திங்கள், 29 மார்ச், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 7:

சில நாட்களே பாக்கி இருக்கிறது மார்ச் மாதம் முடிய . அதற்குள்ளேயே தகிக்கிறது வெயில் தில்லியில். “ஏப்ரல் மேயில பசுமையே இல்லை காய்ஞ்சு போச்சுடா!” என்று இப்போதே பாடத்தோன்றுகிறது. இந்த கடும் வெயிலிலும் தில்லி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்னவோ குறைவதில்லை. சரி இந்த வார விஷயங்களைப் பார்க்கலாம்.பார்க்க வேண்டிய ஒரு இடம்: Garden of Five Senses: தில்லி சுற்றுலா மற்றும் வளர்ச்சிக்கழகத்தினால் ஃபிப்ரவரி 2003-ஆம் வருடம் திறக்கப்பட்ட ஒரு அருமையான இடம். ஏறாத்தாழ 20.5 ஏக்கர் பரப்பளவில் தில்லியின் மெஹ்ரோலி பகுதியில் உள்ள இப்பூங்கா நடை பாதைகளுடன் அழகான பகுதிகளாக பிரிக்கப்பட்டு நறுமணம் கமழும் பூச்செடிகள், மரங்கள் நடப்பட்டு, ஆங்காங்கே வண்ணமயமான நீருற்றுகள் அமைக்கப்பட்டு உள்ளது. எவர் சில்வரால் செய்யப்பட்ட பிம்பங்கள் பாறைகளுக்கு நடுவே இருந்து எட்டிப் பார்க்கின்றன. அன்பர்கள் ஐம்புலன்களினாலும் மகிழும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளதுதான் பெயர்க் காரணம்! புகழ்மிகு குதுப்மினாரின் மிக அருகில் தினமும் காலை 08.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திறந்து இருக்கும் இந்தப் பூங்காவுக்கு நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறுவர் முதியோர்களுக்கு 10 ரூபாயும்.. காண அரிதான ருத்ராக்ஷம், கடம்பம், கல்பவிருக்ஷம், கற்பூரம் போன்ற மரங்களை கண்டு மகிழவே ஒரு முறை இப்பூங்காவிற்கு சென்று வரலாம்!சாப்பிட வாங்க: ”சுஸ்கி” [Chuski]: தில்லியில வெய்யில் அதிகமாயிட்டே வரவர அதற்குத் தகுந்த பலவித உணவு வகைகளும் கிடைக்க ஆரம்பிச்சாச்சு! “சுஸ்கி” அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு வித ஐஸ் இப்ப நிறைய கிடைக்கும். “Dry Ice”- ல கலர் கலரா ”சிரப்” மேலே ஊற்றி கொடுப்பாங்க டி.வி. விளம்பரத்தில் காட்டற மாதிரி. அதை உறிஞ்சி உறிஞ்சி ஆனந்தமா சாப்பிடறாங்க எல்லாரும்! ”டிரை ஐஸ் சுத்தமான தண்ணீரால செஞ்சதா இல்லையா?” என்கிற சந்தேகம் சுத்தமா இல்லாம ரசிச்சு சாப்பிடறாங்க இந்த ஊருல! ”சிரப்”போட சுவை குறைந்தால் திரும்ப அந்த ஐஸ் குச்சியை விக்கிறவரிடம் நீட்டினால் திரும்பவும் கொஞ்சம் சிரப் மேலே கொட்டி கொடுத்த உடனே திரும்ப அதை ரசிச்சு சுவைக்கிறதை பார்க்கும்போது நமக்கும் ஆசை வராம இருக்காது!

இந்த வார ஹிந்தி சொல்: இந்த ஊர்ல கரும்பை “கன்னா” [Ghannaa] என்று அழைக்கிறார்கள். இப்போ எங்க பார்த்தாலும் கரும்பு ரசம் கிடைக்கும். நாலைந்து கரும்பைப்பிழிந்து சில ஐஸ் கட்டிகளைப்போட்டு மேலே ஒரு தேக்கரண்டி கறுப்பு உப்பைப்போட்டு ஒரு டம்ளர் ”கன்னா ரஸ்” குடிச்சா குளிர்ச்சியோ குளிர்ச்சி!

இன்னும் வரும்….

5 கருத்துகள்:

 1. கன்னா ரஸ் குடிச்சிருக்கோம்.ஆனா அந்த சுஸ்கி தான் சாப்பிட்டதில்ல.. அதான் தண்ணீர் பயம் தான்..:)

  பதிலளிநீக்கு
 2. சுஸ்கி, கன்னா எல்லாம் சாப்பிடுங்க..

  நடக்கட்டும்.. நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. ஐயா, ஒரு தள்ளு வண்டியில் தண்ணீர் வியாபாரம் நடப்பதை முதன் முதலாக தில்லியில் தான் பார்த்தேன். சுஸ்கி படம் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. அருமையான தகவல்கள்!

  பதிலளிநீக்கு
 4. நைனா! நாங்க நாலாம் கிளாஸ் படிக்கும்போதே 'சுஸ்கி'-ஐ சாப்பிட்டு இருக்கிறோமே. இப்போ கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. எந்த தண்ணியில் செஞ்சதோன்னு பயபடுத்துகிறீர்களே.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....