திங்கள், 23 பிப்ரவரி, 2015

ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது



தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1

ஏழைகளின் ஊட்டிஎன்ற தலைப்பில் ஏற்காடு பயணத்தொடர் எழுதி முடித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அடுத்த பயணத் தொடர் எழுதுவது பற்றி யோசிக்கவே இல்லையா என அவ்வப்போது கேள்விக்கணைகள் மனதிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும். இத்தனைக்கும் இரண்டு பயணங்கள் சென்று வந்த அனுபவங்கள் காத்திருக்கின்றன – குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டிலும் நான்கு நான்கு நாட்கள் பயணம். 

இப்பயணங்கள் பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்களும் உண்டு.  ஆனாலும் கடந்த ஒரு மாதமாக இப்பயணத்தில் ஒன்று பற்றி கூட பதிவுகள் எழுதவில்லை. குஜராத் பயணத்தில் சந்தித்த சில விஷயங்களை வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த வாரங்களில் [10.11.2014 – 23.11.2014] வலைச்சரத்தில் எழுதி இருக்கிறேன்.  இருந்தாலும் முழு பயணம் பற்றிய குறிப்புகளை எனது தளத்தில் இன்னும் எழுதவில்லை.

 நான் ஹிமாச்சலத்துச் சூரியன்!

அதற்கு பின் சென்ற ஹிமாச்சல் பிரதேசப் பயணம் குறித்தும் இதுவரை எழுதவில்லை. முதலில் குஜராத் பயணமா, இல்லை ஹிமாச்சலப் பயணமா, எதைப் பற்றி எழுதுவது என முடிவு செய்வதில் கொஞ்சம் குழப்பம்.


ஹிமாச்சலப் பிரதேசம் - ஒரு முன்னோட்டம்

பேசாம “இங்கி பிங்கி பாங்கிபோட்டு முடிவு செய்யலாமா என நினைத்தால் முழுசும் நினைவுக்கு வரல! இன்னுமா நினைவிலிருக்கும்! சரி போ, எதையாவது ஒண்ணை எழுதிடுவோம்னு ஒரு வழியா இதோ வந்துட்டேன்!

குஜராத் பற்றி கொஞ்சம் கொஞ்சம் முன்னரே வலைச்சரத்தில் பார்த்துவிட்டதால், இந்த வாரத்திலிருந்து உங்களை “தேவ பூமிஎன்று அழைக்கப்படும் ஹிமாச்சல பிரதேசத்தின் ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். நான் ரெடி நீங்க ரெடியா?


 ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மிகவும் புராதனமான ஒரு சிவன் கோவில்.....

ஹிமாச்சலப் பிரதேசத்தினை தேவ பூமி என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா? ஹிமாச்சலத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் – ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் நிச்சயம் உண்டு – இதைத் தவிர கிராம தேவதைகள், குலதெய்வங்கள் என நிறையவே. இதைத் தவிர நெடுஞ்சாலைகளில் கூட நிறைய சின்னஞ்சிறு கோவில்கள் – பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் ஆஞ்சனேயர் கோவில்கள் - அதனால் இந்த மாநிலத்தினை தேவ் பூமி என்று அழைக்கிறார்கள்.

 வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் என்று சொன்ன பாரதி நினைவுக்கு வருகிறானா!

ஹிமாஎனும் சமஸ்க்ருத வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். அப்படி பெயர் சூட்டியவர் ஆச்சார்யர் திவாகர் தத் ஷர்மா என ஹிமாச்சலத்தின் வரலாறு பற்றிய குறிப்பொன்று கூறுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் எனக்கும் எங்கள் பகுதியில் இருக்கும் சில நண்பர்களுக்கும் இப்படி பனி படர்ந்த மலைப்பிரதேசத்திற்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்க, பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம்.

எங்களைச் சுமந்து செல்லத் தயாராய் எங்கள் வாகனம்!

நவம்பர் மாதத்திலேயே பயணம் பற்றிய முடிவு எடுத்துவிட்டதால் ஒவ்வொருவராக கேட்டு பயணிக்க இருக்கும் நபர்களை முடிவு செய்தோம். 15 பேருக்கு மேல் வருவதாகச் சொல்ல, ஒரு Tempo Traveler அமர்த்திக்கொள்ளலாம் என முடிவாயிற்று. நடுவில் ஒரு சிலர் வர முடியாத சூழல், வேறு சிலர் வருவதாகச் சொல்ல, ஏற்கனவே முடிவெடுத்தபடி Tempo Traveler பயணம் தான்.

 குளிர் நடுக்கத்தில் தில்லி!

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ஆம் தேதி காலையில் தில்லியிலிருந்து தொடங்கியது எங்கள் பயணம். அதிகாலையில் அப்படி ஒரு பனிமூட்டம் – தில்லியிலேயே இத்தனை பனியும் குளிரும் இருந்தால் ஹிமாச்சலத்தில் இன்னும் அதிக குளிரப் போகிறது என்று நண்பர்கள் சிலர் சொன்னாலும் எதையும் தாங்கும் இதயமும், பலமும் எங்களுக்கு உண்டு என்று திடமாகப் புறப்பட்டது எங்கள் குழு!

 திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தில்லி கோவில் - புறத்தோற்றம்

மார்கழி மாதம் என்பதால், எங்கள் பகுதியில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் காலையில் திருப்பாவை/திருவெம்பாவையோடு சேவை தொடங்கும். அதனால் பயணிக்கும் முன்னர் ஏழுமலையானிடமும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு பயணத்தினை நல்லபடியாக முடித்துத் தர வேண்டிக்கொள்வோம் எனச் சொன்னதற்கு இணங்க, அனைவரையும் சுமந்து கொண்டு புறப்பட்டது எங்கள் ரதம்.


 குளிர் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியே ஒரு ரவுண்ட் போலாம் வாங்க! படம் எடுத்தது காலை 08.45 மணிக்கு!

ஏழுமலையானை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டோம். தலைநகரைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையைத் தொட முயற்சி செய்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! யாருப்பா அத திருடிட்டு போனது!  என்ன ஆயிற்று?  அடுத்த பகுதியில் சொல்லட்டா! இப்ப வர்ட்டா!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

  1. கோவில் நகரம் என்று நம்மூர்ப்பக்கம் மதுரை, கும்பகோணத்தைச் சொல்வோம். இது தேவ பூமி. இங்கிருக்கும் புராதனச் சிவன் கோவில் நிச்சயம் விசேஷமாகத்தான் இருக்கும்!

    அழகிய படங்களுடன் தொடங்கி இருக்கிறீர்கள்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசேஷமான கோவில் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆகா
    கிணறு காணாமல் போன கதையைத்தான் பார்த்திருக்கிறேன்
    இப்போது தேசிய நெடுங்சாலையினையோ காணவில்லையா
    சபாஷ்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கிணறு காணாமல் போன கதை உங்களுக்கு நினைவுக்கு வந்ததா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. இங்க கொஞ்சம் குளிர ஆரம்பிச்சாலே இழுத்து மூடிக்கறோம்.... எப்படித்தான் நீண்ட தூரப் பயணமோ? அடுத்த பகுதிக்காக ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் விட்டுப் போச்சு! இல்லை பழகிப் போச்சு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

      நீக்கு
  5. வெள்ளிப்பனி மலைப் படங்கள் பிரமாதம். தேவ பூமி பற்றி மேலும் அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடமிருந்து பாரட்டு... மகிழ்ச்சி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. தேவ பூமி. மிக அருமை. படங்கள் சிறப்பாக இருக்கு. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  7. பனி பெய்யும் காலை நேரம் ரம்மியமானதுதான். என்ன? நீங்கள் வீட்டிற்குள் கட்டிலில் ரஜாய் போர்த்திக்கொண்டு இருந்தால்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிற்குள் இருந்தால் - :)))

      பனி பெய்யும் காலையில் வெளியே செல்வது எனக்குப் பிடித்தமானது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  8. டிசம்பர் மாதத்தில் ஹிமாச்சல் பயணமா? நினைத்தாலே குளிர்வதுபோல் உள்ளது. உங்கள் குழுவின் தைரியத்தை பாராட்டுகிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களாக இங்கே இருந்ததால் வந்த தைரியம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. பனியில் நெடுஞ்சாலை காணாமற் போய் விட்டதோ,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியில் சொல்லி விடுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  10. பனி களவாடிக்கொண்டதா சாலையை? தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. வணக்கம்
    ஐயா.
    கொடுத்து வைத்தனிங்கள்.. எல்லா இடங்களையும் உலகம் சுற்றும் வாலிபன் போல சுற்றிவந்து எங்கள் பார்வைக்கு பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி ஐயாத.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் பயணிக்கும் ஆசை இருந்தால் எல்லோரும் பயணிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  12. தேவ பூமியை பார்க்கமுடியாத கவலையை உங்கள் அனுபவத்தின் ஊடே அறியும் ஆவலில்! தொடருங்கள் பகிர்வை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  13. ஆஹா கேரளத்துக்குப் போட்டியா ஹாஹ்ஹஹ இல்லை கேரளத்தைத்தான் அம்மக்கள் இறைவனின் பூமி என்பார்கள் ஹிமாச்சலமும் ...இயற்கை எழில் கொஞ்சும் எல்லா பூமியையும் தேவனின் பூமி எனலாமோ....அழகிய புகைப்படங்கள்.....

    துளசிக்குக் குளிர் என்றாலே நடுக்கம் (!) குளிர் என்றாலே நடுக்கம்தானே எங்கின்றீர்களா....

    கீதாவிற்கு குளிர் என்றால் மிகவும் பிடிக்கும்....

    பயணிக்கின்றோம் உங்களுடன்...நாங்கள் ரெடியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளம் - ஹிமாச்சலம் என இரண்டுமே நல்ல இடங்கள் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  14. ஹிமாச்சல்ப் ப்ரதேசம் இரு முறை சென்றிருக்கின்றோம்...அருமையான இடம்..அழகில் மயங்கி இருக்கின்றோம். ம்ம்ம்ம் வட இந்தியச் சாப்பாட்டிலும் தான்....தேடித் தேடிச் சாப்பிடுவோம் சாப்பிடும் அளவு குறைவானாலும், எல்லா சைவ உணவுகளையும் ருசித்துச் சாப்பிட ஆசைப்படுவோம். அது போல காமெராவே "என்னைக் கொஞ்ச நேரமேனும் குட்டாமல் இருங்களேன். என் நினைவுத் திறன் மழுங்குகிறது" என்று கெஞ்சும் அளவு கிளிக்கித் தள்ளுவோம்....நானும் எனது மகனும்....-கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே படங்கள் எடுத்துக் கொண்டே இருக்கலாம்! - எத்தனை எடுத்தாலும் அலுப்பதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே. குமார்.

      நீக்கு
  16. தேவ பூமி பார்க்க ரெடியாகி விட்டேன்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே!

    ஆஹா சுற்றுலா பயணமா.? இனிதே ஏழுமலையானுடன் துவங்கிய பயணம்.அருமை.!தங்கள் பதிவின் துணையுடன் இனிதான பயணத்தில், நாங்களும் சுற்றி வர தயங்குவோமா? தெளிவான படங்களும், பனியுடன் ௬டிய படங்களும் நன்றாக உள்ளது. தேவ பூமியைப் பற்றி மேலும் அறிய ஆவலாயுள்ளேன்.! தொடர்வதற்கு.நன்றி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  19. அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! யாருப்பா அத திருடிட்டு போனது! என்ன ஆயிற்று? அடுத்த பகுதியில் சொல்லட்டா! இப்ப வர்ட்டா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்தமைக்கு நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  20. ஆரம்பமே அருமை!

    திருமலா திருப்பதி தேவஸ்தானக் கோவிலின் தோற்றமே மாறி இருக்கே! நான் போய் வந்தது 2007 ஜனவரியில். அப்பவும் குளிர்தான் :-)

    பதிலளிநீக்கு
  21. 2007-ல் இந்த கோவில் இல்லை! திருமலா திருப்பதி தேவஸ்தானம் தில்லியில் கட்டிய முதல் கோவில் இது தான் - 2014-15-ல் தான் கும்பாபிஷேகம் ஆனது. 2007-ல் பார்த்தது, செக்டார் 3, ஆர்.கே.புரம் பகுதியில் இருக்கும் பெருமாள் கோவிலாக இருக்கலாம்.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....