் நினப்புல  
எஞ்சி இருக்குது என் உசுரு உன் வரவுல
 
பத்து மாசம் உன்ன சுமந்து  
கல்லு வொடச்சி மண்ண பெசஞ்சி  
காத்துக் கெடந்து கூலி வாங்கி  
கஞ்சி குடிச்சி ஒன்ன வளத்தே  
என் கை பட்ட காய்ப்பு 
எல்லா காணாம போயிருச்சி  
என் கண்ணு மணி ராசா  
உன் பிஞ்சி மொகம் பாக்கையிலே
 
நம்ம ஊரு பள்ளியிலே 
பத்து வர நீ படிச்சே  
மேல் படிப்பு நீ படிக்க  
நெல்லு குத்தி வித்து வந்தே  
மல்லு துணி நீ கட்ட  
மாடு கண்ணு மேச்சி வந்தே
 
சீமைத் தொர போல 
நீ தெரு வழியா போகையிலே  
காத்து கருப்பு பட்டுரும்னு  
கருக மணி கட்டி விட்டே

நாலு பேறு மெச்சும் படி
 
நாலெழுத்து நீ படிச்ச  
மேல மேல நீ உசந்த  
மேட்டு குடி மனுஷன் ஆன
 
மாளிகையில் குடி இருக்கு எம் மவராசா  
மாத்து துணி இல்லாம  
மாட்டுத் தொழுவில் நான் இருக்கே

 பொறந்த வீட்டு சுவரு
செல்லரிச்சி போய் கிடக்கு
 
உன்ன சுமந்த வயிறு 
  தரிசா காஞ்சி கிடக்கு  
எப்ப நீ வருவா எனக்கு தெரியல  
எஞ்சி இருக்கு என் ஆயுசு உன் வரவுல!-          கவிதா பொற்கொடி.


மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..நட்புடன்வெங்கட்.

புது தில்லி.42 comments:

 1. நல்ல நல்ல செய்திகளை கலந்துவந்த ப்ருட் சாலட் இனிமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. நாகர்கோவில் விஜயன்...வாழ்க! நாகர்கோவில் ஹை எங்க ஊரு....(கீதா பிறந்து எம்.ஏ வரை படித்த ஊர். துளசியும் அங்குதான் எம்.ஏ. படித்தார் ) மிக்க மகிழ்ச்சி!

  இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை!

  ராஹுல் செங்குப்தா இசை, விளம்பரம் அருமை....ரசனை மிக்கது

  படித்ததில் பிடித்தது மனதைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. எனது நண்பர் பத்மநாபன் ஊரும் நாகர்கோவில் தான்.... பக்கத்தில் ராஜாக்காமங்கலம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 4. ஓ ஓ ஓஹோ...

  வாழ்க்கை : உண்மை...

  உருக வைக்கும் கவிதை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அந்த பஞ்சாபி சொன்னது அட்டகாசம் :-)

  ReplyDelete
  Replies
  1. சொல்லும்போதே நாங்கள் சிரிக்க, அங்கே ஒரு சிரிப்பு மழை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு..

   Delete
 6. விஜயனின் மனப்பக்குவம் எல்லோருக்கும் வராது அவருக்கும் அவரை பதிவில் இட்ட தங்களுக்கும் வாழ்த்துகள்.
  ஓவியம் கவிதையுடன் மிகவும் அருமை நண்பரே...
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 7. விஜயன் போற்றுதலுக்கு உரியவர்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. நல்ல தொகுப்பு. வேலையின் மன நிறைவு கொள்ளும் விஜயனின் சேவை தொடரட்டுமாக.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. சமூக சேவை செய்யும் விஜயனுக்கு ஒரு பெரிய சல்யூட்!
  மெட்லைப் விளம்பரம் மனதைத் தொட்டது.
  //மாளிகையில் குடி இருக்கு எம் மவராசா
  மாத்து துணி இல்லாம
  மாட்டுத் தொழுவில் நான் இருக்கே //
  கண்கள் கசிந்துவிட்டன.

  நீண்ட நாட்கள் இந்த ப்ரூட் சாலடின் ருசி மனதில் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கவிதை படித்தவுடன் மனதைத் தொட்டது. அதனாலேயே பகிர்ந்து கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 10. நாகர்கோயில் சமூக சேவகர் பணி போற்றத்தக்கது. நான் பெத்த ராசா மனதினைப் பிழிந்துவிட்டார். அருமையான துணுக்குச் செய்திகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 11. இந்த வார பழக்கலவையில் அனைத்தும் அருமை. அதுவும் அந்த குறுஞ்செய்தி மிகவும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. எங்கள் ஊரில் ஒரு சமூக சேவகர்... படித்து வியந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பகிர்ந்து கொள்ளும் போதே உங்களைத் தான் நினைத்தேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஐயா.

   Delete
 13. படித்ததில் உங்களுக்குப் பிடித்தது எனக்கும் பிடித்தது. ஒரு தாயின் குமுறலிலும் அன்பு தெரிகிறது.
  காணொளிகள் பார்க்க முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே youtube-l இருக்கிறது. மீண்டும் முயன்று பாருங்களேன்.

   https://www.youtube.com/embed/lRV6JXYw7VI

   https:://www.youtube.com/embed/3bdm4NBYxII

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 14. ஃப்ருட் சாலட் சுவையாக இருக்கு. திரு விஜயனுக்கு பாரட்டுகள்.
  கவிதையில் தாயின் நிலை கண்ணீரை வரவழித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 15. விஜயன் போற்றுதலுக்கு உரியவர்..
  காணொளி அருமை.

  ரசனைக்கார ஆளுய்யா நீங்க!

  ReplyDelete
  Replies
  1. //ரசனைக்கார ஆளுய்யா நீங்க!//

   உங்களை விடவா.... மோகன் அண்ணா! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 16. வணக்கம்
  ஐயா.
  பகிர்ந்த தகவல் அத்தனையும் நன்று இறுதியில் சொல்லிய கவி கண்ணீரை வரவைத்தது... பகிர்வுக்கு நன்றி த.ம9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 17. இந்த வயதிலும் விஜயன் போன்றவர்களின் தன்னலமற்ற சேவை ஆச்சர்யப்படுத்துகிறது .
  தாயின் படமும் கவிதையும் மனதை உருக்கியது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 18. தன்னலமற்ற சேவையாற்றும் விஜயன் அவர்களுக்குப் பாராட்டுகள். நண்பரின் மகனுக்கு இனிய வாழ்த்துகள். காணொளியின் பாதிப்பிலிருந்து விடுபடவே முடியவில்லை. அவ்வளவு அழுத்தம். பகிர்வுக்கு மிகவும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 19. கிழவி என்றாலும் ஓவியம் ரசிக்க வைத்தது :)
  த ம 10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 20. விஜயன் அவர்களின் தன்னலமற்ற சேவை வாழ்க!
  அருமையான் அப்பா , மகள் பாசப்பிணைப்பு காணொளி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 21. நெகிழ வைக்கும் கவிதை. விஜயன் பற்றிய தகவல் புதிது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....