திங்கள், 15 மார்ச், 2010

சிக்கனம் சின்(னு)னி

”சிக்கனம் சின்னு”ன்னு ஒரு ஆசாமிக்கு உருவம் கொடுத்து அவரை வைத்து நிறைய சிரிப்பு வெடிகள் பல வருடங்கள் ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தது. அதற்கு "மதன்" வரையும் படங்களைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.

அவரை ஞாபகப் படுத்துவது போலவே பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம். கணவன் – மனைவி இருவரும் ரொம்பவே சிக்கனம். அவர்களுக்கு பைசாவிற்கு ஒன்றும் குறைவில்லை. எனினும் "எனக்கு எதுக்கு வேஸ்டா இரண்டு கைலி? ஆஃபீஸ் போகும்போது பேண்ட் போட்டுட்டுதானே போகிறேன்!" என்று வாங்கியிருந்த ஒரே ஒரு கைலியைத்தான் கட்டுவார். "இவரு ஒண்ணும் இதை நாள் பூரா கட்டறது இல்லையே, வீட்டுல இருக்குற நேரத்தில் தானே கட்டறாரு! என்பதால் வாரத்துல ஒரு நாள் தான் அதை அவரது மனைவி போனால் போகிறதென்று தோய்ப்பார்.

அவங்க வீட்டுல தினம் தினம் எதாவது ஒரு கூத்து அரங்கேறிக் கொண்டிருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களது வீட்டிலிருந்து “அத்தான்!”ன்னு அப்படி ஒரு பயங்கர அலறல் சத்தம். என்னவோ ஏதோ என்று பதறிய அத்தான் பாதி குளியலில் சோப் போட்ட உடம்பிலேயே கைலிய சொருகிக்கிட்டு வெளிலே ஓடி வந்து பார்த்தா, ஒரு கையில துடப்பம், இன்னொரு கையைத் தூக்கிய நிலையில சிலை மாதிரி நின்னுட்டு இருக்காங்க அம்மிணி. நாங்களும் சத்தம் கேட்டு அவங்க வீட்டுக்கு அலறியடிச்சு ஓடினோம். அதிர்ச்சியில் இருந்த அவங்கள ரெண்டு தட்டு தட்டி, “என்ன புள்ள! என்ன ஆச்சு?” என்று அத்தான் கேட்க, அதற்கு அம்மிணி சொன்ன பதில்தான் சிக்கனத்தின் ஹைட்!

“வீடு பெருக்கிட்டு இருந்தேனா, கீழே ஒரு ஆணி கிடந்துச்சு. சரி பத்திரமா எடுத்து வைப்போமே என்று அதை இந்த Power Point-ல சொருகினேன்”--னு அத்தானிடம் இன்னமும் பீதியிலிருந்து விடுபடாமலே சொன்னாங்க. அவங்க 15-ஆம்பியர் பவர் பாயிண்ட்டில் ஆணியை வைக்கப் போக அது கொடுத்த ஷாக்கில் அம்மணி அப்படியே சிலையா நின்னுட்டாங்க! இப்ப கூட நாங்களெல்லாம் ஆணி வேணும்னா அம்மிணிகிட்டத்தான் போய் கேக்கறோம், இல்லைன்னா அவங்க வீட்டு பவர் பாயிண்ட்ல தேடறோம்!.

இன்னொரு நாள் அவங்க வீட்டுல உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கிட்டுருந்தோம். அப்ப அம்மிணியிடம் அத்தான் “நான் வெளியிலே போயிட்டு வரேன், தலை வார சீப்பு வாங்கணும், இப்போ இருக்கறதுல நிறைய பல்லு போயிடுச்சுன்னு!” சொன்னாரு. அதுக்கு அந்த அம்மிணி சொன்னாங்க – “எதுக்குங்க, உங்க தலைல இருக்கற முடியை எண்ணினா பத்தோ பதினைஞ்சோதான் வரும். அதுக்கு நாலு பல்லு இருக்கற சீப்பு போதாதா?--ன்னு" ஒரு போடு போட்டாங்க. நீங்களே சொல்லுங்க சிக்கனம் சின்னி கேட்டதில் என்னங்க தப்பு?

5 கருத்துகள்:

 1. அதெல்லாம் சரி, வீட்டுலே தனியா இருக்கையிலே லுங்கி அழுக்காயிடுமுன்னு கழட்டி மடிச்சு வைக்கிற வழக்கமுண்டா அவருக்கு? :-))))

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சி.சி. யோட பக்கத்து வீட்டுக்காரங்க ரெண்டு பேர் வேறு டைம்-பாஸ் வேண்டாம்னு டி.வி. கேபிளக்கூட கட் பண்ணிட்டாங்களாமே! உண்மைதானா?

  (சீச்சீ! உங்களைச் சொல்லலை.)

  பதிலளிநீக்கு
 4. ஆஹா! (எதுக்கு நாலஞ்சு வார்த்தைகளை வேஸ்ட் பண்ணிட்டு...)

  பதிலளிநீக்கு
 5. ரிஷபன் said...

  ம் (ரொம்ப சிக்கனமா பாராட்ட நினைச்சேன்!)

  March 15, 2010 6:06 PM

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....